என் மலர்
அழகுக் குறிப்புகள்
- காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும்.
- எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.
'ஜில்' என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும். பொதுவில் நகரத்தில் இருப்பவர்கள் ஆறு, நதி, அருவி என்று செல்ல முடியாது. எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.
இப்படி குளிக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தலைக்கும் நீர் ஊற்றி குளிக்கலாம். சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக் கொள்ளாது என்று கூறுபவர்கள் 'ஷவர் கேப்' போட்டு குளிக்கலாம். உடலில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நிதான முறையில் நீர் ஊற்றப்படும் போது
* மன உறுதி ஏற்படும்.
* ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் நீங்கும்
* குளூட்டதியோன் அளவு கூடும். எளிதல் ஸ்ட்ரெஸ் ஆக மாட்டீர்கள்.
* விழிப்புணர்வு கூடும்.
* சருமம், முடி ஆரோக்கியம் கூடும்.
* கொழுப்பு குறைந்து எடை குறையும்.
* ரத்த ஓட்டம் சீர்படும்.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* நிணநீர் மண்டலம் சுத்தப்படும்.
* தசைகளில் வலி சீக்கிரம் சீர்படும்.
* தூக்கம், விழிப்பு, சீராய் இருக்கும்.
* நன்கு இயல்பாய் ஆழ்ந்து மூச்சு எடுப்பீர்கள்.
உடல் நலக்குறைவானவர்கள், மருத்துவ கவனிப்பில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் இவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யலாம். மிக அதிக வெப்பம் இருக்கும் இந்த கோடையில் இம்மாதிரி குளியல் முறை, தகுந்த உணவு முறை இவற்றின் மூலம் ஒருவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்.
- கண்புருவங்களை சீர் செய்யும்போது தாங்க முடியாத வலி இருக்கலாம்.
- திரெட்டிங் செய்வதற்கு முன்பாக அந்த இடத்தில் ஐஸ் பாக் வைத்து தடவலாம்.
கண்புருவங்களை சீர் செய்யும்போது அதிலுள்ள சில முடிகளை நீக்குவதால் தாங்க முடியாத வலி இருக்கலாம். ஐப்ரோ திரட்டிங்கின்போது வேர்க்காலுடன் சேர்த்து முடிகளை அகற்றுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலியைத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன.
புருவங்களைத் திருத்த வேண்டுமென்று நினைத்தால் 2-3 வாரங்களுக்கு முன்பே நீங்கள் தயார் ஆக வேண்டும். புருவத்தில் நன்றாக முடி வளர்வதற்கு இந்த காலகட்டத்தை தாருங்கள். புருவம் நன்றாக வளர்ந்தபின்னர் திரெட்டிங் செய்யும்போது அதை அழகாக வில்போன்று வளைத்து மார்க் செய்து சிறப்பாக திரெட்டிங் செய்ய உதவும்.
அதேபோல் திரெட்டிங் செய்வதற்கு முன்பாக உங்கள் முகத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும். மேக்கப் போட்டிருந்தாலோ, சன்ஸ்கிரீன் பூசியிருந்தாலோ, அல்லது வேறு எண்ணெய்களை தடவியிருந்தாலோ முற்றிலும் நீக்கி விடுங்கள். ஏனென்றால் திரெட்டிங் அல்லது வேக்ஸிங் செய்யும்போது புருவத்தில் ஏற்படும் புதிய துளைகளுக்குள் சென்று வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது.
புருவத்தைத் திருத்திய பிறகு அந்தப் பகுதியின் மீது ஹெசல் அல்லது அக்னே ஆஸ்ட்ரின்ஜென்ட் கிரீமை தடவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
ஐப்ரோ திருத்துவதற்கு முன்பாக புருவப் பகுதியை மரத்துப்போகச் செய்யலாம். அதற்கென விற்கும் கிரீம்களை வாங்கித் தடவினால் புருவப் பகுதியில் உணர்வற்றுப் போகும். அப்படிப்பட்ட கிரீம்களை திரெட்டிங் செய்வதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக தடவிவிட வேண்டும். திரெட்டிங்கினால் ஏற்படும் வலி சிறிதுநேரத்துக்கு அசௌகரியமாக இருந்தாலும் சிலருக்கு சென்சிடிவ் ஸ்கின் இருப்பதால் அவர்களால் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். திரெட்டிங் செய்த 5 நிமிடங்கள் அல்லது கால் மணிநேரத்துக்கு புருவப் பகுதிகள் சிவந்திருப்பது சகஜம்.
திரெட்டிங் செய்வதற்கு முன்பாக அந்த இடத்தில் ஐஸ் பாக் வைத்து தடவலாம். சீவாத பென்சில் போன்ற பொருளை வைத்து புருவப்பகுதியில் சிறிது நேரம் தட்டிக் கொண்டே இருந்தால் திரெட்டிங்கின் போது வலி குறைவாக இருக்கும்.
திரட்டிங் முடிந்தபின்பும் புருவம், கண்களின் கீழ்ப்பகுதி அல்லது வாய் மரத்துப் போன உணர்வு இருக்கலாம். அப்படி இருந்தால் வாயைத் திறந்தபடி உங்கள் நாக்கை எல்லாபக்கமும் சுழற்றுங்கள். இதன்மூலம் புருவம், மரத்துப் போன பகுதி நரம்புகளைத் தூண்டிவிடலாம். ஐந்து நிமிடங்கள் இப்படித் தொடர்ந்து நாக்கைச் சுழற்றியபடி இருந்தால் சீக்கிரமே மரத்துப்போன உணர்வு போய்விடும். வாய்ப்பகுதியில் அரிப்பு போன்ற உணர்வு இருந்தாலும் சரியாகிவிடும்.
ஐப்ரோ திரட்டிங் செய்வதற்கு முன்பாக முதலில் குளித்து விடுங்கள்.
ஏனென்றால் குளிக்கும்போது புருவத்தில் இருக்கும் முடிகள் நீரில் நனைந்து வேர்க்கால்களும் இலகுவாகத் திறந்து இருக்கும். அதன்பின் திரட்டிங் செய்தால் முடிகள் எளிதில் வந்து விடும்.
புருவங்களைத் திருத்திய பிறகு குளிர்ந்த ஜெல்லை பூசி அந்த இடத்தை ஈரப்பதமாக்குங்கள். இதற்கு நீங்கள் கற்றாழை ஜெல், ஆளி விதை ஜெல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
- மல்லிகை பூக்களை சூடும் பெண்கள் அனைவரும் கனகாம்பரம் பூக்களை கட்டாயம் சூடிக்கொள்வார்கள்.
- சிறுமிகள், இளம்பெண்கள் பூக்களை அதிகம் விரும்பு சூடிக்கொள்வது இயல்பு. தலைவாரி, பின்னலிட்டு பூக்களை சூடிக்கொள்வதை போன்று,
இதழ் விரித்து சிரிக்கும் மலர்களை காலையில் கண்டால் நாள் முழுவதும் கவலையே இருக்காது. அதையே, 'மலரை கண்டு மலராத முகமும் உண்டோ' என்று கூறுகின்றனர். மலர்களை காண்பதால் கண்கள் குளிர்ந்து, உள்ளம் கனிந்து, உடல் சிலிர்த்து எதிர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதை உணரலாம்.
மலர்களின் மணம்
மலர்கள் வீசும் மணம், எவரையும் எளிதில் வென்றிடும் வல்லமை கொண்டது. இத்தகைய மலர்களை, பெண்களுக்கு உவமையாக கூறி கவிதை பாடுவது கவிஞர்களின் புலமை. அதேபோல் பெண்களின் கூந்தலில் இடம்பிடித்ததை போன்று, அவர்களின் விருப்ப பட்டியலில் நிரந்தர இடம்பிடித்து இருப்பதும் மலர்கள் தான்.
ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு மணம் உண்டு. மல்லிகை, முல்லை, தாழம்பூ, ரோஜா, செவ்வந்தி என பூக்களின் பட்டியலை அடுக்கி கொண்டே செல்லலாம். வீசும் நறுமணமே பூக்களின் மீதான விருப்பத்தை அதிகரிக்கிறது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து பெண்களும் தலையில் சூட நினைப்பது மணம் வீசும் மலர்களையே.
கனகாம்பரம்
ஆனால் மணம் இல்லாத மலரையும் கூந்தலில் சூடும் பழக்கம் பெண்களிடம் தொன்றுதொட்டு இருக்கிறது. அது இளம்சிவப்பு நிறத்தில் இதழ் சிவந்து அழைக்கும் கனகாம்பரம் பூக்கள் என்றால் அது மிகையல்ல. கனகாம்பரம் பூக்களுக்கு பிற பூக்களை போன்று ஈர்க்கும் வகையில் மணம் இல்லை. ஆனால் பெண்களின் மனதை ஈர்க்க தவறியது இல்லை.
ஒருவர் கூந்தலில் சூடிய மல்லிகைப்பூ 4 வீடுகளை தாண்டி மணம் வீசும். அத்தகைய மல்லிகை பூக்களை, கூந்தல் மறையும் அளவுக்கு சூடி இருந்தாலும், கையளவு கனகாம்பரம் வைத்தால் அது ஒரு அழகு. இதனால் மல்லிகை பூக்களை சூடும் பெண்கள் அனைவரும் கனகாம்பரம் பூக்களை கட்டாயம் சூடிக்கொள்வார்கள்.
சினிமா பாடல்
திருமண விழா, திருவிழா என்றால் பெண்கள் மல்லிகை பூக்களுடன், கனகாம்பரம் பூக்களையும் சூடாமல் வெளியே வரமாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இருந்தது. அதை பார்த்து பொறாமை கொண்ட பெண்களும், அதை கண்டு பெருமை கொண்ட பெண்களும் நிறைய உண்டு. பெண்களின் மனதிலும், கூந்தலிலும் இடம்பிடித்த கனகாம்பரம் பூக்கள் கவிஞர்களின் பாடல்களிலும் இடம்பிடித்து இருக்கிறது.
மல்லிகை, முல்லை, தாமரை, ரோஜா உள்ளிட்ட பூக்களின் வரிசையில் 'காதோரம் கனகாம்பரம் தெருவோரம் காதல் வரும்' என்று ஒரு சினிமா பாடலும் அமைந்து இருக்கிறது. இந்த பாடல் நடிகர் விஜயகாந்த் நடித்த 'புதுபாடகன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய கனகாம்பரம் பூக்கள், நாகரிக பெண்களின் கூந்தலில் பார்ப்பது அரிதாகி வருகிறது.
நாகரிக பெண்கள்
சிறுமிகள், இளம்பெண்கள் பூக்களை அதிகம் விரும்பு சூடிக்கொள்வது இயல்பு. தலைவாரி, பின்னலிட்டு பூக்களை சூடிக்கொள்வதை போன்று, பின்னலிடாமல் பூக்களை சூடிக்கொள்வதும் உண்டு. ஆனால் நாகரிகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் இளம்பெண்கள் கூந்தலை விரிகோலமாக (லூஸ்கேர்) தொங்கவிடுவதை விரும்புகின்றனர்.
நாகரிக ஆடைகளை அணிவதற்கு அதுவே பொருத்தமாக இருப்பதாக நினைக்கின்றனர். மேலும் நாகரிக பெண்ணாக இருக்க விரும்புபவர்கள் கனகாம்பரம் பூக்களை சூடிக்கொள்ள விரும்புவது இல்லை. நாகரிக ஆடை மட்டுமின்றி சேலை அணியும் பெண்கள் கூட, ஈர்க்கும் மணமில்லாத கனகாம்பரம் பூக்களை சூட விரும்பாத நிலை உள்ளது.
வசந்தத்தை தேடுது
திருமண வீடுகளில் மட்டுமே மல்லிகையுடன், கனகாம்பரம் சூடிய பெண்களை பார்க்க முடிகிறது. அதுவும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிக அளவில் கனகாம்பரம் பூக்களை சூடுகின்றனர். இதனால் திருமணம், திருவிழா காலங்களை தவிர மற்ற நாட்களில் கனகாம்பரம் பூக்களை வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் காரணமாக கனகாம்பரம் பூக்களின் விலை திருமண நாட்களில் கிலோ ரூ.1,000 ஆக உயர்வதும், சாதாரண நாட்களில் ரூ.200-க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையும் உள்ளது. இதனால் விவசாயிகளும் கனகாம்பரம் பூக்களை சாகுபடி செய்வதற்கு தயக்கம் காட்டும் நிலை உள்ளது. ஒருசிலர் கனகாம்பரம் செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.
தமிழகத்தின் ஹாலந்து என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் கனகாம்பரம் பூக்களின் விற்பனையும், சாகுபடி பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் "வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது" என்று சோக கீதம் பாடும் நிலைக்கு கனகாம்பரம் பூக்களின் நிலை சென்று கொண்டிருக்கிறது.
இதுகுறித்து பெண்களிடம் கருத்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
நாகரிகம் கருதி தவிர்ப்பு
சத்யா (திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி):- பெண்கள் தலையில் பூக்களை சூடிக்கொண்டால் மிகவும் அழகாக இருக்கும். இதனால் தொன்றுதொட்டு தமிழ் பெண்கள் பூக்களை சூடிக்கொள்கின்றனர். ஆனால் நாகரிக வளர்ச்சியால் இளம்பெண்கள் பூக்களை சூடிக்கொள்வதை தவிர்க்கின்றனர். அதிலும் மல்லிகை போன்று மனதை ஈர்க்கும் மணம் இல்லாத கனகாம்பரம் பூக்களை இளம்பெண்கள் விரும்புவது இல்லை. கனகாம்பரம் பூக்களை சூடினால் நாகரிக பெண்ணாக இருக்காது என்று நினைக்கின்றனர். கனகாம்பரம் பூக்களை சூடிக்கொண்டால் அழகாக இருக்கும்.
100-க்கு 10 பேர் கூட இல்லை
சுதா (நத்தம் ஊராளிப்பட்டி):- நான் பள்ளி செல்லும் போது மல்லிகை பூக்களுடன் கனகாம்பரம் பூக்களையும் சேர்த்து சூடிக்கொண்டு செல்வேன். என்னை போன்ற சக மாணவிகளும் அவ்வாறு தான் பூக்களை சூடிக்கொள்வார்கள். ஆனால் தற்போது மாணவிகள் மட்டுமின்றி இளம்பெண்களில் கூட 100-க்கு 10 பேர் கூட மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களை சூடிக்கொள்வது இல்லை. அதேபோல் பூ வியாபாரிகள் கூட மல்லிகை, முல்லை, ரோஜா என பிற பூக்களை தான் விற்க கொண்டு வருகின்றனர். பெண்கள் கூந்தலில் பூக்களை சூடிக்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
இவ்வாறு கூறினர்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும்.
- வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது.
துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது.
துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மான்கனீஸ், காப்பர், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், ஓமேக் 3 பேட்டி ஆசிட் இதில் இருக்கிறது.
வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், வயதாவதை தள்ளிப்போடும்.மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க துளசி உதவும்.
பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளை, இது பரவாமல் தடுக்கும். நமது முகத்தில் உள்ள துளைகள் அடைபடும்போது முகப்பரு ஏற்படும் . இந்நிலையில் இதை தடுப்பதால், முகப்பரு ஏற்படாது.
இந்நிலையில் துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், இது முகப்பரு வராமல் தடுக்கும்.
வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும். இந்நிலையில் துளசியில் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சி, சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை சரியாக்க துளசியை பயன்படுத்தலாம்.
துளசி பொடி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் பயன்படுத்தினால், சருமம் மிருதுவாக மாறும்.
நீரின்றி வறண்டுபோன சருமத்தை, மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றும். துளசியில் இயற்கையான எண்ணெய் இருப்பதால், நமது சருமத்தின் தண்ணீர் பதத்தை இழக்காமல் பாதுகாக்கும்.
இந்நிலையில் சுற்றுப்புற சூழலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். துளசி இலைகளை நன்றாக கழுவி, தயிர் அல்லது யோகர்டில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திகரிக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மக்கள் ஆன்லைனில் தங்கத்தையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
- இந்த சுபநிகழ்ச்சியில் தங்கம் வாங்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்து நாட்காட்டியில், அட்சய திரிதியை பண்டிகை மிகவும் ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது ஜைன மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நாள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவரும் கட்டவிழ்த்துவிடும் பொதுவான நம்பிக்கை ஒன்று உள்ளது. இந்த புனித நாளில் தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவது அல்லது பரிசளிப்பது உங்கள் செல்வத்தை பெருக்க உதவுகிறது மற்றும் நித்திய செழிப்பை உறுதி செய்கிறது என்பது பொதுவான நம்பிக்கை. இந்த பண்டிகையை நம்புபவர்கள் இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வதற்கு இதுவே காரணம்.
வெவ்வேறு குடும்பங்கள் தங்கம் அல்லது வெள்ளியில் வெவ்வேறு வழிகளில் முதலீடு செய்கின்றன. சிலர் உருகிய தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதை விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் தேவைக்கேற்ப அதை அவர்கள் விரும்பும் வழியில் பயன்படுத்தலாம். இன்னும் சிலர் மென்மையான காதணி அல்லது வளையல் போன்ற சிறிய நுணுக்கமான நகைகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். முழு குடும்பமும் நகைக் கடைக்குச் சென்று, தங்க நகைகளை தேர்வுசெய்வது என்று இந்த அக்சய திருதியை நாளில் ஒரு முழு திட்டமிடப்பட்ட பயணமாக இருக்கும்.
இருப்பினும், மிகவும் சுவாரஸ்யமாக, காலம் மாறிவிட்டதால், மக்கள் ஆன்லைனில் தங்கத்தையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்! தற்போது ஏராளமான தங்க நகைகள் ஆன்லைன் விற்பனையாளர்கள் தங்கள் சொந்த இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். தேவை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்த சுபநிகழ்ச்சியில் குடும்பங்கள் தங்கம் வாங்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலர் இன்னும் பழைய பாரம்பரிய முறையை கடைப்பிடிக்க விரும்புகிறார்கள், சில குடும்பங்கள் ஆன்லைனில் வாங்குவதற்கு மாறிவிட்டன.
இந்த நன்னாளில் எந்தெந்த வகை நகைகளை வாங்கலாம் என்று பார்ப்போம்.
வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட்கள்
மெல்லிய வளையல்கள்மற்றும் பிரேஸ்லெட்கள் மிகவும் நவீனமானவை, ஸ்டைலானவை. வீட்டில் ஒரு பண்டிகை இருக்கும் போது, நீங்கள் குறைந்த தோற்றம் மற்றும் அதிக எடை இல்லாத ஒன்றை இலக்காகக் கொண்டால், உங்கள் இந்திய உடைகளுடன் இவற்றை எளிதாக இணைக்க முடியும். ஒரு பார்ட்டி இருந்தால், நீங்கள் காக்டெய்ல் கவுன் அல்லது பார்ட்டி டிரஸ் அணிய திட்டமிட்டால், அதுனுடனும் இந்த பிரேஸ்லெட்கள் நன்றாக இணைகிறது. நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அந்த உடைகளிலும் சிறப்பாகச் செயல்படும்.வளையல்கள்மற்றும் பிரேஸ்லெட்கள் மிகவும் புதுப்பாணியானவை, நேர்த்தியானவை மற்றும் எந்தவொரு சாதாரண ஆடையையும் மிகவும் நவநாகரீகமாகவும் ஸ்டைலாகவும் மாற்றும்.
காதணிகள்
அனைத்து வயதினராலும் விரும்பப்படும் இந்திய நகைகளின் மிகவும் பிரபலமானது காதணிகள், அது எந்த ஆடையையும் ஒளிரச் செய்யும். ஜிமிக்கிகள், ஸ்டுட்கள், வளையங்கள் மற்றும் டிராப் டவுன்கள் போன்ற பல தங்கக் காதணி வடிவமைப்புகள் உள்ளன. நீங்கள் விருந்துக்குச் செல்லும் காக்டெய்ல் உடை அணிந்திருந்தால், அதனுடன் நீண்ட தொங்கும் காதணி அதிசயங்களைச் செய்து, உங்கள் முழு தோற்றத்தையும் மிகவும் அழகாக மாற்றும். நீங்கள் உயர் கழுத்து ரவிக்கையுடன் புடவையை அணிந்திருந்தால், ஜிமிக்கிகள் உங்கள் முகத்தில் ஒளிரும் என்பதால், முழு தோற்றத்தையும் உயர்த்தும். நீங்கள் குறைந்த கழுத்து ஆடையை அணிந்து, கனமான நெக்லஸுடன் இணைத்தால், ஒரு எளிய ஜோடி ஸ்டுட்கள் முழு தோற்றத்தையும் பூர்த்திசெய்து உங்களை தேவதையாய் மாற்றும்.
மோதிரங்கள்
குளிர்காலத்தில் நம்மில் பெரும்பாலோர் எதிர்கொள்ளும் குழப்பம் என்னவென்றால், ஆமை கழுத்து அல்லது ஸ்வெட்டரில் எப்படி நகைகளை ஸ்டைல் செய்வது என்பதுதான். அப்போதுதான் மோதிரம் மீட்புக்கு வருகிறது! மெல்லிய தங்க மோதிரங்களின் அடுக்கானது, முழு தோற்றத்தையும் மிகவும் அழகாக மாற்றுகிறது. அவை ஸ்டைல் செய்வதற்கு மிகவும் எளிதானது, மிகவும் அழகாக இருக்கும் மற்றும் எந்த அலங்காரத்திற்கும் புதுமையான அழகை சேர்க்கின்றன. குளிர்கால ஆடைகளுடன் மட்டுமல்லாமல், உங்களின் காக்டெய்ல் உடை, உங்கள் உறவினரின் திருமணத்திற்கு நீங்கள் கடைசியாக அணிந்திருந்த இந்திய ஆடைகள் அல்லது நண்பர்களுடன் சாதாரணமாக ஒரு நாள் பொழுது போகும் எளிய அன்றாட உடைகள் ஆகியவற்றிற்கும் மோதிரங்கள் அழகாக இருக்கும்.
- நவீன பெண்ணுக்கு, தங்கம் ஒரு புத்திசாலித்தனமான முதலீடாக உள்ளது.
- பெண்களுக்கு, தங்க நகைகளின் மதிப்பு அதன் பண மதிப்புக்கு அப்பாற்பட்டது.
முன்பெல்லாம் பெண்களுக்கு, தங்க நகைகளின் மதிப்பு அதன் பண மதிப்புக்கு அப்பாற்பட்டது. பாரம்பரிய அர்த்தத்தில், இது ஒரு உணர்வு, பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பப்படுகிறது. நவீன பெண்ணுக்கு, தங்கம் ஒரு புத்திசாலித்தனமான முதலீடாகவும், ஷோ-ஸாப்பிங் ஸ்டைல் ஆகவும் உள்ளது.
இருப்பினும், உங்கள் தங்க நகைகள் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்க நீங்கள் அதை சரியாக தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். உங்கள் தங்க நகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள் பற்றி பார்ப்போம்.
தங்க ஆபரணங்கள் உங்களின் வடிவை முழுமையாக்குவதை உறுதிசெய்ய, அது எப்படி உங்கள் உடையின் வெவ்வேறு வண்ணங்களுடன் இணைகிறது என்பதைக் கவனியுங்கள். அனைத்து வகையான தங்கமும் (மஞ்சள் தங்கம், வெள்ளைத் தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் நகர்) கருப்பு போன்ற பொதுவான நிறத்துடன் நன்றாகப் பொருந்தினாலும், அவை மற்ற நிறங்களுடன் நன்றாக இருக்காது. நடுநிலை, வெளிர் மற்றும் தடித்த ஆடைகளுடன் எந்த வகையான தங்க நகைகள் சிறப்பாகச் செயல்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.
நடுநிலை நிறங்கள் - சாம்பல், வெள்ளை, பழுப்பு அல்லது அடர் நிழல்கள் போன்ற ஆடைகள், ரோஸ் கோல்ட் அல்லது வெள்ளை தங்க நகைகளுடன் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் பழுப்பு நிற ஆஃப்-தோள்பட்டை அணிய விரும்பினால், உங்கள் தோள்பட்டை மற்றும் காலர்போன் மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் ரோஸ் கோல்ட் பதக்கத்துடன் அணியலாம். ஒரு சாம்பல் அல்லது வெள்ளை உடையானது ரோஸ் கோல்ட் மற்றும் வைர ஸ்டுட்களுடன் அல்லது வெள்ளை தங்க டாலர்களுடன் நன்றாக இணையும்.
வெளிர் நிறங்கள் - மஞ்சள் தங்கம், இது மிகவும் பிரகாசமாக உள்ளது, ஒலியடக்க மற்றும் இனிமையான வெளிர் வண்ணங்களை முழுமையாக பூர்த்தி செய்கிறது. வெளிர் இளஞ்சிவப்பு, லாவெண்டர், ஸ்கை ப்ளூ அல்லது எலுமிச்சை மஞ்சள் நிற ஆடைகளுடன் கூடிய கோல்டன் ஹூப் காதணிகள் அல்லது தடிமனான தங்க சங்கிலியை இணைப்பது நிச்சயமாக நிறத்தை உயர்த்த உதவும். உண்மையில், சில நவீன மணப்பெண்கள் பாரம்பரிய சிவப்பு மற்றும் மெரூன்களை விட வெளிர் வண்ணங்களைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இந்த நிறங்கள் பாரம்பரிய மஞ்சள் தங்க நகைகளுடன் சரியாக பொருந்துகின்றன.
அடர்த்தியான நிறங்கள் - சில சமயங்களில் செங்கல் சிவப்பு, காடு பச்சை அல்லது இளஞ்சிவப்பு போன்ற வண்ண உடைகளுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் தங்கம் தோற்றத்திற்கு ஒரு திருப்பத்தை சேர்க்க முயற்சிக்கும். உதாரணமாக, ஒரு எளிய வளையலுக்குப் பதிலாக, உங்கள் அலங்காரத்துடன் பொருந்தக்கூடிய ரத்தினக் கற்கள் கொண்ட பரேல் லெட் வளையலை அணியலாம்.. மாற்றாக, தோற்றத்தை புதுப்பாணியாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க, பகல்-இரவு தோற்றத்திற்காக கிளாசிக் டென்னிஸ் பிரேஸ்லெட்டை அணியலாம்.
நீங்கள் அணியும் நகைகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் அலுவலகத்திற்கோ அல்லது தொழில்முறை நிகழ்வுகளுக்கோ தங்க நகைகளை அணிந்திருந்தால், சிறிய, குறைத்து அளவு நகைகளுடன் செல்வது புத்திசாலித்தனமாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு சிறிய ஜோடி வைரம் பதித்த தங்க காதணிகள் மற்றும் ஒரு மெல்லிய வளையலுடன் சென்றால் அட்டகாசமாக இருக்கும்.
இதேபோல், அதிக சாதாரண அல்லது உயர்தர விருந்துகள் மற்றும் நிகழ்வுகளுக்கு, தனித்து நிற்கும் தங்க நகைகளை (statement Jewellery)தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு கம்பீரமான தோற்றத்தைப் பெறுவீர்கள். உதாரணமாக, நீங்கள் காக்டெய்ல் ஆடையை அணிந்திருந்தால், உங்களுக்குத் தேவையானது தனித்துவமான பெரிய காதணிகள் மற்றும் ஒரு மோதிரம்.
தங்க நகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது உடல் வடிவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒல்லியான உடல்வாகு இருந்தால், ஒரு பதக்கத்துடன் கூடிய எளிய தங்கச் சங்கிலி அல்லது ஸ்டட் அல்லது சிறிய வளைய காதணிகள் போன்ற அழகான நகைகள் சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் சோக்கர்ஸ் மற்றும் தடிமனான வளையல்கள் போன்ற தடித்த தங்க நகைகளும் பொருத்தமாக இருக்கும். நீங்கள்பரந்த தோள்கள் உடையவராக இருந்தால், பெரிய நெக்பீஸ்கள் மற்றும் சங்கி பதக்கங்களைத் தவிர்க்கவும். தொங்கும் காதணிகள் மற்றும் நீண்ட நெக்லஸ்கள் ஒரு நீளமான தோற்றத்தை சேர்க்கின்றன.
உங்கள் உடல் வடிவம் மற்றும் நடைக்கு எது பொருத்தமானது என்பதைக் கண்டறிந்து வெவ்வேறு பாணிகளைப் பரிசோதிக்கவும். உங்களின் தனிப்பட்ட பாணி மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும், உங்கள் ரசனைக்கு மட்டுமின்றி உங்கள் ஆடைக்கும் ஏற்ற தங்க நகைகளை ஒரு சிறிய ஆராய்ச்சி மற்றும் நேரம் செவிடுதல் மூலம், உங்கள் தோற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தங்க ஆபரணங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
- ஹேர் டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும்.
- தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் என்பது மூட நம்பிக்கை.
சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்... போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.
வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.
தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.
சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.
பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, 'பொடுதலை' என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.
சிலர் தொடர்ந்து தலைக்கு 'டை' அடித்துக்கொள்வார்கள். கேட்டால், 'இயற்கையான மூலிகை டைதான் போடுகிறோம்' என்பார்கள். 100 சதவிகித 'மூலிகை டை' என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. கருப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே! எனவே, டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும். அதைத் தவிர்ப்பதே நல்லது.
- பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
- நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள், தோல்களையும் நீக்க வேண்டும்.
தினமும் முக அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள், வாரத்துக்கு ஒரு முறை கூட பாதங்களின் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இவ்வாறு பாதங்களை கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கைகளைப் போலவே, கால்களிலும் நகங்களை நீளமாக வளர்த்தல் கூடாது.
சாக்ஸ் மற்றும் ஷூக்களில் உள்ள அழுக்குகள், கால் நகங்களின் இடுக்குகளில் படிந்து அங்கு கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே தினமும் சோப்பு போட்டு கால்களைக் கழுவ வேண்டும். குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும்.
இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். தினமும் ஷூ அணிபவர்களின் பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை, ஷூக்களில் படிந்து, அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூக்களை வெயிலில் நன்றாக உலர வைத்து பயன்படுத்துவது நல்லது.
பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போது எளிதில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல், தோல் உரிதல் மற்றும் சில சமயங்களில் வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பாதங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். நகங்களை சீராக வெட்டுவதற்கு ஏற்ற நகவெட்டி பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு முறை நகங்களை வெட்டிய பிறகும் அதனை சுத்தம் செய்வது அவசியம். உங்களுக்கென்று தனியாக ஒரு நகவெட்டி வைத்துக்கொள்வது சிறந்தது. பாதங்களுக்கு சரியான அளவில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை ஹீல்ஸ் போன்ற காலணிகளை அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முகம் மற்றும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதை போல பாதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
வறட்சியான பாதங்களில் வெடிப்பு, தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். எனவே பாதங்களை சுத்தப்படுத்தியதும் கோகோ வெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்ற மாய்ஸ்சுரைசர்களை பூசலாம். மாதத்திற்கு இரண்டு முறை கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும். இது சருமத்தை மென்மையாக்கும்.
பின்பு பாதங்களை ஸ்கிரப்பர் அல்லது பியூமிஸ் கல்லைக் கொண்டு லேசாக தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். பிறகு நன்றாக மசித்த ஒரு வாழைப்பழத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து பாதம் முழுவதும் மாஸ்க் போல போடவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவவும். பின்பு மாய்ஸ்சுரைசர் தடவவும். இதனால் பாதங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வெயிலில் வெளியே செல்பவர்களின் சருமம் இவ்வாறு கருத்துப் போக நேரிடும்.
- இரு வேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவந்தால் சருமம் புத்துணர்வு பெறும்.
சூரிய ஒளி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பது சருமத்துக்கு கெடுதலை உண்டாக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் 'மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் சருமத்தின் நிறம் மாறி கருமை அடையும். தவிர்க்க முடியாத காரணங்களால், வெயிலில் வெளியே செல்பவர்களின் சருமம் இவ்வாறு கருத்துப் போக நேரிடும்.
முதிர்ந்த சரும செல்கள் சிதைந்து புதிய செல்கள் உருவாகும்போது, இந்த கருமை தானாகவே மறைந்து சருமம் மீண்டும் பழைய நிலையை அடையும். இதற்கு 27 முதல் 30 நாட்கள் வரை ஆகும். அதேசமயம் சூரிய ஒளியால் எவ்வளவு ஆழமாக சருமம் பாதிக்கப்பட்டு கருமை அடைந்திருக்கிறது என்பதை பொறுத்து இந்த செயல்பாடு தாமதமாகலாம். இயற்கையான முறையில் கருமையை போக்கி, சருமத்தை மீண்டும் பொலிவாக்குவதற்கு உதவும் குறிப்புகள் இங்கே…
வெயில் காலங்களில் காலை, மாலை என இரு வேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவந்தால் சருமம் புத்துணர்வு பெறும். வெயிலில், வெளியில் சென்று வந்த பின்னர் முகம், கழுத்து, கை மற்றும் கால்களை குளிர்ந்த நீரில் கழுவலாம். அதன் மூலம் வெயிலால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் குறையும்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்ல நேர்ந்தால் வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடர் நிறங்கள் வெப்பத்தைக் கவர்ந்திழுக்கும். ஆகவே, கோடை காலங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.
எலுமிச்சம்பழச் சாறு மற்றும் தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால், வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள் இரண்டையும் ரோஜா பன்னீர் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். தக்காளி சாற்றை, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
சந்தனம், தயிர் இவை இரண்டையும் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவவும். அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் ஜொலிக்கும். தேங்காய்ப்பாலுடன் சந்தனம் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும். சற்றே புளித்த தயிரை சிறிதளவு எடுத்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசவும்.
சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் சருமம் மீண்டும் பொலிவடையும். எலுமிச்சம்பழச் சாறு சிறிதளவு எடுத்து அதனுடன் சமபங்கு தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். நன்றாக பழுத்த பப்பாளி பழத்துடன், சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். இந்தக் கலவை வெயிலால் ஏற்பட்ட கருமையை நீக்கி சருமத்தை பளிச்சிட செய்யும்.
- பெண்களின் கூந்தல் பராமரிப்பு முறையை எளிமையாக்கிய தொழில்நுட்பங்களில் ஹேர் டிரையரும் ஒன்று.
- சிறந்த சில ஹேர் டிரையர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
ஹேர் டிரையர்' மின்சார சக்தி மூலம் இயங்கக் கூடியது. இது இன்றைய காலத்தில் தலைமுடி பராமரிப்புக்காக பலரும் வைத்திருக்கக்கூடிய முக்கியமான கருவியாகும். பெண்களின் கூந்தல் பராமரிப்பு முறையை எளிமையாக்கிய தொழில்நுட்பங்களில் ஹேர் டிரையரும் ஒன்று. தினமும் தலைக்குக் குளித்து, சரியாகக் கூந்தலை உலர வைக்காததால் உண்டாகும் சைனஸ், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்கு ஹேர் டிரையர் உதவும். அதேசமயம், இதைப் பாதுகாப்பாக உபயோகிப்பதும் முக்கியம்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தலைமுடி சேதம் அடையக்கூடும். ஹேர் டிரையர், அதன் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் அடிப்படையில் பல வகைப்படும். டுவர்மலின், செராமிக், இன்பிரா-ரெட், வாட்டேஜ், பிரஷ்-லெஸ் மோட்டார், அயானிக் போன்றவை அவற்றில் சில வகைகளாகும். சிறந்த சில ஹேர் டிரையர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
டுவர்மலின்: ரத்தினக் கல்லை சிறு சிறு துகள்களாகப் பொடி செய்து, அதைக்கொண்டு இந்த ஹேர் டிரையரின் காயில் (Coil) உருவாக்கப்பட்டிருக்கும். இந்தக் காயில் வெப்பமடைவது, குளிர்ச்சியடைவது அல்லது அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுவது போன்ற காரணங்களால் நெகட்டிவ் அயான்கள் மற்றும் பார் இன்பிரா-ரெட் அலைகளை வெளிப்படுத்தும். இவை இரண்டும் தலைமுடியைப் பாதுகாப்பாக உலர வைத்து, சிக்கு உண்டாவதைத் தடுக்கும்.
செராமிக்: டுவர்மலின் ஹேர் டிரையரைப் போலவே, இதன் காயிலும் செராமிக் துகள்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செராமிக் பொருட்களுக்கு இயல்பாகவே விரைவில் வெப்பமடையும் தன்மை மற்றும் சீராக வெப்பத்தைப் பரப்பும் தன்மை உண்டு. எனவே இந்த ஹேர் டிரையர் உபயோகிக்கும்போது, விரைவாக கூந்தல் உலரும். தலைமுடி சேதமடைவது குறைவாக இருக்கும்.
அயானிக்: பாசிடிவ் அயான்கள், தலைமுடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. தலைமுடி ஈரமாக இருக்கும்போது அதில் இருக்கும் தண்ணீர் துளிகளில் பாசிடிவ் அயான்கள் அதிகமாக இருக்கும். இந்த அயானிக் ஹேர் டிரையரை பயன்படுத்தும்போது அதில் உருவாகும் நெகட்டிவ் அயான்கள், தலைமுடியில் இருக்கும் பாசிட்டிவ் அயான்களைச் சமன் செய்யும். இதன் மூலம் அதிக வெப்பத்திற்கு உட்படாமல் விரைவாகத் தலைமுடி உலரும். ஹேர் டிரையர்கள் வாங்கும்போது, குறைந்த வெப்பம் கொண்ட காற்றை வெளியிடுபவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.
குளிர்ந்த காற்றை வெளியிடும் ஹேர் டிரையர்கள், தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்காது. இவற்றை பயன்படுத்தும்போது தலைமுடி வறட்சி அடையாது. தலைமுடியின் தன்மையைப் பொறுத்தும் ஹேர் டிரையரைத் தேர்வு செய்வது அவசியம். அடர்ந்த கூந்தல் உள்ளவர்களுக்கு அதிக வாட்டேஜ் கொண்ட ஹேர் டிரையர் மற்றும் டுவர்மலின் ஹேர் டிரையர் ஏற்றதாக இருக்கும். மெலிதான கூந்தல் உள்ளவர்களுக்கு செராமிக் ஹேர் டிரையர்களும், சுருண்ட தலைமுடி கொண்டவர்களுக்கு 'டிப்யூசர்' அம்சம் கொண்ட அயானிக் ஹேர் டிரையர்களும் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும்.
- வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் நல்லது.
முகத்தை அழகுப்படுத்த நாம் நிறைய பேசியல் செய்கிறோம். அப்படி பேசியல் செய்யும் போது ஐஸ் கட்டிகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது பல பேருக்குத் தெரியாது. பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வீட்டில் பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றும், எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
1. முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.
2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மேலும் எந்த பேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும்.
மறக்கக்கூடாதவை
1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.
2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.
3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.
- புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன.
- இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின
பாரம்பரிய ஆடைகளில் புடவைக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பட்டு, காட்டன், ஷிபான் என பல ரகங்கள் உள்ளன. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது
பண்டைய காலத்தில் உடல் முழுவதும் சுற்ற அணியப்படும் ஓர் ஆடையாகத்தான் புடவை இருந்தது.
புடவை அணிவதற்குகென்று எந்தவிதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்பு சங்ககால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர்.
அந்த காலத்தில் பெண்கள் தொப்புள் தெரியும் படிதான் புடவையை அணிந்தார்கள். பிறகு அவ்வாறு அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னரே தற்போது உடுத்தும் முறை தோன்றியது,. அந்த காலத்தில் தைக்கப்படாத ஆடைகள் அணிபவர்கள் சிறந்தவர்கள் எனும் நியதி இருந்தது. அதன் காரணமாகவே விழா, கோவில் திருவிழக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் புடவை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.
முகலாயர்களின் வருகைக்கு பிறகே புடவையில் கற்கள், ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இடுப்பை மறைத்தபடி நீண்ட ரவிக்கை அணிந்து அதன்மேல் புடவை உடுத்த ஆரம்பித்தார்கள். இந்த முறைக்கு நிவி ஸ்டைல் என்று பெயர்.
ஆரம்ப காலத்தில் பட்டுப்புடவைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர்.
நாம் வீர மங்கைகளாக கருதும் ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் பாரம்பரிய உடைகளாக புடவையை அணிந்துதான் போரிட்டனர்.
தென்னிந்தியாவில் புடவைகள் பெண்களின் பிரதான ஆடையாக இருந்தாலும் இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின.
ஆரம்பத்தில் புடவை ஒரு நிறத்திலும், ரவிக்கை வேறு நிறத்திலும் அணிந்தனர். காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி இப்போது பல டிசைன்களில் அணிந்து வருவதை பார்க்கிறோம்.
புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல ரகங்கள் உண்டு.






