என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    உலகப் புகழ்பெற்ற மசாஜ் வகைகளில் குறிப்பிடத்தக்கது தாய் மசாஜ். சமீபத்தில் இதற்கு உலக பாரம்பரிய மசாஜ் வகை என்ற சிறப்பு அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
    உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது மசாஜ். உலகப் புகழ்பெற்ற மசாஜ் வகைகளில் குறிப்பிடத்தக்கது தாய்லாந்து மசாஜ். இது சுருக்கமாக ‘தாய் மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு உலக பாரம்பரிய மசாஜ் வகை என்ற சிறப்பு அந்தஸ்து கிடைத்திருக்கிறது. தனித்துவமான தாய்லாந்து மசாஜ் பெருமைகள் இதோ...

    மன அழுத்தம் மறைகிறது

    மனதுக்கு தேவையற்ற அழுத்தமே, மன அழுத்தமாக பரிணமிக்கிறது. பொதுவான இயக்கத்திற்கு நமக்கு அழுத்தம் தேவை. ஆனால் அதுவே தேவையற்றவகையில் பெருகி மனஅழுத்தமாகி சோர்வடையவும், தடுமாறவும் வைத்து தோல்வியை நோக்கி கொண்டு செல்கிறது. தாய் மசாஜ் முறையில் கிடைக்கும் மென்மையான அழுத்தங்கள், நீட்சி நுட்பங்கள் உடலை தளர்வுபடுத்துகிறது. அதிகப்படியான மன அழுத்தங்களை வெளியேற்றுகிறது. இது ஆய்வுகள் மூலம் விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    மன அழுத்தம் போலவே தலைவலி, உடல்வலி ஆகியவற்றிலிருந்தும் தாய் மசாஜ் விடுதலையளிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் புத்துணர்ச்சி பெறுவதால் ரத்த ஓட்டம் வேகம் பெற்று, உடல் இயக்கமும் சீராகிறது.


    நீவுதல்.. நீட்டுதல்..

    பெரும்பாலான மசாஜ் முறைகளில் மூலிகை எண்ணெய் தேய்த்து, கைகால்களை அமுக்கிவிடுவது மட்டுமே நிகழ்கிறது. ஆனால் “தாய் மசாஜ்” கைகால்களை அமுக்குதல் மட்டுமல்லாமல் இழுத்துவிடுதல், மடக்கி நீட்டுதல் என தொடர்ச்சியான வழிமுறைகள் கொண்டது. அது கைகால்களுடன் மட்டும் நின்றுவிடாமல் விரல்கள், முட்டுகள், மணிக்கட்டுகள், தலை, கழுத்து, முதுகு, தோள்ப்பட்டை என்று ஒவ்வொரு உடல்பகுதிக்கும் பிரத்யேகமான நீவுதல், பிடித்துவிடுதல் முறைகளைக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ அற்புதமான பல யோகா முறைகளை மசாஜ் பயிற்சியாளர்கள், தங்கள் நீட்டி மடக்குதல் சிகிச்சையின் மூலம் வழங்கிவிடுகிறார்கள். இதனால் தாய் மசாஜ் முறையானது தசைகளை நன்கு தளர்வுறச் செய்து, ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்துகிறது. மற்ற முறைகளில் இருந்து மாறுபட்ட புத்துணர்ச்சியையும் மசாஜ் பெறுபவர் உணர்ந்துகொள்கிறார்.

    உடையுடன்

    வேறு சில மசாஜ் முறைகளில் உடையை களைந்துவிட்டு, முக்கிய பாகங்களை துணியால் போர்த்திவிட்டு பணியை ஆரம்பிப்பார்கள். ஆனால் தாய் மசாஜ் முறையில் வாடிக்கையாளர் விரும்பாவிட்டால் உடையை களையாமலே மசாஜ் செய்யப்படும். இதற்காக தளர்வான பருத்தி உடைகளை அணியச் செய்து மசாஜ் செய்வார்கள். அதுவே யோகா போன்ற அசைவுகளுக்கு இடையூறில்லாமல் இருக்கிறது. உள்ளாடைகளை மட்டும் அணியச்செய்தும் மசாஜ் தருவார்கள்.

    யோகா மசாஜ்

    தாய்லாந்து மசாஜ்முறைக்கு ‘தாய் யோகா மசாஜ்’ என்ற பெயரும் உண்டு. ஏனெனில் மசாஜ் பயிற்சியாளர்கள் நமது கால்களையும், கைகளையும் தடவிக் கொடுப்பதுடன் நில்லாமல் மூட்டுகள் வாரியாக மடக்கி, நிமிர்த்தி யோகா பயிற்சி போல செயல்படுத்துகிறார்கள். இதில் அக்குபிரசர் என்ற சிகிச்சை முறையும் கலந்திருக்கிறது. நமது பாரம்பரிய முறையான ஆயுர்வேத சிகிச்சை முறைகளும் கலந்திருக்கிறது. எனவே தாய் மசாஜ், பலவும் கலந்த பக்குவமான முறையாகி உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.

    துரித மசாஜ்

    தாய்மசாஜ் செய்பவர், கைகளால் மட்டுமே இதனை வழங்குவதில்லை. முதுகில் ஏறி அமர்வது, கால் மூட்டுகளால் அழுத்துவது, பாதத்தால் மிதிப்பது, கை முட்டுகளால் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுப்பது என மசாஜ் ஆழமானதாக, உடல் வலு நிறைந்ததாக அமைகிறது. குழு மசாஜ் முறையில் பல வாடிக்கையாளருக்கு ஒரே அறையில் மசாஜ் செய்வது, ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் துரிதமாக மசாஜ் செய்வதும் நடைபெறும்.

    சிகிச்சை மசாஜ்

    புத்தரின் பிரத்யேக மருத்துவராக கருதப்படுபவர் சிவகா கோமாரபட்ஸ். இவரைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அபூர்வ சிகிச்சை முறைகளை அறிந்திருந்த இவரே தாய்லாந்து மசாஜின் முன்னோடியாக இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மூலிகை மருந்துகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற அவர், இந்த மசாஜ் முறையில் பலருக்கு சிகிச்சை வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.

    உடல் இயக்கங்கள் 72 ஆயிரம் வகையான பாதைகள் மூலம் நடைபெறுவதாக பழம்பெரும் இந்திய சிகிச்சை முறைகளில் கூறப்பட்டு உள்ளது. இந்த பாதைகளை வளப்படுத்தும்விதத்தில் தாய் மசாஜ் அமைகிறது. அதனால்தான் தாய் மசாஜ் இந்திய யோகப் பயிற்சி யுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.
    வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுத் தோலைக் கொண்டு உங்கள் தினசரி சருமப்பராமரிப்பை எப்படி செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
    வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து உங்கள் தினசரி சருமப் பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும். வைட்டமின் சி தவிர ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக் கூட்டி வெண்மையாக்கும் சருமப் பராமரிப்பு பூச்சுகளில் மற்றும் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம்.

    எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும். இந்த ஆரஞ்சுத் தோலைக் கொண்டு உங்கள் தினசரி சருமப்பராமரிப்பை எப்படி செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

    ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து தோலை வெயிலில் காயவைத்து பொடித்து கொள்ளவும். இத்துடன் 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். இதை தினமும் சிறிதளவு பாலுடன் சேர்த்து பூசி வந்தால் அப்பழுக்கற்ற சருமம் பெற முடியும். தேவைப்பட்டால் இந்த கலவையைக் கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.

    ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள்  சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. ஆரஞ்சுத் தோலைக் கொஞ்சம் எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கப் தயிரில் கலந்து உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

    ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள்  ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும்.
    இன்று ஒருநாள் மட்டும் வேட்டி அணிந்து ‘பவுசு’ காட்டிவிட்டு அதோடு நின்றுவிடாமல், அடிக்கடி வேட்டி கட்டுவதுதான் ‘மவுசு’ என்பதை உணர வேண்டும்.
    இந்திய நாட்டின் பண்பாட்டு உடை என்றாலே அது வேட்டி-சேலை தான். என்னதான் புதுவிதமான உடைகள் அணிந்தாலும், வேட்டி கட்டி நடக்கும்போது ஆண்களிடையே தோன்றும் கம்பீரமே தனி. சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பாகவே நமது முன்னோர் வேட்டி அணிந்து வலம் வந்துள்ளனர். எல்லாவற்றையும் விட தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடை என்றாலே அது வேட்டி தான்.

    ஆனால் நாகரிக வளர்ச்சியாலும், தொழில்நுட்ப புரட்சியாலும் வேட்டி கட்டும் வழக்கம் மங்கி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு காலத்தில் ‘பேண்ட்’ அணிந்தாலே ‘என்னப்பா... குழாய் மாட்டிகிட்டு வந்துருக்க... டவுனுக்கு போறியா’ என்று கேட்ட காலம் போய், இன்றைய சூழலில் வேட்டி கட்டி நடப்பவரை, ‘என்ன சார்... ஏதாவது பங்ஷனுக்கு போறீங்களா?’ என்று வித்தியாசமாக கேட்கும் நிலை உருவாகிவிட்டது. பண்டிகை காலங்களிலும், திருவிழாக்களிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலுமே பார்ப்போர் கண்களுக்காக பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டியில் வலம்வர வேண்டிய நிலை இருக்கிறது.

    ஒருகாலத்தில் திருமணம் என்றாலே பட்டு வேட்டி-சட்டையில் மணமகன் பட்டையை கிளப்புவார். ஆனால் இன்று கோட்டு, குர்தா என விதவிதமான உடைகளை தேர்வு செய்கிறார்கள். அதேபோல பொங்கல் பண்டிகைகளிலும் வேட்டி-சேலை அணிந்து பொங்கலிட்ட காலம் போய், பொங்கலுக்கு எந்த கடையில் புதிய டிசைன் ஆடைகள் இருக்கிறது? என்று நமது கண்கள் தேட தொடங்கிவிட்டன. கடல் தாண்டியும் பரவியிருந்த வேட்டி அணியும் கலாசாரம் மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதின் விளைவாக மங்க தொடங்கியது. தமிழகத்திலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதும் வேட்டியில்தான். இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கையுடன் இரண்டற கலந்துவிட்ட வேட்டி, இன்றைக்கு அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே இருந்து வருகிறது. விழாக்காலங்களில் மட்டும் அந்த பழக்கத்தை இரவல் வாங்குவது போல நாமும் மாறிவிட்டோம்.

    இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினத்தை ‘யுனெஸ்கோ’ அறிவித்தது. அன்று தொடங்கி ஆண்டுதோறும் ஜனவரி 6-ந் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி கட்டுவதை ஊக்குவிக்க பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் புதுப்புது யுக்தியை கையாண்டு வருகின்றன. வேட்டி கட்ட தெரியாத இளைஞர்களுக்கு ஒட்டிக்கொள்ளும் வகையில் வேட்டி, செல்போன், பணம் வைக்க பாக்கெட் கொண்ட வேட்டி, சட்டை மற்றும் டி-சர்ட் நிறத்தில் ‘பார்டர்’ வைத்த வேட்டி என எத்தனையோ வகைகளில் வேட்டியை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனாலும் வேட்டிக்கு எதிர்பார்த்த ‘மவுசு’ கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் சர்வதேச வேட்டி தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணிபுரியும் அலுவலகங்களில், வீடுகளில், உறவினர் இல்லங்களில் இளம் தலைமுறையினர் கலாசாரத்தை காக்கிறோம் என்ற பெயரில் கலர் கலராக வேட்டி கட்டி வலம் வர போகிறார்கள். ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதள பக்கங்கள், வேட்டி அணிந்த இளம் தலைமுறையினரின் புகைப்படங்களை இன்றைய தினம் சுமக்க முடியாமல் சுமக்க போகிறது. ஆனால் இது வழக்கம்போல ஒருநாள் கூத்தாக மட்டும் ஆகிவிடக்கூடாது.

    தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டிக்கு பின்னால் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஒளிந்துள்ளது. ஏற்கனவே வறுமையின் பிடியில் கிடக்கும் அவர்கள், தற்போது கொரோனா பேரிடராலும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையின் விளிம்புக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    மானம் காத்த வேட்டியை தந்த மகத்தான நெசவாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும். எனவே இன்று ஒருநாள் மட்டும் வேட்டி அணிந்து ‘பவுசு’ காட்டிவிட்டு அதோடு நின்றுவிடாமல், அடிக்கடி வேட்டி கட்டுவதுதான் ‘மவுசு’ என்பதை உணர வேண்டும். புதிய ஆடைகள் வாங்கும்போது தவறாமல் ஒரு வேட்டியாவது வாங்கிட வேண்டும். வாரத்தில் ஒருநாள் அல்லது 2 நாள் வேட்டி அணிந்து பணியாற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி நாம் வேட்டிக்கு அளிக்கும் முக்கியத்துவம் நமது பாரம்பரியத்தை மட்டுமல்ல, நெசவாளர்களின் வாழ்க்கைத்தரத்தையும் சத்தமில்லாமல் உயர்த்தும். அதனை இன்றைய தினத்தின் முக்கியமான உறுதிமொழியாக எடுத்து கொள்வோம்.

    வேட்டி அணிவோம், பாரம்பரியம் காப்போம். அத்துடன் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்போம்.
    வீட்டு குளியலறையில் குளிக்கும்போது தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். சிலர் குறைவான நீரையே குளியலுக்கு பயன்படுத்துவார்கள்.
    உடல் உறுப்புகள் நன்றாக இயங்குவதற்கு உடல் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் குளியலுக்கு முக்கிய பங்கு உண்டு. உடல் உறுப்புகளில் சூடு ஏறிக்கொண்டே இருக்கும். இருப்பினும் உடலில் உள்ள இயற்கை தன்மைகளால் சூடு தானாகவே இயல்பு நிலைக்கு மாறிவிடும். ஆனால் ஒரு சில பழக்க வழக்கங்கள் உடல் சூட்டை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    பொதுவாகவே ஒரு சில மின்னணு சாதனங்கள் சீராக செயல்படுவதற்கு குளிர்ச்சியான சூழல் அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இயல்பாக நிலவும் வெப்பநிலையும், அறையின் வெப்ப நிலையும் ஒன்று சேர்ந்து அதிக வெப்பத்தை உண்டாக்கி மின்னணு சாதனங்களின் இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால்தான் மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கும் அறையில் குளிர்சாதனங்களை பொருத்தி சீரான வெப்பநிலையை பராமரிக்கிறார்கள். உயிரற்ற மின் சாதனங்களுக்கே சீரான வெப்பநிலை தேவைப்படும்போது மனிதனுக்கு சொல்லத் தேவையே இல்லை.

    மனித உடலில் வெப்ப நிலை மாறுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அசைவ உணவுகள், துரித உணவுகள் உடலில் உள்ள ஆற்றலை அதிகமாக செலவு செய்ய வைப்பதோடு உடலையும் சூடாக்கிவிடுகின்றன. வழக்கமான உடல் இயக்கத்தின் போது உண்டாகும் சூட்டை தணித்துக் கொள்ளும் உடல் இதுபோன்ற செயற்கை சூட்டை சரி செய்வதற்கு கூடுதலாக ஆற்றலை செலவிட நேரிடும். ஒரு கட்டத்தில் சூட்டை தணிக்க முடியாதபோது, உடலில் சூடு நிரந்தரமாக தங்கி விடும். அதன் தாக்கமாக உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்படக்கூடும். உணவு பழக்கங்களும் உடல் சூட்டுக்கு காரணமாகின்றன.

    உடல் சூட்டை தணிப்பதற்கு குளியல் போடுவது அவசியமானது. ஒரு சிலர் காலை, மாலை என இரண்டு முறை குளித்தால் கூட உடல் சூடு பாதிப்பால் அவதிப்படுவதுண்டு. பொதுவாக காலையில் எழும்போது உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனை குறைப்பதற்கு குளிப்பது அவசியமானது. சிலர் நன்றாக குளித்தாலும் கூட அவர்களுடைய உடல் வெப்பம் குறையாது. அதற்கு குளியல் முறையை சரியாக பின்பற்றாததுதான் காரணமாக அமையும்.

    குளிப்பது எப்படி?

    குளிப்பதற்கு சாதாரண நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். நிறைய பேர் குளிக்கும்போது முதலில் தலையில்தான் தண்ணீரை ஊற்றுவார்கள். அது தவறான பழக்கம். ஏனெனில் தலையில் சட்டென்று ஊற்றும்போது வெப்ப நிலை மாறுபடும். தண்ணீரின் குளிர்ச்சியும், உடல் வெப்பநிலையும் மாறுபடும். அதனை உடல் ஏற்க வேண்டும். தலையில் தண்ணீரை ஊற்றுவதற்கு பதிலாக காலில் ஊற்ற வேண்டும். பிறகு தொடை, இடுப்பு பகுதியில் ஊற்றிவிட்டு மேல் நோக்கி முன்னேற வேண்டும். அப்படி கீழிருந்து மேலாக உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்கும்போது உடலில் உள்ள வெப்பமானது மூக்கு, கண்கள் வழியாக வெளியேறும். ஆனால் தலையில் ஊற்றி குளிக்கும்போது உடலில் உள்ள வெப்பம் வேறு பாகங்கள் வழியாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் தலையில் தங்கி உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும்.

    ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது முதலில் கால்கள்தான் தண்ணீரில் நனையும். அதன் பிறகு முழங்கால், தொடை, இடுப்பு, மார்பகம் நீரில் நனைந்து இறுதியாக தலை நீரில் மூழ்கும். அத்தகைய குளியல் முறையை முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது குளங்கள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகளில் குளிப்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது. அவற்றில் குளிக்கும்போது குளியல் நேரமும் அதிகரிக்கும். அது உடல் சூடு தணிவதற்கு ஒரு வகையில் காரணமாக அமையும். வீட்டு குளியலறையில் குளிக்கும்போது தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். சிலர் குறைவான நீரையே குளியலுக்கு பயன்படுத்துவார்கள்.

    உடலில் படிந்திருக்கும் அழுக்குகள், வியர்வைகளை போக்குவதற்கு அதிக வாசனை கொண்ட ரசாயனங்கள் கலந்த சோப்பை உபயோகிப்பார்கள். அதில் உள்ள ரசாயனங்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் முழுவதும் நன்றாக தேய்த்து குளிக்காதபோது அழுக்கு அப்படியே இருக்கும் இடங்களில் சரும வியாதிகள் ஏற்படக்கூடும். முதுகு, இடுப்பு, பின்னங்கால்கள், நக இடுக்குகள் போன்ற பகுதிகளில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். குளியல் என்பது உடலை குளிர்விப்பதாகவும், உடலில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதாகவும் இருக்க வேண்டும்.
    விலைஉயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் அத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படாது. கட்டணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அதன் தரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதனுள் ஆபத்து ஒளிந்திருக்கும்.
    நவீனயுகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெண்களின் வாழ்க்கைமுறை வேகமெடுத்திருந்தாலும், அழகு சாதனங்களால் அழகை ஆராதிப்பதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்க தவறுவதில்லை. எவ்வளவு அவசரமாக வெளியே கிளம்ப வேண்டி இருந்தாலும் ‘மேக்கப்’ போட்டுக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு மனநிறைவு ஏற்படாது. முகமும் பொலிவு பெறாது.

    பெண்கள் தங்களுக்கு பிடித்தமான மேக்கப் சாதனங்களை தேடிப்பிடித்து வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் அதன் மூலம் வெளிப்படும் அழகுத்தன்மையை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். ஆனால் அவை கூந்தலுக்கும், சருமத்திற்கும் தீங்கு விளைவிக்காத, ரசாயன கலப்படமற்ற பொருட்களாக இருக்கவேண்டும். இதை பெரும்பாலான பெண்கள் கவனத்தில் கொள்வதில்லை. சிலரிடம் இதன் பின்விளைவுகளை பற்றிய விழிப்புணர்வும் இ்ல்லை.

    வீட்டில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும், பலருக்கும் அழகு நிலையங்களுக்கு சென்று தங்களை அழகுபடுத்திக்கொண்டால்தான் மனநிறைவு ஏற்படுகிறது. ஆனால் எல்லா அழகு நிலையங்களிலும் சிறந்த பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்துவதில்லை. சில அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் விலை மலிவானவை. அவை பெரும்பாலான பெண்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

    அதை பயன்படுத்திய சில மணி நேரங்களில் முகத்தில் அரிப்பு, கண்களில் எரிச்சல் தோன்றும். விலைஉயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் அத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படாது. கட்டணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அதன் தரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதனுள் ஆபத்து ஒளிந்திருக்கும்.

    இதில் இன்னொரு பெரிய நெருக்கடி என்னவென்றால், பிரபலமான நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்புகள் மார்க்கெட்டுக்கு வருகின்றன. அதனால் உன்னிப்பாக கவனித்து அழகு சாதன பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லா விட்டால் உங்கள் முகத்தில் நீங்களே விழிக்க முடியாது. அந்த அளவுக்கு பக்க விளைவுகளால் முகம் பரிதாப தோற்றத்திற்கு மாறிவிடும். காசை கொடுத்து கஷ்டத்தை விலைக்கு வாங்கியது போல ஆகிவிடும்.

    பிறகு என்னதான் செய்வது என்கிறீர்களா? மேக்கப் இல்லாமல் வெளியே போய்விட முடியுமா? என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதிலில் மவுனத்துடன் கூடிய புன்னகைதான் எட்டிப்பார்க்கும். ஏனெனில் இப்போதெல்லாம் ஆண்கள் கூட மேக்கப் போட்டுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். உச்சி முதல் பாதம் வரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான பல அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அவைகளில் போலிகள் எது என்று எப்படி கண்டுபிடிப்பது? என்ற குழப்பம் ஏற்படும்.

    இது பற்றி உலகின் புகழ் பெற்ற அழகு கலை நிபுணர் ஷானாஸ் உசேன் முக்கிய தகவல்களை வழங்குகிறார்!

    சிவப்பழகு கிரீம்: இது பெரும்பாலானோர் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருள். இதனை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் பயன் படுத்தலாம். ‘அழகு என்பது சருமம் சிவப்பாக இருப்பதுதான்’ என்று நிறைய பேர் நினைத்துக்கொள்கிறார்கள். அந்த சிவப் பழகை பெற எவ்வளவு வேண்டுமானாலும் செலவளிக்க தயா ராகிவிடுகிறார்கள்.

    சிவப்பழகு கிரீமில் ஹைட்ரோ க்யூனோன் என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது சருமத்தை மிருதுவாக்கும். மேற்புற பகுதியை பிளீச் செய்யும். அதனால் சருமம் சிவப்பாக மாறிவிட்டது போல் தோன்றும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சருமத்தின் அடர்த்தி குறைந்துகொண்டே போகும். அதனால் தசைகள் தளர்ந்துபோகும். சுருக்கங்களும் தோன்றக்கூடும். இந்த ரசாயனம் சில மாய்சரைசிங் கிரீம்களிலும் கலக்கப்படுகிறது. இது தவிர சிவப்பழகு கிரீம்களில் கலக்கப்படும் வேறு சில ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கும். போலி தயாரிப்புகளில் ரசாயனங்களின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் பாதிப்பும் அதிகரிக்கும்.

    லிப்ஸ்டிக்: இதில் பயன்படுத்தப்படும் காரியம் உதடுகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது இல்லாமல் லிப்ஸ்டிக் தயாரிக்க முடியாது. அதேவேளையில் இதன் அளவு குறைவாக இருக்க வேண்டும். பெரிய நிறுவன தயா ரிப்புகளில் இது குறைந்த அளவு சேர்க்கப்பட்டிருக்கும். அதனை கவனத்தில் கொண்டு லிப்ஸ்டிக் வாங்க வேண்டும். ஏனெனில் இதில் கலந்திருக்கும் காரியம் வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும். நாளடைவில் வயிற்றில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இது காரணமாகிவிடும்.

    சோப் - டியோடரென்ட்: நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட் களாக சோப், டூத்பேஸ்ட், டியோடரென்ட் போன்றவைகள் உள்ளன. இவைகளில் ட்ரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிருமி நாசினி என்பதால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது ஆபத்து நேரும். பற்பசையில் அதன் அளவு கூடும்போது அது நச்சுப் பொருளாகிவிடும். சோப் போன்றவற்றிலும் இதே நிலைதான். ட்ரைக்ளோசனின் தாக்கம் அதிகரிக்கும்போது சருமம் வறண்டு போகுதல், எரிச்சல், சருமம் நிறம் மாறுதல், அரிப்பு, நோய்த் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும்.

    பாடி லோஷன்: உடலுக்கு பயன்படுத்தும் பாடிலோஷன்களிலும், வேறு பல கிரீம் களிலும் ‘ஆண்டிமைக்ரோபியல்’ எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. அதன் வீரியம் கூடும்போது பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை, விரைவில் பருவமடைதல், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது தவிர அலர்ஜி, ஆஸ்துமா, சொறி போன்ற பாதிப்புகளும் ஏற்டலாம்.

    அழகைத்தேடுவோம்.. ஆபத்தில்லாமல்..!
    நாம் பாரம்பரியமாக அணிந்து கொள்ளும் மஞ்சள் நிற நகைகளைப் போலவே வொயிட் கோல்டும் உண்மையான தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    தங்கம் என்றால் மஞ்சள் நிறத்தில்தான் இருக்க வேண்டுமா என்ன? தங்கத்தில் வெள்ளை, ரோஸ் மற்றும் பச்சை நிறமும் உள்ளது என்பதைக் கேள்விப்படும்பொழுது ஆச்சரியமாகத் தானே உள்ளது.

    வொயிட் கோல்டு என்பதை நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அணியாவிட்டாலும் மேல் தட்டு மக்கள் அணிந்து செல்வதை ஊடகங்கள் மூலம் அறியலாம். வெள்ளை நிறத் தங்கமானது சுத்தமான தங்கத்துடன் (மஞ்சள் நிறம்) நிக்கல், பலேடியம், ப்ளாட்டினம், மங்கனீஸ் மற்றும் ஃஜிங்க் போன்ற உலோகங்களைக் கலந்து செய்யப்படும் தங்கமாகும்.

    வொயிட் கோல்டானது நீடித்து உழைப்பதோடு கீறல் எதிர்ப்பைக் கொண்டதாகவும் உள்ளது. ப்ளாட்டின நகைகளை வாங்க முடியாதவர்களுக்கு மாற்றான ஒன்றாக இது விளங்குகின்றது. நாம் பாரம்பரியமாக அணிந்து கொள்ளும் மஞ்சள் நிற நகைகளைப் போலவே வொயிட் கோல்டும் உண்மையான தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    மோதிரங்கள்

    டிசைனர் வொயிட் கோல்டு மோதிரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு அவற்றின் வேலைப்பாடு மற்றும் நுணுக்கமான டிசைன்களே அவற்றை கண் இமைக்காமல் பார்ப்பதற்குக் காரணம் எனலாம். வொயிட் கோல்டில் ஆர்ட்டின் வடிவத்தில் சிறிய கற்கள் பதித்தது போன்றும், மேற்புறம் பெரிய கல்லானது பதிக்கப்பட்டு பக்கவாட்டில் இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசைகளாக சிறிய கற்கள் பதித்திருப்பது போன்றும், வொயிட் கோல்டு வளையத்தில் பெரிய ஒற்றைக்கல் பதித்தது போன்றும், ராஜா மற்றும் ராணி கிரீடத்தில் வைரக்கற்கள் அல்லது ஜெர்கான் கற்கள் பதித்தது போன்றும், ஹார்ட் பீட் வடிவத்தில் கற்கள் பதித்தது போன்று இருப்பவையும், என்கேஜ்மெண்ட் மோதிரங்களும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அனைவரையும் கவர்கின்றன.

    வொயிட் கோல்டில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக அணிந்து கொள்ளக்கூடிய பாதி இதய மோதிரமானது தம்பதிகள் கைகளில் அணிந்து இருவரது விரல்களையும் இணைத்துப் பார்க்கும்பொழுது முழு இதய வடிவமாகத் தெரிவது மிகவும் சிறப்பாக உள்ளது.

    வளையல் மற்றும் ப்ரேஸ்லெட்டுகள்

    வொயிட் கோல்டில் வரும் சமேலி டிசைன் வளையல்கள், ஒற்றை வளையத்தில் ஒரே வரிசை கற்கள் பதித்து வரும் பேங்கிள் ப்ரேஸ்லெட் மாடல், ஃபேன்ஸி டிசைன் வைரம் பதித்த கடா வளையல், ஸ்டட் வளையல்கள், ரோல் ஓவர் பேங்கிள் ப்ரேஸ்லெட், கிரிஸ்டல் ஜெர்கான் பதித்த ரோமன் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பேங்கிள் ப்ரேஸ்லெட், கிரேக்க சாவி போன்ற பேங்கிள், லேடி நாவல் நாட் டிசைன் பேங்கிள், பிரமிட் பேங்கில் இருபாலரும் அணிந்து கொள்ளக்கூடிய டிசைன்களில் வரும் ப்ரேஸ்லெட், டயமண்ட் டென்னிஸ் ப்ரேஸ்லெட் மற்றும் நீலக்கல், மஞ்சள் வைரம் பதித்த வொயிட் கோல்டு வளையல்களைப் புகழ அற்புதம்“ என்ற ஒற்றைச் சொல்லே போதுமானதாகும்.

    கழுத்தணிகள்

    வொயிட் கோல்டில் பிரைடல் ஜூவல்லரி செட் என்று கேட்டாலே கழுத்து, கை, காது மற்றும் விரல் மோதிரம் என்று பல அழகிய டிசைன்களை நன்கு காண்பிப்பார்கள். பாரம்பரியமான நெக்லஸ், பார்ட்டி நெக்லஸ், ரோஸ் ஃப்ளவர் பென்டென்ட் நெக்லஸ், பகலில் அணிந்து கொள்ளக்கூடிய டயமண்ட் க்ளஸ்டர் நெக்லஸ், ட்ரெண்டி நெக்லஸ், சர நெக்லஸ் என்று மஞ்சள் தங்கத்தில் இருப்பதை விட பல டிசைன்களைக் காண முடியும்.

    செயின்களில் டிசைனான பூக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பது போன்றது, ஹார்ட் பென்டன்ட் வைத்த செயின், மூன்று வரிசையாக வைரக் கற்கள் பதித்த செயின், ஓப்பன் சர்க்கில் பென்டென்ட் வைத்த செயின் என்று எதை எடுப்பது எதை விடுப்பது என்னும் அளவுக்கு அழகழகான டிசைன்கள்.

    காதணிகள்

    வொயிட் கோல்டில் வரும் காதணிகள் பெரும்பாலும் ஃபேன்ஸி டிசைன்களாகவே உள்ளன. டெலிகேட் லைட் டயமண்ட் காதணிகள், டோன் ஸ்டட் காதணி, பெயர் எழுதப்பட்ட இயரிங்ஸ், லாங் லைன் டேங்கிள் இயரிங், பியர் அண்டு ரவுண்டு கட் இயரிங்ஸ், கலர் ஸ்டோன் ஹார்ட் ஸ்டட் இயரிங்ஸ் என அனைத்துமே அட்டகாசமாக உள்ளன.

    கழுத்தணிகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனே ஜோடியாக வரும் காதணிகளைத் தனியாகவோ அல்லது கழுத்தணியோடு சேர்த்தோ அணிந்து கொள்ளலாம். வொயிட் கோல்டில் வைரக்கற்கள் என்பது பிரிக்க முடியாத ஒன்று என்றே சொல்லத் தோன்றுகிறது.

    மூக்குத்தி

    ஸ்டால் வடிவத்தில் ஒற்றைக்கல் பதித்த மூக்குத்தியிலிருந்து கம்பியானது வளைந்து செல்லுமாறு இருக்கும் மூக்குத்தி, அதே வளைந்த கம்பியின் முனையில் ஏழுகல் பதித்த மூக்குத்தி, மூன்று இலைகள் இணைந்தது போன்ற மூக்குத்திகள் புதுமையாக உள்ளன. இவற்றை இந்தோவெஸ்டர்ன் ஆடைகளுடன் அணியலாம்.

    மூக்கில் ரிங் போன்று அணிந்து கொள்ளும் மூக்குத்திகளும், மூக்கின் மேற்புறம் டிசைனான ரிங் தொங்குவது போன்ற ட்ரைபல் டிசைன் மூக்குத்திகளும் வொயிட் கோல்டில் அட்டகாசமாக உள்ளன.

    எண்ணற்ற டிசைன்களில் வொயிட் கோல்டு நகைகள் வந்திருப்பதால் நம்முடைய ரசனையை மனதில் கொண்டு தேர்வு செய்யலாம்.

    பெரும்பாலான வொயிட் கோல்டு நகைகள் ரோடியம் பூசப்பட்டு நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவற்றின் பூச்சானது சீக்கிரமே மங்கிவிடும். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வொயிட் கோல்டை கடைகளில் கொடுத்து ரோடியப் பூச்சை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    மென்மையான சோப்பை வெது வெதுப்பான நீரில் கலந்து வொயிட் கோல்டு நகைகளைச் சுத்தம் செய்யலாம். மென்மையான துணி அல்லது ப்ரஷ்ஷைக் கொண்டு அவற்றில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றலாம். சுத்தமான டவலில் கழுவிய நகைகளை மென்மையாகத் துடைத்து வைத்துக் கொள்ளலாம்.
    பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளாததே சரும வறட்சிக்கு காரணமாகும். சருமம் எப்போதும்போல் பொலிவுடன் காட்சியளிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
    சரும வறட்சி பிரச்சினையால் நிறைய பேர் அவதிக்குள்ளாவார்கள். சிலரோ எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமத்தால் சிரமப்படுவார்கள். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளாததே அதற்கு காரணமாகும். சருமம் எப்போதும்போல் பொலிவுடன் காட்சியளிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வறண்ட சரும பிரச்சினை கொண்டவர்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம். அதற்கு மாய்ச்சுரேஸர்களை பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தியும் சருமத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். அது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். பகல் வேளையில் சருமம் எண்ணெய் பசை தன்மையோ, ஈரப்பதமான தன்மையோ கொண்டிருந்தால் மாய்ச்சுரேஸர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு பொலிவின்றி காணப்படும். ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு ஏற்ற கிரீம்களை பயன்படுத்தலாம். எண்ணெய்யை பயன்படுத்துவதும் சருமத்திற்கு நல்லது. சருமத்திற்கு நறுமணம் சேர்க்கும் எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தலாம். முதலில் சருமத்திற்கு உகந்த தேங்காய் எண்ணெய், ஆலிவ் போன்றவைகளை தடவிவிட்டு அதன்பிறகு நறுமண எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதுமே நிறைய பேர் சன்ஸ்கிரீனை தவிர்த்துவிடுகிறார்கள். கோடை காலங்களில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. சருமத்தின் ஆரோக்கியம் காக்க எல்லா பருவ காலத்திலும் போதுமான அளவு சன்ஸ்கிரீனை உபயோகித்து வர வேண்டும்.

    பருவ காலத்தில் உணவு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமம் பாதிப்புக்குள்ளாமல் காக்க உதவும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும். மழைக் காலத்தில் பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

    மென்மையான கதர் சில்க் புடவைகளைப் போலவே செமி காதி சில்க் புடவைகளும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற புடவைகள் என்று சொல்லலாம்.
    புடவைகளின் தனித்துவத்தை கூறவந்திருப்பவை மென்மையான காதி சில்க் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அணிவதற்கு மிகவும் வசதியாக வந்திருப்பவை இவ்வகை புடவைகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

    சாஃப்ட் கதர் சில்க் புடவைகளின் அழகை இன்று முழுவதும் வர்ணிக்கலாம். ஆம்.பிளெயின் வண்ணத்தில் உடல் இருக்க பூக்கள் போட்ட பார்டர்கள் இரண்டு புறமும் வருவதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புடவைகளில் பல்லு மிகவும் குறைவாக அதாவது ஷார்ட்டாக இருப்பது போல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லுவின் ஓரங்களில் சுங்கங்கள் (டேஸில்கள்) தொங்குவது போல் தயாரித்திருக்கிறார்கள். உடல் பாகம் முழுவதும் மஞ்சள், பச்சை, நீலம் அல்லது சிவப்பு என ஏதாவது ஒரு நிறத்தில் இருக்க அதற்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் பூப்போட்ட பார்டர்கள் மற்றும் பல்லுவானது அமைந்து பூப்போட்ட பிளவுஸ் துணியும் இணைக்கப்பட்டு வந்திருப்பது காண்பவர்களை கவர்ந்து இழுக்கின்றது.

    இக்கத் டிசைன்களுடன் வரும் மென்மையான காதி சில்க் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன. இந்தப் புடவைகள் அலுவலகப் பயன்பாடு மற்றும் தினசரி உபயோகத்திற்கும் அருமையாக ஈடு கொடுக்கக் கூடியவை.சேலையில் ஒருபுறம் சிறிய பார்டரும் மறுபுறம் பெரிய பார்டரும் இருப்பதுபோல் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புடவைகளின் பல்லுவானது இக்கத் டிசைன்களை அருமையாக காட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    உடல் முழுவதும் இக்கத் டிசைன்கள் அதற்கு பார்டர் மற்றும் பிளவுஸானது பிளெயின் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பதுபோல் வந்திருப்பது மிகவும் நேர்த்தியாக உள்ளது.அதேபோல் கட் ப்ராஸோ டிசைன்களை மென்மையான காதிப்பட்டில் கொண்டு வந்திருப்பது அற்புதமாக இருக்கின்றது. சிறிய விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்வது போல் இருக்கும் இந்த புடவைகளின் விலை ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.இதில் வரும் வண்ணங்களும் டிசைன்களும் அப்பப்பா எதை எடுப்பது எதை விடுப்பது என்று நம்மை யோசிக்க வைக்கின்றது.

    உடல் மற்றும் பிளவுஸ் இக்கத் டிசைனில் இருக்க பார்டர்மற்றும் பல்லுவில் சைக்கிள் டிசைன் போடப்பட்டிருப்பது மிகவும் வித்தியாசமாக நவீனமாக இருக்கின்றது. நிச்சயம் இந்தப் புடவைகள் அதன் நவீனமான டிசைன் காரணமாக பெண்களிடம் அதிக வரவேற்பைப் பெறும் என்று சொல்லலாம்.

    உடல் ஒரு வண்ணம் பார்டரும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணம். ஆனால், புடவை முழுவதும் இக்கத் டிசைன் சற்றே கண்களை மூடி அதன் அழகை யோசித்துப் பாருங்களேன்.புடவை முழுவதும் ஒரே வண்ணம் ஆனால் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிசைன்கள் வேறு வண்ணம் இதுபோன்ற புடவைகளை அணியும் பொழுது அவை நிச்சயமாக கௌரவமான தோற்றத்தை தரும் என்று நம்பலாம்.புடவையை மிகவும் விரும்பி அணிபவர்களுக்கு இவ்வகை புடவைகள் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

    முற்றிலும் காதி பார்டர்களுடன் கலம்காரி டிசைனை நினைவுபடுத்தும் விதமாக வரும் புடவைகளைப் பார்க்கும் பொழுது அவற்றை உருவாக்கியவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.இவற்றில் வரும் மென்மையான வண்ணங்கள் மற்றும் அழகான டிசைன்கள் இந்தப் புடவைகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.உடல் முழுவதும் பிளெயின் காதியில் இருக்க பார்டர், பல்லு மற்றும் பிளவுஸ் ஆனது ஒரே விதமான டிசைனில் இருப்பதுபோல் வடிவமைத்திருக்கும் புடவைகள் நம்மை கட்டாயம் சுண்டியிழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    உடல்,பல்லு மற்றும் பார்டர் என அனைத்தும் பிளெயின் வண்ணத்தில் இருக்க பார்டர் மற்றும் பல்லு உடல் நிறத்திலேயே சற்று அடர்த்தியான பிளெயின் வண்ணத்தில் வருவதுபோல் வந்திருக்கும் சேலைகள் எளிமையான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன.

    மென்மையான கதர் சில்க் புடவைகளைப் போலவே செமி காதி சில்க் புடவைகளும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற புடவைகள் என்று சொல்லலாம். இவை தினசரி உடுத்துவதற்கு ஏற்றவையாக இருப்பதோடு இதன் விலையும் குறைவாகவே இருக்கின்றது.அழகிய டிசைன்கள், அருமையான வண்ணம் மற்றும் பளபளப்புடன் வரும் இந்த செமி காதி சில்க் புடவைகள் அனைத்துரகப் பெண்களாலும் விரும்பப்படும் ஒன்று என்று சொல்லலாம். இந்த புடவைகளை பராமரிப்பது மிகவும் எளிது.

    உடல் பகுதி வெள்ளை நிறத்திலும் உடல் முழுவதும் பூக்களும் கொடிகளும் அழகான வண்ணத்தில் இருக்க அதற்கு ஏற்றார்போல் பார்டரும் பல்லுவும் வருவது கண்களுக்கு விருந்தாக உள்ளது. பேப்பர் சில்க் புடவைகளுடன் போட்டி போடும் விதத்தில் மிகவும் மெல்லியதாகவும் உடுத்த இலகுவாகவும் உள்ளன.மற்ற புடவைகளில் வரும் டிசைன்கள் மற்றும் பிரிண்டுகள் இது போன்ற கதர் புடவைகளிலும் வருவது கூடுதல் சிறப்பு. எம்பிராய்டரி போலவே பிரிண்டுகளானது இந்த புடவைகளில் வரும்பொழுது அவை பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.பேட்ச் வொர்க் போல வரும் பிரிண்டுகள் இந்த புடவைகளுக்கு அதிக ரசிகைகளை பெற்றுத் தருகின்றன.

    அடர்த்தியான உடல் வண்ணங்களில் கோல்டன் கட்டங்கள் அதனுள்ளே யானை, மயில், மான் மற்றும் அன்னப்பட்சி போன்ற உருவங்கள் கோல்டன் நிறத்திலேயே பிரிண்ட் செய்யப்பட்டு பார்டரும் பட்டையான கோல்டன் வண்ணத்தில் வருவது கோவில் விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அணிந்துகொள்ள சிறந்த தேர்வாக இருக்கும்.ஜியோ மெட்ரிக் டிசைன்கள் மற்றும் பிற டிசைன்கள் உடல் முழுவதும் வர அதற்கு பிளெயின் வண்ணத்தில் பார்டர் மற்றும் பல்லு வருவது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றது..

    வொர்லி டிசைனர் பிரிண்டுகளுடன் வரும் இந்தப் புடவைகள் புடவை கட்ட விரும்பாதவர்களையும் விரும்பி வாங்கத் தூண்டும்.இந்தப் புடவைகள் அதன் வண்ணம் மற்றும் டிசைனர் பிரிண்டுகளால் ஒரு கௌரவமான தோற்றத்தைத் தருவதாக இருக்கின்றன.இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த காதி புடவைகள் ஒவ்வொரு பெண்மணியின் துணி அலமாரியில் இருக்க வேண்டிய ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது.
    ஜீன்ஸ் பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றாக இருக்கிறது. தற்போது பெண்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜீன்ஸின் வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்....
    சிலிம் பிட்

    இந்த வகை ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் ஸ்டிரெய்ட் கட் ஜீன்ஸ்களி ன் கலவை ஆகும். இடுப்பு  மற்றும் தொடை பகுதியை அணைத்தவாறும், கணுக்கால் பகுதியில் சிறிது தளர்வாகவும் இருக்கும். இணிவதற்கு சவுகரியாக இருக்கும். அனைத்து வகை டி-ஷர்ட்களுக்கும் பொருந்தும்.

    ஸ்கின்னி ஜீன்ஸ்

    பார்க்க ஒல்லியாக தெரிந்தாலும் உடுத்துவத்ற்கு சவுகரியமாக இருக்கும் வகையில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடுப்பில் இருந்து கணுக்கால் வரை அணைத்தபடியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் இழுவை தன்மையால் உடல் அசைவிற்கு ஏற்றார் போல் இருக்கும். ஹீல்ஸ் போன்ற காலணிகளோடு சேர்த்து அணிவதற்கு ஏதுவாக இருக்கும். நீளமான கால்கள் உடைய பெண்களுக்கும், ஒல்லியான உடலமைப்பு உடைய பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

    பூட் கட் ஜீன்ஸ்

    பூட்ஸ் போன்ற காலணிகளுடன் அணிவதற்கு இது ஏதுவாக இருக்கும். இடுப்பில் இருந்து தொடை வரை சற்று பிடித்தவாறும், முழங்காலில் இருந்து சிறிது அகலமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து உடல் அமைப்புக்கும் பொருத்தமான ஒன்றாகும்.

    ஹைய் ரைஸ் ஜீன்ஸ்

    இதன் வடிவமைப்பு இடுப்பிற்கு மேல் அணிவது போல் அமைந்திருக்கும். இந்த வகை ஜீன்ஸ்கள் உயரம் குறைந்த பெண்கள் மற்றும் சற்று தடித்த உடல்வாகுவான பெண்கள் மத்தியில் பிரபலமானது. இது கால்களை உயரமாகவும், தொப்பையை மறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    ஸ்ட்ரெய்ட் லெக் ஜீன்ஸ்

    இடுப்பில் இருந்து கணுக்கால் வரை நேராக இருக்கும் இது அனைத்து வகை உடல்வாகு கொண்டவர்களுக்கும் பொருந்தும். அணிபவரை உயரமாக காண்பிக்க வல்லது. இந்த வகை ஜீன்ஸ்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏதுவாக இருக்கும்.

    லோ ரைஸ் ஜீன்ஸ்

    இந்த வகை ஜீன்ஸ்கள் வெய்ஸ்ட் லைனில் இருந்து சற்றே இறங்கி இருந்தாலும், அனைத்து வகையான கேஷீவல் உடைகளுடனும் ஒன்றிப்போகும்.

    பாய் பிரண்ட் ஜீன்ஸ்

    இது ஆண்கள் அணிவது போல் சவுகரியமாக இருக்கும். ஆகையால் இதற்கு பாய் பிரண்ட்  எஜீன்ஸ்ன்ற பெயர் வந்தது. இந்த வகை ஜீன்ஸ்க்ள் கால்களில் பாகி போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், இடுப்பை சுற்றி சற்று இறுக்கமாகவே இருக்கும்.

    பெலட் ஜீன்ஸ்

    இடுப்பு பகுதியை மட்டும் அணைத்தவாறு முழங்காலில்  இருந்து அகன்று விரிந்து இருக்கும். இது எந்த வகை உடலுக்கும் பொருத்தமான ஒன்றாக தோன்றினாலும், அகலமான தோள்பட்டை உடையவர்கள் அல்லது குறுகிய இடுப்பு பகுதி கொண்ட பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மிட் ரைஸ் ஜீன்ஸ்

    இது வெய்ஸ்ட் லைன் என்று சொல்லப்படும் இடுப்பு பகுதியில் இருந்து ஆரம்பம் ஆகும். இந்த வகை ஜீன்ஸ்கள் அணிவதற்கு சவுகரியமாகவும், இடுப்பு பகுதியை சற்றே அகலமாக காண்பிக்கும் வகையிலும் இருக்கும்.
    பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
    1. சரும பராமரிப்பு:

    திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    2. உணவில் கவனம் தேவை:

    விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.

    3. உறக்கம் முக்கியம்:

    உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

    4. உடற்பயிற்சி அவசியம்:
    தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.

    5. மனநலன் பேணுதல்:

    உடல் நலன் போலவே, மன நலன் பேணுதலும் முக்கியமானது. திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.

    இவற்றுக்கெல்லாம் தயார் நிலையில் மனதை பக்குவப்படுத்தி வைப்பதும் முக்கியமானது.
    பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இதன் மூலம் சரும வறட்சி, வெடிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம்.
    பனிக்காலத்தில் சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. சருமத்தின் பளபளப்பு மற்றும் ஈரத்தன்மையைப் பாதுகாக்கும் எண்ணெய்யை சுரக்கும் சுரப்பிகள், பனிக்காலத்தில் குறைவாக சுரக்கின்றன. அதுமட்டுமில்லாமல் சருமத்தின் மேற்புறம் உள்ள துளைகள் அடைத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக சரும வறட்சி ஏற்படுகிறது.

    காற்றில் உள்ள ஈரப்பதம், குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மென்மை குறைந்து சருமம் எளிதாக உலர்ந்து விடும். எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட சருமமும் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். எனவே உணவு, உடற்பயிற்சி, முறையான பராமரிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நடுத்தர வயதைக் கடந்த பெண்கள், தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்கான சிகிச்சை மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கும் சருமம் எளிதாக உலர்ந்து விடும். இவர்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.இந்த எண்ணெய்களைக் கொண்டு மசாஜும் செய்து கொள்ளலாம். குளித்த பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவிக்கொள்வது நல்லது.

    பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இதன் மூலம் சரும வறட்சி, வெடிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். சோப்புக்குப் பதிலாக கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம்.

    குளிர்ச்சி நிறைந்த தட்பவெப்ப நிலையில், உடல் வெப்ப நிலையை சீராகப் பராமரிப்பது முக்கியம். சத்துள்ள சூடான உணவைச் சாப்பிட வேண்டும். அடிக்கடி சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி ஆகிய உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்ப நிலையை சீராகப் பாதுகாக்கலாம்.

    தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வது பெண்களுக்கு நல்லது. அதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாகி, உடலின் வெப்பநிலை சீராகும். சுரப்பிகள் சிறப்பாக செயல்படும். சருமத்தின் ஈரத்தன்மையும், பளபளப்பும் பாதுகாக்கப்படும்.

    பனிக்காலத்தில் உள்ளாடைகளை அறைகளுக்குள் உலர வைப்பது தவறு. அதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சருமப் பிரச்சினை உண்டாகும். உடலிலும், ஆடைகளிலும் ஈரப்பதம் இருக்கக்கூடாது. சரும பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உடைகளை தனிப்பட்ட முறையில் துவைப்பதும், சோப்பு மற்றும் இதர துணிகளை தனியாக வைத்துக்கொள்வதும் நல்லது.

    உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், குளிர்காலத்தில் அவை எளிதாக உலர்ந்து விடுகின்றன. அவற்றில் வெடிப்பு ஏற்படாதவாறு ‘லிப் பாம்’ தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் தரமானவற்றையே பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் உதடுகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
    தமிழ்நாட்டுப் பெண்களும் இப்பொழுது படோலா பட்டுச் சேலைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டார்கள். பெரிய ஜவுளிக் கடைகள் பலவற்றில் படோலா பட்டிற்கென்றே தனி விற்பனைப் பிரிவு உள்ளது.
    இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் தயாராகும் படோலா பட்டுக்கள் அதில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாட்டிற்கு ஏற்ப அதிக விலையுடன் இருக்கின்றது. முற்காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே இந்தச் சேலைகளை உடுத்தியிருக்கிறார்கள்.

    இப்பொழுதோ இந்தச் சேலைகளை திருமணப் பெண்கள் விரும்பி உடுத்துகிறார்கள். இதிலிருந்தே இந்தச் சேலையில் எவ்வளவு அதிகமான வேலைப்பாடுகள் இருக்கும் எனபதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

    படோலா புடவைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

    ராஜ்கோட் படோலா : இவை ஒற்றை இக்கத் டிசைன்களுடன் செங்குத்தாக சாயமேற்றப்பட்டு நெசவு செய்யப்பட்டவை.

    பதான் படோலா : இவை இரட்டை இக்கத் டிசைன்களுடன் கிடைமட்டமாக சாய மேற்றப்பட்டு நெசவு செய்யப்பட்டவையாகும்.

    படோலா தறியானது ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதால் ஒரு புடவையைத் தயாரிக்க இரண்டு பேர் முதல் நான்கு பேர் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்தச் சேலையின் வடிவத்தில் நீளம் மற்றும் அதில் இடம் பெறும் சிக்கலான வடிவத்தைப் பொறுத்து ஒரு சேலையை உருவாக்க ஒரு வருடம் வரை கூட ஆகலாம். தறி ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருப்பது தனித்துவமான அம்சமாகக் கருதப்படுகின்றது.

    பதான் படோலா துணிகளின் அரசன் என்று அழைக்கப்படுகின்றது.

    பெரும்பாலும் குஜராத்தி பெண்களே இந்தப் புடவையைப் பயன்படுத்துகிறார்கள்.

    புடவையின் வடிவமைப்பு: மிகவும் மைக்ரோ மற்றும் பழைய பாரம்பரிய இந்திய கலாச்சார வடிவமைப்பு, பழைய காட்லி வடிவமைப்பு கையால் செய்யப்பட்ட பட்டு நூல் பயன்பாடு மற்றும் பல வண்ண நூலைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் பழைய இந்திய கோயில்கள், பூ மற்றும் ரங்கோலி போன்ற இயற்கை வடிவமைப்பு போன்றவை புடவையின் முக்கிய கருத்தாக இருக்கின்றது.

    நான்கு தனித்துவமான வடிவங்கள் இந்தச் சேலைகளில் இடம் பெறுவதைப் பார்க்க முடியும்.

    ஜெயின் மற்றும் இந்து சமூகங்களில், கிளிகள், பூக்கள், யானை மற்றும் நடனமாடும் உருவங்களின் முழு வடிவமைப்புகளைக் கொண்ட இரட்டை இக்கத் புடவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    முஸ்லீம் சமூகங்களில் வடிவியல் (ஜ்யாமெட்ரிக்) சார்ந்த வடிவமைப்புகள் மற்றும் பலர் வடிவங்களைக் கொண்ட புடவைகளை பெரும்பாலும் திருமணங்களுக்கும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்கும் அணிகிறார்கள்.

    மஹாராஷ்டிர பிரமானர்கள் அடர் வண்ண பார்டர்கள் மற்றும் உடல் பகுதியானது பிளெயினாக இருப்பது போலும், நரி குஞ்ச் என்ற பறவை வடிவமைப்புடன் நெய்யப்பட்ட புடவைகளையும் அணிகிறார்கள்.

    தாமரை மலர்கள், மொட்டுகள் மற்றும் இலைகளுடன் இருக்கும் கூடை வடிவமைப்புடன் வரும் புடவைகள் மிகவும் பிரபலமானவை. மேலும் இதுபோன்ற வடிவமைப்புகள் கருவுறுதலுடன் தொடர்புடையதாக இருப்பதால் சில கலாச்சாரங்களில் இவை திருமணம் போன்ற விழாக்களில் மணப்பெண்களால் அணியப்படுகின்றது.

    இக்கத் என்பது நூல், நுட்பம் மற்றும் துணி வகை ஆகியவற்றைப் பொதுவாகக் குறிக்கின்றது. பொதுவாக, இது எதிர்ப்பு சாயத்தை உள்ளடக்கிய ஒரு நுட்பமாகும். நூல் மூட்டைகளானது இறுக்கமாகக் கட்டப்பட்டு, பின்னர் விரும்பிய தேவையான வடிவத்தை உருவாக்கப் பலமுறை சாயமிடப்படுகிறது. துணிகள் நெய்யப்படுவதற்கு முன்பு நூல்கள் சாயமிடப்படுவதால் இந்த சாயமிடும் முறையானது வேறுபடுகின்றது. நூல்களில் சாயமானது நன்கு ஏறிய பின்னர் அவை உலர்த்தப்படுகின்றன. பின்னர் நெசவாளர்கள் அவற்றைத் தறியில் வரிசைப்டுத்தி வடிவத்தை உருவாக்குகிறார்கள்.

    நெசவாளர்கள் துல்லியமாக நூல்களைச் சாயமிட்டு அவற்றை சரியாக வரிசைப்படுத்தி பின்னர் நெய்யும் பொழுது சரியான வடிவத்தை உருவாக்குவது என்பது நம்ப முடியாத சிக்கலான செயல்முறையாகவே உள்ளது. அதே போன்ற மாதிரியைப் பிரதிபலிக்க நெசவாளர் முன்பு போலவே அதே இடத்தில் நூலைச் சாயமிட்டு, சாயமிட்ட நூலை அதே இடத்தில் தறியில் வரிசைப்படுத்தி பின்பு முன்பு நெசவு செய்த முறையிலேயே நெசவு செய்ய வேண்டும்.

    இரட்டை இக்கத் நெசவு முறையானது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதில் வார்ப் மற்றும் வெஃப்ட் நூல்களில் எதிர்ச்சாயமிடுதல் நெசவு செய்வதற்கு முன்பே செய்யப்படுகின்றன. இதில் இந்த இரட்டை நூல்களை மிகக் கவனத்துடன் கையாண்டு நெசவு செய்யும் பொழுது தான் மாதிரிகள் உருவாகின்றன. இதில் சிறிதளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் தவறான டிசைன்கள் உருவாகிவிடும்.

    தமிழ்நாட்டுப் பெண்களும் இப்பொழுது படோலா பட்டுச் சேலைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டார்கள். பெரிய ஜவுளிக் கடைகள் பலவற்றில் படோலா பட்டிற்கென்றே தனி விற்பனைப் பிரிவு உள்ளது.

    டயமண்ட் இக்கத் டிசைன், காண்ட்ராஸ்ட் பார்டர்களுடன் வரும் இக்கத் டிசைன் ஜியோமெட்ரிக் இக்கத் டிசைன், செவ்ரான் இக்கத் டிசைன், ஃப்ளோரல் மோடிஃப் இக்கத் டிசைன்களுடன் வரும் படோலா பட்டுச் சேலைகள் நம்மூரில் பிரபலம் என்று சொல்லலாம்.

    இதில் இருக்கும் வேலைப்பாட்டையும் அதற்காக நெசவாளர்கள் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் உழைப்பையும் பார்க்கும் பொழுது சேலைகளின் விலையானது நமக்கு அதிகமாகத் தெரிகிறது.
    ×