என் மலர்
பெண்கள் உலகம்

வியர்வையை உறிஞ்சும் ஸ்வெட் பேடு பயன்படுத்துபவரா நீங்கள்..?
- சருமத் துளைகள் வழியாக வியர்வை வெளியேறும்.
- ஸ்வெட் பேடுகள் இரண்டு விதங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன.
உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதற்காக வியர்வை சுரப்பிகளின் மூலம் சருமத் துளைகள் வழியாக வியர்வை வெளியேறும். இந்த செயல்பாட்டின் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்பட்டு, உடல் குளிர்ச்சி அடையும். வியர்வை வெளியேறும் செயல்பாடு, தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அக்குள் போன்ற உடலின் மறைவான பகுதிகளில் இருந்து வெளியேறும் வியர்வை, விரைவாக உலர்வதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே அந்த பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக, பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் பெருகும். இதன் மூலம் துர்நாற்றமும். துணிகளில் கறைகளும் உண்டாகும். இதைத் தவிர்ப்பதற்காக பலரும் 'ஸ்வெட் பேடு' எனப்படும் வியர்வையை உறிஞ்சும் பட்டையை பயன்படுத்துவார்கள். இதைப் பற்றிய மேலும் சில தகவல்கள் இங்கே...
ஜிம், கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள், விற்பனை பிரதிநிதிகள் அல்லது தினமும் சமூகத்தோடு ஒன்றிணைந்திருக்கும் பணிகளில் இருப்பவர்கள் என பலருக்கும் வியர்வை நாற்றம் முக்கியமான பிரச்சினையாக இருக்கும். இதன் காரணமாக இவர்களின் தன்னம்பிக்கை குறைய நேரிடும். மற்றவர்களுடன் உரையாடுவதில் இவர்களுக்கு தயக்கம் இருக்கும். அத்தகையோருக்கு 'ஸ்வெட் பேடு' உதவக்கூடும்.
இது வியர்வை மற்றும் அதன் மூலம் உண்டாகும் துர்நாற்றத்தை உறிஞ்சி உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். உடைகளில் வியர்வையின் மூலம் கறைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
அக்குள் பகுதி சருமத்தில் நேரடியாக ஒட்டிவைப்பது, அணியும் ஆடையின் உள்பகுதியில் ஒட்டிவைப்பது என ஸ்வெட் பேடுகள் இரண்டு விதங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. சருமத்தில் நேரடியாக ஒட்டவைத்து பயன்படுத்தும் ஸ்வெட் பேடுகள். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு சரும எரிச்சல் மற்றும் சிவத்தலை ஏற்படுத்தக்கூடும். இதன் மூலம் அக்குள் பகுதி சருமம் கருமையாக மாற நேரிடும். எனவே இவர்கள் ஆடையில் ஒட்டி பயன்படுத்தும் ஸ்வெட் பேடுகளை தேர்ந்தெடுக்கலாம்.
சில ஸ்வெட் பேடுகளில் பயன்படுத்தப்படும் பசைகள், ஆடைகளில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்வதற்கு வாய்ப்புண்டு, இது உங்கள் ஆடையின் தன்மையை பொறுத்தோ அல்லது நீங்கள் தேர்வு செய்யும் ஸ்வெட் பேடுகளின் தரத்தை பொறுத்தோ மாறுபடலாம்.
இறுக்கமான ஆடைகளை அணியும்போது ஸ்வெட் பேடுகள் அக்குள் பகுதியில் தடிமனாக தெரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே அவை தெரியாத வகையில் சவுகரியமான ஆடைகளை அணியுங்கள்.
`ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' எனப்படும் வியர்வை அதிகமாக வெளியேறும் பிரச்சினை இருப்பவர்களுக்கு. சில நேரங்களில் ஸ்வெட் பேடுகளை தாண்டியும் வியர்வை கசிய வாய்ப்புண்டு. இவர்கள் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட வியர்வை பட்டைகளை பயன்படுத்தலாம். இதுமட்டுமல்லாமல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டிஸ்போசபிள் ஸ்வெட் பேடுகளும், துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட ஸ்வெட் பேடுகளும் சந்தைகளில் கிடைக்கின்றன.
சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு டிஸ்போசபிள் ஸ்வெட் பேடுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை பகுதியல காற்றோட்டத்தை அதிகரிப்பதோடு, பாக்டீரியாக்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்வெட் பேடுகளில், ஆடைகளுடன் சேர்த்து தைத்து பயன்படுத்தும் வகையிலும் கிடைக்கின்றன. இவை புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த வகை ஸ்வெட் பேடுகள் செலவையும் குறைக்கின்றன.






