என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • சில உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலமே தீர்வு காணலாம்.
    • கீழ்கண்ட தகவல்கள் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

    உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சலும் வராமல் இருக்கும்.

    சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத்தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப் பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவும்.

    ரத்த அழுத்தம் குறைய செம்பருத்தி பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.

    பித்தம், தலைசுற்றல் ஒரு பிடி கொத்தமல்லிதழையை அரைத்துச் சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட, தலைசுற்றல் போகும்.

    தலையில் புழு வெட்டு, வழுக்கை பாதிப்பால் முடி வளர்வது பாதிக்கப்படும். இதற்கு ஒரு கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கி போடவும். அதை நன்றாக காய்ச்சவும். இறக்கி வைத்து ஒரு மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்து சேர்த்து வைக்கவும். பூச்சி வெட்டு இருக்கும் இடத்தில் இரண்டு சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

    சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க நாவல் கொட்டை பொடி, வெந்தயப் பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்து கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் டம்ளர் குடிக்கவும்.

    வறட்டு இருமல், சூடு குறைய அதிமதுரம் பொடியை வாங்கி, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பொடி போட்டு கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.

    வாயு, வயிற்றுவலி நீங்க ஒரு ஸ்பூன் ஜீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விடவும். நன்றாக கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும்.

    கர்ப்பப் பையில் நோய் வராமல் தடுக்க துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.

    நோய் எதிர்ப்பு சக்திக்கு தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்த தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் சக்தி இதில் உண்டு.

    • இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர்.
    • இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

    இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 நீரிழிவு நோய் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய். இவை இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் டைப்-1 மற்றும் டைப்-2 இரண்டுமே ஒரே மாதிரியானவை என்று நினைத்து குழப்பமடைகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையே பல வித்தியாசம் உள்ளது. இரண்டுமே நாள்பட்ட நோய்கள் மற்றும் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் மற்றும் அவை உடலை பாதிக்கும் விதம் என ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றன.

    முதலாவது தோன்றும் நீரிழிவு நோயை டைப்-1 என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தோன்றுவதால், இது சிறார் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து விடுவதால் இவர்களுக்கு இன்சுலின் மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் 10 சதவிகிதம் பேர் டைப் -1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வயது வந்தவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது டைப்-1 யை காட்டிலும் சற்று வயது அதிகமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை நாம் டைப்-2 நீரிழிவு நோய் என்று சொல்கிறோம். இது இன்சுலின் போதுமான அளவு சுரக்காததாலும் இன்சுலின் செயலாற்ற எதிர்வினை நிலை இருப்பதாலும் இது ஏற்படுகின்றது. மொத்த நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டைப்-1 நீரிழிவு நோயை விட டைப்-2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

    செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

    செர்ரி பழம் அனைவருக்கும் பிடித்தமானது. புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். ஆழமான சிவப்பு நிறத்தை உடையது. செர்ரிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை இழப்பிற்கு ஏற்றது.

    மேலும் வைட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவைகள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

    செர்ரிகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் காணப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்கு ஏற்படும் அன்றாட சேதத்தை சமாளிக்க உதவுகிறது. மேலும் செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

    செர்ரி பழங்களை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். செர்ரி பழத்தில் வைட்டமின் 'ஈ' நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண விரும்புபவர்கள் செர்ரி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

    தலைமுடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், செர்ரி பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

    • ஒரு மாதத்திற்கு சர்க்கரையை அறவே நிறுத்திப்பாருங்கள்.
    • சர்க்கரை அதிக கலோரிகளை கொண்டது.

    நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் சர்க்கரை பல்வேறு விதங்களில் கலந்துள்ளது. இனிப்பு பொருட்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், குளிர் பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் என சர்க்கரையின் பங்களிப்பு தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. சர்க்கரை உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

    இதுபற்றி டெல்லியை சேர்ந்த பிரபல மருத்துவர் அமிரிதா கோஷ் கூறுகையில், ''உண்ணும் உணவில் மறைமுகமாக கலந்திருக்கும் சர்க்கரைகள் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்கின்றன. உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்பட பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையை குறைத்தால் உடல் நலனில் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டாகும்.

    ஒரு மாதத்திற்கு சர்க்கரையை அறவே நிறுத்திப்பாருங்கள். உணவுப்பொருட்களில் எந்த வகையிலும் சர்க்கரை கலந்திருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒரு மாதம் உடலில் சர்க்கரையே சேராமல் இருந்தால் என்னவாகும் என்கிறீர்களா? உணவில் இருந்து சர்க்கரையை குறைக்கும் போது ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று உடல் எடை இழப்பு.

    ஆம்..! சர்க்கரை அதிக கலோரிகளை கொண்டது. அது தினமும் ஏதாவதொரு ரூபத்தில் உடலில் சேரும்போதும், அதன் அளவு அதிகரிக்கும்போதும் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும். சர்க்கரையை தவிர்க்கும்போது ஒட்டுமொத்தமாக குறைவான கலோரிகளையே உட்கொள்வீர்கள். அதனால் உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும்'' என்கிறார்.

    சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும், இன்சுலின் அளவை உயர்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். இதனால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

    • இவற்றின் இறக்கை முதல் இறைச்சி வரை அடர்ந்த கருப்பு நிறத்தில் காணப்படும்.
    • கடக்நாத் கோழியில் வெறும் 0.73 என்ற அளவிலேயே கொழுப்பு காணப்படுகிறது.

    நாட்டுக்கோழி இனங்களில் கடக்நாத் என்ற கருங்கோழி வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது. கடக்நாத் கோழி இறைச்சியில் அதிக அளவில் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் இருக்கின்றன.. பண்ணை தொழில் முனைவோர் கடக்நாத் கோழிகளை சிறிய முதலீட்டில் வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.

    கருங்கால் கோழிகள்

    கலிமாயி என்று அழைக்கப்படும் கருங்கோழிகள் மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவை. இதில் அடர் கருப்பு, பென்சில் கருப்பு மற்றும் மயில் கருப்பு என்று மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றின் இறக்கை முதல் இறைச்சி வரை அடர்ந்த கருப்பு நிறத்தில் காணப்படும்.

    புறக்கடை வளர்ப்பு முறையில் 50 கோழிகள் வரை எளிதாக வளர்க்கலாம். கடக்நாத் கோழிகள் அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் எந்த பருவநிலையிலும் வளரக்கூடியவை. இதில் சேவல் 2 கிலோ எடை வரையும், பெட்டை கோழிகள் 1.5 கிலோ எடை வரை வளரும். இந்த கோழிகள் 75 முதல் 90 நாட்களில் 750 கிராம் எடையை எட்டும். இவை, ஒரு ஆண்டில் சராசரியாக 60 முதல் 90 முட்டைகள் இடும். இது மற்ற நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. ஆனால், இந்த கோழி மருத்துவ குணமுள்ள இறைச்சிக்காக வளர்க்கப்படுவதால் முட்டை இடும் அளவு பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை.

    இந்த கோழிகளுக்கு முதல் மாதத்திற்கு புரதம் நிறைந்த அடர் தீவனங்களை அளிக்க வேண்டும். பொதுவாக, குருணை, கம்பு உள்ளிட்ட நாட்டுத் தீவனங்களை அளிக்கலாம். பண்ணையில் வளர்க்கும் போது 7 முதல் 14 வாரம் வரை இது போல் தீவனம் அளிக்கலாம்.

    இன்றைக்கு, ஆட்டு இறைச்சிக்கு நிகராக விலை இருக்கும் இறைச்சியில் கடக்நாத் கோழி இறைச்சியும் ஒன்றாகும். இது வடமாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.

    தென்மாநிலங்களில் இதன் இறைச்சியின் மருத்துவ குணங்களுக்காக தற்போது பரவலாக வளர்க்கப்படுகிறது. இதன் இறைச்சி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. புறக்கடை வளர்ப்பில் 50 கோழிகள் என்ற அளவில் வளர்த்தாலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.40 ஆயிரம் என்ற அளவில் வருமானம் ஈட்டலாம்.

    மருத்துவ குணங்கள்

    கடக்நாத் கோழியில் வெறும் 0.73 என்ற அளவிலேயே கொழுப்பு காணப்படுகிறது. இதனால், கடக்நாத் இறைச்சி ெகாழுப்பு அவ்வளவாக இல்லாத இறைச்சியாக அனைவருக்கும் ஏற்ற உணவாக ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் இறைச்சியில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.

    இந்த அமினோ அமிலங்கள் தசைநார்களின் வளர்ச்சிக்கும் ரத்த குழாய்களின் நீட்சிக்கும் உதவுகின்றன. இது தவிர, வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளிட்டவை உள்ளன. குறிப்பாக, வைட்டமின் ஈ ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால், இதயம் சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

    மேலும், இறைச்சியில் காணப்படும் இரும்பு சத்து ரத்தச் சோகை பாதிப்பை தடுத்து உடலின் பலவீனத்தை போக்குகிறது. மேலும், ரத்தத்தில் அதிக அளவு ஹீமோகுளோபின் உருவாகவும் துணை புரிகிறது. இதன் இறைச்சியில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. இதில், பாஸ்பரஸ் சத்து எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது. இதன் இறைச்சியில் உள்ள கால்சியமானது, மூட்டு தேய்மானம் உள்ளிட்ட எலும்பு சார்ந்த நோய்கள் வருவதை கட்டுப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு துணை புரிகிறது.

    நரம்புத்தளர்ச்சி உடையவர்கள் சிறிது காலம் கடக்நாத் கோழி இறைச்சியை உண்டால் உடலில் பலவீனம் நீங்கி அபரிமிதமான வலிமை உண்டாகும் என்று நம்பப்படுகிறது. பெண்களின் கருப்பை அழற்சி, ரத்தப்போக்கு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுவதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    • ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவிற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு.
    • கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல். ரத்தத்தில் அதிகம் இருப்பது ஆபத்தானது.

    புகை பிடித்தலையும், மது அருந்துவதையும், இன்றைய இளைய தலைமுறையினர் (பெண்கள் உட்பட) நவீன வாழ்வியல் பண்பாடாக கருதுகிறார்கள். மேலும், இளைய சமுதாயம் பார்ட்டி என்ற பெயரில் ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களை அதிகம் உட்கொள்கிறார்கள். இவை அனைத்தும் சிறுவயது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.

    ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவிற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. குறிப்பாக, கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல். ரத்தத்தில் அதிகம் இருப்பது ஆபத்தானது. இவை இருதய ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். எனவே, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, தகுந்த மாத்திரை போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும்.

    வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனங்களை ஆறுமாதத்திற்கு ஒருமுறை பரிசோதித்து பராமரிக்கின்றனர். ஆனால், ஏனோ தங்களின் உடலை வருடத்திற்கொருமுறை பரிசோதித்து கொள்ள பெரிதும் தயக்கம் கொள்கின்றனர். இந்த நிலை மாறி ஒவ்வொருவரும் நம் உடலையும் அவ்வப்போது பரிசோதித்து, வள்ளுவன் சொன்ன வழியில் உணவே மருந்தென உட்கொள்வதும், மது மற்றும் புகைப் பழக்கத்தை விடுத்தலும், உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை பராமரித்தலும் ஹார்ட் அட்டாக்கிலிருந்து விலக்கி வைக்கும்.

    நெஞ்சு வலி (மார்பின் மத்தியில் அழுத்தம்), இடது கைக்கும் தாடை பகுதிக்கும் வலி பரவுதல், அதிக வியர்வை, மயக்கம், மூச்சு திணறல் போன்றவை மாரடைப்பு வந்தவுடன் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். 30 சதவீதம் இருதய நோயாளிகளுக்கு (குறிப்பாக முதியோர், சர்க்கரை வியாதி உள்ளவர்கள்) மாரடைப்பு வரும்போது எந்த ஆரம்ப அறிகுறிகளும் தெரிவதில்லை - இதை 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்று கூறுவார்கள்.

    இருதய நோய் நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    • இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
    • டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது.

    ஒரு காலத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் அரிதானது என்பதால் நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது ஒரு பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றோ, நீரிழிவு நோயால் பாதிக்கப்படாத குடும்பத்தைக் காண்பது அரிது.

    அதிகமான இளைஞர்களும் குழந்தைகளும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கு பல ஆபத்து காரணிகள் உள்ளன அவை சுறுசுறுப்பு குறைந்த வாழ்க்கை முறை, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவை ஆகும்.

    இளம் வயதினருக்கு நீரிழிவு நோயால் பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது:

    1) உடல் எடை அதிகமாக இருத்தல். குறிப்பாக வயிற்றின் சுற்றளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருத்தல்,

    2) உடல் பருமனால் இன்சுலின் எதிர்மறை நிலை,

    3) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதித்திருத்தல்.

    இளம் வயதில் அதிக பசி எடுப்பது பொதுவானது, ஆனால் அதிக பசி எடுப்பது நீரிழிவு நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம், அப்படியாமால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

    முக்கிய அறிகுறிகள்: பாலியூரியா (அடிக்கடி சிறுநீர் கழித்தல்), பாலிடிப்ஸியா (அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்), பாலிபேஜியா (அடிக்கடி பசி எடுத்தல்), உடல் சோர்வு, மங்கலான பார்வை, காரணம் இல்லாமல் திடீர் எடை இழப்பு, கழுத்து மற்றும் இடுப்பில் தோல் கருமை நிறமாக மாறுதல், அடிக்கடி தொற்று ஏற்படுதல் மற்றும் பாதங்களில் எரிச்சல், மதமதப்பு அல்லது உணர்ச்சியின்மை.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்
    • சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை.

    நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்ச்சத்துமிக்க உணவுப் பொருட்களையும் உட்கொள்வது உடலில் எலக்ரோலைட் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும். கோடை காலத்தில் பலரும் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம் போன்ற பருவ கால பழங்களை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும். நீரிழப்பை தடுக்கும்.

    கோடை காலத்தில் பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது முக்கியம். இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

    இதுகுறித்து உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா, ''நாம் உண்ணும் உணவு சிக்கலின்றி செரிமானத்திற்கு உள்ளாக வேண்டும். கல்லீரலில் சுரக்கும் ஒரு வகை திரவம், செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் போன்றவை மூலம் உணவு உடைக்கப்படும்.

    சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை. அதனால் செரிமானம் சரியாக நடைபெறாது. அதன் காரணமாக வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகும். மாம்பழங்களில் அமிலேஸ், புரோட்டீஸ், லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் உள்ளன. அவை உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகளை உடைக்கவும், வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகின்றன.

    மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. அது குடல் இயக்கத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும். எனவே உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்'' என்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மாம்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நீரிழிவு நோயை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் மாம்பழத்தில் அதிகம் உள்ளன. அவை இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நல்ல உணவு உண்ணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை.
    • வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிக்கும் என்பது தவறான எண்ணம்.

    நீரிழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயை வேரிலிருந்தே ஒழிப்பதற்கான வழியை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை நாம் குறைக்கலாம்.

    நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் ஆகும்.

    நீரிழிவு நோயின் எல்லா நிலையிலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் உணவுப் பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியாது.

    பொதுவாக நீரிழிவு நோயில் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகை இருக்கிறது.

    டைப் 1 நீரிழிவு நோயானது இன்சுலின் சார்ந்த நிலையாகும். இந்நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் நாம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் டைப் 1 நீரிழிவு நோய்க்கு உணவு பழக்கங்களின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது.

    டைப் 2 நீரிழிவு நோய் வேண்டுமானால் உணவு பழக்கங்களை மாற்றி, உடல் எடையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தலாம். ஆனால் டைப் 2 பாதித்த ஆரம்பக்கட்டத்தில் இது சாத்தியம். மேலும் பல ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு நீடித்ததால் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்கள் மெதுவாக அழியத் தொடங்கும். இந்நிலையில் உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே கட்டுப்படுத்துவது சிரமமாகும். மாத்திரைகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். மாத்திரைகளின் தேவைகளை தீர்மானிப்பது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களின் எண்ணிக்கை, அதன் செயல்பாடு மற்றும் திசுக்களில் உள்ள இன்சுலின் எதிர்மறை நிலையின் அளவாகும்.

    நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது,

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பிரவுன் ரைஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளான பீன்ஸ், அவரை, புரொக்கோலி (பச்சை பூக்கோஸ்), பாகற்காய் போன்ற காய்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தரைக்கு அடியில் விளையும் கிழங்குகளை குறைத்துக் கொள்ளவேண்டும். புரதம் அதிகமாக உள்ள பால், முட்டையின் வெள்ளைக் கரு, கோழிக்கறி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டக்ஸ்) குறைவாக உள்ள பழங்களை உண்ணலாம்.

    பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால் கைக்குத்தல் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு குறைவு.

    நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், கிழங்கு வகைகளை அறவே தவிர்க்கத் தேவையில்லை. சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்றவற்றைச் சிறிதளவில் வாரம் ஒரு முறை அல்லது ஒரு வேளை சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாகக் கிழங்கு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்காமல் இருப்பதே நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும்.
    • உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    இருதய நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்துகடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கல்யாணராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆரோக்கியமான உணவு முறை

    ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இருதய நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன. சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை, தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

    உடற்பயிற்சி

    ஒவ்வொரு நாளும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் வகையில், இருத்தல் நல்லது.

    புகைப் பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும், அறவே தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த விஷயமாக விளங்குகிறது. புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்குள் புகை பிடிக்காதவர்களின் இருதய நிலைக்கு வந்துவிடுவீர்கள். புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டும்இன்றி, அருகில் இருக்கும் சகமனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழி வகை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உறக்கம் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது.
    • குறட்டை என்பது கொடுமையானது.

    மனிதனுக்கு தூக்கம் சுகமானது...இதில் குறட்டை என்பது கொடுமையானது. ஆகவே குறட்டை நோயை கண்டறியும் நவீன முறைகள் பல இருக்கிறது. இதுகுறித்து ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை டாக்டர் சுந்தரகுமாா் கூறியதாவது:-

    குறட்டை நோய்

    உறக்கம் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு உறங்குவதற்கு என்று ஒதுக்க வேண்டும். உறக்கம் என்பது கண் மூடி இருப்பது அல்ல. ஆழ்நிலை உறக்கமே ஆகும். நல்ல உறக்கம் இல்லையெனில் பகல் நேரங்களில் உடற்சோர்வு, மனச்சோர்வு, உறக்கம் வருதல், செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படும். இந்த உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஒன்று தான் குறட்டை. குறட்டை ஒரு வியாதியா அல்லது பழக்கமா? எல்லா குறட்டையும் வியாதியாக எடுத்துக்கொள்ள இயலாது. 30 சதவீத மக்களுக்கு பொதுவான பிரச்சினையாக குறட்டை உள்ளது. ஆனால், அவை அனைத்தும் வியாதி அல்ல. சில சமயங்களில் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வரலாம். அதற்கு obstructive sleep apnea (OSA) குறட்டை நோய் என்று பெயர்.

    அறிகுறிகள்

    தூக்கத்தில் குறட்டையால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வருவது, காலையில் எழும் போது மீண்டும் தூங்க வேண்டும் என்று தோன்றுவது, உடல் சோர்வு, மனச்சோர்வு, பகலில் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம், சிறிய விஷயங்களில் கூட கோபம் வருதல் போன்றவை குறட்டை நோய் அறிகுறிகள் ஆகும்.

    தீர்வுகள்

    உடல் பருமனாக இருந்தால் (உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ற பி.எம்.ஐ. இல்லையென்றால்) உடல் எடையை குறைப்பதே முக்கிய தீர்வு. அதற்கு உணவு பழக்கத்தில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சி போன்றவை வலியுறுத்தப்படும். Morbid Obesity எனக்கூடிய அதீத உடல் பருமனை குறைப்பது குறித்து பரிந்துரைக்கப்படும். continuous positive airway pressure (CPAP) என்ற கருவி பரிந்துரைக்கப்படும். இது ஒரு வெண்டிலேட்டர் போன்ற கருவி. இதை மூக்கிலும், வாயிலும் பொருத்திக்கொண்டு உறங்க முயற்சிக்கும் போது, உங்களது சுவாச பாதையின் அழுத்தத்தை எப்போதும் பாசிட்டிவாக வைக்கும் உத்தியை கையாளும். அதாவது உங்கள் சுவாச குழாயை எப்போதும் திறந்து வைக்க உதவும். இதனால் உங்கள் சுவாசம் சீராக இருக்கும். இதனால் குறட்டை இருக்காது. மேலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று, மறுநாள் விழிக்கையில், அதற்கான பலன்களை அனுபவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×