search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    படோலா பட்டு
    X
    படோலா பட்டு

    பெண்களின் மனம் மயக்கும் படோலா பட்டு...

    தமிழ்நாட்டுப் பெண்களும் இப்பொழுது படோலா பட்டுச் சேலைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டார்கள். பெரிய ஜவுளிக் கடைகள் பலவற்றில் படோலா பட்டிற்கென்றே தனி விற்பனைப் பிரிவு உள்ளது.
    இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் தயாராகும் படோலா பட்டுக்கள் அதில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாட்டிற்கு ஏற்ப அதிக விலையுடன் இருக்கின்றது. முற்காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே இந்தச் சேலைகளை உடுத்தியிருக்கிறார்கள்.

    இப்பொழுதோ இந்தச் சேலைகளை திருமணப் பெண்கள் விரும்பி உடுத்துகிறார்கள். இதிலிருந்தே இந்தச் சேலையில் எவ்வளவு அதிகமான வேலைப்பாடுகள் இருக்கும் எனபதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

    படோலா புடவைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

    ராஜ்கோட் படோலா : இவை ஒற்றை இக்கத் டிசைன்களுடன் செங்குத்தாக சாயமேற்றப்பட்டு நெசவு செய்யப்பட்டவை.

    பதான் படோலா : இவை இரட்டை இக்கத் டிசைன்களுடன் கிடைமட்டமாக சாய மேற்றப்பட்டு நெசவு செய்யப்பட்டவையாகும்.

    படோலா தறியானது ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதால் ஒரு புடவையைத் தயாரிக்க இரண்டு பேர் முதல் நான்கு பேர் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்தச் சேலையின் வடிவத்தில் நீளம் மற்றும் அதில் இடம் பெறும் சிக்கலான வடிவத்தைப் பொறுத்து ஒரு சேலையை உருவாக்க ஒரு வருடம் வரை கூட ஆகலாம். தறி ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருப்பது தனித்துவமான அம்சமாகக் கருதப்படுகின்றது.

    பதான் படோலா துணிகளின் அரசன் என்று அழைக்கப்படுகின்றது.

    பெரும்பாலும் குஜராத்தி பெண்களே இந்தப் புடவையைப் பயன்படுத்துகிறார்கள்.

    புடவையின் வடிவமைப்பு: மிகவும் மைக்ரோ மற்றும் பழைய பாரம்பரிய இந்திய கலாச்சார வடிவமைப்பு, பழைய காட்லி வடிவமைப்பு கையால் செய்யப்பட்ட பட்டு நூல் பயன்பாடு மற்றும் பல வண்ண நூலைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் பழைய இந்திய கோயில்கள், பூ மற்றும் ரங்கோலி போன்ற இயற்கை வடிவமைப்பு போன்றவை புடவையின் முக்கிய கருத்தாக இருக்கின்றது.

    நான்கு தனித்துவமான வடிவங்கள் இந்தச் சேலைகளில் இடம் பெறுவதைப் பார்க்க முடியும்.

    ஜெயின் மற்றும் இந்து சமூகங்களில், கிளிகள், பூக்கள், யானை மற்றும் நடனமாடும் உருவங்களின் முழு வடிவமைப்புகளைக் கொண்ட இரட்டை இக்கத் புடவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    முஸ்லீம் சமூகங்களில் வடிவியல் (ஜ்யாமெட்ரிக்) சார்ந்த வடிவமைப்புகள் மற்றும் பலர் வடிவங்களைக் கொண்ட புடவைகளை பெரும்பாலும் திருமணங்களுக்கும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்கும் அணிகிறார்கள்.

    மஹாராஷ்டிர பிரமானர்கள் அடர் வண்ண பார்டர்கள் மற்றும் உடல் பகுதியானது பிளெயினாக இருப்பது போலும், நரி குஞ்ச் என்ற பறவை வடிவமைப்புடன் நெய்யப்பட்ட புடவைகளையும் அணிகிறார்கள்.

    தாமரை மலர்கள், மொட்டுகள் மற்றும் இலைகளுடன் இருக்கும் கூடை வடிவமைப்புடன் வரும் புடவைகள் மிகவும் பிரபலமானவை. மேலும் இதுபோன்ற வடிவமைப்புகள் கருவுறுதலுடன் தொடர்புடையதாக இருப்பதால் சில கலாச்சாரங்களில் இவை திருமணம் போன்ற விழாக்களில் மணப்பெண்களால் அணியப்படுகின்றது.

    இக்கத் என்பது நூல், நுட்பம் மற்றும் துணி வகை ஆகியவற்றைப் பொதுவாகக் குறிக்கின்றது. பொதுவாக, இது எதிர்ப்பு சாயத்தை உள்ளடக்கிய ஒரு நுட்பமாகும். நூல் மூட்டைகளானது இறுக்கமாகக் கட்டப்பட்டு, பின்னர் விரும்பிய தேவையான வடிவத்தை உருவாக்கப் பலமுறை சாயமிடப்படுகிறது. துணிகள் நெய்யப்படுவதற்கு முன்பு நூல்கள் சாயமிடப்படுவதால் இந்த சாயமிடும் முறையானது வேறுபடுகின்றது. நூல்களில் சாயமானது நன்கு ஏறிய பின்னர் அவை உலர்த்தப்படுகின்றன. பின்னர் நெசவாளர்கள் அவற்றைத் தறியில் வரிசைப்டுத்தி வடிவத்தை உருவாக்குகிறார்கள்.

    நெசவாளர்கள் துல்லியமாக நூல்களைச் சாயமிட்டு அவற்றை சரியாக வரிசைப்படுத்தி பின்னர் நெய்யும் பொழுது சரியான வடிவத்தை உருவாக்குவது என்பது நம்ப முடியாத சிக்கலான செயல்முறையாகவே உள்ளது. அதே போன்ற மாதிரியைப் பிரதிபலிக்க நெசவாளர் முன்பு போலவே அதே இடத்தில் நூலைச் சாயமிட்டு, சாயமிட்ட நூலை அதே இடத்தில் தறியில் வரிசைப்படுத்தி பின்பு முன்பு நெசவு செய்த முறையிலேயே நெசவு செய்ய வேண்டும்.

    இரட்டை இக்கத் நெசவு முறையானது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதில் வார்ப் மற்றும் வெஃப்ட் நூல்களில் எதிர்ச்சாயமிடுதல் நெசவு செய்வதற்கு முன்பே செய்யப்படுகின்றன. இதில் இந்த இரட்டை நூல்களை மிகக் கவனத்துடன் கையாண்டு நெசவு செய்யும் பொழுது தான் மாதிரிகள் உருவாகின்றன. இதில் சிறிதளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் தவறான டிசைன்கள் உருவாகிவிடும்.

    தமிழ்நாட்டுப் பெண்களும் இப்பொழுது படோலா பட்டுச் சேலைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டார்கள். பெரிய ஜவுளிக் கடைகள் பலவற்றில் படோலா பட்டிற்கென்றே தனி விற்பனைப் பிரிவு உள்ளது.

    டயமண்ட் இக்கத் டிசைன், காண்ட்ராஸ்ட் பார்டர்களுடன் வரும் இக்கத் டிசைன் ஜியோமெட்ரிக் இக்கத் டிசைன், செவ்ரான் இக்கத் டிசைன், ஃப்ளோரல் மோடிஃப் இக்கத் டிசைன்களுடன் வரும் படோலா பட்டுச் சேலைகள் நம்மூரில் பிரபலம் என்று சொல்லலாம்.

    இதில் இருக்கும் வேலைப்பாட்டையும் அதற்காக நெசவாளர்கள் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் உழைப்பையும் பார்க்கும் பொழுது சேலைகளின் விலையானது நமக்கு அதிகமாகத் தெரிகிறது.
    Next Story
    ×