என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
    • கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹேர் கலரிங் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் அந்த முதல் மூன்று மாதங்களில் தான் வளரத் தொடங்கும். தவிர்க்க முடியாத நிலையில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    அவசியம் ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், கர்ப்பிணிகள் அமோனியா கலக்காத ஹேர் கலர் மற்றும் டையை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

     அதேபோல கெமிக்கலே கலக்காத வெஜிடபுள் ஹேர் கலர்களை உபயோகிப்பதும் சிறந்தது. உதாரணத்துக்கு, ஹென்னா உபயோகிக்கலாம். அது கெமிக்கல் ஹேர் டைக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

    ஹேர் கலர் அல்லது டை உபயோகிக்கும்போது கூடியவரையில் அது முடியின் வேர்க்கால்களில் படாதபடி தடவவும். அதன் மூலம் அனாவசிய கெமிக்கல் உட்கிரகிப்பைத் தவிர்க்க முடியும். அதாவது இப்படி உபயோகிக்கும்போது ஹேர் கலரில் உள்ள கெமிக்கலானது முடிக்கற்றைகளோடு நின்றுவிடும்.

    மண்டை பகுதியில் பட்டு ரத்தத்துடன் கலப்பதையும் தவிர்க்கலாம். இந்த முறையை பின்பற்றினால் ஹேர் கலரால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தாயும் கருவிலுள்ள குழந்தையும் பாதுகாக்கப்படுவார்கள்.

    • ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது.
    • உயர் ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகளுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

    25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்' (SCAD) என்று பெயர்.

    கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. இதயத்தில் இன்டர்னெல் லேயர், மிடில் லேயர், எக்ஸ்டெர்னல் லேயர் என மூன்றுவிதமான லேயர்கள் இருக்கும். ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பிரச்னையில் இன்டர்னெல் லேயர் கிழியும். அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.

     உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இதற்கான ரிஸ்க் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். உடலின் இணைப்புத் திசுக்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி நிகழலாம். இணைப்புத்திசுக்கள் பலவீனமாக இருப்பது என்பது ரத்தக்குழாய்களில் மரபணு தொடர்பாக ஏற்படுகிற ஒரு பிரச்சினை.

    மிகவும் வயதானவர்களுக்கும், அதீத ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு. அசவுகரியத்தையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்ததன் காரணமாக ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கா அல்லது ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்சேஷன் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.

    பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோகிராம் செய்வது முதல், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைப்பது வரை எந்தச் சிகிச்சை அவசியம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும், இந்த பிரச்சினை கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்து தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம்.

    • இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
    • நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

    உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏன் கட்டிப்பிடிப்பது முக்கியம் என்பது பற்றி பார்ப்போம்.

    உடல் நலம்

    வலி நிவாரணம்:

    உடல் ரீதியான தொடுதல், மசாஜ் அல்லது எளிய அரவணைப்பு போன்றவை இயற்கை வலி நிவாரணிகளான எண்டோர்பின்களின்வெளியீட்டை தூண்டும். வலியின் உணர்வை குறைக்கவும், அசவுகரியத்தை போக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு:

    கட்டிப்பிடிப்பது போன்ற நேர்மறையான உடல் தொடர்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதும், ஆக்சிடாசின் வெளிப்படுவதும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இதய ஆரோக்கியம்:

    உடல் தொடுதல், குறிப்பாக கட்டிப்பிடித்தல் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    மன நலம்

    மனநிலை மேம்பாடு:

    கட்டிப்பிடிப்பது உட்பட உடல் ரீதியான தொடுதல் எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அதன் மூலம் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடும். உணர்வுகளை சீராக கடத்துவதற்கு வழிவகை செய்யும். இயற்கையாகவே மன நிலையை மேம்படுத்துவதில் அரவணைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

    கவலை-மனச்சோர்வு:

    கட்டிப்பிடித்தல் போன்ற உடல் ரீதியான தொடுதல் ஆறுதலையும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு உணர்வையும் தரும்.

    மன அழுத்தம்:

    தொடுதல் ஆக்சிடாசின் வெளியீட்டை தூண்டி மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோலின் அளவை குறைக்கும். அதனால் மன அழுத்தம் குறையும். நாள்பட்ட மன அழுத்தத்தில் இருந்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும். மன அழுத்த மேலாண்மையை நிர்வகிக்கும் கருவியாக செயல்படும். அன்றாட வாழ்வின் சவால்களை சமாளிப்பதற்கும் வழிவகுக்கும்.

    உணர்ச்சி:

    கட்டிப்பிடித்தல் என்பது வாய்மொழி அல்லாத சக்தி வாய்ந்த தொடர்பு வழிமுறையாகும். உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.

    நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தவிர செல்லப்பிராணிகளை கட்டிப்பிடிக்கவும் மறவாதீர்கள். தன்னைத்தானே கட்டிப்பிடிப்பதும் கூட சிறப்பானதுதான். மூச்சை ஆழமாக உள் இழுத்தவாறு இரு கைகளையும் தோள்பட்டைகளில் அழுத்தி தழுவி அரவணையுங்கள். சுய இரக்கத்துடனும், சுய அன்புடனும் கைகளை தழுவுவது இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தும்.

    அன்பு, பாசம், இன்பம், துக்கம் என அத்தனை வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த பிணைப்பாக அரவணைப்பு அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கட்டிப்பிடிப்பது ஆக்சிடாசின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டச் செய்யும். இது காதல் ஹார்மோன், பிணைப்பு ஹார்மோன் என்று குறிப்பிடப்படுகிறது.

    கட்டிப்பிடிக்கும் நபரிடத்தில் நம்பிக்கை, பச்சாதாபம், இணக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதில்இருந்து உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்துவது வரை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

    • பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி நடப்பதற்கு முயற்சிப்பார்கள்.
    • பெண்கள் தகுதியற்றவர் என்றும் சிலர் குற்றம் சாட்டுவார்கள்.

    அரசு, தனியார் என அனைத்து துறை அலுவலகங்களிலும் தலைமை பொறுப்பை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர மேலாண்மை போன்ற செயல்பாடுகள் அவர்களுக்கு பதவி உயர்வை பெற்றுக் கொடுக்கின்றன. ஆண்களுக்கு இணையாக அத்தகைய உயர் பதவியை அலங்கரிக்கும்போது ஒருசில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். பெண்களை பொறுத்தவரை பதவி உயர்வு மலர் கிரீடமாக அமைந்தாலும் பலவித எதிர்விளைவுகளை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    அதிலும் பெண் தலைமையை ஏற்றுக்கொள்ள சில ஆண்கள் விரும்பமாட்டார்கள். இது அவர்களுடைய குணமாக அமைந்திருக்கலாம். பெண் தலைமை என்றதும் அவர்களிடத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மை வேரூன்றி விடும். பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி நடப்பதற்கு முயற்சிப்பார்கள். தலைமை பொறுப்பு வகிக்கும் பெண்ணை காட்டிலும் தனக்கு அதிக திறமை இருப்பதாக காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். இந்த பதவிக்கு இவர் தகுதியற்றவர் என்றும் சிலர் குற்றம் சாட்டுவார்கள்.

    தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்கள் இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியம், மன பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்காக தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் அதிகாரத் தோரணையுடனோ, கடுமையாகவோ நடந்துகொள்ளக்கூடாது.

    சக பணியாளர்களுக்கு `பாஸாக' இருப்பதற்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் மனம் நோகும்படி அமைந்தாலும் சகிப்பு தன்மை கொண்டிருக்க வேண்டும். சட்டென்று டென்ஷனாகி எவரையும் கடிந்து கொள்ளக்கூடாது.

    இதில் மன வருத்தப்பட வைக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பெண் தலைமைப் பதவியில் இருப்பதை உடன் பணிபுரியும் சில பெண்களே விரும்ப மாட்டார்கள். `என்னைக் காட்டிலும் எந்த விதத்தில் அவர் தகுதியானவர்' என்று கருதுவார்கள். `உழைப்பு எங்களுடையது. பதவி, புகழ் எல்லாம் இவர்களுக்கா?' என்றும் நினைப்பார்கள். ஒட்டுமொத்த பணியாளர்களின் கூட்டு முயற்சியால் நிர்வகிக்கப்படுவதுதான் அலுவலகமும், நிர்வாகமும் என்பதை புரிய வைக்க வேண்டும். `நாளை நான் வகிக்கும் இதே பொறுப்புக்கு நீங்கள் யாரேனும் வரக்கூடும். அதற்கு உங்களை தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்' என்று சக பணியாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

    தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் கையாள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அனைவரிடமும் இன்முகத்துடனும், பக்குவமாகவும் பேசும் சுபாவம் கொண்டவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இந்த சுபாவம்

    மற்றவர்கள் மத்தியில் உங்களை எளிதில் ஈர்க்க வைத்துவிடும். ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அந்த சமயத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் அணுகுமுறை மென்மையானதாக இருக்கவேண்டும். அதேநேரம் மீண்டும் அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை சக ஊழியர்கள் மனதிலும் விதைத்து விட வேண்டும்.

    தங்களுடைய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் எவரையும் அவமானப்படுத்தக்கூடாது. தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சம்பந்தப்பட்டவரே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். குழுவாக இணைந்து செய்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்போது குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாராட்டுவது கூடாது. அது மற்றவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை உருவாக்கும். அனைவரையும் பாரபட்சம் இன்றி வழிநடத்துவது தான் தலைமைக்கு அழகு.

    சின்னச்சின்ன வேலையாக இருந்தாலும் அதனை உடனே செய்து முடிப்பவர்களை சக ஊழியர்கள் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அது மற்றவர்கள் மத்தியில் உங்களுக்கு உயரிய மதிப்பை ஏற்படுத்தித் தரும்.

    அதேபோன்ற பாராட்டை தாங்களும் பெற வேண்டும் என்று மற்றவர்களும் விரும்புவார்கள். ஒருவரை பாராட்டும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றவா்களை குறை கூறுவதுபோல் இருக்கக்கூடாது. சக பணியாளர்கள் முன்பு உண்மையான உழைப்பு மதிக்கப்பட வேண்டும்.

    ஒரு முக்கியமான காரியம் பற்றி முடிவு எடுக்கும்போது அது பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த முடிவை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கவும் வேண்டும். இது நல்ல அணுகுமுறையும் கூட.

    அந்த முடிவின் விளைவு எப்படி இருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தலைமையை பாதிக்காது. சரியான நேரத்தில் சரியான முடிவும் எடுக்க வேண்டும். அதுதான் நல்ல தலைமை பண்பாக அமையும். அதையே மேலிடமும் எதிர்பார்க்கும்.

    • வளர்ந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
    • நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

    ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

    எந்தவிதமான ஒழுங்குப்படுத்தப்பட்ட பரிசோதனையோ அல்லது HPV தடுப்பூசி திட்டங்களோ இல்லாத ஏழை நாடுகளில் வாழும் பெண்களுக்குத் தான் 90 சதவிகித கருப்பை வாய் புற்றுநோய் தாக்குகிறது. வளர்ந்த நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம், கடந்த முப்பது ஆண்டுகளில் அங்கு முறையான பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

    இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால், நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து மாறுபடும். ரேடிகல் ஹிஸ்டெரெக்டோமி அல்லது கீமோ ரேடியேஷன் அல்லது இரண்டும் சேர்த்து கூட சிகிச்சை அளிக்கலாம். கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இன்றைய காலத்தில் சிகிச்சை மூலம் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் மூலம் குறைக்க முடியும்.

    எப்படி தடுப்பது?

    கருப்பை வாய் புற்றுநோய் ஒருவரை தாக்குவதற்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படும் தொற்றே முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் கருப்பை வாய் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

    பாதுகாப்பான உடலுறவு:

    உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் காண்டம் அணிய வேண்டும்; அதையும் சரியாக அணிய வேண்டும். அப்போதுதான் HPV தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதிகமான நபர்களோடு பாலியல் உறவில் இருந்தால் HPV தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

     தடுப்பூசி:

    HPV தொற்று வராமல் தடுப்பதில் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. ஆண்களும், பெண்களும் இந்த HPV தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். பாலியல் உறவில் ஈடுபடும் போது இது சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

    முறையான பரிசோதனை:

    தகுந்த மருத்துவரிடம் சென்று Pap smears மற்றும் HPV பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்ளுங்கள். ஆரம்பத்திலேய கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் வளர்ச்சி பெறுவதை தடுக்க முடியும்.

    புகைபிடிக்கும் பழக்கம்:

    புகை பிடிப்பதற்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புகையிலையில் உள்ள தீங்குவிளைவிக்கும் பொருட்கள் கருப்பை வாயில் உள்ள செல்களை பாதித்து HPV தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் கருப்பை வாய் புற்றுநோய் தாக்கும் ஆபத்து குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைமுறை:

    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இவற்றோடு சேர்த்து அடிக்கடி கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

    • சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன.
    • ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    ரெட் ஒயின் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாகும், சில ஆய்வுகள் மிதமாக உட்கொள்ளும் போது சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது. சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

    மருத்துவர்கள் கூறுகையில், "சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் உள்ளன, இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும். இருப்பினும், சிவப்பு ஒயின் தோலை சேதப்படுத்துகிறது, ஏனெனில் அது ரோசாசியாவை (தோல் நிலை), நீரிழப்பு மற்றும் ஹிஸ்டமினிக் எதிர்வினைகளை ஏற்படுத்தும், அதே நேரத்தில் உணர்திறன் சாத்தியத்தை அதிகரிக்கும்.

    ஒயினில் உள்ள பாலிபினால்கள் திராட்சை மற்றும் பிற பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படலாம் என்றும் அது ஒயின் மூலம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

    "ஆல்கஹால் ஆக்சிஜனேற்ற சேதத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் வயதாகிவிடுவதால், உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சிவப்பு ஒயினை தவிர்க்க வேண்டும். சிவப்பு ஒயினில் ஆக்சிஜனேற்றங்கள் இருந்தாலும், பொதுவாக, ஆல்கஹால் தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் தீங்கு விளைவிக்கும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

    நீரேற்றம், சரியான தோல் பராமரிப்பு மற்றும் உகந்த தோல் நல்வாழ்வுக்கான அடித்தளமாக சத்தான உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலையான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த சரும நன்மைகளுக்கு மதுவை நம்புவதற்குப் பதிலாக, சருமத்தைப் பராமரிப்பதில் எளிமையான மற்றும் பயனுள்ள அணுகுமுறைகளைத் தழுவுவது நல்லது.

    அதிகப்படியான மது அருந்துதல் தோல் நீரிழப்புக்கு வழிவகுக்கும், முன்கூட்டிய வயதாவதை ஊக்குவிக்கும். ஒரு சமநிலையான அணுகுமுறை, பல்வேறு ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உள்ளடக்கியது, உகந்த தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

    மிதமான சிவப்பு ஒயின் நுகர்வு தோல் தொடர்பான சில நன்மைகளை அளிக்கும் போது, தனிநபர்கள் சீரான உணவு, நீரேற்றம், சூரிய பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட நிறுவப்பட்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    ஒயின் குடிப்பது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று பெரும்பாலான தோல் மருத்துவர்கள் கருதினாலும், தனிப்பட்ட உடல்நலம் மற்றும் தோல் நிலைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெற தோல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் சிறந்தது.

    • அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமானது வாஷிங் மிஷின்.
    • எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

    வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வாஷிங் மிஷின் மிக மிக முக்கியமானது. துணியில் இருக்கும் அழுக்கை போக்கும் இந்த பொருளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒன்று. இதை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். இந்த பதிவில் வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து எப்படி வாஷிங் மிஷினை சுத்தம் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    சமையல் சோடா

    வினிகர்

    பயன்படுத்தும் முறை

    சமையல் சோடா மற்றும் வினிகரை நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இப்போது பேஸ்டை வாஷிங் மெஷினில் அனைத்து இடங்களிலும் தடவி 15 நிமிடம் அப்படி ஊற விடவும். பின்னர் ஸ்க்ரப்பரை பயன்படுத்தி அனைத்து இடங்களையும் நன்கு தேய்க்கவும். இப்போது காட்டன் துணியை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து வாஷிங் மெஷினை துடைத்து விடவும்.

    மற்றொரு முறை

    முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக எடுத்து கொள்ள வேண்டும். இப்போது அதில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு இந்த கலவையை நன்கு ஆற வைக்க வேண்டும். இப்போது இந்த நீரில் காட்டன் துணியை போட்டு நனைத்து எடுத்து அதை வைத்து அழுக்கு படிந்த வாஷிங் மிஷினை துடைத்து எடுக்க வேண்டும்.

    • பிளாட்டினம் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாகும்.
    • பிளாட்டினம் வைர கற்களுடன் கூடுதல் அழகு சேர்க்கும்.

    'வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பிளாட்டினம் அதிக அடர்த்தி உலோகமாகும். வெள்ளியைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாட்டினம், வெள்ளியைவிட அதிக பளபளப்பு உடையது. மருத்துவத் துறையிலும், மின்னியல் துறையிலும் பிளாட்டினத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மென்மையான உலோகமான பிளாட்டினத்தைக் கொண்டு எளிதாக எந்த வடிவத்தையும் உருவாக்க முடியும்.

    பிளாட்டினம் ஆக்சிடைசிங் (ஆக்சிஜனேற்றம்) செயல்முறைக்கு உட்படாதது. எனவே இது கருக்காது. அமிலங்களால் பிளாட்டினத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.

    பிளாட்டினம் தற்போது நகைகள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வைரங்கள், ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை பிளாட்டினத்தைக் கொண்டே வடிவமைக்கிறார்கள். பிளாட்டினத்தின் பளபளப்பு தன்மை வைரக் கற்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    பிளாட்டின நகைகளை திருமண நிச்சயதார்த்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும், பரிசாக அளிப்பதற்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

    பிளாட்டினம் நகைகளை வாங்குவதற்கு முன்பு அதில் ஹால்மார்க் முத்திரைகள் இருப்பதை கவனிக்க வேண்டும். நகையின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே பிளாட்டினம் நகைகளை வாங்க வேண்டும். வாரண்ட்டி, ரிட்டர்ன் பாலிசி போன்ற சேவைகளைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

    பழைய பிளாட்டினம் நகைகளை உருக்கி புதிய நகைகளாக உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் மாற்றிக்கொள்ள முடியும். நகையை உருக்கும்போது அதன் அளவில் சிறு இழப்புகள் ஏற்படக்கூடும். பிளாட்டினத்தை உருக்கி சுத்தம் செய்து புதிதாக வடிவமைக்க, பயிற்சி பெற்ற கலைஞர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

    நிதி நெருக்கடி ஏற்படும் நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் போலவே பிளாட்டினம் நகைகளையும் அடகு வைத்து தேவையான பணத்தைப் பெற முடியும். நகையின் தூய்மை, எடை மற்றும் தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிளாட்டினம் நகைகளை மதிப்பிடுவார்கள்.

    மற்ற உலோகங்களைக் காட்டிலும் பிளாட்டினம் அதிக மதிப்பு கொண்டது, அரிதானது. எனவே அதில் மற்ற உலோகங்களின் கலப்பு குறைவாகவே இருக்கும். அரிதாக தங்கத்துடன் சிறப்புக் கலவையாக பிளாட்டினம் கலக்கப்படுகிறது.

     வெள்ளியுடன் ஒப்பிடும்போது பிளாட்டினம் அதிக காலம் நீடிக்கும். விரைவாக அழுக்கு அடையாது. பிளாட்டினத்தை மற்ற பொருட்களால் அரிக்க முடியாது. பிளாட்டினத்தில் தேய்மானம் குறைவாகவே இருக்கும். எனவே விலை உயர்ந்த வைரக்கற்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பிளாட்டினத்தை உபயோகிக்கிறார்கள்.

    பிளாட்டினத்தின் இயற்கையான வெள்ளை நிறம் வைரங்களின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவை வைரத்தின் பளபளப்பையும், பிரகாசத்தையும் அதிகரிக்கும்.

    பிளாட்டினம் நகைகளை அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றலையும். அதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பிளாட்டினத்தின் நீடித்து இருக்கும் தன்மையும், வலிமையும் அதற்கு அதிக வரவேற்பை பெற்றுத் தருகின்றன. வைரங்கள் பதித்த பிளாட்டினம் நகைகள் இளைஞர்களின் விருப்பமாக இருக்கின்றன.

    • குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
    • கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.

    அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

    குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

    குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.

    மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.

    கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.

    சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன

    • பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்.
    • சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்.

    பெண்களின் நலன் மீது பாரம்பரியமாக நாம் அதிக அளவில் அக்கறை செலுத்தி வருகிறோம். ஆனால் இந்த பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப்பழக்கங்களை மறந்து விட்டோம்.

    தமிழகத்தில் பன்னெடுங்காலமாக பெண்கள் பூப்பு எய்திய பின் நல்ல ஆரோக்கிய உணவு வகைகளை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கிய பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பெய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காக சுருங்கிவிட்டது.

    பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும். சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும். தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது. இதில் எள், உளுந்து, வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.

    ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்தில் பெருக்க இந்த உணவுமுறை துணை செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை. மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள் வரை எள் சார்ந்த அதிக பொருட்கள் சேர்க்கப்படும். இது பெண்களுக்கு பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் பைட்டோ ஓஎஸ்ட்ரோஜென் எள்ளில் உள்ளது. மாதவிடாய் ஏற்பட்ட 6 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை உளுந்தங்களி சேர்க்கப்படும்.

    இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள் வரை வெந்தயக்கஞ்சி கொடுப்பா். இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகளை சரியான தடிமனுக்கு பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாக திகழும்.

    • சேமிப்பு இலக்கை தேர்ந்தெடுப்பது அவசியமானது.
    • மாதங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

    பணத்தை சேமிப்பதற்கு பலரும் பலவிதமான முறைகளை கையாள்கிறார்கள். அத்தகைய சேமிப்பு முறைகள் திருப்திகரமான வகையில் பலன் அளிக்கிறதா என்பதையும் அவ்வப்போது ஆராய வேண்டும். குறுகியது, நீண்டகாலம் என நீங்கள் பணத்தை சேமிக்க தேர்ந்தெடுக்கும் திட்டங்கள் எதுவாகவும் இருக்கலாம். அதில் சில உத்திகளையும், சேமிப்புக்கான அணுகுமுறையில் சில மாற்றங்களையும் செய்யவேண்டியது அவசியமாகும். இதன் மூலம் சிறந்த முறையில் பணத்தை சேமித்து பயன்பெற முடியும்.

    வைப்புநிதி திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் நீண்டகால சேமிப்புக்குப் பதிலாக, குறுகிய கால சேமிப்பு வரம்பை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது வைப்புநிதி மற்றும் அதற்கான வட்டித்தொகையை விரைவில் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்த திட்டங்களில் முதல் 3 வருடங்களுக்கு மட்டுமே வட்டித் தொகைக்கான சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறுகியகால சேமிப்பு இலக்கை தேர்ந்தெடுப்பது அவசியமானது. ஒரு வருட காலத்துக்குள் குறிப்பிட்ட அளவு தொகையை சேமிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயுங்கள். அதற்கான சேமிப்பு திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்துக்கு, தொடர் வைப்புநிதி திட்டத்தை வருடங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல், மாதங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இது குறுகிய காலத்தில் உங்களுக்குத் தேவையான தொகையை எளிதில் சேமிக்க உதவியாக இருக்கும்.

    உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் சேமிப்பையும் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு விகிதத்தை நிர்ணயித்து அதை தவறாமல் கடைப்பிடியுங்கள். குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். இதன் மூலம் சேமிப்பை பற்றிய தெளிவு கிடைக்கும். உங்களுடைய சேமிப்பு இலக்கை எளிதாக அடையவும் முடியும்.

    சேமிப்புக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எத்தகைய சூழ்நிலையிலும் எடுத்து செலவழிக்காதீர்கள். சரியான முறையில் பட்ஜெட் போட்டு அதை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

    சேமிப்புக்கு என்று தனியாக ஒரு வங்கிக் கணக்கை வைத்திருங்கள். சேமிப்புக்காக நீங்கள் ஒதுக்கும் எல்லா தொகையையும் இந்தக் கணக்கில் செலுத்துங்கள். இதில் இருந்து உங்களுடைய வெவ்வேறு சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

    உங்களுடைய மாதாந்திர மற்றும் வருடாந்திர சேமிப்பு திட்டங்களுக்கு, வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் செலுத்தப்படும் முறையை தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் சேமிப்பு தவணைகள் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

    நிலையான மாத வருமானம் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது நீண்ட காலத்தின் அடிப்படையில் நல்ல சேமிப்பு முறையாகும். பல பெண்கள் பணத்தை சேமிப்பதற்கு சீட்டு கட்டும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் நிறுவனம் நம்பகமானதா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே அதைப்பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.

    • சருமத் துளைகள் வழியாக வியர்வை வெளியேறும்.
    • ஸ்வெட் பேடுகள் இரண்டு விதங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன.

    உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதற்காக வியர்வை சுரப்பிகளின் மூலம் சருமத் துளைகள் வழியாக வியர்வை வெளியேறும். இந்த செயல்பாட்டின் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்பட்டு, உடல் குளிர்ச்சி அடையும். வியர்வை வெளியேறும் செயல்பாடு, தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

    அக்குள் போன்ற உடலின் மறைவான பகுதிகளில் இருந்து வெளியேறும் வியர்வை, விரைவாக உலர்வதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே அந்த பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக, பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் பெருகும். இதன் மூலம் துர்நாற்றமும். துணிகளில் கறைகளும் உண்டாகும். இதைத் தவிர்ப்பதற்காக பலரும் 'ஸ்வெட் பேடு' எனப்படும் வியர்வையை உறிஞ்சும் பட்டையை பயன்படுத்துவார்கள். இதைப் பற்றிய மேலும் சில தகவல்கள் இங்கே...

    ஜிம், கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள், விற்பனை பிரதிநிதிகள் அல்லது தினமும் சமூகத்தோடு ஒன்றிணைந்திருக்கும் பணிகளில் இருப்பவர்கள் என பலருக்கும் வியர்வை நாற்றம் முக்கியமான பிரச்சினையாக இருக்கும். இதன் காரணமாக இவர்களின் தன்னம்பிக்கை குறைய நேரிடும். மற்றவர்களுடன் உரையாடுவதில் இவர்களுக்கு தயக்கம் இருக்கும். அத்தகையோருக்கு 'ஸ்வெட் பேடு' உதவக்கூடும்.

    இது வியர்வை மற்றும் அதன் மூலம் உண்டாகும் துர்நாற்றத்தை உறிஞ்சி உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். உடைகளில் வியர்வையின் மூலம் கறைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

    அக்குள் பகுதி சருமத்தில் நேரடியாக ஒட்டிவைப்பது, அணியும் ஆடையின் உள்பகுதியில் ஒட்டிவைப்பது என ஸ்வெட் பேடுகள் இரண்டு விதங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. சருமத்தில் நேரடியாக ஒட்டவைத்து பயன்படுத்தும் ஸ்வெட் பேடுகள். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு சரும எரிச்சல் மற்றும் சிவத்தலை ஏற்படுத்தக்கூடும். இதன் மூலம் அக்குள் பகுதி சருமம் கருமையாக மாற நேரிடும். எனவே இவர்கள் ஆடையில் ஒட்டி பயன்படுத்தும் ஸ்வெட் பேடுகளை தேர்ந்தெடுக்கலாம்.

    சில ஸ்வெட் பேடுகளில் பயன்படுத்தப்படும் பசைகள், ஆடைகளில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்வதற்கு வாய்ப்புண்டு, இது உங்கள் ஆடையின் தன்மையை பொறுத்தோ அல்லது நீங்கள் தேர்வு செய்யும் ஸ்வெட் பேடுகளின் தரத்தை பொறுத்தோ மாறுபடலாம்.

    இறுக்கமான ஆடைகளை அணியும்போது ஸ்வெட் பேடுகள் அக்குள் பகுதியில் தடிமனாக தெரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே அவை தெரியாத வகையில் சவுகரியமான ஆடைகளை அணியுங்கள்.

    `ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' எனப்படும் வியர்வை அதிகமாக வெளியேறும் பிரச்சினை இருப்பவர்களுக்கு. சில நேரங்களில் ஸ்வெட் பேடுகளை தாண்டியும் வியர்வை கசிய வாய்ப்புண்டு. இவர்கள் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட வியர்வை பட்டைகளை பயன்படுத்தலாம். இதுமட்டுமல்லாமல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டிஸ்போசபிள் ஸ்வெட் பேடுகளும், துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட ஸ்வெட் பேடுகளும் சந்தைகளில் கிடைக்கின்றன.

    சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு டிஸ்போசபிள் ஸ்வெட் பேடுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை பகுதியல காற்றோட்டத்தை அதிகரிப்பதோடு, பாக்டீரியாக்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்வெட் பேடுகளில், ஆடைகளுடன் சேர்த்து தைத்து பயன்படுத்தும் வகையிலும் கிடைக்கின்றன. இவை புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த வகை ஸ்வெட் பேடுகள் செலவையும் குறைக்கின்றன.

    ×