என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இந்தியாவில் பரிதாப நிலையில் 51 சதவீத குழந்தைகள்
    X

    இந்தியாவில் பரிதாப நிலையில் 51 சதவீத குழந்தைகள்

    • இந்தியாவில் 51 சதவீதம் குழந்தைகள் பருவ நிலை தாக்கத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்படுகிறார்கள்
    • தன்னார்வ அமைப்பின் இந்த புள்ளி விவரத்தை மிக எளிதில் ஓரம் கட்டி விட முடியாது.

    இந்தியாவில் பருவ நிலைரீதியிலான பேரிடர்கள் மற்றும் வறுமையின் தாக்கத்தில் சுமார் 22.2 கோடி அதாவது 51 சதவீத குழந்தைகள் வாழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசியா முழுவதும் 35 கோடி குழந்தைகள் இந்த இரட்டை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான 'சேவ் தி சில்ட்ரன்' தன்னார்வ அமைப்பு மற்றும் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

    அதன்படி, ஆசிய நாடுகளிலேயே கம்போடியாவில் 72 சதவீத குழந்தைகள் பருவநிலைரீதியிலான பேரிடர்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் மியான்மர் (64 சதவீதம்), ஆப்கானிஸ்தான் (57 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

    உலக அளவில் 77.4 கோடி குழந்தைகளும் இந்தியாவில் சுமார் 22.2 கோடி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எண்ணிக்கை அடிப்படையில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் மேற்கண்ட அச்சுறுத்தல்களால் பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக வருவாய் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 12 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேவ் தி சில்ட்ரன் தன்னார்வ அமைப்பின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி சுதர்சன் சுச்சி கூறியதாவது:-

    "அசாம், கேரளா, ஒடிசாவில் மிக மோசமான வெள்ள பாதிப்புகளால் விளிம்புநிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியாலும் வீடின்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பாதிப்புகள், அவர்களை மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்காக தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், மேற்கண்ட பாதிப்பை எதிர்கொண்டுள்ள குழந்தைகளின் நிலையையும் மனதில் கொள்ளவேண்டும்" என்றார்.

    தன்னார்வ அமைப்பின் இந்த புள்ளி விவரத்தை மிக எளிதில் ஓரம் கட்டி விட முடியாது. ஏனெனில் இந்தியாவில் 51 சதவீதம் குழந்தைகள் பருவ நிலை தாக்கத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் நாம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல்வேறு துறைகளில் மிக வேகமாக முன்னேறி வருகிறோம்.

    சில துறைகளில் வளரும் நாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியாவின் சாதனைகள் உள்ளன.

    இந்தநிலையில் இந்தியாவில் சிறுவர், சிறுமிகள் கணிசமான அளவுக்கு துன்பத்துக்குள்ளாகிறார்கள் என்ற பரிதாபத்தை மாற்ற முடியாத நிலையில் இருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் எல்லாவித வசதிகளையும் சமநிலையில் பெற வேண்டும் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்கள். ஆனால் யதார்த்த நிலை வேறு விதமாக உள்ளது.

    இனியாவது இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள்தான் நாட்டின் தூண்கள். அந்த தூண்கள் வலிமையாக இருந்தால்தான் பாரத தேசம் வலிமையாக மாறும்.

    Next Story
    ×