என் மலர்
பொது மருத்துவம்
- இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம்.
- ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது.
நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ மருத்துவர் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.
இளநீரில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இளநீரை எல்லோரும் 'நேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிவரேஜ்' என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதில் அதிகமான அளவு சோடியம், பொட்டாசியம், சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம். ஒரு டம்ளர் இளநீர் நமக்கு 45 கலோரிகள் கொடுக்கிறது. பாட்டிலில் அல்லது டின்களில் வரும் குளிர்பானங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது. ஆனால் பாட்டில் குளிர்பானங்களில் ஒரு டம்ளரில் 30 கிராம் சர்க்கரை இருக்கிறது.
இதில் நார்ச்சத்து இல்லாதது ஒரு சிறிய குறையாக கருதப்படுகிறது. இளநீரில் உள்ள எல்-ஆர்ஜினின், வைட்டமின்-சி, இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.
இளநீரில் நிறைய நன்மைகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் இளநீர் பருகலாம். அதற்கு மேல் குடித்தால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சுக்கை நீரிட்டுக் குழைத்து நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும்.
- சுக்குப் பொடியோடு பூண்டுச்சாறு சேர்த்து சாப்பிட கொடுமையான வயிற்றுநோய் குணமாகும்.
நாம் அடிக்கடி பயன்படுத்துகிற சுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த சுக்கு எத்தனை மருத்துவ குணங்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சுக்கிலுள்ள 'ஜிஞ்சிரால்', 'ஷோகோல்' ஆகிய வேதிப்பொருட்கள் லேசான மயக்கம் தருவதாகவும், வீக்கத்தைக் கரைக்கக் கூடியதாகவும், காய்ச்சலைத் தணிக்கக் கூடியதாகவும், வலி நிவாரணியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லதாகவும், ஈரலை பாதுகாக்கக் கூடியதாகவும் இருப்பதால் சுக்கு உணவிலும் மருந்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் பாதுகாக்கும் மருத்துவ குணங்களும் சுக்குக்கு உண்டு. சுக்கிலுள்ள மருத்துவ வேதிப்பொருட்கள் ரத்த வட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைத்து ஒற்றைத் தலைவலியை தடுத்து நிறுத்தக்கூடியதாக அமைகிறது.
சுக்கின் மீது சுண்ணாம்புக் களிம்பை நன்றாகப் பூசி வெயிலில் உலரவிட்டு உலர்ந்ததும், மேல் தோலைச் சுரண்டி நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும்.
மதிய உணவோடு எவ்வகையிலேனும் சுக்கை சேர்த்துக் கொள்வதால் வாயுக் கோளாறுகள் விலகி ஆரோக்கியத்துக்கு அடி கோலுகின்றது.
இன்றைக்கும் அரிசி மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் 'அதிரசம்' எனும் தின்பண்டத்தில் சிறிது சுக்குப்பொடி சேர்ப்பர். சுவையான அதிரசம் சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் சுகம் கெடாவண்ணம் சுக்கு சேர்க்கப்படுவது மட்டுமின்றி உணவில் மருந்தாகவும் அது செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
உடலில் பித்த மேலீட்டால் குமட்டல், வாந்தி, தலைசுற்றல் ஏற்படும் போது சுக்குத் தூளை வெருகடி (சுட்டு விரல், நடு விரல், கட்ைட விரல் ஆகியவற்றைச் சேர்த்து எடுக்கும் அளவு) அளவு எடுத்துத் தேன் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட விரைவில் குணம் ஏற்படும்.
சுக்கை நீரிட்டுக் குழைத்து நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும். இதையே தொண்டை மீது பூசினால் தொண்டைக் கர கரப்பு, ெதாண்டைக்கட்டு, வலி ஆகியன குறைந்து விடும். சுக்குக் களிம்பை நெற்றிப் புருவங்களின் மேல் பூசி வைக்க கிட்டப் பார்வைக் கோளாறு குணமாகும்.
வெருகடி சுக்குப்பொடியை போதிய வெல்லம் சேர்த்து நீரிலிட்டு காபி போல காய்ச்சி வடிகட்டி பால் சேர்த்துக் குடித்துவர அஜீரணம் அகலும். அதிசாரம் என்கிற நீர்க்கழிச்சல் அடங்கும். சுக்குத்தூள் வெருகடி அளவு எடுத்து போதிய அளவு பசு நெய்யும் வெல்லமும் சேர்த்துக் குழைத்து அந்தி, சந்தி என இருவேளை சாப்பிட்டுவர நெஞ்சகச் சளி கரையும். இருமல் குணமாகும். சுக்குத் தூளோடு எலுமிச்சைச்சாறு இரண்டு பங்கும் சோற்றுப்பு சிறிதளவும் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட வயிற்று உப்புசம், மந்தம் ஆகியன போகும்.
சுக்குத் தூளோடு சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் சாதாரண வயிற்று வலியும், விட்டுவிட்டு கடுக்கும் வயிற்று வலியும் உடனே குணமாகும். பத்து கிராம் சுக்குத்தூளோடு 5 மி.லி. விளக்கெண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைத்து தினம் இரவு படுக்கப்போகும் முன் ஒரு மண்டலம் உண்டுவர மூட்டுவலிகள், மூட்டு வீக்கம் ஆகியன குணமாகும்.
வெருகடி அளவு சுக்குப் பொடியோடு சிறிது தேனும் எலுமிச்சைச்சாறும் சேர்த்துக் குழைத்து அன்றாடம் காலையில் உண்டுவர உடல் பலம் பெறும். மேலும் இதுவே உடல் வியர்வையைப் பெருக்கிக் காய்ச்சலைத் தணிப்பதற்கும் உடல் அழகு கூடுவதற்கும் பயன்தரும்.
சுக்குப் பொடியோடு பூண்டுச்சாறு சேர்த்து சாப்பிட கொடுமையான வயிற்றுநோய் குணமாகும். சுக்குத் துண்டை பல்வலி வந்தபோது வாயிலிட்டு அடக்கி வைத்திருக்க பல் வலி தணியும். சுக்குத் தூளோடு பத்துப் பதினைந்து துளசி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைத்து சுவைக்காகத் தேன் சேர்த்துக் குடித்துவர ஆஸ்துமா குணமாகும். சுக்குப் பொடியோடு ஐந்தாறு பூண்டுப் பற்கள் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனின்று வரும் ஆவியை சுவாசிப்பதால் ஆஸ்துமா நோயின் வேதனை தணியும்.
சுக்குப்பொடி வெருகடி அளவோடு துளசிச்சாறு ஒரு தேக்கரண்டியும் வெற்றிலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டுவர வறட்டு இருமல், நெஞ்சுச் சளியோடு கூடிய இருமல் ஆகியன அனைத்தும் விலகிப் போகும். மஞ்சள் காமாலை வந்தபோது வெருகடி அளவு சுக்குத் தூளோடு புதிதாகப் பிழிந்த எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி, புதினா சாறு ஒரு தேக்கரண்டி, சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வர ஈரல் பலம் பெறுவதோடு மஞ்சள் காமாலையும் குணமாகும்.
சுக்குத்தூளோடு சம அளவு புதினா சாறும் சிறிதளவு உப்பும் சேர்த்து சாப்பிட்டு வர கக்குவான் இருமல் குணமாகும்.
சுக்குத் தீநீரை இரவு படுக்கப் போகுமுன் அன்றாடம் குடித்துவர வாத நோய்களை தடுக்கும். உதறுவாதம், முகவாதம், பாரிசவாதம், பக்கவாதம் எனப்படுகின்ற அனைத்து வாதக் கோளாறுகளும் விலகிப் போகும்.
"சுக்கு வாந்தியை நிறுத்தக் கூடியது... வாயுவைத் தணிக்கக் கூடியது... கொழுப்புச் சத்தைக் குறைக்கக்கூடியது... வீக்கத் தைக் கரைக்கக் கூடியது... கடுப்பை நீக்கக் கூடியது... நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளியேற்றவல்லது... ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது."
- மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.
- நமது வாழ்க்கை முறை மூலம் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு திடீரென ஏற்படாது. பெரும்பாலும் மக்கள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்படும் போது அதை கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இப்படி மாரடைப்பு வருவதற்கு முன் உணர்த்தும் அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும். அதன் சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும். எனவே ஒவ்வொருவரும் மாரடைப்பிற்கான அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.
குடும்பத்தில் ஒருவருக்கு (குறிப்பாக பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு) மாரடைப்பு வந்தால், அந்தக்குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு மாரடைப்பு வர 30 சதவிகிதம் வாய்ப்பு அதிகமாக உண்டு. மரபு வழியாக இது வரக்கூடியது என்பதால் இதை தடுக்க வழி எதுவும் இல்லை. அதே நேரத்தில் நமது வாழ்க்கை முறை மூலம் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
அவை:
1) ஆரோக்கியமான உணவுகள், போதிய உடற்பயிற்சி, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது,
2) கோபம், குரோதம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் எதுவும் இன்றி மனதையும், எண்ணங்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது,
3) சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் இருப்பது,
4) அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து பாதிப்புகள் எதுவும் இருந்தால் தொடக்க நிலையிலேயே சிகிச்சை எடுப்பது நல்லது,
5) சிலர் சமூக வலைத்தளங்களில் கூறப்படும் மருத்துவ முறைகளை சுயமாக பயன்படுத்துவதுண்டு. இது மிகவும் தவறாகும். அரசு அங்கீகாரம் பெற்ற, தகுதியான மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்துகளையும் எடுக்கக்கூடாது. இவற்றை கடைப்பிடித்து வந்தால் நீண்ட காலம் நோய் ஆபத்து இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது.
- இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
நீரிழிவு நோயால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல பிரச்சினைகள் தொடங்குகின்றன.
சீனாவின் ஷாங்காயில் உள்ள ஜியாடாங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வில் இரவில் செயற்கை வெளிப்புற ஒளிக்கும், நீரிழிவு நோய் அபாயத்திற்கும் இடையேயான உறவை அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளதாம்..
விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது உடலானது, எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.
உண்மையில், நமது உடல் கடிகாரம் தினசரி தாளத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. அதன்படி, இருட்டாக இருக்கும்போது, மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது, இதன் காரணமாக நமக்கு தூக்கம் வரும். காலையில், ஒளியுடன், சுரப்பியின் செயல்பாடு நம்மை எழுப்புகிறது. ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிப்பதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உணவைக் கவனமாக, நன்றாக மென்று சாப்பிட்டாலே இது போன்ற பிரச்னைகள் வராது.
- சாப்பிடும் முறைகளில் காட்டும் அலட்சியம் நம் உயிரையே பறிக்க வாய்ப்புள்ளது.
`எப்படி சாப்பிட வேண்டும்?', `சாப்பிடும்போது செய்யக் கூடியவை, கூடாதவை' என்பது பற்றி நிறைய கோட்பாடுகளே உள்ளன. இவை எவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் சாப்பிடும் முறைகளில் காட்டும் அலட்சியம் நம் உயிரையே பறிக்க வாய்ப்புள்ளது.
நம்மில் பேசிக்கொண்டே சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை தான் அதிகம். மேலும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், வேறு ஏதாவது வேலைகளில் கவனத்தைச் செலுத்திக் கொண்டும் சாப்பிடும் நமக்கும் ஆபத்து அருகில்தான் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, சாப்பிடும் முறைகளைப் பற்றியும், அதில் கவனக்குறைவாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
"நம்மில் பெரும்பாலானோர் செய்துகொண்டிருக்கும் தவறு பேசிக்கொண்டே சாப்பிடுவது. மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டு வெவ்வேறு வால்வுகள். உணவுப் பொருள்களை மெல்லும்போது மூச்சுக்குழல் வழியே சுவாசிப்போம். அதுவே மென்ற உணவை விழுங்கும்போது உணவுக்குழல் திறந்துகொள்ளும். அதே நேரத்தில் மூச்சுக்குழல் மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக்குழலினுள் செல்லாமல் இருக்க இயற்கையிலேயே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதுவே நாம் வாயை மூடி மெல்லாமல் பேசிக்கொண்டே உணவைச் சாப்பிடும்போது நமக்குத் தெரியாமலே வாயின் வழியே காற்று உள்ளே செல்கிறது. இப்போது மென்ற உணவை விழுங்க முயலும் அந்த வாயில் காற்றும் இருப்பதால் உணவுக்குழல், மூச்சுக்குழல் இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கின்றன. இதனால் உணவுக்குழலினுள் செல்ல வேண்டிய உணவு வழிதவறி மூச்சுக்குழலினுள் சென்று தொண்டையை அடைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உணவு தொண்டையில் அடைத்துக்கொண்டவுடன் இயற்கையாகவே ஏற்படும் இருமல் மூலம் அந்த உணவுத்துகள் வெளியில் வந்துவிடும். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்படுத்திய உணவு சரியாக மெல்லப்படாத பெரிய அளவிலானது என்றால் இருமலின்போதும் வெளியில் வராது. எனவே, நம் சுவாசம் தடைப்படும். முப்பது விநாடிகள் நமது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லவேயில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.
இதனால்தான் மூச்சுத்திணறல் வந்தவர் மயக்க நிலைக்குச் சென்றுவிடுகிறார். இந்த நிலையில் உள்ளவருக்கு முதலுதவி கொடுக்காமல்விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உணவு தொண்டையில் அடைத்துக்கொண்டு அதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது அவருக்கு அருகில் உள்ளவர் உடனே மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் மார்பிலும் கை வைத்து நன்றாக அழுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது நுரையீரலில் உள்ள காற்று வேகமாக வெளிவந்து, அடைத்துள்ள உணவுத்துகளை நீக்க வாய்ப்புள்ளது.
மருத்துவத்துறையில் ஹெய்ம்லிச் மனுவர் (Heimlich Maneuver) என்ற சிகிச்சை முறை உள்ளது. இதில், உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டவரின் கைகளை முதுகின் பின்புறமாக அழுத்திப் பிடித்து அவரின் வயிற்றில் கைவைத்து நன்றாக அழுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது தொண்டையில் அடைத்திருக்கும் உணவு வெளியில் வர வாய்ப்புள்ளது. இந்த முதலுதவி பயிற்சிகள் தற்போது பொதுமக்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
உணவைக் கவனமாக, நன்றாக மென்று சாப்பிட்டாலே இது போன்ற பிரச்னைகள் வராது. அப்படியும் நாம் சாப்பிடும் உணவு தொண்டையில் அடைப்பதைப் போன்று உணர்ந்தால் தாராளமாகத் தண்ணீர் குடிக்கலாம். மேலும், கொஞ்ச கொஞ்சமாகச் சாப்பிட வேண்டுமே தவிர ஒரேயடியாக உணவை வாயில் திணிக்கக் கூடாது. பெரும்பாலும் பேசிக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்த்தல் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகள் மீதான ஆவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
- முன்பு அசைவமாக இருந்த முட்டையை சைவ பட்டியலில் சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.
உணவை பசிக்காக சாப்பிட்டு வந்த காலம் போய், ருசிக்காக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது.
குடும்ப விழா, கோவில் விழா என எத்தனையோ விழாக்களை கொண்டாடிய நாம் இன்று உணவு திருவிழாவையும் கொண்டாடுகிறோம். அறுசுவை உணவு என்ற நிலை மாறி, ஆயிரம் சுவைகளில் உணவு தயாரித்து வயிறு புடைக்க சாப்பிடுகிறோம். இதனால் உணவு திருவிழாவும் ஒருவித பண்டிகையாக மாறிவருகிறது. இந்த மனித பிறப்பே தினமும் வகை, வகையாக சாப்பிடத்தான் என்ற சிந்தனை கொண்டவர்களும் இருக்கின்றனர்.
அசைவம்
உணவில் எத்தனை வகைகள் இருந்தாலும் சைவம், அசைவம் என்று இரண்டாக பிரித்து விடலாம். இந்த இருவகை உணவுகளும் ஆதி மனிதன் காலத்தில் இருந்தே இருக்கிறது. விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட தொடங்கியதில் இருந்தே அசைவம் இருக்கிறது.
அதை நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்ததும் அசைவ உணவு வகைகள் பிறக்க தொடங்கின. பச்சை மாமிசம், சுட்ட மாமிசம் என அசைவ உணவுகள் இரு வகையாக மாறின. பின்னர் நறுமண பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிட ஆரம்பித்ததும் அசைவ உணவு வகைகள் அதிகரிக்க தொடங்கின.
ஆவல் அதிகரிப்பு
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்தில் ஒருநாள் அல்லது அதிகபட்சம் 2 நாட்கள் அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது. பண்டிகை, திருவிழா என்றால் உறவினர்களுடன் சேர்ந்து அசைவ உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் பண்டிகை, திருவிழா என்றால் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. மற்ற நாட்களில் கோழி முட்டை தான் அசைவ உணவாக இருந்தது.
இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகள் மீதான ஆவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வாரத்தில் ஒருநாள் கட்டாயம் சிக்கன், மட்டன் சாப்பிட வேண்டும். மேலும் 2 அல்லது 3 நாட்கள் மீன் சாப்பிட வேண்டும் என்ற விருந்து வேட்கை பலரிடம் இருக்கிறது. முன்பு அசைவமாக இருந்த முட்டையை சைவ பட்டியலில் சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.
ஒருசிலர் நேரம் காலம் பார்க்காமல் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குகின்றனர். இதனால் ஊர்வன, பறப்பன, தாவி குதிப்பன உள்பட அனைத்தும் உணவாக மாறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். வெளிநாட்டினரை போன்று விதவிதமாக சாப்பிடும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அசைவ உணவுகளுக்கு பஞ்சம் வந்துவிடுமோ? என்று அஞ்சும் அளவுக்கு பலரின் அசைவ உணவு வேட்டை இருக்கிறது.
குழந்தைகள், இளைஞர்கள்
தினந்தோறும் மீன், கோழி, ஆடு, மாடு என அசைவ உணவுகளை சமைத்து போட்டாலும் சலிக்காமல் சாப்பிடுகின்றனர். அதிலும் குழந்தைகள், இளைஞர்கள் விரும்பி சாப்பிடுவது அசைவ உணவாக தான் இருக்கிறது. பால் பற்கள் முளைத்த குழந்தைக்கு கூட பொரித்த சிக்கன்-65 துண்டுகளை கொடுக்கின்றனர்.
எனவே அசைவ பிரியர்களை வாடிக்கையாளர்களாக வளைத்து போடுவதற்காக பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவு வகைகளுடன் மெனு கார்டு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் மதியம் பல ஓட்டல்களின் முன்பு அறிவிப்பு பலகையில் அன்றைய அசைவ உணவு வகைகளை எழுதி வைக்கின்றனர்.
அதை பார்த்து ஓட்டல்களுக்கு படையெடுக்கும் அசைவ பிரியர்களும் உள்ளனர். ஓட்டல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறிய உணவகங்கள், சாலையோர உணவகங்களிலும் பலவித அசைவ உணவுகளை தயாரித்து அசத்துகின்றனர்.
ஆட்டின் பாகங்கள் அனைத்தும் உணவு
அசைவ உணவில் ஆட்டு இறைச்சிக்கு நிகரான சுவையில் எதுவுமே இல்லை என்பது பெரும்பாலான அசைவ பிரியர்களின் கூற்றாக இருக்கிறது. இதனால் ஆட்டு இறைச்சி கடைகளில் குறைவில்லாத கூட்டம் காணப்படுகிறது. ஆட்டு இறைச்சியின் விலை கிலோ ரூ.1,000 ஆக உள்ளது. ஆட்டின் இறைச்சி மட்டுமின்றி ஈரல், நுரையீரல், மூளை, குடல், கால்கள், தலை உள்பட (தோல், புழுக்கை தவிர) அனைத்து பாகங்களும் உணவாகி விடுகிறது. ஆட்டின் பாகங்களை விதவிதமாக சமைத்து சப்பை கொட்டி சாப்பிடுகிறோம்.
ஒரே ஓட்டலில் அசைவம்-சைவம்
முன்பெல்லாம் சைவம், அசைவத்துக்கு தனித்தனியாக ஓட்டல்கள் இருந்தன. ஏதேனும் ஓரிடத்தில் தான் அசைவம், சைவத்துக்கு ஒரே ஓட்டல் இருக்கும். அங்கும் சைவம், அசைவ உணவுகளை சாப்பிட தனித்தனி இடவசதி இருந்தன. இதனால் சைவ, அசைவ ஓட்டல்களை தேடிப்பிடித்து மக்கள் உணவு வகைகளை சாப்பிட்டனர். ஒருசில ஓட்டல்களின் பெயரை கூறியதும் அது சைவமா? அல்லது அசைவமா? என்று கூறிவிடும் வகையில் இருந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகளை சாப்பிடுவோர் அதிகரித்து விட்டதால், சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவுகளும் ஒரே ஓட்டலில் விற்கப்படுகின்றன. சைவ ஓட்டல், அசைவ ஓட்டல் என்ற நிலைமாறி சைவம்-அசைவம் ஓட்டல் என்று மாறிவருகிறது.
அபாயம்
சந்தை, மார்க்கெட், கடைவீதிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அசைவ உணவு வாசனை மூக்கை துளைக்கிறது. திண்டுக்கல் உள்பட ஒருசில ஊர்களில் காலை 7 மணிக்கே பிரியாணி விற்கும் அளவுக்கு அசைவ பிரியர்கள் அதிகரித்து விட்டனர்.
அதிலும் ஓட்டல்கள், உணவகங்கள், சாலையோர உணவகங்களில் கோழி இறைச்சி, மீன்களை பொரித்து விற்கின்றனர். அதை சாப்பிடுவதற்கு தனியாக அசைவ பிரியர்கள் கூட்டமே இருக்கிறது. மேலும் மது குடிப்பவர்களின் பிடித்த உணவும் பொரித்த இறைச்சி தான்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெட்டு, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் இருப்பதை பலரும் மறந்துவிட்டனர்.
நோய்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை வரைமுறை இல்லாமல் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடுகிறது. இதனால் உடல்பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், பித்தப்பை கல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
அதிலும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் வாலிப பருவம் வரும்போது பலவித உடல் பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதன்மூலம் நோயாளிகளும், மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதற்கு அலட்சிய போக்கே காரணம் ஆகும்.
நமது உடலுக்கு ஏற்ற சத்தான உணவுகளை சாப்பிடுவதே ஆரோக்கியத்தை தரும். எனவே உணவில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த உலகில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகி, நீண்டகாலம் நோய்நொடியின்றி வாழ அசைவ உணவுகளை குறைப்போம். வாழ்வில் வளம்பெறுவோம்.
அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை
அசைவ உணவு பற்றி ஒய்வுபெற்ற நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், அசைவத்தில் புரோட்டீன், பி-12, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. எனினும் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். அதிலும் இதய கோளாறு உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் அவற்றை சாப்பிடலாம். அதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய நோய் வந்துவிடும். இதுதவிர செரிமான பிரச்சினை ஏற்பட்டு உடல் உபாதைகளை உண்டாக்கும். அதனால் 50 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இதய நோயாளிகள் முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடாமல், புரோட்டீன் நிறைந்த வெள்ளைக்கருவை சாப்பிடலாம். இதுதவிர ஐஸ்கிரீம், பால் பொருட்களை சாப்பிடாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
அசைவ உணவுகளை தவிர்க்கும் அதேநேரத்தில் புரோட்டீன் நிறைந்த சோயாபீன்ஸ், பயறு வகைகள், பாலாடை கட்டி, காளான் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். அதேபோல் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதிலும் எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை சாப்பிடுவதை கைவிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது, என்றார்.
சிக்கன்-65 கடைகளில் அலைமோதும் கூட்டம்
அசைவ பிரியர்களின் நாவை அடிமையாக்கும் வகையில் சிக்கன்-65 கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் கூட சிக்கன்-65 கடைகள் உருவாகிவிட்டன. நாவை நடனமாட வைக்கும் ருசி, கண்களை பறிக்கும் நிறத்தில் கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுத்த சிக்கன்-65 துண்டுகளை சாப்பிடுவதற்கு மாலை நேரங்களில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் எண்ணெயில் பொரித்த சிக்கன்-65 வகைகளை வாங்கி சுவைத்து, வயிற்றை நிரப்பும் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
திருமண வீடுகளில் அசைவம்
திருமண விழாவில் மணமக்கள் கழுத்தில் அணிவது முதல் மணமேடை அலங்காரம் வரை அனைத்திலும் பூக்கள் முக்கிய இடம் வகிக்கும். மணமகள் மட்டுமின்றி திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவரும் கூந்தலில் சற்று கூடுதலாகவே பூக்களை சூடிஇருப்பார்கள். திரும்பிய திசையெல்லாம் பூக்கள் காட்சி அளிப்பதே திருமண விழாவின் சிறப்பு. இதனால் திருமண வீடுகளில் 3 நாட்கள் பூ வாசனை வீசும்.
இதற்கடுத்து திருமண விழாவில் அறுசுவை உணவு விருந்து மணம் வீசும். இந்த அறுசுவை விருந்தில் உணவு சாப்பிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அசைவ உணவு பழக்கம் திருமண வீடுகளையும் விட்டுவைக்கவில்லை. சமீபகாலமாக திருமண வீடுகளில் கூட அறுசுவை உணவுக்கு பதிலாக அசைவ விருந்து அளிக்கப்படுகிறது.
சிக்கன் பிரியாணி, கறிக்குழம்பு சாதம், சிக்கன் கூட்டு, சிக்கன்-65 என திருமண விருந்தில் அசைவ வாசனை ஆட்களை அசைத்து விடுகிறது. இதை உற்றார், உறவினர்கள் குடும்பத்துடன் வந்து விளாசுகின்றனர். ஆரோக்கியமான அறுசுவை விருந்து, அசைவ விருந்தாக மாறி வருகிறது. இந்த அசைவ விருந்து பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பூ வாசனை, அறுசுவை விருந்து மணம் மறைந்து அசைவ உணவின் வாசனை தான் வீசுகிறது. திருமண விழாவில் அனைத்து வயதினரும் சாப்பிடுவார்கள் என்பதால் முன்னோர்கள் சைவ விருந்து அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் அதிகரித்து வரும் இந்த காலத்தில் அசைவ விருந்து அளிப்பது நோயாளிகளை சங்கடப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. எனவே திருமண விழாவுக்கு வரும் அனைவரும் ஆரோக்கியமாக வாழ அறுசுவையுடன் சைவ விருந்து அளிப்பதை அனைவரும் பின்பற்றலாமே?
- உடல் எடையைக் குறைக்க உதவும்.
- வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் விதவிதமானவை. அவற்றில், எப்போதும் முதல் இடம் முளைகட்டிய பயறுகளுக்கே! விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இது. சாதாரணப் பயறுகளைவிட இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.
ஆரோக்கிய விரும்பிகள் இவற்றைத் தேடிச் சென்று வாங்குகிறார்கள். `சாதாரண பயறுகளைவிட முளைவிட்ட பயறுகள் அப்படி என்ன ஸ்பெஷல்?' இந்த ஒற்றைக் கேள்வியைக் கேட்டால், அதிலிருக்கும் சத்துக்கள், கிடைக்கும் பலன்கள், அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
பலன்கள்:
* முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
* வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும்.
* இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
* அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன..
* முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்..
* இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.
* அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.
* இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா' என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது. உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது.
முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை (Sprouted grains) வேக வைத்து சாப்பிடலாம் .
சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் (Cereals) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
முளைகட்டிய தானியங்களை நேரடியாக சாப்பிடுவதென்றால் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இது செரிமானம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் வயிறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், ஜீரணம் ஆகாமல் அடிக்கடி ஏப்பம் வருதல், சில நேரங்களில் வயிறு இரைந்து பேதி செல்லல் போன்றவைகள் ஏற்படலாம். அதனால் முளைகட்டிய தானியங்களை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் ஒருவர் 50 கிராம் அளவு வரை சாப்பிடலாம்.குறிப்பாக முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட காலை நேரம் உகந்தது. மாலை வேளையிலும் தேநீர் சாப்பிடும் நேரத்தில் உட்கொள்ளலாம்.
- முதுகுவலியை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
- இயல்பான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம்.
ஐ.டி.துறையில் வேலை செய்யும் பலர், இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதுடன் முதுகுவலியையும் உணர்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது. மேலும் இயல்பான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம். இதோ அதற்கான சில வழிகாட்டுதல்கள்...
பால் பொருட்கள் : கால்சியம் குறைபாடு எலும்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உயிரணுக்களுக்கு எரிபொருளாக உதவுவதோடு, முதுகுவலிக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படும். எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை, அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.
புரதம் நிறைந்த உணவு : தினை, உளுத்தம் பருப்பு, பீன்ஸ், எள் போன்றவை புரதச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. அவை முதுகுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை சரிசெய்து விரைவாக குணமடைய உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.
பழங்கள் : புளூபெர்ரி, அன்னாசி மற்றும் திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் அவை வலி நிவாரணியாகவும், முதுகுவலியை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் போலவே, அளவோடு சாப்பிடும்போது பலன் அதிகபட்சமாக இருக்கும்.
மூலிகைகள் : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இலவங்கப்பட்டை, துளசி போன்றவற்றிலும் உள்ளது. நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களான மஞ்சள் போன்றவை வலியைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம்.
பச்சை காய்கறிகள் : வைட்டமின்-சி மற்றும் பி-12 நிறைந்த சில காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, புரோக்கோலி போன்றவற்றால் முதுகெலும்பு வலுப்பெறுகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவும்.
- நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
- உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்குமாம். பெருமாலான நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு. நீரிழிவு நோயினால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாததே என்று சொல்லலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்க காரணம், நீரிழிவு நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களை அடைய முடிவதில்லை. இதனால் உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.
நாள்பட்ட சர்க்கரை நோய் ஆக்ஸீஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை குறைக்கலாம். இதன் விளைவாக வாஸ்குலர் குறைபாடு இது முடி உதிர்தல், கூந்தல் உடைவு, முடி உதிர்தல் உண்டாக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, பாலிகுலைட்டிஸ் எனப்படும் பாக்டீரியா தோல்தொற்று ஏற்பட்டு முடி உதிர்வை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல் தலையில் மட்டுமின்றி கை, கால்கள் மற்றும் உடம்பின் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம்.
நீரிழிவு நோய் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும், முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
மோசமான இரத்த ஓட்டம் முடி உதிர்தலுக்கு பங்களித்தால், நீரிழிவு நோயை நிர்வகித்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி மீண்டும் வளரவும் உதவும்.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினாலும் கூடுதலாக தைராய்டு நோய் இருக்கும் நிலையிலும் முடி உதிரும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு செல்கள் மயிர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தி அலோபீசியா ஏரியேட்டா (திட்டு திட்டாக முடி விழுதல்) என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சை
உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அளவாக இருந்தால் மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் தடையில்லாமல் பெற முடிகிறது.
உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும். இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இது ஏழைகளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
- இப்பழத்தில் கொட்டைப்பகுதியை சுற்றி சதைப்பகுதி இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்தது.
https://www.maalaimalar.com/healthஆப்பிள், திராட்சையை விட இலந்தை பழம் அதிக சத்துக்களை உடையது. அதிக ஊட்டச்சத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியை சுற்றி சதைப்பகுதி இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்தது.
இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டிற்கு முன்பே இருந்துள்ளது. இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது. ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கமும் வரும்.
இதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகின்றது. பஸ்சில் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தை பழம் சாப்பிடலாம். உடல் வலியும் நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது.
நமக்கு பல வழிகளிலும் நன்மை தரும் இந்த பழத்தினை அளவுக்கு மீறியும் உண்ணக் கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு மாறுபடும். பழம் விலை குறைவு என்று அலட்சியம் காட்டாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள். சந்தோஷமாக இருங்கள்...!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
- கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.
இறந்த நபர், மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமானால், கண் தானத்தைத் தவிர சிறந்த வழி வேறு ஏது?
கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
கண்தான வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும்வரை இறந்தவரின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும்.
இறந்தவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் கண்களை கூட தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கண்களையும் தானம் செய்யலாம்.
புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது. எனவே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.
- வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம்.
- வாழைப்பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது.
பழங்களை தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது, என்கிறார்கள். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும்.
ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசியம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம்.
இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க்கரை உடனே அதிகரிக்கும்.
கொய்யா பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு. சப்போட்டா பழத்தோலில் உடலில் காயங்களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப்பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குணமும் இவற்றுக்கு உண்டு.
நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்துவரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.
வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டுபண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப்படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப்பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம்.
இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகுந்துள்ளன. எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக்காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட்சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக்கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்துவிடும். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






