என் மலர்
சமையல்
- சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சிவப்பரிசியில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி - 5 டேபிள்ஸ்பூன்,
பால் - ஒரு லிட்டர்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),
சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை:
சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.
இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
- தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
- வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெந்தயக்கீரை- ஒரு கப்,
வெங்காயம் - 1 பெரியது,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் ரெடி.
- குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சோள மாவு - தேவையான அளவு
முட்டை - 1
எண்ணெய் - பொரிக்க
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுளாக(cube shape) வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய உருளைக்கிழங்கை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
5 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் சோள மாவை போட்டு அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து போட்டு நன்றாக குலுக்கவும். இப்போது சோளமாவு முழுவதும் உருளைக்கிழங்கில் ஒட்டியிருக்கும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு பாப்கார்ன் ரெடி.
- வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பாதுகாக்கும்.
- இன்று வெள்ளரிக்காய் மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரி - 2
மிளகு - அரை டீஸ்பூன்
புதினா - சிறிது
உப்பு - சிறிதளவு
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
மோர் - தேவையான அளவு
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், மோர், புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த ஜூஸ் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.
இப்போது சூப்பரான குளுகுளு வெள்ளரிக்காய் மோர் ரெடி.
- மக்கானா என்பது தாமரை விதைகள்.
- மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம்.
மக்கானா என்பது தாமரை விதைகள். இந்த விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் மக்கானா கிரேவி சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சாப்பாத்தி அல்லது புல்கா செய்வதாக இருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக மக்கானா கிரேவி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
மக்கானா/தாமரை விதைகள் - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 5
வரமிளகாய் - 2
மிளகு - 1 /4 டீஸ்பூன்
சோம்பு - 1 /2 டீஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் முந்திரி, வரமிளகாய், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மக்கானாவைப் போட்டு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதில் 3/4 கப் நீரை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குறைந்தது 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அதில் வறுத்த மக்கானாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா கிரேவி தயார்.
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - சுவைக்கு
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - டீஸ்பூன்
செய்முறை :
புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும்.
மிக்சி ஜாரில் வதக்கிய கொத்தமல்லி, புதினாவை போட்டு அதனுடன் வேர்க்கடலை, தேங்காய் துருவல், ப.மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறுங்கள்.
அவ்வளவுதான் வேர்க்கடலை புதினா சட்னி தயார்.
இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
- சப்ஜி வட மாநிலங்களின் உணவு வகையாகும்.
- இன்று வெங்காய சப்ஜி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 5
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 துண்டு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு -1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ
செய்முறை :
* கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சின்ன வெங்காயம் (தோல் உரித்து), இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
* பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
* நன்கு வதங்கியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பிரட்டி வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே சுருங்க வதங்கி சுண்ட வேண்டும்.
* 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
* நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை இருந்து இறக்கி பரிமாறவும்.
* அவ்வளவுதான் ஆனியன் சப்ஜி ரெசிபி..!
- வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சாம்பார், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவல் - கால் கப்
ப.மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மஞ்சள் தூள் சேர்த்த பின்னர் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். வாழைக்காய் வேக அதிக நேரம் ஆகாது.
* வாழைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயை போட்டு 2 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைத்த இறக்கி பரிமாறவும்.
* இப்போது சூப்பரான வாழைக்காய் வறுவல் ரெடி.
- தென் மாவட்டங்களில் மட்டன் உப்புகண்டம் மிகவும் பிரபலம்.
- பழைய சோறு, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி - 1 கிலோ
பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 15
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு சிறிதளவு தான் போட வேண்டும். ஏனெனில் மட்டன் காயும் போது சுருங்கும். அதனால் உப்பு அதிகரித்து விடக்கூடாது.
இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டனில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும்.
இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை 1 வாரம் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.
- கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
- இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்:
கம்பு - அரை கப்,
கேரட் - 2,
பீன்ஸ் - 50 கிராம்,
காலிஃப்ளவர் - ஒன்று சிறியது,
பட்டாணி - கால் கப்,
பட்டை - 2,
ஏலக்காய் - 4,
கிராம்பு - 1,
பிரியாணி இலை - 1,
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
கடுகு - அரை ஸ்பூன்,
மிளகு - அரை ஸ்பூன்,
சீரகம் - அரை ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்,
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை பழம் - பாதி அளவு,
உப்பு - 2 ஸ்பூன்.
செய்முறை:
கேரட், பீன்ஸ், கொத்தமல்லி தழை, காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பினை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.
பூண்டை நசுக்கி கொள்ளவும்.
ஊறவைத்த கம்பை குக்கரில் போட்டு அதோடு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, இரண்டு கப் தண்ணீர், மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்து கொதிக்க விடவும்.
கஞ்சி நன்றாக கொதித்தவுடன் இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.
கம்பு வெஜிடபிள் கஞ்சி பயன்கள்: கம்பு உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்கிறது. கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வர மிகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். தூக்கமின்மை, உடல் சோர்வு உடையவர்கள் இதனை சாப்பிட புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகள் முடிகள் பெரியவர்கள் வரை இந்த கம்பு வெஜிடேபிள் கஞ்சியை அடிக்கடி குடித்து வர உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சிக்கனை பல்வேறு ருசியான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 50 கிராம்
முட்டை - 2
வெங்காயத்தாள் - 20 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பிரெட் தூள் - 20 கிராம் + தேவையான அளவு
சோள மாவு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை
பிளாஸ்டிக் கவரை கேன் வடிவில் (Piping bag) செய்து கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.
மிக்சிஜாரில் சிக்கனை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், பிரெட் தூள் 20 கிராம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கன் விழுதை (Piping bag) கேன் கவரில் போடவும்.
ஒரு தட்டில் பட்டர் பேப்பரை விரித்து அதன் மேல் அரைத்த விழுதை டோநட்ஸ் வடிவில் செய்யவும். செய்ததை பிரிட்ஜில் 2 மணிநேரம் வைக்கவும். பிரிட்ஜில் வைத்த உடன் அவை சற்று கெட்டியாகி இருக்கும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து டோநட்ஸை எடுத்து சோள மாவில் நன்றாக பிரட்டி பின் முட்டையில் முக்கி மீண்டும் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் டோநட்ஸ் ரெடி.
- கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
- கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.






