என் மலர்
குழந்தை பராமரிப்பு
- குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்
- இயற்கையை சார்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம்.
"குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இயற்கை மீது ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் உண்டாக்கினால், சுற்றுச்சூழலைக் காப்பது எளிதாக இருக்கும்" என்கிறார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுபாங்கி. 13 ஆண்டுகள் ஐ.டி. துறையில் பணிபுரிந்த இவர், அப்பணியில் இருந்து விலகி தற்போது குழந்தைகளுக்கு செடிகள் வளர்ப்பது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஊட்டச்சத்துள்ள மண், இயற்கை உரம் ஆகியவற்றை தயாரித்தும் விற்பனை செய்கிறார். அவரிடம் பேசியபோது… தாத்தா-பாட்டி காலத்தில் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே மண்ணில் விளையாட ஆரம்பிப்பார்கள். மரம், செடி, பறவை, விலங்கு போன்றவற்றுடன் பழகி இயற்கையோடு கலந்து வாழ்ந்தார்கள். அதனால் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்போது பல பெற்றோர்கள், பாதுகாப்பு என்ற பெயரில் குழந்தைகளின் இயல்புகளை மாற்றிவிட்டார்கள்.
ஒருமுறை தடுப்பூசி போடுவதற்காக என்னுடைய குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அப்போது மற்றொருவர் தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார். அவர் குழந்தையைத் தரையில் விடாமல் மெத்தையிலேயே வளர்த்திருக்கிறார். எனவே அந்தக் குழந்தைக்கு தரையில் நடக்கவே தெரியவில்லை. மெத்தையில் தான் இயல்பாக இருக்கிறது. இவ்வாறு பெற்றோர் அளவுக்கு மீறி பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
எனது குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பினேன். அதனால் அவர்களை செடிகள் நடுவது, மண்ணில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தினேன். பள்ளியில் செய்முறை பயிற்சிகள் ஏதாவது கொடுத்தால் அதற்கான பொருட்களைக் கடைகளில் வாங்காமல் இயற்கையாகவும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயாரிப்பு எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.
பின்பு இதை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். தாவரங்களையும் குழந்தையாகப் பாவித்ததால், அவையும் ஊட்டச்சத்துள்ள மண், உரம் ஆகியவை இருந்தால் தான் ஆரோக்கியமாக வளர முடியும் என்று தோன்றியது. இதற்காக ரசாயனங்கள் கலந்த மண் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை.
எனவே தீமை செய்யும் கிருமிகளை அழிக்கும் வகையில், ரசாயனங்கள் இல்லாமல் வேப்பிலையில் உரம் மற்றும் மண் கலவை தயாரிக்க ஆரம்பித்தேன். அவற்றை ஒன்றரை வயதுக் குழந்தைகள்கூட கையாண்டு செடி வளர்க்க முடியும். தாவரங்களை வளர்ப்பதற்குத் தேவையானப் பொருட்களை சுத்தமாகவும், உயர்தரத்திலும் தயாரித்து வருகிறேன். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிந்தது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இயற்கையை சார்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமானது" என்றார் சுபாங்கி.
- குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர்.
- மறுமணம் செய்த பெற்றோர் குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிகள் இதோ…
சூழ்நிலையின் காரணமாக விவாகரத்து மற்றும் துணையின் இழப்பை சந்திப்பவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு புதிய வாழ்வில் ஈடுபடும்போது, இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருக்கலாம். அந்தக் குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர். இதை வெற்றிகரமாக எதிர்கொண்டு குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிகள் இதோ…
யதார்த்தத்தை விளக்குங்கள்: உங்கள் துணையின் இழப்போ, பிரிவோ உங்களை விட குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில் இழந்த உறவின் இடத்தில் மற்றொருவரை உடனே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சமயத்தில், புதியவருடன் மறுமணம் செய்து கொள்ளும்போது, அது குழந்தைகளுக்குக் குழப்பத்தை தரும். இது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மறுமணம் செய்ய முடிவு எடுக்கும் முன்பு, அதற்கான காரணத்தை குழந்தைகளுக்கு விளக்குங்கள். குழந்தைகளின் சம்மதம் கிடைக்கும் வரை காத்திருங்கள்.
வெளிப்படையாக இருங்கள்: நீங்கள் மறுமணம் செய்யப்போகும் முடிவை பிள்ளைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அதை அவர்களிடம் திணிக்க முயற்சிக்கக் கூடாது. இது பிள்ளைகளை மூர்க்கத்தனமான நட வடிக்கைகளில் ஈடுபட வைக்கும். புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். புதிய உறவைப் பற்றிய விஷயத்தில் குழந்தைகளுடன், முடிந்தவரை வெளிப்படையாக இருங்கள்.
எதிர்பார்ப்பைக் குறையுங்கள்: நீங்கள் திருமணம் செய்துகொள்பவருக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் எப்படி அன்புடன் இருப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டால், எப்போதும்போல பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். புதிய உறவு வந்தாலும், அவர்களது முந்தைய உறவில் பாதிப்பு வராது என்று உணர்த்த வேண்டும். இது உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். நீங்கள் வாழ்க்கையில் மற்றொரு நபரை ஏற்றுக்கொள்வது, உங்கள் பிள்ளைக்குக் கடினமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விஷயங்களை எளிதாக்குங்கள்: நீங்கள் துணையை இழந்து இருந்தால், இரண்டாவது நபருடன் வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்பு, உங்கள் பிள்ளைகள் பெற்றோருக்காக ஏங்காத வகையில், அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். குடும்பமாக ஒன்றாக அதிக நேரம் செலவிடுவது, உங்கள் குழந்தை புதிய உறவுடன் எளிதாக ஒன்றுபட உதவும். பிரிந்த பெற்றோரின் நினைவை ஏற்படுத்தும் பழைய இடங்களுக்குச் செல்வதை விட, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றாக செய்யக்கூடிய செயல்களில் அதிகமாக ஈடுபட வேண்டும்.
- இன்றைய டிரெண்டுக்கு பொருந்துமாறு பலவிதமான பேபி கேரியர் கிடைக்கிறது.
- கேரியரில் குழந்தை கீழே விழாமல் இருப்பதற்கு சீட் பெல்ட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.
வெளியிடங்களுக்கு, சிறு குழந்தைகளை பாதுகாப்பாக அரவணைத்தபடி கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது பேபி கேரியர். அவரவர் வசதிக்கு ஏற்றவாறும், நவீன வடிவமைப்பிலும், இன்றைய டிரெண்டுக்கு பொருந்துமாறும் பலவிதமான பேபி கேரியர் கிடைக்கிறது. அதைப் பற்றிய தொகுப்பு இங்கே…
முன் மற்றும் பின்புற கேரியர்: இந்த கேரியரில் முன் மற்றும் பின்புறத்தில் குழந்தைகளை உட்கார வைத்துக்கொள்ளலாம். இதில் குழந்தையின் பால்புட்டியை வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. 'ஹனிகோம்ப்' என்னும் துணி வகையில் நெய்வதால், இந்த பேபி கேரியர் குழந்தைக்கு இதமாகவும், மிருதுவாகவும் இருக்கும். பின்புற கேரியரில் குழந்தை கீழே விழாமல் இருப்பதற்கு சீட் பெல்ட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.
ஹிப் சீட் பேபி கேரியர்: முன் மற்றும் பின்புறத்தில் கேரியரை பொருத்த இயலாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது 'ஹிப் சீட் கேரியர்'. இது பாதுகாப்பானது, எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது.
ஸ்லிங் ரிங் பேபி கேரியர்: குழந்தைகள் தூங்கும்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பேபி கேரியர், மிருதுவான துணியால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு உருவாக்கப்பட்டது.
- குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
- விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
மாறிவரும் வாழ்க்கைகசூழ்நிலையால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை அவர்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. எந்தவித காரணங்களும் இல்லாமல் குழந்தைகள் வெளிப்படுத்தும் அழுகை, கோபம், எரிச்சல், கவலை, போன்ற உணர்வுகளின் வழியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.
பெற்றோருக்கு இடையே ஏற்படும் மோதல்கள், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், உடல் நலக்குறைபாடு, தேர்வில் ஏற்படும் தோல்வி போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.
குழந்தைகளிடம் பேசுவதற்கும் விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் பிணைப்பு அவர்களை மனம் விட்டு பேச வைக்கும். இதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க முடியும்.
- குழந்தைகளுக்கு என்று ஃபேஷன் தனியாக உள்ளது.
- குழந்தைகளுக்கு தற்போதைய பேஷனாக உள்ள ஆடைகளை பற்றி பார்ப்போம்.
நாம் குழந்தைகளாக இருந்த காலத்தில் திருமண விழாக்கள் பண்டிகை நாட்கள் மட்டுமே புத்தாடைகள் அணிந்து மகிழ்வோம். அந்த காலகட்டத்தில் ஃபேஷன் பற்றி எல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் இன்றைய காலகட்டம் வேறு. பெரியவர்களுக்கு ஃபேஷன் இருப்பதைப் போல குழந்தைகளுக்கு என்று ஃபேஷன் தனியாக உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் குழந்தைகளே தங்களுக்கு என்ன மாதிரியான ஆடைகள் வேண்டும் என்று தேர்வு செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள்.
மேலும் புகழ்பெற்ற மனிதர்களின் குழந்தைகள் அணியும் ஆடைகள் குழந்தைகளுக்கான ஃபேஷனாக கருதப்படுகிறது. அவர்களை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியும் பார்த்து அவற்றை அணிய வேண்டும் என்ற விருப்பம் குழந்தைகளுக்கு உண்டாகிறது. என்னென்ன வகையான ஆடைகள் குழந்தைகளுக்கு தற்போதைய பேசனாக உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
குழந்தைகளுக்கான பேஷன் உலகம் மிகவும் விரிந்தது. அவற்றை நீங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடை என்பது அணிவதற்கு வசதியாக இருக்க வேண்டும்; மனதுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் இந்த நிறம் தான் அணிய வேண்டும் ஆண் குழந்தைகள் இந்த நிறம் தான் அணிய வேண்டும் என்று வரையறுக்க வேண்டாம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பேஷன் என்னவென்று துணிக்கடையிலேயே தெரிந்து கொள்ளலாம். தேர்வு செய்வது என்பது எளிமையான காரியம் ஆகும்.
அறிவியல் மற்றும் கணித கோட்பாடுகள் அச்சடிக்கப்பட்ட ஆடைகள் உண்டு; விளையாட்டு வீரர்களின் உருவம் பதித்தது மிருகங்களின் உருவம் பதித்தது, வண்டி வாகனங்களின் உருவம் பதித்தது போன்ற ஆடைகளை அணிவதும் பேஷனாக இருக்கிறது. உங்கள் குழந்தை எதை விரும்புகின்றதோ அதை அறிமுகப்படுத்துங்கள்.
பழமையான பாரம்பரிய ஆடைகளை அணிவதும் தற்போது பேஷனாக உள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைத்து பாரம்பரிய வகைகளும் நமக்கு கிடைக்கக்கூடிய விதமாக இருக்கின்றது. இந்திய பாரம்பரியம், ஆப்பிரிக்க பாரம்பரிய அமெரிக்க பாரம்பரியம், என பல்வேறு நாடுகளிலும் இருக்கக்கூடிய பாரம்பரியம உடைகளை சிறு மாற்றங்களோடு நமக்கும் கிடைக்கும். பறவைகளின் இறகுகள், மணிகள், பின்னப்பட்ட கயிறு, கண்ணாடிகள், போன்ற பொருட்கள் பதித்த ஆடைகளாய் அவை இருக்கும். பறவைகள், பூக்கள், விலங்குகள், போன்ற இயற்க்கை உயிரினங்களின் உருவம், இயற்கையில் உள்ள ஜாமென்ட்ரிக் வடிவங்கள் பதிக்கப் பட்ட ஆடைகள் பேஷனாக உள்ளன. உலோகங்கள் இரும்பு, செப்பு, பித்தளை, போன்றவை பதிக்கப்பட்ட ஆடைகள் பேஷனாக உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தக் கூடிய ஆடைகளும் பேஷனாக உள்ளன அவற்றில் பருத்தி, காதி, சணல், கம்பளி போன்றவற்றால் செய்த ஆடைகள் இருக்கின்றன. இவ்வகை பேஷன் ஆடைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது அவர்கள் மனதில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு வளர வாய்ப்பு உள்ளது.
டெனிம் எனப்படும் முரட்டுத்தனமான பருத்தி ஆடைகள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளும் கிடைக்கின்றன. அவற்றில் பேண்ட், ஷர்ட், ஸ்கர்ட், டி - ஷர்ட் ஆடைகள் எல்லாம் கிடைக்கின்றன. ஆடைகள் மட்டுமின்றி காலணிகளும், காதணிகள் கூட கிடைக்கின்றன. அவற்றையும் நீங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.குழந்தைகளுக்கு ஆடைகளை தேர்வு செய்யும் போது வெயில் காலம், மழைக்காலம், குளிர் காலம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். அந்தந்த காலத்துக்கு ஏற்ற ஆடைகளை அறிமுகப்படுத்துங்கள். இப்போது எல்லாம் பார்ட்டிகள், வார இறுதி சுற்றுலா என்பது மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது. அதனால் பார்ட்டிக்கு செல்லும்போது பளபளப்பான தங்கம் மற்றும் வெள்ளி நிற ஆடைகள், டெனிம் ஆடைகள் அணியலாம். வார விடுமுறையில் செல்லும் இடங்களான பீச் செல்லும்போது லேசான, காற்றோட்டமான லெனின் மற்றும் பருத்தியாலான கார்ட்டூன், மிருகங்கலின் உருவங்கள் பதித்த வண்ணமயமான சிறு ஆடைகள் அணியலாம். மால்கள், திரையரங்குகள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது வசதியான மென்மையான வண்ணங்கள் கொண்ட ஆடைகள் அணியலாம். வீட்டில் இருக்கும்போது பருவ காலத்துக்கு ஏற்ப ஆடைகள் அணிய வேண்டும். திருமண விழாக்கள் பண்டிகை நாட்கள் போன்றவற்றில் பாரம்பபரிய ஆடைகளில் சிறு மாற்றம் செய்து அணியலாம்.
மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை தேர்வு செய்யுங்கள். ஆடைகள் ஒருவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும். குழந்தைகள் விரும்பும் பேஷனில் ஆடைகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழச் செய்யுங்கள்.
- இந்தியாவில் 51 சதவீதம் குழந்தைகள் பருவ நிலை தாக்கத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்படுகிறார்கள்
- தன்னார்வ அமைப்பின் இந்த புள்ளி விவரத்தை மிக எளிதில் ஓரம் கட்டி விட முடியாது.
இந்தியாவில் பருவ நிலைரீதியிலான பேரிடர்கள் மற்றும் வறுமையின் தாக்கத்தில் சுமார் 22.2 கோடி அதாவது 51 சதவீத குழந்தைகள் வாழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியா முழுவதும் 35 கோடி குழந்தைகள் இந்த இரட்டை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான 'சேவ் தி சில்ட்ரன்' தன்னார்வ அமைப்பு மற்றும் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
அதன்படி, ஆசிய நாடுகளிலேயே கம்போடியாவில் 72 சதவீத குழந்தைகள் பருவநிலைரீதியிலான பேரிடர்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் மியான்மர் (64 சதவீதம்), ஆப்கானிஸ்தான் (57 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.
உலக அளவில் 77.4 கோடி குழந்தைகளும் இந்தியாவில் சுமார் 22.2 கோடி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எண்ணிக்கை அடிப்படையில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் மேற்கண்ட அச்சுறுத்தல்களால் பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக வருவாய் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 12 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேவ் தி சில்ட்ரன் தன்னார்வ அமைப்பின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி சுதர்சன் சுச்சி கூறியதாவது:-
"அசாம், கேரளா, ஒடிசாவில் மிக மோசமான வெள்ள பாதிப்புகளால் விளிம்புநிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியாலும் வீடின்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பாதிப்புகள், அவர்களை மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்காக தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், மேற்கண்ட பாதிப்பை எதிர்கொண்டுள்ள குழந்தைகளின் நிலையையும் மனதில் கொள்ளவேண்டும்" என்றார்.
தன்னார்வ அமைப்பின் இந்த புள்ளி விவரத்தை மிக எளிதில் ஓரம் கட்டி விட முடியாது. ஏனெனில் இந்தியாவில் 51 சதவீதம் குழந்தைகள் பருவ நிலை தாக்கத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் நாம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல்வேறு துறைகளில் மிக வேகமாக முன்னேறி வருகிறோம்.
சில துறைகளில் வளரும் நாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியாவின் சாதனைகள் உள்ளன.
இந்தநிலையில் இந்தியாவில் சிறுவர், சிறுமிகள் கணிசமான அளவுக்கு துன்பத்துக்குள்ளாகிறார்கள் என்ற பரிதாபத்தை மாற்ற முடியாத நிலையில் இருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் எல்லாவித வசதிகளையும் சமநிலையில் பெற வேண்டும் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்கள். ஆனால் யதார்த்த நிலை வேறு விதமாக உள்ளது.
இனியாவது இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள்தான் நாட்டின் தூண்கள். அந்த தூண்கள் வலிமையாக இருந்தால்தான் பாரத தேசம் வலிமையாக மாறும்.
- பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
- மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று.
மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று. மகிழ்ச்சி மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது மதித்தல் என்ற நற்பண்பு ஆகும். நாம் மற்றவரை மதிக்கும் போது நாமும் மதிக்கப் படுகின்றோம். யார் ஒருவர் மற்றவர்களை மதிக்கின்றார்களோ அவர்கள் ஒழுக்கமானவர்கள், பணிவானவர்கள் மற்றும் பிறரை கௌரவ படுத்துபவர். அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். இப்படி பட்டவர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுகின்றனர்.
நம்மை நாமே மதித்துக் கொள்வது மற்றும் மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வரையறுப்பது சுய மரியாதை ஆகும். சுயமரியாதை தான் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக இருக்கும். சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும். புகழ் மற்றும் கௌரவத்தை கொடுக்கும். சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நம் ஒப்புதல் இல்லாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். நாம் அதன் படி செயல் பட வேண்டி வரும்; நம் இயற்கைக்கு மாறாக செயல் பட நேரிடும்.
குழந்தைகள் தவறு செய்யும் போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது; தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் "இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய்"? "மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா தவறா என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும்.
இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும் போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறு இழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும் பொது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள்.
மற்றவர்களோடு இனிமையாக பழகும் கலையை வளர்த்துக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.
- தங்கள் வேலைகளை மவுனமாக செய்யும் குழந்தைகளை நாம் பாராட்டுவது கிடையாது.
- தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மவுனமாக இருப்பார்கள்.
மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களை கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மவுனமாக இருப்பார்கள்.
ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக்கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளை பேச விட்டு் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும். அதுவும் பரிவோடு பேச வேண்டும்.
மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா? என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மவுனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மவுனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.
அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவ கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸ் மற்றும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றை பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர். பேசாமலும் தங்கள் வேலைகளை மவுனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாசாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையை போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது. மவுனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்கு புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மவுனமாக இருக்கிறது. புதிய சூழலுக்கு பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகுப்புக்கு போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருப்பார்கள். அந்த மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம்.
பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்.காது கேளாமை, கரும்பலகையில் எழுதி இருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனவே குழந்தையிடமே குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
- 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
- பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.
''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...'' என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.
* உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
* ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
* தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
நடக்கிறதா?
* உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
* பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
* சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
* உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?
மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.
அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
சிகிச்சைகள்...
நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!
- பத்து வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு தனியாக படுக்கை அமைத்துக் கொடுக்கவும்.
- குழந்தைகளுக்காகவே வாழும் நிலைக்குப் பெற்றோர் தள்ளப்படுகின்றனர்.
பத்து வயதுக்கு மேல் நம் குழந்தைகளைத் தனியாகப்படுக்கப் பழக்கப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இது வழக்கமாக உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. நம் ஊரில், வளர்ந்த பின்னும் குழந்தைகள், பெற்றோருடன் உறங்குவதே நடக்கிறது. குழந்தைகளுக்காகவே வாழும் நிலைக்குப் பெற்றோர் தள்ளப்படுகின்றனர். அவர்களது பிரைவசி காணாமல் போகிறது. கணவன், மனைவிக்குள் நெருக்கம், இறுக்கம் எல்லாம் தொலைந்து, சுவாரஸ்யம் அற்ற வாழ்க்கைக்குப் பழகிவிடுகிறார்கள். இது, அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்னைகள் உருவாகவும் வழிவகுக்கிறது.
குழந்தைக்காக அடிப்படைத் தேவைகளையும் தியாகம் செய்யும் நிலை தேவையற்ற ஒன்று. கணவனும் மனைவியும் இணைந்து வாழத்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். குழந்தை என்பது அந்த வாழ்வின் ஒரு பகுதி. இதைக் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும். பத்து வயதுக்கு மேல் அவர்களுக்கு எனத் தனியாக படுக்கை அமைத்துக் கொடுக்கவும். வளர்இளம் பருவத்தை எட்டும்போது தனியறையில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். தனக்கான வாழ்வைப் பற்றித் திட்டமிடவும், கனவு காணவும், சிந்திக்கவும் இந்தத் தனிமை குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கும்.
உடல், மனக் குழப்பங்களை நீக்குங்கள்
பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம். பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்னையாக உணர்கின்றனர். இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.
ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும். மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர். மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம். பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும்.
- குழந்தைகள் பொம்மைகளுடன் பேசுவார்கள், சிரிப்பார்கள்,
- குழந்தைககளின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை.
குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் வெறும் தோழர்கள் மட்டும் அல்ல. பொம்மைகளை தம்பியாகவும், தங்கையாகவும், ஹீரோவாகவும், வில்லனாகவும் கருதுவர். அந்த பொம்மைகளுடன் பேசுவார்கள், சிரிப்பார்கள், விளையாடுவார்கள், உணவூட்டி மகிழ்வார்கள், தூங்குவார்கள், குளிப்பாட்டுவார்கள், அழகுபடுத்துவார்கள் மற்றும் சண்டை போடுவார்கள். நீங்கள் வாங்கிக்கொடுக்கும் பொம்மைகளை சுற்றியே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சுழலும். முழுநேரமும் இந்த பொம்மைகளையே குழந்தைகள் கையாளுவதால், அவர்களின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை. அதுபற்றி அலசுகிறது, இந்த கட்டுரை...
* பொம்மை வகைகள்
நூல் இழை வகை பொம்மைகள், மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், மண் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், சிலிக்கான் பொம்மைகள்... இப்படி நிறைய பொருட்களில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, பொம்மை தேர்வில் கவனம் செலுத்தி, தரமான பொம்மைகளை வாங்க வேண்டும்.
* வயதும், பொம்மைத் தேர்வும்
3 மாத குழந்தைகளுக்கு வண்ணமயமான, சுழலக்கூடிய, இசை எழுப்பும் பொம்மைகளை வாங்கிக்கொடுக்கலாம். இக்காலங்களில் அவர்களின் தொட்டிலின் மேல் இந்த பொம்மை சுழன்று கொண்டே இருக்கும். அவர்கள் அழுதாலும், இந்த பொம்மைகளை கொண்டு விளையாட்டு காட்டி, அவர்களை சமாதானப்படுத்தலாம்.
3 முதல் 6 மாத குழந்தைகள் குப்புறப்படுத்துக்கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனிப்பார்கள். ஆதலால் அவர்களுக்கு ஒலி எழுப்பிக் கொண்டு நகரும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கைகளைத் தட்டி ஒலி எழுப்பக் கூடிய பொம்மைகளையும், கையால் பிடிக்க முடிகிற மென்மையான பொம்மைகளையும் வாங்கலாம்.
6 முதல் 9 மாதங்களில் குழந்தைகள் தவழவும், உட்காரவும் முயற்சிப்பார்கள். அவர்கள் எழுந்து நிற்கவும் முயற்சி எடுப்பார்கள். இக்கால அப்போது அவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எடுப்பது, தள்ளுவது மற்றும் எறிவது போன்ற செயல்களைச் செய்வார்கள். எனவே நகரும் பொம்மைகளை வாங்கித் தரலாம். பலவண்ண விளக்கு கொண்ட கார், பஸ், ரெயில், ஆட்டம் போடும் கோழி, நாய், பூனை போன்ற பொம்மைகளையும் வாங்கலாம். இவை நகரும்போது அதை பிடிக்க, அவர்களும் நகருவதால், எளிதாக நடை பயில உதவும். இந்த பொம்மைகள் அவர்களின் வாயில் நுழையாத அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
9 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டு பொருட்களை கொடுக்கலாம். அதேபோல, சிறிய சைக்கிள் அல்லது சிறிய கார் வாங்கிக்கொடுக்கலாம். அப்போது அவர் கள்வண்டியோட்டவும் ஆரம்பித்து இருப்பார்கள்.
ஒரு வயதிற்கு மேலான குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கவும். பால், பேட் மற்றும் பிளாக்ஸ் அடுக்கும் பொம்மை வகைகளை கொடுப்பது நல்லது.
* எந்த பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்?
சில பொம்மைகளில் ஸ்க்ரூ (திருகு ஆணி), சின்ன பேட்டரிகள், மணிகள் போன்றவை இருக்கும். ஆதலால், சிறு குழந்தைகளுக்கு அது போன்ற பொம்மைகளை வாங்கித் தருவதை தவிர்க்கலாம். குழந்தைகள் அவற்றை விழுங்கிவிட வாய்ப்பு உண்டு. காயம் ஏற்படுத்தக்கூடிய கூர்மையான பொம்மைகளை தவிர்க்கவும்.
ஆரம்பத்தில், நூல் இழை பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த வகை பொம்மைகள், சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒரு வயதிற்கு மேல் சைக்கிள் அல்லது கார் வாங்கித் தரும் முன், தன் குழந்தைகளால் உண்மையிலேயே இந்த வாகனங்களை கையாள முடிகிறதா என்பதை பரிசோதித்துவிட்டு, அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள். 6 வயது வரை ரப்பர் பொம்மைகளை வாங்கி தர வேண்டாம். பலூன்களையும் தவிர்க்கவும். அதிக எடையுள்ளது, கயிறு இருப்பது போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
9 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுபொருட்களை கொடுக்கலாம். அதேபோல, சிறிய சைக்கிள் அல்லது சிறிய கார் வாங்கிக்கொடுக்கலாம்.
- இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம்.
- இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன.
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுள் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்படலாம் என்றாலும், பச்சிளம் குழந்தைகளை குறிவைத்து தாக்குவது நிமோனியாவின் தனித்தன்மை.
பலதரப்பட்ட கிருமிகள் காற்றில் கலந்துவந்து நுரையீரலை தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியை உமிழும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சரவர தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்பு புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்கு பசி இருக்காது, சாப்பிடாது.
கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால் குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாக காணப்படும்.
இந்த நோயை கவனிக்க தவறினால், இந்த கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளைஉறை போன்றவற்றை பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன. நிமோனியா சில நேரம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்க 50 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.






