என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்கள் அழகுக்காக அணியும் லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
    லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவது சருமத்திற்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சரும வறட்சி, உடல் வெப்பம் அதிகரிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

    ரத்த ஓட்டம்: லெக்கின்ஸ் அணியும்போது கால்களுக்கு பொருத்தமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அடிக்கடி அணியும்போது கால் பகுதியில் ஏற்படும் இறுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள செல்கள் சுவாசிக்க முடியாமல் போகும். இறுக்கம் அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் குழப்பம் நேரிடும். சீரற்ற ரத்த ஓட்டம் காரணமாக சருமம் பாதிப்புக்குள்ளாகும். தொடைகளில் உள்ள நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்படும். அது உணர்ச்சியற்ற தன்மையை உருவாக்கிவிடும்.

    முடி வளர்ச்சி: இறுக்கமான உடை அணிவது முடி வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக முடிகள், வேர்க்கால்களில் இருந்து மேல் நோக்கித்தான் வளரும். ஆனால் இறுக்கமான உடை அணியும் போது சில முடிகள் நேராக வளராமல் பக்கவாட்டிலோ அல்லது சுருண்டோ சருமத்தில் படர்ந்து நோய்த்தொற்றை உண்டாக்கக்கூடும். அப்படி சரியாக வளராத முடிகளால் ஏற்படும் தொற்று காரணமாக கொப்புளங்கள் தோன்றும். அப்படியே அடர்த்தியாக சுருண்டு இருப்பதால் அந்த இடத்தில் வலியும் அதிகரிக்கும். கொப்புளங்களால் அவஸ்தைகளையும் அனுபவிக்கக்கூடும்.

    படர் தாமரை: பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு உடல் சூடுதான் காரணமாக அமைந்திருக்கிறது. இறுக்கமான உடை அணியும்போது உடல் சூடு வெளியேற முடியாத சூழல் உண்டாகும். வியர்வையும் அப்படியே தங்கிவிடுவதால் அரிப்பு, சருமம் சிவப்பாதல் போன்ற பாதிப்புகள் நேரும். அவை படர் தாமரை பிரச்சினைக்கும் வழிவகுக்கும். படர் தாமரையால் ஏற்படும் அரிப்பு கடும் வேதனையை உண்டாக்கும். இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவக்கூடும்.

    சரும வறட்சி: லெக்கின்ஸை அதிக நேரம் அணியும்போது உடலில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து சருமத்தை வறட்சி அடைய வைத்துவிடும். தடிப்பு, புண்கள் ஏற்பட காரணமாகிவிடும். லெக்கின்ஸை கழற்றியதும் குளித்துவிடுவது நல்லது.

    பூஞ்சைகள்:இறுக்கமாக உடை அணியும்போது சிலருக்கு ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படக்கூடும். கால் பகுதிகளில் அதிக பாதிப்பு நேரும். இறுக்கமான ஆடைக்கும், உடலுக்கும் இடையே படியும் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாக்கள், பூஞ்சை தொற்றுகள் ஏற்படக்கூடும். ஆதலால் தளர்வான உடைகளை அணிவதுதான் சருமத்திற்கும், உடலுக்கும் நல்லது.

    ஈஸ்ட் தொற்று: பொதுவாக ஈஸ்ட், வெப்பமான இடத்தில் நன்கு வளர்ச்சி அடையும். லெக்கின்ஸ் போன்ற வெப்பமான உடை, அவை நன்கு வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும். லெக்கின்ஸ் அணிய ஆசைப்பட்டால், சிறிது நேரம் உடுத்தலாம். நாள் முழுவதும் அணிவது சரியானதல்ல.

    அரிப்பு:இதுவும் பூஞ்சை தொற்றுகளால் உண்டாகிறது. லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடைக்குள் படிவதால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும். ஒருவேளை லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்தால் அந்த உடையை நீண்ட நேரம் அணியக்கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் உடையை மாற்றிவிட்டு கை, கால்களை நன்றாக கழுவிவிட வேண்டும். குளித்துவிடுவதும் நல்லது. பூஞ்சை தொற்று ஏற்படுவதை தவிர்க்க, கிரீம் உபயோகிக்கலாம்.

    முகப்பரு: பெண்களின் சருமத்தை பாழ்படுத்துவதில் முகப்பருவுக்கு முக்கிய பங்கு உண்டு. இறுக்கமான உடை அணிவது கூட முகப்பரு பிரச்சினைக்கு அடிகோலிடும். ஏனென்றால் இறுக்கம் காரணமாக வியர்வைகள் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போய்விடும். அவை சருமத்தில் படியும்போது முகப்பரு பிரச்சினை உருவாகக்கூடும்.

    வயிறு: யோகாசனத்தில் ஈடுபடும்போது இறுக்கமான பேண்ட் அணியும் வழக்கம் இருக்கிறது. அவற்றுள் ஒருசில யோகா பேண்ட்கள் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடும். அது செரிமான அமைப்பை பாதிப்புக்குள்ளாக்கும். அதனால் வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத பேண்ட் அணிவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    உடல் பருமன்: உடல் எடை அதிகரிப்புக்கும் லெக்கின்ஸ் காரணமாக அமைந்திருக்கிறது. தசைகள் இறுக்கம் அடைந்து உடல் தோற்றம் மாறுபடக்கூடும்.
    இந்த நோயை கண்டறிவது என்பது மிகவும் சிக்கலான ஒன்று. ஏனென்றால், ரத்த மற்றும் சளி சோதனைகள், நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே போன்றவற்றால் இதனை கண்டறிவது கடினம்.
    காசநோய் அல்லது டிபி (TB) எனும் நோயானது உலகில் தற்பொழுது பரவலாக காணப்படும் ஒரு நோய். உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினருக்கு காசநோய் தொற்று ஏற்படுகிறது. இந்த காசநோய் உருவாக காரணமாக இருப்பது டியூபர்குளோசிஸ் என்ற ஒரு பாக்டீரியம் ஆகும். பொதுவாக இந்த பாக்டீரியமானது உடலின் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலை முக்கியமாக பாதிக்கிறது.

    பின்பு ரத்த ஓட்டத்தில் இந்த பாக்டீரியம் கலப்பதன் மூலம் உடலின் பிற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் உறுப்புகளில் மிக முக்கியமாக இருப்பது கருப்பை மற்றும் கருக்குழாய். முதலில் காச நோயானது இருமலாக ஆரம்பிக்கிறது.

    இந்த இருமல் ஒரு மூன்று வாரங்களுக்கு கடுமையாக இருக்கும், அதனோடு சளியில் ரத்தம், இரவில் வியர்த்தல், காய்ச்சல், உடற்சோர்வு, பசியின்மை, எடை குறைவு போன்ற அறிகுறிகளும் தென்பட ஆரம்பிக்கும். உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், சத்து குறைபாடு ஏற்பட்டு, மேலும் பல பிரச்சினைகள் உண்டாக வழிவகை செய்கிறது.

    நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பு உள்ள நபர்கள், அதாவது சர்க்கரை நோய், கேன்சர் நோயாளி, சுகாதாரமாக இல்லாத நபர், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவி விடுகிறது. இந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

    ஆனால் இந்த நோயானது மூச்சுக்குழலை தவிர தண்டுவடம், குடல், நிணநீர் தட்டுகள் மற்றும் தோலினை பாதிக்கிறது. அதே சமயத்தில், கருப்பையும் கருக்குழாயும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் 1-2 சதவீத பெண்களுக்கு கருப்பை காசநோய் இருக்கிறது.

    இந்த காசநோயின் மிகப்பெரிய சவால் என்ன வென்றால், முதலில், நிறைய நாட்களுக்கு எந்தவொரு அறிகுறியும் தெரியாது.  ஆனால் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் பொழுது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருண்டு விடுவதாக, ஐவிஎஃப் மற்றும் இனப்பெருக்க அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ராஜலட்சுமி வாலவல்கர் கூறுகிறார்.

    பிறப்புறுப்பு காசநோய் பொதுவாக முதலில் கருக்குழாயில் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படும் 100% பேருக்கும் கருக்குழாயில் சிறிதளவேனும் சேதம் ஏற்பட்டு விடுகிறது. இந்த கருக்குழாய் பாதிப்படைவதால் விந்து இயற்கையாக கருக்குழாயை கடந்து சென்று கரு முட்டையை அடைய முடியாததால் மலட்டுத் தன்மை ஏற்பட்டு விடுகிறது.

    காசநோயால் சேதமடைந்த கருப்பைகளில் சீழ் நிரப்பப்பட்ட நீர்கட்டிகள் உருவாவதன் மூலம் கருமுட்டைகள் நிரந்தரமாக அழிந்து விடுகின்றன. அது மட்டுமில்லாமல், முன்கூட்டியே கருப்பை செயலிழக்கலாம், மாதவிடாயும் நின்று போகும் நிலை ஏற்படலாம்.

    கருவுறாமைக்கு ஆளான ஒரு பெண்ணில் முன்னர் விவரிக்கப்பட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும், அதோடு இடுப்பு பகுதியில் வலி மற்றும்  மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஆகியவை இருந்தாலும் பிறப்புறுப்பு காசநோய்க்கான சோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டும்.

    இந்த நோயை கண்டறிவது என்பது மிகவும் சிக்கலான ஒன்று. ஏனென்றால், ரத்த மற்றும் சளி சோதனைகள், நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே போன்றவற்றால் இதனை கண்டறிவது கடினம்.  நோய் உறுதியான டன், மருத்துவர் பரிந்துரைத்த டிபி எதிரிப்பு மருந்துகளை (AKT / ATT) ஆறு மாதத்தி ருந்து ஒரு வருடம் வரை எடுத்து கொள்ள வேண்டும்.

    சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். இருந்தாலும் சிகிச்சைக்கு பின்பு, துரதிர்ஷ்டவசமாக, நிறைய பேருக்கு சிறிய அளவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    நல்ல சுகாதாரமான பழக்க வழக்கங்களாலும், சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், சரியான அளவில் உடல் எடையை பேணிக்காப்பதன் மூலமும் டிபி நோயிலிருந்து ஒருவர் சீக்கிரம் குணமடைய முடியும்.

    தடுப்பது எப்படி?

     * பொது ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருப்பது காசநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

    * அதுமட்டுமில்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான ஊட்டச்சத்து மற்றும் உணவு, தினசரி உடற்பயிற்சி, மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்ப்பது மற்றும் நல்ல உடல் எடையுடன் இருப்பது போன்ற பழக்கங்களால் காசநோயைத் தடுக்கலாம்.

     * அதே போல், ஒருவர் சுகாதாரமாக இருப்பதன் மூலமும் மற்றும் இருமல் வரும் போது வாயை மூடுவது, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது போன்ற செயல்கள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.

    காநோயினால் இனப்பெருக்க உறுப்புகள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம். புதிதாக கண்டறியப்பட்டுள்ள காசநோய் எதிர்ப்பு மருந்துகள், காச நோய் பாதித்த ஒருவரை குணப்படுத்துகின்றன. ஒரு வேளை டிபி நோயினால் ஏற்படும் சேதம் மிக அதிகமாக இருந்தால், உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.

    எனவே உங்களுக்கு காசநோய் இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உங்களுக்கு மறுபடியும் தாய்மை நிலை அடைய நிறைய வாய்ப்புகளும், மருத்துவ வசதிகளும் வந்து விட்டன.

    இருப்பினும், நோய் வந்த பின் அதற்கான சிகிச்சை எடுப்பதை விட, நோய் வருவதற்கு முன்னரே, மேல சொன்ன அதற்குண்டான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
    மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாற்றங்களை உணர்கிறார்கள்.
    பெண்களுக்கு உடல் ரீதியாக, ஹார்மோன்களின் தாக்கம் அதிகம். பூப்படையும் சமயம் தொடங்கி, மாதவிடாய் நிற்கும் சமயம் வரை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் பெண்கள் பல உடல் ரீதியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள்.

    தோராயமாக எழுபது சதவீத பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Pre-Menstrual Syndrome) அவர்களுக்கு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் பெண்கள் ஈஸ்ட்ரோஜென் (Oestrogen) எனப்படும் ஹார்மோனின் பாதிப்பில் இருக்கிறார்கள்.

    இந்த காலக்கட்டத்தில் (phase) பெண்களுக்கு அதிக உற்சாகமும் ஆர்வமும் ஏற்படும். புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஏற்படும் . குடும்பத்தில் உறவுநிலைகளை கச்சிதமாக சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள்.

    மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாற்றங்களை உணர்கிறார்கள். வயிறு உப்புவது, மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி, உடல் அசதி, தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

    மனதளவிலும் பெண்கள் பல உளைச்சல்களை உணர்வதுண்டு. யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவது , காரணமில்லாமல் அழுகை, வேலையிடங்களில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவது, தனிமையாக உணர்வது, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவை பிஎம்எஸ்-இன் ('PMS') அறிகுறிகளே !

    பசியின்மை, தூக்கமின்மை, நமக்கு பிடித்த விஷயங்களைக் கூட செய்வதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ?

    பிஎம்எஸ் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன் தொடங்கி, ரத்தப்போக்கு தொடங்கியபின் படிப்படியாக குறையும். எல்லா அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.

    வயதாக வயதாக இதன் தன்மையும் மாறுபடும். உணவுப்பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை.
    ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு ஹார்மோன் பிரச்சினை அல்லது மூளையில் நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் அசாதாரண செயல்பாடுகளே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
    சிறிய சிறிய செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தலைவலி. சைனஸ், மனச்சோர்வு, அழுத்தம், மைக்ரேன் மற்றும் கிளஸ்டர் என தலைவலியில் பல வகை உள்ளது. மேலும், தலைப் பகுதியில் வலிக்கும் இடத்தைப்   பொறுத்தும் அதற்கான சிகிச்சை முறை  மாறுபடும். தலைவலியில், நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ‘மைக்ரேன்’ என அழைக்கப்படும் ‘ஒற்றைத் தலைவலி’தான்.

    இதை நரம்பியல் பிரச்சினை என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒற்றைத் தலைவலி குறித்த ஆய்வில் இதுவரை அதற்கு உறுதியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு ஹார்மோன் பிரச்சினை அல்லது மூளையில் நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் அசாதாரண செயல்பாடுகளே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. உலக அளவில் பலரை பாதிக்கும் இரண்டாவது பெரிய உடல்நல பிரச்சினையாக ‘ஒற்றைத் தலைவலி’ இருப்பதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மேலும், ‘பைபோலார் குறைபாடு’ எனப்படும் இரு துருவ மனச்சோர்வு, மனஅழுத்தம், தீவிர யோசனை, அதீத உணர்ச்சி வெளிப்பாடு, பருவநிலை மாற்றம், சுவாசத் தடை, தொடர்ந்து ஒரு வேளை உணவைத் தவிர்த்தல், அதிக அளவு டீ, காபி குடித்தல், நீண்ட நேரம் வெப்பச் சூழலில் இருப்பது, உடல் நீர்வறட்சி குறைவது, அதீத இரைச்சல், தொடர் உடல் சோர்வு, அழற்சியை ஏற்படுத்தும் வாசனையை நுகருதல், அதீத புழுக்கம், சீரற்ற உணவு முறை, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்ற வாழ்வியல் காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

    கடுமையான தலைவலி, ஒளியால் ஏற்படும் உணர்திறன், காதில் இரைச்சல் மற்றும் துர்நாற்றம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற வயிறு கோளாறுகள், பசியின்மை, அதீத குளிர்ச்சி அல்லது வியர்வை, சருமம் வெளிர்தல், அசதி, மங்கலான பார்வை மற்றும் காய்ச்சல் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் ஆகும். ஒற்றைத் தலைவலி சில நிமிடங்களில் தொடங்கி சில நாட்கள் வரை நீடிக்கும்.

    ஒற்றைத் தலைவலிக்கான தீர்வு..

    உடலில் சீரான ரத்த ஓட்ட செயல்பாடு, மக்னீசியம், ஒமேகா 3, வைட்டமின் பி2, தாதுக்கள் மற்றும் நுண் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்.

    சற்று குளிர்ந்த, அமைதியான இருள் நிறைந்த அறையில் ஓய்வு எடுக்கலாம்.

    தலைவலி உள்ள இடத்தில் குளிர்ந்த அல்லது சூடான பருத்தித் துணியைக்கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம்.

    கழுத்துக்குப் பின்புறம் லேசான அழுத்தம் கொடுக்கும் வகையில் மசாஜ் செய்யலாம்.

    ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மட்டுமே ஒற்றைத் தலைவலிக்கான தீர்வாகும்.
    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.
    பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும்.

    இது மாதிரி ஏற்படும் கால் வீக்கத்தை (Swollen feet during pregnancy) எப்படி சில எளிய வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எப்படி சரிசெய்து கொள்ளலாமென பார்க்கலாம்.

    ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மிகவும் நுணக்கமானது. அவள் தாய்மை நிலைமையை எய்தியவுடன், அதாவது அவளது கருவறையில் ஒரு சிசு வளரத் தொடங்கியவுடன் அவளது உடல் இயக்க நிலைகளில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்கின்றன.

    இது பொதுவாக எல்லோருக்கும் நடப்பதே. இதுவரை அவளது உடல் செயல்பாட்டிற்கு மட்டுமே சுரந்து கொண்டிருந்த சுரப்பிகள் மற்றும் உற்பத்தியாகிக் கொண்டிருந்த இரத்த அளவுகள் என்று எல்லாமே மாறத் தொடங்கி விடும். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கான மைய காரணமே கருவில் வளரும் சிசு! ஆம்! கருவில் உள்ள குழந்தைக்கு எல்லா சத்துக்களும் சென்று சேர வேண்டும்.

    அப்போது கரு சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்து முழு நிலையை எய்தும். இப்போது கால் வீக்கத்திற்கு வருவோம்!

    பொதுவாக ஒரு பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவிலிருந்து 50% அதிக அளவு இரத்தம் கர்ப்ப காலத்தில் உற்பத்தி ஆகின்றது.  இது தவிர உடலில் சுரக்கும் பல்வேறு திரவங்களின் (body fluids) அளவுகள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்படுகின்றது. அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. இதன் காரண மாகவே கர்ப்பிணிப் பெண்களின் கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுகின்றது.

    இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதையும் அறியலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில், எப்போது கால் வீக்கம் ஏற்படுகிறது?

    கால் வீக்கமானது கர்ப்ப காலத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதாவது கருத்தரித்த ஆரம்ப நாட்களிலிருந்து குழந்தை பிறக்கும் காலம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வீக்கம் வரலாம்.

    எனினும் அதிக பட்சமான கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பிரச்சினையை தங்கள் ஐந்தாம் மாத கர்ப்ப காலத்தில் சந்திக்கத் தொடங்குகின்றனர். கடைசி ட்ரைமெஸ்டரில் (3-ஆம்) இந்த வீக்கத்தின் தாக்கம் அதிகரிக்கின்றது. இந்த வீக்கமும் ஒரே அளவில் இருக்காது. சில சமயம் அதிகமாக இருக்கும் சில சமயம் மிகவும் குறைவாக இருக்கும். இதை மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கின்றார்கள்.
    சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும்
    குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால், 10-14 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யப்படும். அதற்கு முன்பாக வலி அல்லது உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரால் ஆறு அல்லது ஏழு வாரங்களிலேயே ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படும்.

    கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம். ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

    முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.

    28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும்.

    சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம்.

    சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

    32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.
    பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தானாக பால் குடிக்கத் தெரியாது என்று பவுடர் பால் தருவார்கள். மேலும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்றோ, இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் போதவில்லை என்றோ பவுடர் பாலைக் கொடுப்பார்கள்.

    இளம் தாய்மார்கள் பால் கொடுப்பதில் நிறைய சிரமங்களைச் சந்திப்பதால், பவுடர் பால் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்க தாய்ப்பாலால் மட்டுமே முடியும். தாய்ப்பாலால் கொரோனா தொற்றுகூட குழந்தைக்குப்  பரவவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் தாய்ப்பாலின் அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை.

    பசும்பால் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறது. கன்றுகள் முட்டிமோதுவதால் இயற்கையாக பசுவின் மடியில் சுரக்கும் பால்தான் ஆரோக்கியமானது. இந்தக் காலத்தில் அதிக பாலைப் பெறுவதற்காக பசுக்களுக்கு சிலர் ஹார்மோன்களை ஊசியின் மூலம் செயற்கையாக செலுத்துகின்றனர். இந்த முறையில் கிடைக்கும் பாலை குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்கலாம். இயற்கையாகப் புல்லைத் தின்று வளரும் மாடுகளாக இருந்தால், அந்தப் பாலை பயன்படுத்தலாம்.
    உயிரணுக்களின் இயல்பான வளர்ச்சிக்கு உடம்பின் மற்ற பகுதிகளை விட விரைகளின் வெப்பநிலை குறைந்த பட்சம் 2 டிகிரியாவது குறைவாக இருக்க வேண்டும்.
    காலச்சக்கரம் வேகமாக சுழன்றுகொண்டிருக்கும். ‘அப்பா.. அப்பா...’ என்று தந்தையின் விரல்களை பிடித்துக்கொண்டு நடந்த சிறுவன், பள்ளிக்கு போவான். அடுத்து கல்லூரியிலும் காலடி எடுத்து வைப்பான். வேலைக்கு போவான். அப்புறம் என்ன.. கல்யாணமும் ஆகிவிடும். மனைவியோடு அவனும் தாம்பத்ய வாழ்க்கை நடத்தி தந்தையாகிவிடுவான்.

    ஆண், தந்தையாக காரணமாக அமைபவை, வாதுமைப் பருப்பு அளவிலான ஒரு ஜோடி சுரப்பிகள். அவை, விரைகள். அதில்தான் விந்தணு எனப்படும் உயிரணு உற்பத்தியாகிறது. முக்கிய ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானும் சுரக்கிறது. இதுவே ஆணின் இனப்பெருக்க மையம்.

    விரைப்பைக்குள் இருப்பவை

    செமினிபெரஸ் டியூப்யூல்ஸ்: இவை விரைகள் முழுவதும் காணப்படும். 30 முதல் 60 செ.மீ. நீளமுள்ள ஆயிரக்கணக்கான குழாய்களின் கட்டமைப்பு இது.

    ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சராசரியாக அரை ‘டிரில்லியன்’ உயிரணுக்களை வெளிப்படுத்து கிறான்.

    லேடிக் செல்கள்: இவைதான் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்பவை. இந்த ஹார்மோன்தான் ஆண் பாலுறுப்புகளின் வளர்ச்சியையும், வயதுக்கு வரும்போது ஏற்படும் மாற்றங்களையும் உருவாக்குகிறது.

    வாஸ் டிபரன்ஸ்: இது உயிரணுக்களை எபிடிடிமிஸில் இருந்து அனுப்புகிறது.

    எபிடிடிமிஸ்: இது சுமார் 20 அடி நீளமுள்ள சுருள் களால் அமைந்த குழாய். விரைகளில் இருந்து இது உயிரணுக்களைத் திரட்டுகிறது. உயிரணுக்கள் அங்குதான் முதிர்ச்சி அடைகின்றன.

    ஸ்க்ரோட்டம்: விரைகளைப் பாதுகாக்கும் தோல் பை போன்ற தோற்றம் கொண்டது இது.

    - பெரும்பாலான ஆண்களுக்கு, வலது விரையை விட இடது விரை சற்றுக் கீழாகத் தொங்குகிறது. இது இயல்பானதுதான்.

    - பாலுணர்வு தூண்டப்படும்போது விரைகளின் அளவு அதிகரிப்பது உடல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    - நாற்பது வயதை நெருங்கும்போது டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி குறையத் தொடங்குகிறது.

    - 1913-ல், சிகாகோ பல்கலைக்கழகத்தில் 33 வயதான ஒருவருக்கு முதல் முறையாக விரைமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    உயிரணு உற்பத்தி

    ஆண் வயதுக்கு வரும்போது, விரைகளின் உள்ளடுக்கில் செமினிபெரஸ்டியூப்யூல்ஸில் உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒருவரின் வாழ்நாளில் சுமார் 12 ‘டிரில்லியன்’ ஸ்பெர்மட்டோஸோவாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எபிடிடிமிஸில் முதிர்ச்சி அடையும் அவை, வாஸ்டிபரன்ஸ் வழியாக நகர்ந்து அம்புல்லாவை அடைகின்றன. அங்கு அவை சேமித்து வைக்கப்படுகிறது. அதை நல்ல நிலையில் 42 நாட்களுக்கு ‘ஸ்டோர்’ செய்து வைக்க முடியும். உயிரணுக்கள் உருவாக்கத்துக்கான இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கு (ஸ்பெர்மட்டோஜெனிசிஸ்) 8 முதல் 10 வாரங்கள் ஆகும். சாதாரணமாக ஒரு மனிதனுடைய விந்து திரவத்தின் ஒவ்வொரு மில்லியிலும் 1 கோடியே 20 லட்சம் உயிரணுக்கள் இருக்கும். ஒரு உயிரணு, எட்டு அங்குலங்கள் நீந்தி முன்னேற ஒரு மணி நேரம் ஆகும்.

    ஹார்மோன் மாயாஜாலம்

    கருவில் வளரும் சிசுவின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு டெஸ்டோஸ்டீரானே முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆண் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் டெஸ்டோஸ்டீரான் அளவு உயர்ந்து, பின் குறைகிறது. வயதுக்கு வரும்போது இது வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கிறது. குரல் உடையச் செய்கிறது. செபேசியஸ் சுரப்பிகள் பெரிதாவது, கொழுப்புக் குறைவது, தொண்டைச் சங்கு வளர்வது, அக்குளிலும், மறைவான பகுதிகளிலும் முடி வளர்வது, எலும்புகளின் அமைப்பு மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாகிறது. வயதுக்கு வந்த ஆண்களின் பாலியல் ஆர்வத்துக்கும், அதற்கான சக்திக்கும் டெஸ்டோஸ்டீரானே காரணமாகிறது.

    எப்போதும் ‘குளிர்ச்சி’...

    உயிரணுக்களின் இயல்பான வளர்ச்சிக்கு உடம்பின் மற்ற பகுதிகளை விட விரைகளின் வெப்பநிலை குறைந்த பட்சம் 2 டிகிரியாவது குறைவாக இருக்க வேண்டும். அதற்காக இயற்கையாகவே விரைகள் உடம்பிலிருந்து தனியாக கீழ் இறங்கி அமைந்துள்ளன. இதன் வெப்ப நிலையைக் குறைக்கவோ, உடம்புடன் ஒட்டி வைத்து கதகதப்பூட்டவோ ஸ்க்ரோட்டல் சுவர் தசைகள் தளர்ந்து, சுருங்கி உதவுகின்றன. அதிகமாக காய்ச்சல் ஏற்படும் போது, உயிரணு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

    விரைகளில் ஏற்படும் நோய்கள்

    விரைப்பை புற்றுநோய்- விரைப்பை பெரிதாவது அல்லது கட்டிபோல காணப்படுவதுதான் இதன் முதல் அறிகுறி. வழக்கமாக 40 வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    கிரிப்டோசிடிசம்- இந்த பாதிப்பு கொண்டவர் களுக்கு பிறப்பிலேயே விரைப்பை இறக்கம் இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் விரைகள் முழுமையாக விரைப்பைக்குள் வராமல் போகலாம். இப்பிரச்சினை ஏற்படும் 20 சதவீதமானவர்களுக்கு முதல் சில மாதங்களிலே சரி செய்துவிடலாம். மற்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

    டெஸ்ட்டிக்குலார்டார்ஸன்- விரைப்பைக்குள் விரை முறுக்கிக்கொண்டு, ரத்த விநியோகத்தை தடுக்கும் பாதிப்பு இது. இதற்கு உடனடி அறுவைச் சிகிச்சை அவசியம்.

    ஹெர்னியா- இந்த பாதிப்பு ஏற்படும்போது குடல், அடிவயிற்றுச் சுவரைத்தாண்டி இன்கினல்கெனாலுக்குள் தள்ளப்படும். குடலை வெளியே தள்ளி, துவாரத்தைச் சிறிதாக்க அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

    வெரிக்கோசில்- இது விரைகளின் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகிறது. வழக்கமாக இடது விரையில் இது காணப்படும். கடுமையாக இருந்தால் அறுவை செய்ய வேண்டும்.
    திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கி கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பது வரை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன.
    கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தனது முழு கவனத்தையும் மகப்பேறு மீது செலுத்தியாக வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது சவாலும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.

    தாய்மை அடைவது பெண்கள் வாழ்க்கையில் பெருமைக்குரிய விஷயம். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கி கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பது வரை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் முதலில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    மகப்பேறு மருத்துவரை சந்தித்து கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற வகையில் தனது உடல்நிலை இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக உடல் எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா? நாள்பட்ட நோய் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

    தாய்மைக்கு தயாராகும் பெண் ருசியான உணவுகளை சில காலம் தள்ளிவைத்துவிட்டு ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழு தானிய வகை, உணவுகள், புரதச்சத்து மிக்க உணவுகள் போன்றவற்றை குழந்தை பெற்றெடுக்கும் முன்பும் பின்பும் தவறாமல் சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்பு சத்து, புரதம் இவை மூன்றும் மகப்பேறுக்கு தயாராகும் பெண்களுக்கு அத்தியாவசியமானவை. அவை அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

    கர்ப்பம் தரிக்கும் காலகட்டத்தில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். அவை உடலுக்கு அழுத்தம் கொடுக்காத எளிமையான பயிற்சிகளாக இருந்தாலே போதுமானது. காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஒருபோதும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது. தீய பழக்கவழக்கங்களுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    பிறக்கும்போது பெண் உடலில் தோராயமாக 1 மில்லியன் கரு முட்டைகள் உள்ளன. பருவமடையும் நேரத்தில், சுமார் 3 லட்சம் கரு முட்டைகள் மட்டுமே எஞ்சி இருக்கும். ஆனாலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் 300 முதல் 400 கருமுட்டைகள் மட்டுமே வெளியிடப்படும். அவையே கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆதலால் மகப்பேறுக்கு ஏதுவான நாட்களை அறிந்திருக்க வேண்டும். கருமுட்டையை வெளியிடும் முன்பாக உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை ஒரு வகை திரவ சுரப்பு உருவாக்கும்.

    தாம்பத்திய உறவு என்பது எந்தவித நிர்பந்தங்கள் இல்லாததாக இருக்க வேண்டும்.அந்த சமயத்தில் மகிழ்ச்சியான மன நிலை நிலவ வேண்டும். உறவுக்கு பிறகு மல்லாந்த நிலையில் படுத்திருப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பாலியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது அப்படி படுத்திருப்பது உயிரணுவானது கருமுட்டையை தேடி அடைய உதவும்.

    கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தனது முழு கவனத்தையும் மகப்பேறு மீது செலுத்தியாக வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது சவாலும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையை வளர்க்கும் விஷயத்தில் கணவரை விட மனைவிக்குத்தான் பொறுப்புகளும் அதிகம். ஆதலால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
    உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.
    உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள், பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவார்கள். சில பெண்கள் எடையைக் குறைக்கவும், ஆன்மிக அடிப்படையிலும் உபவாசம் இருப்பார்கள்.

    உடல் எடை குறைத்தல் என்பது ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. உபவாசம் இருக்கும்போது செரிமான மண்டலம் ஓய்வு நிலையில் இருக்கும்.

    இந்த நேரத்தில் உடலில் நடைபெறும் சிறுசிறு செயல்களையும் நம்மால் உணர முடியும். இது செல்களின் வளர்ச்சிக்கும், புத்துணர்ச்சிக்கும் உதவும்.

    உண்ணும் உணவு செரிப்பதற்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். பின்னர் இது ஆற்றலாக மாறும். இந்தக் கால இடைவெளிக்குக் குறைவாக, தொடர்ந்து சாப்பிடும்போது, உடலின் தேவைக்கும் அதிகமான ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சக்தியை உபவாச நேரத்தில் உடல் பயன்படுத்திக்கொள்ளும்.

    ஒரு வேளை, இரண்டு வேளை உணவு சாப்பிடுதல், வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுதல், உப்பு சுவையைத் தவிர்த்து உணவு சாப்பிடுதல், அசைவ உணவைத் தவிர்த்து மற்ற உணவுகளைச் சாப்பிடுதல் என்று பல்வேறு விதங்களில் உபவாசம் மேற்கொள்ளப்படுகிறது.

    உபவாசம் இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்வு பெறும். உபவாசத்துக்குப் பின் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவைச் சாப்பிடுவது நல்லது. தவிர, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவைச் சாப்பிடலாம். இது உடலின் இயக்கத்தை சீராக்கும்.

    உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.

    மேலும், பலர் உபவாச முறையில் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்து, மதிய உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதைத் தொடர்ந்து செய்யும்போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்.

    உபவாசம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். அதேசமயம், உடல் எடையைக் குறைப்பதற்காக தீவிரமாகக் கடைப்பிடிப்பது தவறு. உடலின் முழு இயக்கத்துக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித ஊட்டச்சத்து உணவு எப்போதும் அவசியம்.
    பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருந்து, அதற்கேற்ப உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருந்து, அதற்கேற்ப உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உடலில் காணப்படும் ஒரு சில அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.

    சுமூகமான பிரசவம் நடைபெறுவதற்கு பெண்களுக்கு முறையான ஓய்வு மற்றும் கவனிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும், சுற்றுப்புறச்சூழல், உடல்நிலை மற்றும் எதிர்பாராத சில செயல்களால் நமக்கு தெரியாமல் உடலில் சில பிரச்சனைகள் எழக்கூடும். அதனால், பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருந்து, அதற்கேற்ப உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உடலில் காணப்படும் ஒரு சில அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.

    கர்ப்ப காலத்தில் வயிறு பிடிப்புகள் இயல்பானது என்றாலும், அதிகமாக இருக்கும் சமயத்தில் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகமான வயிறு பிடிப்பு பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. மேலும், பிரசவ காலத்துக்கு நெருங்கிய நாட்களில் வயிற்றில் சுருக்கங்கள் ஏற்பட்டால், அது பிரசவத்துக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.

    கர்ப்பம் தரித்த ஆரம்ப நாட்களில் பெரும்பாலான பெண்களுக்கு ரத்தப்போக்கு இருக்கும். இதனைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. அதேநேரத்தில் அதிகமான ரத்தப்போக்கு, குறிப்பாக பிரசவத்துக்கு பிறகு அதிகமான ரத்தப்போக்கு இருந்தால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மிகவும் ஆபத்தானது. நஞ்சுக்கொடியை தவறாக கையாளும்பட்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எழக்கூடும். இதனால், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

    கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு வழியாக திரவம் வெளியேறுவது பொதுவானது என்றாலும், அதிகளவு திரவம் வெளியேற்றுவது ஆபத்தானது. உங்கள் பிரசவ தேதிக்கு முன்பாக அதிகளவு திரவம் பிறப்புறுப்பு வழியா வெளியேறினால், பனிக்குடம் உடைந்து குழந்தை விரைவில் வெளியேறுவதற்கான அறிகுறியாக கருதலாம். அதேநேரத்தில், குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்பு ரன்னி திரவம் வெளியேறினால், பிரவசத்தில் சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

    கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களில் தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை ஏற்படலாம். ஒரு பொருளை தெளிவாக பார்ப்பதில் சிக்கல் அல்லது அடிக்கடி மங்கலான பார்வை வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாதாரணமாக எடுத்துகொள்ளாமல், சிகிச்சையை விரைவாக எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் பின்விளைவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படுவது சாதாரணமானது என்றாலும் அவை வலி மிகுந்ததாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும். வலி மிகுந்த வீக்கம், வீக்கமடைந்த பகுதி சிவப்பு நிறமாக மாறுதல், தடிப்புகளுடன் காணப்படுதல் ஆகியவை ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த பகுதியில் ரத்தம் கூட உறைந்திருக்கலாம் என்பதால், மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து கொள்வது நல்லது. கை, கால் மற்றும் முகங்களில் வீக்கம் இருந்தால் உடனடியாக அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

    உடல் பருமன் கொண்ட பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். அதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
    உடல் உழைப்பு இல்லாமல் போவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது, தூக்க சுழற்சி கால அட்டவணையை முறையாக நிர்வகிக்க முடியாமை உள்ளிட்ட காரணங்கள் உடல் பருமன் பிரச்சினையை உருவாக்குகிறது. உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். அதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

    பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுவது கலோரிகளை எரிக்க உதவும். அரை மணி நேரம் சமையல் செய்தால் 92 கலோரிகளை எரித்துவிடலாம். அதனால் ஆண்களும் ஈடுபாட்டுடன் சமையல் வேலைகளை செய்யலாம். காய்கறிகள் நறுக்கி கொடுத்தால் கூட போதும். சின்ன சின்ன வேலைகளையும் செய்து கொடுக்கலாம். அவை கலோரிகளை எரிக்க உதவுவதோடு துணையிடம் நன் மதிப்பை பெற்றுத்தரும்.

    அரை மணி நேரம் துணி துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். வாஷிங் மெஷின் துணை இல்லாமல் துணி துவைக்கும் வேலைகளை கைகளை கொண்டே செய்தால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும். துவைத்த துணிகளை அயர்ன் செய்வதும் கலோரிகளை எரிக்க வழிவகை செய்யும். நிறைய பேர் உடற்பயிற்சி செய்வதற்கு வளர்க்கும் நாயை உடன் அழைத்து செல்வார்கள்.

    அப்படி நாயுடன் அரை மணி நேரம் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதன் மூலம் 149 கலோரிகளை எரித்துவிட முடியும். வீட்டு தோட்டம் அமைத்து பராமரிப்பது உடல் உழைப்புக்கு வித்திடும். மனதிற்கும் இதமளிக்கும். மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம். அரை மணி நேரம் தோட்ட வேலைகளை செய்வது 167 கலோரிகளை எரிக்க உதவும்.

    அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்தாலும் 167 கலோரிகள் எரிக்கப்படும். வீட்டை பெருக்குவதும் கலோரியை எரிக்கும் சிறந்த வேலையாகும். வீட்டை ஒவ்வொரு முறை பெருக்கும்போதும் 240 கலோரிகள் வரை எரிக்கப்படும். அதனால் அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது நல்லது.
    ×