என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா?
    • ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள்.

    வருடத்துக்கு ஒருமுறை ஆயுத பூஜை என்கிற பெயரில் மெஷின்களுக்குக் கூட பூரண ஓய்வு அளிக்கிறோம். இன்னும் வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பில் இருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ஆனால், ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கிற உயிருக்கு, குறிப்பாக பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா? பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களை பற்றி பார்ப்போம்.

     மாதவிலக்கு:

    இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால்தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும். அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும். இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.

    மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.

     பிரசவத்துக்குப் பிறகு:

    வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.

    கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.

    அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்த பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.

    பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்' என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.

    தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.

    சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.

    மெனோபாஸ்:

    மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி, படபடப்பு, கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும். மூளையில் உண்டாகிற ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.

    எந்த விடயத்திலும் பிடிப்பே இருக்காது. உடல் மற்றும் மனதளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது. அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள். பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

     வயதானவர்கள்:

    முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம், கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இவர்களுக்கான அவசியத் தேவை.

    • தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகிறார்.
    • குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே'' என்ற பாடலுக்கு ஏற்ப குழந்தைகளை பெற்று அதன் ஒவ்வொரு வளர்ச்சிப்படி நிலையிலும் உரியவகையில் வளர்த்தெடுக்கும் பெரும் பொறுப்பு தாய்க்கே உள்ளது என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஒரு தாயின் செயற்பாடுகள், பழக்க வழங்கங்களை வைத்தே அவளின் பிள்ளைகளை மதிப்பிடுகிறார்கள் இதுவே யதார்த்தமாகும்.

    தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றார். காராணம் பத்துமாதங்கள் ஒரு குழந்தையை கருவிலே சுமப்பது என்பது லேசான காரியமல்ல அவ்வாறு சுமந்து பிரசவ வலியைத் தாங்கி ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டுவருகிறாள். அதோடு அவளுடைய பங்களிப்பு நிறைவுபெறுவதில்லை.

    தாய் என்ற நிலையை அடைந்த பெண் பல பொறுப்புக்களை சுமந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இந்த சமுதாயத்துக்கு நல்லதொரு பிரஜையை உருவாக்கவேண்டிய பெரும்பொறுப்பும் தாய்க்கே உண்டு.

    இன்று உலகில் பலவகையான சிக்கல்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றார்கள், போதைப்பொருள் பாவனை, தவறான நபர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு என பல பிரச்சினைகள் இன்று தலைவிரித்தாடுகின்றது. அவற்றில் இருந்தெல்லாம் தன்னுடைய பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ஒரு தாய் பல தியாகங்களை செய்யவேண்டியுள்ளது.

    குழந்தைகளை அளவுக்கு அதிகமாக கண்காணித்தாலும் அவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொண்டு தவறுகளை செய்ய முற்படுகிறார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் அன்பு செலுத்தும் பழக்கத்தை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் பிறரை நேசிக்கும் பழக்கத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்வார்கள். அதுவே ஒரு நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கம். அத்தோடு பிள்ளைகளை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில் ஒவ்வொரு பிள்ளைக்கும் வெவ்வேறு விதமான திறமைகள் உண்டு. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர ஒப்பிட்டு குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சியில் தாயின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது.

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் அநேகமான குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு குறைவாகவே கிடைக்கின்றது. காரணம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாய்மார்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

    அதனால் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியாமல் இருக்கின்றது. இது குழந்தைகளின் முன்னேற்றப்பாதைக்கு சில நேரங்களில் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எவ்வளவு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களின் குழந்தைகளுக்காகவும் நேரத்தை ஒதுக்கி ஒருமுகப்படுத்தும் மனநிலையுடன் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    பிள்ளைகள் ஏதேனும் ஒரு பொருளை கேட்டுக்கும் போது அது தேவைக்காக கேட்கின்றதா? அல்லது ஆசைக்காக கேட்கின்றதா என்பதை புரிந்து கொண்டு தேவைக்காக கேட்கும் எதையும் தாமதிக்காமல் பெற்றுக்கொடுங்கள். குறித்த காலத்தில் காட்டாத அன்பும், காலம் அறிந்து கண்டிக்காத செயலும் பிள்ளை வளர்ப்பில் தாய் நிச்சயமாக பின்பற்றவேண்டிய விஷயங்களாகும்.

    எனவே ஒரு தாய் குழந்தைகளிடம் காட்டும் அக்கறையும் அன்பும் பரிவும், நல்லொழுக்கமுமே அக்குழந்தைக்கு கிடைக்கின்ற மூலதனமாக அமைந்து எதிர்காலத்தில் அந்தக் குழந்தை நல்ல குழந்தையாக திகழ வழி வகுக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தாய்மாரும் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகாமல் இருப்பதே கட்டாயமாகும்.

    • பெண்கள் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டு வருகின்றனர்.
    • தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும்.

    வளர்ந்து வரும் நாடுகளில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர்.

    தாங்கள் நினைத்ததை, பிறரை சார்ந்து இல்லாமல் சரியான தருணத்தில் தாமாகவே செய்து கொள்ளும் தன்னிச்சையே சுயசார்பு. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்குக் கூட பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு. இது நம் முன்னேற்றத்தை முடக்கும்.

    இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம். இது மனதுக்கு புத்துணர்வு அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும். இப்பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த தன்னம்பிக்கை அவர்களின் சிறுசிறு மகிழ்ச்சிக்கும் சிறகுகளை அளித்து உயர பறக்க வழி வகுக்கும்.

    • மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி.
    • வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான்.

    மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்துவிட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:

    இயற்கையோடு இணையலாம்

    பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம். உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்

    மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்ற போதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள்.

    மற்றவர்களுக்கு உதவலாம்

    தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

    நிகழ்காலத்தில் வாழ்வோம்

    நேற்றில் இருந்து கற்றுக் கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

    உறவுகள் இனிமை தரும்

    நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியை பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல்நலம் கிடைக்கின்றது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப்பாதுகாப்போம்.

    அறிவை வளர்க்கலாம்

    ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது.

    உடம்பை உறுதியாக்கலாம்

    தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும் விதம் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும்.

    நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்

    வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக பார்க்கப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றி உணர்வுடன் இருங்கள். எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சூழல்களை தவிர்த்துவிடுங்கள்.

    உங்களைச் சுற்றிலும் நேர்மறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள். மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வையில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க்கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்.

    • ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது பாதிக்கப்படுகின்றனர்.
    • தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

    கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒரு கட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தி நோயை அனுபவிப்பார்கள். இது சில பெண்களுக்கு மிக மோசமாக இருக்கும். எப்போ வரும், எப்படி வரும் என்று தெரியாது. ஆனால், கர்ப்பகாலங்களில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு வாந்தியும், அதற்கான அறிகுறிகளும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இது போன்ற அறிகுறிகள் இல்லாமல்கூட இருக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் எப்போதும் சோர்வாகவும், வாந்தி எடுத்துக்கொண்டும் இருப்பதை `மார்னிங் சிக்னஸ்' என்று மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர்.

    ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் இரண்டு சதவிகிதத்தினருக்கு தொடர்ச்சியான வாந்தியால் உடல் எடை குறைந்து, உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஹைபர் எமிசிஸ் கிராவிடரம் என்ற தீவிர நிலைக்கும் உள்ளாகின்றனர்.

    இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது GDF15 எனப்படும் ஹார்மோன்தான் மார்னிங் சிக்னசுக்கு காரணம் என்பதை விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

    இந்த ஹார்மோன் அனைத்து மக்களிடமும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கரு வளரும்போது, அது அதிக அளவு GDF15ஐ உற்பத்தி செய்கிறது. இது தாயின் ரத்த ஓட்டத்துக்குச் சென்று குமட்டலைத் தூண்டுகிறது.

    சில பெண்கள் மற்றவர்களைவிட மோசமான மார்னிங் சிக்னசால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரு கர்ப்பத்தில் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால் அடுத்த கர்ப்பத்தில் இது இருக்காது.

     எப்படியென்றால், உடல் இயல்பைவிடக் குறைவான அளவு ஹீமோகுளோபினை உருவாக்கும் பீட்டா தாலசீமியா போன்ற பாதிப்புடையவர்களுக்கு இயற்கையாகவே GDF15 ஹார்மோனின் அளவு அதிகம் இருக்கும். இவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தையின் கரு உருவாக்கும் ஹார்மோனால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், சில பெண்களுக்கு GDF15 ஹார்மோன் குறைவாக இருக்கலாம். அவர்கள் கருத்தரிக்கையில் கரு உண்டாக்கும் ஹார்மோனின் அதிக செறிவால் பாதிக்கப்படலாம்.

    தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனுக்கு அந்தப் பெண் எவ்வளவு உணர்திறன் உடையவராக இருக்கிறாரோ, அவ்வளவு நோய்வாய்ப்படுவார்.

    விஞ்ஞானிகள் சில பெண்களிடம் ஒரு ஜீன் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். குழந்தை அதே ஜீனை பெற்று இருந்தால், GDF15 மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் மார்னிங் சிக்னஸ் இருக்காது.

    அதுவே தாயின் ஜீனை கரு பெறவில்லை என்றால் GDF15 ஹார்மோனுக்கு அதிக உணர்திறன் கொண்டவராக இருப்பார். இதனால் கடுமையான மார்னிங் சிக்னசுக்கு உள்ளாக நேரிடும்.

    • நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது.
    • பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான்.

    பீரியட்ஸ் பேன்ட்டீஸ் உபயோகிக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்கு முன், அதன் உபயோகம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என்பவை பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான்.

    நாப்கின் எப்படி பீரியட்ஸ் நாள்களின் ரத்தப்போக்கை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதேபோல் உறிஞ்சிக்கொள்ளும். இதில் பாலியூரிதின் லேமினேட்... எனப்படும் ஃபேப்ரிக் இருக்கும். இது ப்ளீடிங்கை உறிஞ்சிக்கொள்ளும். இதை உபயோகிக்கும்போது நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது. ஆனால், அதேசமயம் இதை நாள் முழுவதும் உபயோகிக்க முடியாது.

    8 முதல் 10 மணிநேரத்துக்கொரு முறை இந்த பேன்ட்டீஸை மாற்ற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு உபயோகிக்கும் டயாப்பரில் உள்ளது போல இதில் லீக் ப்ரூஃப் கவரிங் இருப்பதால், ப்ளீடிங் வெளியே கசியாது. இதனால் சமீப காலமாக நிறைய பெண்கள் இதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    அதேசமயம் பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இது சற்று காஸ்ட்லியானது. இதை துவைத்துப் பயன்படுத்துவதும் சிரமம். நிறைய லேயர்கள் கொண்ட இந்த பேன்ட்டீசை துவைத்து காயவைக்கும்போது, அதற்கு நீண்டநேரம் எடுக்கும்.

    எனவே, ஒரு பீரியட்சுக்கு உங்களுக்கு நான்கைந்து பேன்ட்டீஸ் தேவைப்படலாம். பணியிடங்களிலும் வெளியிடங்களிலும் இதை மாற்றுவதும் சிரமமாக இருக்கும். அதிக ப்ளீடிங் உள்ளவர்கள் இதை பயன்படுத்துவது சரியாக இருக்காது. நீண்ட நேரம் இதைப் பயன்படுத்துவதால் ப்ளீடிங் வாடை வீசலாம்.

    கெமிக்கல் சேர்த்து செய்யப்பட்ட மற்றும் வாசனை சேர்த்து செய்யப்பட்ட நாப்கின், பேன்ட்டீஸ் எதுவுமே உபயோகிக்க ஏற்றவை அல்ல. ஏனெனில், அது வெஜைனா பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்துவிடும்.

    சிலவகை பீரியட் பேன்ட்டீசில் அதிக அளவிலான பெர் அண்ட் பாலிஃப்ளுரோ ஆல்கைல் சப்ஸ்டன்ஸ் இருப்பதாக சொல்கிறார்கள். இது அந்த பேன்ட்டீஸின் உள் மற்றும் வெளி லேயர்களில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை 'ஃபார்எவர் கெமிக்கல்' என்று சொல்கிறார்கள். இது அந்த பேன்ட்டீசை எண்ணெய், தண்ணீர், வெப்பம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த பொருளானது சூழலுக்கு உகந்ததல்ல, அதிக நாள்கள் உபயோகிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம், கல்லீரல் பாதிக்கப்படலாம், கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம், சிலவகை புற்றுநோய் பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே பீரியட்சுக்கான பிரத்தியேக உள்ளாடை வாங்கும்போது PFAS ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

    அவற்றில் இப்படிப்பட்ட கெமிக்கல்கள் வராது. நாப்கினோ, டாம்பூனோ, மென்ஸ்டுரல் கப்போ எது உபயோகித்தாலும் மாதவிடாய்கால சுகாதாரம் மிக முக்கியம்.

    பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாதாரண தண்ணீரால் கழுவினால் போதுமானது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வாசனை உள்ள பொருள்களை உபயோகிக்கக் கூடாது. பேன்ட்டி லைனர் என்பது லேசான ப்ளீடிங், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு உபயோகிப்பது, அது பீரியட்ஸ் நாட்களில் உபயோகிக்க ஏற்றதல்ல.

    • சமையல் பாத்திரங்களை டிஷ்வாஷர் மூலம் சுத்தப்படுத்த முடியும்.
    • அவ்வப்போது ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்வது அவசியம்.

    சமையல் அறையில் வேலைகளை சுலபமாக்குவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தக்கூடியது 'டிஷ்வாஷர்' எனப்படும் பாத்திரங்களை சுத்தப்படுத்தும் எந்திரம். இதனுடைய அமைப்பு, பயன்பாடு மற்றும் பிற விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    தானியங்கி சலவை எந்திரத்தைப் போலவே, டிஷ்வாஷரிலும் தண்ணீரை உள்ளே செலுத்தும் 'இன்லெட் பைப்', உள்ளிருக்கும் தண்ணீரை வெளியேற்றும் 'அவுட்லெட் பைப் இரண்டும் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். சமையல் அறையில் தண்ணீர் வசதி உள்ள இடத்தில், டிஷ்வாஷர் எந்திரத்தை வைப்பது முக்கியமாகும்.

    அன்றாடம் உபயோகிக்கும் எவர்சில்வர், கண்ணாடி. பீங்கான் வகை சமையல் பாத்திரங்களை டிஷ்வாஷர் மூலம் சுத்தப்படுத்த முடியும். அலுமினியம், வெள்ளி, இரும்பு மற்றும் நான்-ஸ்டிக் பாத்திரங்களை டிஷ்வாஷரில் சுத்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    டிஷ்வாஷர், அதிக சூடான தண்ணீரின் மூலம் பாத்திரங்களை சுத்தம் செய்யும். எனவே 'புட் கிரேடு அல்லது டிஷ்வாஷர் சேப்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே டிஷ்வாஷர் மூலம் சுத்தப்படுத்த முடியும்.

    டிஷ்வாஷரின் உள்ளே சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்களை அடுக்குவதற்கு 2 அல்லது 3 டிரேக்கள் கொடுக்கப் பட்டிருக்கும். மேல் அடுக்கில் சிறிய டீஸ்பூன், கரண்டி, முடி போன்ற வற்றையும், நடு அடுக்கில் சிறிய கிண்ணங்கள், பாத்திரங்கள், டம்ளர்கள் போன்றவற்றையும் கடைசி அடுக்கில் பெரிய தட்டுகள், பாத்திரங்கள், குக்கர், வாணலி போன்றவற்றையும் அடுக்கலாம்.

     டிஷ்வாஷரில் பாத்திரங்களை வரிசையாகவும், தலைகீழாக கவிழ்த்து அடுக்க வேண்டும். பாத்திரங்களில் இருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றிய பிறகே அவற்றை எந்திரத்தின் உள்ளே வைக்க வேண்டும். டிஷ்வாஷரின் உள்னே இருக்கும் இரண்டு துளை கொண்ட இறக்கைகளின் வழியாக, சூடான தண்ணீர் எல்லா பாத்திரங்களின் மீதும் பிய்ச்சி அடிக்கப்படும்.

    பாத்திரங்களில் ஏதேனும் உணவுத் துணுக்குகள் இருந்தால், அவை டிஷ்வாஷரில் உள்ள ஃபில்டரில் சேமிக்கப்படும். அவ்வப்போது ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்வது அவசியமாகும்.

    டிஷ்வாஷர் சால்ட்:

    தண்ணீரை மென்மையாக்குவதற்கு டிஷ்வாஷரில் ஒருவகையான உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த உப்பை அவ்வப்போது அதற்கென உள்ள அமைப்பில் நிரப்ப வேண்டும். அதுபோல பாத்திரம் துலக்கும் சோப்புத்தூளையும், அவ்வப்போது அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் அறையில் நிரப்ப வேண்டும். சலவை எந்திரத்தில் உள்ளதைப் போலவே. டிஷ்வாஷரிலும் நமக்கு ஏற்ற சுத்தப்படுத்தும் முறையை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

    தண்ணீர் பயன்பாடு:

    டிஷ்வாஷரில் குறைந்த அளவு தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்களை கைகளால் துலக்குவதை விட, டிஷ்வாஷர் மூலம் சுத்தம் செய்யும்போது இரண்டு மடங்கு தண்ணீர் மிச்சப்படுத்தப்படுகிறது.

    மின்சார பயன்பாடு:

    டிஷ்வாஷரை ஒருமுறை பயன்படுத்தும்போது, ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். டிஷ்வாஷர் இயங்கிக் கொண்டு இருக்கும்போது மின்சார துண்டிப்பு காரணமாக நிறுத்தப்பட்டால், மின் இணைப்பு கொடுத்தவுடன் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.

    டிஷ்வாஷர் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும். அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் டிஷ்வாஷரை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். சமையல் அறையில் போதுமான

    இடவசதியும், தண்ணீர் வசதியும் இருப்பவர்களுக்கு டிஷ்வாஷர் சரியான தேர்வாகும்.

    • அலட்சியமான மனநிலையில் கேட்பதோ, இடைமறித்து பேசுவதோ கூடாது.
    • குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.

    புத்தாண்டு மலர்ந்து இருக்கும் இந்தச் சூழலில், ஆண்டு முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு உறுதிமொழிகளை பலரும் எடுப்பார்கள். அடைய விரும்பும் இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி பயணத்தை தொடரவும் செய்வார்கள்.

    அதேவேளையில் உறவுகளுக்கும், நட்புக்கும், சுற்றுப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுப்பதும் இன்றியமையாதது. இவைகளை புத்தாண்டு தீர்மானங்களுடன் செயல்படுத்துவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    உரையாடல்: நட்போ, உறவோ இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் சுமூகமாக அமைய வேண்டும். ஏதேனும் எதிர்பார்பை முன்வைத்து உரையாடலை தொடங்கக்கூடாது. தன் தரப்பு பேச்சை மட்டுமே எதிர் தரப்பினர் கேட்க வேண்டும் என்ற மன நிலையில் வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது. அவர்கள் பேசும்போதும் தெளிந்த மனநிலையில் அவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அலட்சியமான மனநிலையில் கேட்பதோ, இடைமறித்து பேசுவதோ கூடாது.

    அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்தரப்பினரிடம் இருந்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை புத்தாண்டு உறுதிமொழிகளில் ஒன்றாக முன்னெடுக்க வேண்டும். நட்பு, உறவு மட்டுமின்றி புதிய நபர்களையும் நாட வேண்டும். அவர்கள் மூலம் நட்பு வட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கும், நல்ல விஷயங்களை, பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வதற்கும் முன்வர வேண்டும்.

    விருப்பங்கள்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அதற்கு பெற்றோர் முன்மாதிரியாக திகழ வேண்டும். பிள்ளைகளிடம் பாரபட்சம் காண்பிக்காமல் அவர்களின் தேவைகள், விருப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். தங்களின் விருப்பங்கள், அத்தியாவசிய தேவைகளை கேட்டு நிறைவேற்றுவதற்கு சிலர் தயங்கலாம். அதனை புரிந்து கொண்டு அவர்களின் தேவையை பெற்றோர் பூர்த்தி செய்ய வேண்டும்.

    மற்ற நபர்களுக்கு தேவை அதிகமாக இருக்கலாம். அதைபுரிந்து கொண்டு தன் தேவையை குறைத்துக்கொள்வதற்கு சிலர் முன்வரலாம். அதனை சாதகமாக பயன்படுத்தி தன் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. தனக்காக விட்டுக்கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தக்க சமயத்தில் அவர்களின் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்பதை புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்றாக கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.

    ஆர்வம்: குடும்ப உறவுகள், நட்பு வட்டத்தை தாண்டி நம்மை சுற்றி வசிக்கும் மக்கள், பொது இடங்களில் அடிக்கடி பார்க்கும் நபர்கள் அவர்களின் செயல்பாடுகள், குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டலாம். அவர்கள் மூலமும் புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

    அவர்களின் அனுபவங்கள் ஏதேனும் ஒரு வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கலாம். இதுநாள் வரை அடிக்கடி பார்க்கும் நபர்களிடம் பேசி பழகுவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தாலும் புத்தாண்டு முதல் சிறு புன்னகையை வெளிப்படுத்து வதற்காகவாவது முயற்சிக்கலாம்.

    இரக்கம்: மனித நேயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்வதில் இரக்கத்திற்கு தனி பங்கு உண்டு. குடும்பம், நட்பு வட்டத்தை தாண்டி கண்முன்னே யாரேனும் நிர்கதியாக தவிக்கும் நிலையை எதிர்கொண்டால் தயக்கமின்றி அவர்களுக்கு உதவிபுரிவதற்கு முன்வர வேண்டும்.

    அனுதாபத்துடனும், இரக்கத்துடனும் அணுக வேண்டும். கனிவாகவும், பணிவாகவும் இருப்பது வாழ்க்கையை சிறப்பாக கட்டமைக்கவும், வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்லவும் துணைபுரியும். இத்தகைய பழக்கவழக்கங்களை புத்தாண்டு தீர்மானங்களுள் ஒன்றாக இணைத்து செயல்படுத்தி வருவது சிறப்புக்குரியது.

    சுயபரிசோதனை: நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் வழக்கத்தை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இன்பம், துன்பத்தை எதிர்கொள்ளும்போது நிச்சயம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அது அந்த சூழலில் இருந்து மீண்டு வருவதற்கும், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதற்கும் வழிகாட்டியாய் அமையும்.

    வாழ்வில் செய்ய வேண்டிய மாற்றங்களை தீர்மானிப்பதற்கும், எதிர்காலத்தை வலுவாக கட்டமைப்பதற்கும் சுயபரிசோதனை அவசியமானது. புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்றாக இதனையும் சேர்த்து பின்பற்றுவது வாழ்வில் வெற்றி தரும்.

    • அவசர மருத்துவ தேவைக்கு கூடுதல் கார்டு பயன்படும்.
    • தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும்.

    மத்திய அரசு ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து, புதிய கிரெடிட் கார்டுகளை வாங்குவது தற்போது மிகவும் எளிதான விஷயமாகும். உங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் தகுதி வந்துவிட்டது என வங்கிகளின் கஸ்டமர் கேரில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கும்.

    நம்மில் பலர் ஏற்கெனவே ஒரு சில கார்டுகளை வைத்திருப்போம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் நம்முடைய கடன் வாங்கும் தகுதி உயரும். ரிவார்ட் மற்றும் கேஷ்பேக் பாயின்ட்ஸ் உள்ளிட்ட பயன்களை நாம் அனுபவிக்கலாம்.

    ஆனால் அதிக கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது என்பது இருமுனை கத்தி போன்றது. எனவே பல கார்டுகளை எப்படி கையாளுவது? என்பதை இங்கே காணலாம்.

    கூடுதல் கிரெடிட் கார்டை வைத்திருப்பது நல்ல ஐடியா என்பதில் சந்தேகம் இல்லை. அவசர மருத்துவ தேவைக்கு கூடுதல் கார்டு பயன்படும். முக்கியமான கிரெடிட் கார்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த முடியாமல் போகும் போது, கூடுதல் கார்டு உதவியாக இருக்கும். ஆனால், தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும்.

    கைவசம் கூடுதலாக இருக்கும் கிரெடிட் கார்டுகளை, மொபைல் போன் வாங்குவதற்காகவோ, டி.வி. உள்ளிட்ட உடனடி அவசியம் அல்லாத பொருட்கள் வாங்குவதற்கோ பயன்படுத்த வேண்டாம்.

    கடன் வரம்பு அதிகமாக இருப்பதால், அதிகம் செலவு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். இதனால் கடன் என்னும் பொறியில் சிக்க வேண்டி இருக்கும். இரு வழிகளில் கிரெடிட் கார்டு மூலமான செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

    செலவுகளை கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக செயலிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும்போது, அதிகம் செலவு செய்யும்போது எச்சரிக்கைகளை அந்த செயலி அனுப்பும். அடுத்ததாக நெட்பேங்கிங் உள்ளிட்ட இதர வழிகளில் பணத்தை செலுத்தலாம். பல வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. போனஸ் புள்ளிகள், கேஷ் பேக், தவிர சினிமா டிக்கெட் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் இருக்கின்றன.

    எவ்வளவு சலுகைகள் இருந்தாலும் மூன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பது ஏற்புடையதல்ல. அனைத்து கார்டுகளையும் கையாளுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதர சலுகைகளுக்காக நீங்கள் 5 கார்டுகளை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொண்டால், அனைத்து வங்கிகளும் உங்களுடைய பில் செலுத்தும் தேதியை நினைவுபடுத்தும் என சொல்ல முடியாது. ஒரு வேளை நினைவுபடுத்தினால் கூட, பணம் செலுத்திவிட்டோம் என நீங்கள் நினைக்க வாய்ப்பு இருக்கிறது.

    ஒருவேளை நீங்கள் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய இதர சலுகைகளை விட அபராதம் அதிகமாக இருக்கும். சிறிய பலன்களுக்காக, அதிக அபராதம் செலுத்த வேண்டாம்.

    • நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை.
    • பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்துவிடுங்கள்.

    பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களின் மீதும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கடைகளில் இருந்து பெரும்பாலான நேரங்களில் ஆவலோடு பொருட்களை வாங்குகின்ற நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை. சில சமயம், பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்து சில நாள் அல்லது வாரங்கள் கழித்தும் கூட உபயோகம் செய்கிறோம்.

     இடைப்பட்ட நேரத்தில் காலாவதி தேதி கடந்து விட்டதா என்ற சந்தேகம் பெரும்பாலும் வந்து விடுவதில்லை. கடைகளில் புத்தம் புதிய பிரெட், ஸ்வீட் போன்றவற்றை வாங்கி கொண்டு வந்து ஃபிரிட்ஜில் நாம் நிரப்பி விடுகிறோம். தேவைப்படும் சமயங்களில் எடுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், ஒருவேளை இது கெட்டுப் போயிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதும், பின்னர் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாப்பிடுவதும் தொடர் கதையாகிறது.

    உலர்ந்த நிலையில் உள்ள நட்ஸ், பாஸ்தா போன்ற உணவுப் பொருள்கள் காலாவதி தேதியை கடந்திருந்தாலும், பார்க்க நன்றாகதான் இருக்கும். இதுபோன்ற பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்துவிடுங்கள். உணவுகளை காலாவதி தேதி கடந்து சாப்பிட்டால் பல வகைகளில் நாம் இன்னல்களை சந்திக்க நேரிடும்.

    காலாவதியான உணவுகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை இருக்கும். அவை உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதன் காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

    இகோலி, சால்மோனெல்லா, லிஸ்டேரியா போன்ற பாக்டீரியாக்கள் காலாவதி உணவுகளில் இருக்கலாம். இகோலி பாக்ரீயா என்பது காலாவதியான இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருக்கும். சால்மோனெல்லா பாக்டீரியா என்பது கெட்டுப்போன முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும்.

    லிஸ்டேரியா என்ற வகை பாக்டீரியாவானது கர்ப்பிணி பெண், பச்சிளம் குழந்தைகள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் போன்றோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

    எந்தவொரு உணவுப் பொருளை வாங்கினாலும் அதில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவற்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும் உணவுப் பொருளை பதப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட உபபொருள்களுக்காகவே அந்த காலாவதி தேதி சேர்க்கப்பட்டிருக்கும். ஃபிரஷ்சாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை புதிதாகவே எடுத்துக் கொண்டால் மட்டுமே ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

    பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களின் மீதும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கடைகளில் இருந்து பெரும்பாலான நேரங்களில் ஆவலோடு பொருட்களை வாங்குகின்ற நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை.

    • பனிக்காலங்களில் ஏ.சி. எந்திரங்களின் உபயோகம் குறைவாகவே இருக்கும்.
    • ஏசியை பராமரிப்பது பற்றிய சில தகவல்கள்.

    கோடைகாலத்தில் சூரியனின் வெப்பத்தில் இருந்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏர் கண்டிஷனர் எனப்படும் ஏசி எந்திரங்கள் உதவுகின்றன. ஆனால் மழை மற்றும் பனிக்காலங்களில் ஏ.சி. எந்திரங்களின் உபயோகம் குறைவாகவே இருக்கும். அத்தகைய சமயங்களில் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்...

    குளிர்காலத்தில் ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தும்போது அவை எளிதில் பழுதாகும் வாய்ப்பு உள்ளது. ஏ.சி. எந்திரங்களில் உள்ள 'கண்டென்சிங் யூனிட் குளிர்காலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படாததே இதற்கு காரணமாகும்.

    மேலும், ஏ.சி எந்திரத்தில் உள்ள கம்ப்ரசர் இயங்குவதற்கு அதில் ஒரு வகையான ரசாயன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இது குளிர்காலத்தில் உறையும் தன்மை கொண்டது. குளிர்காலத்தில் ஏ.சியை பயன்படுத்தும் போது, உறைந்த நிலையில் இருக்கும் இந்த ரசாயன எண்ணெயால் எந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    இதையும் மீறி நாம் ஏ.சி.யை பயன்படுத்தினால், அதில் இருக்கும் குளிரூட்டும் காயில்கள், ஏ.சி. யூனிட்டை ஒட்டுமொத்தமாக உறையச் செய்துவிடும். இதனால், ஏ.சி எந்திரம் எளிதாக பழுதடையும், அதேசமயம், குளிர்காலம் நீடிக்கும் 3 மாதங்கள் வரையில் ஏ.சி.யை முழுவதுமாக பயன்படுத்தாமல் வைத்திருப்பதும் தவறாகும்.

    வெயில் காலத்தில் வெப்பத்தை தவிர்க்க குளுமை தேவைப்படுவதைப்போல, குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வெப்பம் தேவைப்படும். தற்போது வரும் ஏ.சி எந்திரங்களை ஹிட்டர்களாக மாற்றி பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

    அதன்படி குளிர்காலத்தில் ஏ.சி. எந்திரத்தை இயக்கும்போது சூடான காற்றை வெளியிடும். இதுபோல இரண்டு காலநிலையிலும் இயங்கும் வகையிலான ஏ.சி.யை தேர்வு செய்வது சிறந்தது.

    இவ்வகை வசதி இல்லாத ஏ.சி. எந்திரங்களை குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும் எனில் உங்கள் சுற்றுச்சூழலின் வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

    ஏ.சி.யின் கம்ப்ரசர் வீட்டின் வெளியில் இருக்கும் போது அவுட்டோர் யூனிட்டில் இருக்கும் மழை மற்றும் குளிர்காலத்தில் இதில் தொடர்ந்து ஈரம் படும்போது அதன் பாகங்கள் துருப்பிடிக்க ஆரம்பிக்கும் எனவே, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிவைப்பது என பத்திரப்படுத்த வேண்டும்.

    குளிர்காலம் முடிந்ததும் ஏ.சி.யை உடனடியாக பயன்படுத்த தொடங்கக்கூடாது. முறையாக அதை சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்துவது நல்லது. ஏ.சி.யின் ஃபில்டர்களை தூசி இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். அதில் நிரப்பப்பட்டிருக்கும் வாயுவின் அளவையும் சரிபார்த்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

    ஏ.சி. பயன்படுத்தாத நாட்களில், அதன் மெயின் சுவிட்சை எக்காரணம் கொண்டும் ஆன் செய்து வைக்கக்கூடாது. அதை முழுவதுமாக அணைத்து வைப்பது. பிளக் பாயின்ட்டில் இருந்து அதன் இணைப்பை துண்டிப்பது நல்லது. இதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

    • பாதுகாப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
    • ஒரு மாற்று பயணத்திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது.

    பயணங்கள் நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாதவை. நீங்கள் மேற்கொள்ளும் பயணம், சூழ்நிலை, நேரம், காலம் போன்ற பல்வேறு காரணிகளால் சற்று கடினமானதாக மாறலாம். ஒவ்வொரு பருவகாலத்தில் பயணம் செய்யும்போதும் அதற்கு ஏற்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பயணம் இடையூறுகள் இன்றி வெற்றிகரமாக அமையும். அந்த வகையில் குளிர் காலங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில பயனுள்ள குறிப்புகள்.

    குளிர்காலத்தில் பயணம் செய்யும்போது கதகதப்பை தரக்கூடிய பாதுகாப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். மாற்று உடை ஒன்றை உடன் கொண்டு செல்வது எப்போதும் பயன் தரும் பழக்கமாகும். பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி மேலும் குளிரை உண்டாக்கும். எனவே கம்பனி மற்றும் தோல் ஆடைகள் குளிர்கால பயணத்தின்போது அணிவதற்கு ஏற்றவையாகும்.

    குளிர்கால பயணத்தில், வழுக்கும் வகையிலான காலணிகள், ஹீல்ஸ் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உடலின் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய காலணிகளை அணிவது நல்லது.

    பயணத்தின்போது குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் நிரம்பிய பிளாஸ்க்கை உடன் எடுத்துச்செல்வது பலவிதங்களில் உங்களுக்கு பயன்படும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழியும். இந்த காலத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.

    அடிக்கடி மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இந்த சமயங்களில் நீங்கள் பயணம் மேற்கொண்டால் குடை, ரெயின்கோட் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்வது அவசியமானதாகும். பயண காலத்தில் எப்போதும் புதிதாக தயாரித்த, சூடான உணவுகளையே சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.

    குளிர்காலங்களில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களை உடன் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    மருந்துகள், பால் பவுடர் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை போதுமான அளவு கொண்டு செல்ல வேண்டும். குளிர்கால பயணத்தின் போது உங்கள் உடமைகளை கொண்டு செல்ல துணியால் தயாரிக்கப்பட்ட பையை பயன்படுத்தாமல், பாதுகாப்பான பெட்டிகளை உபயோகிப்பது சிறந்தது.

    குளிரில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும். மாய்ஸ்சரைசர், லிப் பாம் ஆகியவற்றை பயணத்தின்போது பயன்படுத்த வேண்டும். குளிர், மழை, பனி இவையெல்லாம் நீங்கள் முன்கூட்டியே போட்டுவைத்த பயண திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே. எப்போதும் ஒரு மாற்று பயணத்திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது.

    ×