என் மலர்
குழந்தை பராமரிப்பு
எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு, அவர்களுடைய முதுகெலும்பும் பாதிப்படைகிறது.
பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது அவர்கள் சுமந்து செல்லும் புத்தக மூட்டையை பார்த்தால் ஐயோ பாவம் என்று சொல்லத் தோன்றும். அந்த அளவுக்கு ஒரு குட்டி சாக்கு மூட்டையையே எடுத்துச்செல்கிறார்கள். குழந்தைகளின் எடையை விட அவர்கள் படிக்கும் பாட புத்தகங்களின் எடை அதிகமாக இருக்கிறது.
அளவுக்கு அதிகமான பாடப்புத்தகங்களை சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. குறிப்பிட்ட எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு, அவர்களுடைய முதுகெலும்பும் பாதிப்படைகிறது.
தமிழகத்தில் புத்தக பை சுமையை குறைப்பதற்கு 3 பருவங்களாக பிரித்து புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. இது ஓரளவுக்கு வசதியாக உள்ளது. டெல்லியில் செயல்படுத்த இருப்பதுபோன்று தமிழகத்திலும் வாரத்தில் ஒரு நாள் புத்தகம் இல்லா கல்வியை கல்வித்துறை வழங்கினால், மாணவ-மாணவிகள் தூக்கி வரும் நோட்டு-புத்தக பாரத்தை கொஞ்சம் இறக்கி வைக்கலாம்.
தேவையான புத்தகங்களை மட்டும் மாணவர்கள் கொண்டுவருவதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் பள்ளிகளிலேயே நோட்டு-புத்தகங்கள் வைப்பதற்கு லாக்கர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு செய்தால் மாணவர்களும் உற்சாகத்தோடு வந்து கல்வியை கற்பார்கள்.
முன்பெல்லாம் மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்று தரும் நீதி போதனை வகுப்புகளில் கதைகள் மூலம் நல்ல அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புகட்டுவார்கள். தற்போது அந்த நீதிபோதனை வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுவது இல்லை.
எனவே வாரத்தில் ஒரு நாளாவது மாணவர்கள் தூக்கி செல்லும் புத்தக பைக்கு விடுப்பு கொடுத்து, அவர்களின் பாரத்தை இறக்கிவைப்பதோடு, அன்றைய தினம் முழுவதும் மாணவர்களின் பிற திறமைகளை வளர்க்கவும், நீதிபோதனை வகுப்புகள் நடத்தியும் செலவிடலாம் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-சாய் விஹான்.
குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருவதற்கான காரணமென்பது, புரியாத புதிர்தான். யூகத்தின் அடிப்படையில், மருத்துவர்கள் கூறும் காரணங்களை பார்க்கலாம்.
குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருவதற்கான காரணமென்பது, புரியாத புதிர்தான். பெரியவர்களுக்கு வருவதற்கு வாழ்வியல் மாற்றங்கள், அதிக உடல் எடை, மோசமான உணவு முறைகள், மது-புகை போன்ற பழக்கங்கள் காரணங்களாக இருக்கின்றன. இவற்றில் எதையுமே அறியாதவர்கள் குழந்தைகள். யூகத்தின் அடிப்படையில், சில காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேற்கூறிய பழக்கங்கள் பெற்றோருக்கு இருப்பது குழந்தையின் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடும். குழந்தையை அதிகக் கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும் புற்றுநோய் வரலாம். புதிதாக உருவாகும் டி.என்.ஏ என்பது, ஏதோவொரு டி.என்.ஏ-வின் நகலாகத்தான் இருக்கும். அப்படி நகல் எடுத்தலில் சிக்கல் ஏற்பட்டால், கேன்சர் உருவாகும். இதை, `Gene Mutation’ என்பார்கள்.
குழந்தைகளைத் தாக்கும் முக்கியமான புற்றுநோய்கள்:
* லுகேமியா (Leukemia) - எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.
* மூளைக்கட்டிகள்
* நியூரோப்ளாஸ்டோமா (Neuroblastoma)
* லிம்போமா (Lymphoma)
* தசை மற்றும் வயிற்றுப் பகுதியில் வருவது (Abdominal tumours, muscle and bone tumours).
சிகிச்சைகள் :
கீமோதெரபி (Chemotherapy)
அறுவைசிகிச்சை
ரேடியோதெரபி
மருத்துவ கவுன்சலிங் (பெற்றோருக்கும் குழந்தைக்கும்).
குழந்தைகளுக்கான புற்றுநோய்... சில உண்மைகள் :
* பாதிப்பின் நிலையைப் பொறுத்து, பூரண குணமடைதலுக்கான சதவிகிதம் அமையும். முதல் நிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதான சிகிச்சைகளிலேயே குணப்படுத்திவிடலாம்.
* புற்றுநோய், தொற்றுநோய் அல்ல என்கிற அடிப்படை விழிப்புஉணர்வு பெரும்பாலான பெற்றோரிடம் இல்லை.
* மரபணு வழியான புற்றுநோய் பாதிப்பு, சிலருக்கே ஏற்படும்.
குழந்தை முதன் முதலில் எழுந்து நிற்க ஆரம்பிக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். அவை என்னவென்று பார்க்கலாம்.
இதுவரை தவழ்ந்து கொண்டிருந்த உங்கள் குழந்தை நாற்காலி, மேஜையை பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயல்கிறதா? அப்படியானால் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை:
* குழந்தை அனைத்தையும் ஆராய்ந்து, புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கும். இதனால் சில நேரம் குழந்தைக்கோ, மற்றவர்களுக்கோ காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், எதையும் எப்படி மென்மையாகத் தொடுவது என்பதைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள்.
* எதை வைத்து விளையாடலாம் எனத் தானே தேர்வு செய்து, அந்தப் பொருளை எடுத்துக் குழந்தை விளையாடும் பருவம் இது.
* தன் கையிலிருக்கும் பொருட்களைத் தூக்கி போட்டு, தூர எறிந்து விளையாடுவதன் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் குழந்தை யூகிக்கத் தொடங்கும். பந்து போன்ற திரும்ப வராத பொருட்களையும் தூக்கி போட்டுப் பார்க்கும்.
* நீங்கள் குழந்தையிடம் அன்பு செலுத்துவதன் மூலம், குழந்தையும் மற்றவர்களிடம் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளும்.

* இப்போது குழந்தை தானாகவே எழுந்து நின்று, நடக்க முயற்சிக்கும். ஆனால் உங்கள் கண்காணிப்பு அத்தியாவசியம். இல்லையென்றால், காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
* குழந்தையை மற்றவர் கவனிப்பில் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே செல்லும்போது, ஆரம்ப நாட்களில் குழந்தை பெரிதும் ஏமாற்றம் அடையும். இந்த நிலையில் குழந்தையை ஏமாற்றிவிட்டு வெளியே செல்வதைவிட, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் திரும்ப வந்துவிடுவேன் என்பதை விளக்கிவிட்டுச் செல்லுங்கள். குழந்தைக்கு அது புரியாது என்று நினைக்காமல், இதைச் செய்ய வேண்டும். காலப்போக்கில் நீங்கள் திரும்பி வந்துவிடுவீர்கள் என்பதை குழந்தை நம்பத் தொடங்கும்.
* குழந்தை, உங்களை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் செய்வதை எல்லாம் செய்து பார்க்கும். அப்படித்தான் குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும்.
* நீங்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களைக் குழந்தை தெளிவாகப் புரிந்துகொள்ளும். வார்த்தைகளைச் சொல்லிய பிறகு, அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைச் செய்துகாட்டி விளக்கவும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனை சக்தி பெருகுகிறது. கவனிக்கும் திறன் வளர்கிறது. கதைகள் பெற்றோரையும் குழந்தைகளையும் இன்னமும் நெருக்கமாக்குகின்றன. எப்போதும் ஓடித் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கையில், கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.
அன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை அறிய உதவும் கருவிகளாக, கதைகள் விளங்குகின்றன. கதை கேட்பது, கற்றலுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கிறது. புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப்படுத்த, குழந்தைகள் கற்கின்றனர். இந்த கதை கேட்கும் திறன், குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது. கதைகள் கேட்பது, கதைகளில் இன்னமும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, பின்பு புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது.
* கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். இரவு படுக்கைக்கு முன் என்பது சரியாக இருக்கலாம். தினமும் அந்த நேரத்தில் கதை சொல்வதென்பது ஒரு பழக்கத்தையும் ஒழுங்கையும் கொண்டு வரும். நாளெல்லாம் ஓடி விளையாடிக் களைத்த குழந்தைக்கு அது ஒரு நல்ல புத்துணர்வூட்டும் நிகழ்வாக இருக்கும். கதையில் ஒருமுகப் பட்டு அமைதியான குழந்தையை, ஒன்றிரண்டு தாலாட்டுப் பாடல்களால் உறங்க வைப்பதும் சுலபம்.
* ஒரு பெரிய திருப்பத்திற்கு முன் கொஞ்சம் நிறுத்தவும் (pause).இது, குழந்தைகளின் எதிர்பார்ப்பைத் தூண்டி, கதையின் மேலிருக்கும் ஆவலை அதிகரிக்கும்.
* கதைகளில் வரும் உணர்ச்சிகளான கோபம், பயம், அமைதி, மகிழ்ச்சி, ஏமாற்றம் போன்றவைகளை உங்கள் முகத்தில் காண்பிக்கவும். உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.

* கதாபாத்திரங்களின் உடையை, முகமூடியை அணியுங்கள். கரடிக் கதை சொல்கையில், கரடியின் முகமூடி இருந்தால் அதை அணிந்து கொண்டு சொல்லுங்கள்.
* கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள். காக்கா, வடையை எடுக்கப் பறந்து வந்தது என்று என் கைகளை சிறகுகளாகப் பறக்க வைக்கையில், என் குழந்தையின் கைகளும் சிறகைப் போல ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். குரங்கு குல்லாவை எடுத்த கதையில் குல்லாவை நான் போட்டுக் கொண்டு சொன்னால், பக்கத்திலிருந்த பிளாஸ்டின் பாத்திரத்தை குல்லா போல அவனும் போட்டுக் கொள்வான்.
* உண்மைக்கும், புனைவு கதைகளுக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாத சிறு குழந்தைகளிடம் பெரும்பாலும் உண்மையான கதைகளையே, அல்லது உண்மைக்கு ஒட்டி வருகின்ற நிகழ்வுகளையே சொல்வது நல்லது. குழந்தைகளின் மனோ மாதிரி (mental model)உண்மையை அடித்தளமாகக் கொண்டு வளர்வதே சிறந்தது. குழந்தையின் மனது ஒரு பெரிய உறிஞ்சும் ஸ்பாஞ்ச் போல. நாம் சொல்லும் அனைத்து விஷயங்களையும் எந்த வடிகட்டியும் இல்லாது உண்மையென்று நம்பி விடும். எனவே, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
* கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல?” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம்.
* கதையைக் கூறி முடித்த பின், ”இதனால் அறியப்படும் நீதி யாதெனில” என்றெல்லாம் சொல்லாமல், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு விட்டு விடவும்.
கதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை.
ஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண முடியும் என்பார்கள், ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு தகவல்கள் உண்மையில் குழந்தையின் சிரிப்பு இந்தியாவில் பளிச்சிடுகிறதா? அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் தான் வாழ்கிறார்களா? என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து கண்டறிய 13 மாநிலங்களில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு நடத்திய ஆய்வில் சுமார் 70 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றால், அது எத்தனை எத்தனை அவமானம்.
அதிலும் 46 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நன்கு தெரிந்தவர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றால், அது குழந்தைகளை கடவுளாக பாவிக்கும் நம் தேசத்துக்கு வந்த தலை குனிவு அல்லவா? தலைநகர் டெல்லி மற்றும் பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், அங்கு வாழும் குழந்தைகள் அதிகமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல்களை அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சி நடுங்குகின்றனர். அவர்களின் விளையாட்டு, குறும்புதனம், சந்தோஷம் அனைத்தும் சமூக விரோதிகளால் பறிபோகிறது.
தமிழகத்தில் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் குறைவு என்றாலும், குழந்தைகளின் வாழ்க்கையை உருக்குலைக்கும் நச்சுக்கிருமிகள் நம்மை சுற்றியும் வலம் வரலாம் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். நம் குழந்தைகள் இப்படிப்பட்ட மனித மிருகங்களின் கையில் சிக்காமல் விழிப்போடு பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகள் மீதான வன்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்கவேண்டும்.
-கவிதை ராகம்
நீங்கள் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு சமம்.
நீங்கள் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு சமம். நாம் வீட்டு வேலை செய்து கொண்டிருக்குமு்போது நம்மை வந்து தொந்தரவு செயய்க்கூடாது என்பதற்காக கையில் நாம் போனைக் கொடுத்து விளையாடு என்று சொல்லிவிடுகிறோம். அந்த நேரத்தில் வேண்டுமானால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். உங்களுக்குத் தொல்லை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதனால் என்னென்ன விளைவுகள் உண்டாகுமென்று பார்க்கலாம்.
குழந்தைகள் போனில் விளையாடுவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. இரவு, பகல் என எல்லா நேரங்களிலும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களை விளையாடும் போது, உங்கள் போனிலிருந்து வெளிவரும் அதிகப்படியான வெளிச்சம், குழந்தையின் கண்களை பாதித்து பார்வை கோளாறை ஏற்படுத்தும். கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிடும்.
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகள் மிக மென்மையானதாக இருக்கும். அதனால் அவர்களின் மூளை எளிதில் அனைத்தையும் உள்வாங்கும். அப்படி உங்கள் குழந்தை விளையாடும் போது, அவர்களின் மூளை அதற்கு அடிமையாக துவங்கும். அதோடு போனைச் சுற்றியிருக்கும் அதிர்வலைகள் உங்கள் குழந்தையின் மூளையில் பல பிரச்சனைகளை உண்டாகும்.
குழந்தைகள் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், அது அவர்கள் கல்வியை மிகவும் பாதிக்கும். அவர்களது மூளை அந்த விளையாட்டை உள்வாங்கி இருப்பதால், அவர்களது கவனம் கல்வியை நோக்கி பயணிக்க மறுக்கும். அதனால் அவர்கள் படிப்பில் மந்தமடைய துவங்குவார்கள்.
குழந்தைகளுக்கு காது குத்தும் விழாவின் போது, குழந்தைக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
குழந்தைகள் பிறந்த பின் முதலில் பெயர் சூட்டு விழா நடைபெறும். அதன் பின்னர் அவர்களுக்கென நடத்தப்படும் மிக முக்கியமான 2-வது சடங்கு காதணி விழா. இந்த விழாவில், முதல் குழந்தையென்றால், ஆடு வெட்டி, உறவு மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து விமரிசையாக கொண்டாடுவர். இரண்டாம் குழந்தைக்கு சற்று எளிமையான விதத்தில் கொண்டாடுவர்.
இந்த காதணி விழாவானது குழந்தைக்கு அதிக முடியிருந்தால், 3-வது மாதமே நடத்தப்படும். இல்லையேல் 5, 7, 11-வது மாதம் என ஒற்றையிலக்க மாதங்களில் நடத்தப்படும். ஆகவே, இந்த முக்கிய விழாவின் போது, விழாவிற்கான ஏற்பாடுகளுடன், குழந்தைக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி, காதணி விழாவின் போது, குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.
காது குத்துமிடம் சுத்தமாக இருக்கிறதா என நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும். காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை எனில், அது அப்பச்சிளம் குழந்தைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். காது குத்துமிடத்தை தரமான ஆன்டிசெப்டிக்கைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

குழந்தைகள் அணிந்திருக்கும் கம்மல் மற்றும் தோடுகளை இழுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி அவர்கள் செய்துவிட்டால், அது அவர்களுக்கு மிகுந்த வலி மற்றும் வேதனையினை கொடுக்கும். எனவே, குழந்தைகள் கம்மலை இழுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
குழந்தைகள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும். காது குத்தும் கருவி சுத்தமாக இல்லை எனில், காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமாக இல்லை என்றாலும், இதுபோன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது. குழந்தைக்கு இரும்பு போன்றவற்றால், ஒவ்வாமை ஏற்படுமானால் அவ்வொவ்வாமை, இதுபோன்ற காதணிகளை அணிவித்தால், அச்செயல் உங்கள் குழந்தையை பாதிக்கலாம். குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூடாது.
சில சமயங்களில், காது குத்திய இடத்தில் சிறு தழும்புகள் அல்லது தடுப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது பல பெரும் பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடத்தில், கட்டி இருந்தால் இப்பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும்போது கட்டி இருந்தால் அவ்விடத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.
குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் தேர்ந்தெடுப்பது கடினமான விஷயம். குறிப்பாக இளம் வயது சிறார்களுக்கு ஆடைத்தேடல் என்பது சற்று கூடுதல் பணியாகவே அமையும்.
குழந்தைகளுக்கு புத்தம் புதிய ஆடைகள் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக இளம் வயது சிறார்களுக்கு ஆடைத்தேடல் என்பது சற்று கூடுதல் பணியாகவே அமையும். ஏனென்றால் பெண் பிள்ளைகளுக்கு விதவிதமான வண்ண சாயலில் வெவ்வேறு செட்டுகளுடன் கூடிய பல ஆடைகள் அவ்வப்போது சந்தைக்கு வந்துவிடும்.
இளஞ்சிறார் ஆடைகள் எனில் பாபாசூட், பேண்ட் சட்டை மற்றும் வேட்டி சட்டை என்பவை மட்டுமே. வடஇந்திய ஆடைரகங்களான ஷெர்வாணி, தோத்தி போன்றவைகளும் கிடைக்கின்றன. இவையனைத்தும் பிரதான ஆடவர் வடிவமைப்புகளே. இதில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எப்படியாயினும் இளஞ்சிறார்களின் பலதரப்பட்ட வண்ணமயமான ஆடைகளிலும் எதனை தேர்ந்தெடுப்பது என்பதும் சற்று கடினமாகவே உள்ளது. காரணம் ஒவ்வொரு விதமான வண்ணம், இரட்டை வண்ண சேர்ப்பு, கூடுதல் இணைப்புகள், பேண்ட் சட்டைகளில் வித்தியாசமான வெட்டுகள் மற்றும் புதிய மேம்பட்ட வடிவம் என அனைத்தும் அசத்துகிறது.
ஒவ்வொரு விற்பனையகங்களில் ஒவ்வொரு ரகத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட மாறுபட்ட டிசைன்கள் கிடைக்கின்றன. அதில் நம் குழந்தைகளுக்கு ஏற்றது எது என கண்டறிவதே நம்பணி.
ஜோத்பூரி சூட்ஸ்
இது சற்று வித்தியாசமான இளஞ்சிறார்கள் ஆடை. பேண்ட் அமைப்பு என்பது முட்டி பகுதிவரை அகலமான சுருக்கங்கள் உள்ளவாறும் பின் சுருக்குடன் குறுகிய அமைப்பிலும் இருக்கும். இதே நிறத்துடன் மேல் சட்டை நீளமான குர்தா என்றவாறு வருகிறது. இதில் அதிகபட்ச வேலைப்பாடுகள் ஏதும் இருக்காது. பார்க்க சாதாரணமாக தோன்றும்.

இதில் உச்சபட்ச அழகை கொடுப்பது மேல் அணியும் ஓர் கோட்தான். அதிக கவனத்துடன் மேம்பட்ட துணி வகையில் நெய்யப்படும் கோட் மென்பட்டு பளபளப்புடன் அதன் மேல் சரிகை எம்பிராய்டரி, கல் பதங்க்கங்கள் உள்ளவாறு கிடைக்கின்றன. அணியும் ஆண் குழந்தைகள் அதற்கேற்ற சிறு வண்ண ஷூவை அணிந்து விட்டால் ராஜபுத்திரர்களை போல் தோற்றம் பெறுவர்.
வண்ணங்களுடன் பிரகாசிக்கும் ரெமோ
புதிய வகை ஆடையாக வந்துள்ள இது 1 வயது முதல் 10 வயதுள்ள ஆண் குழந்தைகளுக்கான ஆடையாக திகழ்கிறது. பலவண்ண பேண்ட் இணைப்புடன் கூடிய பிரிண்டட் மேல்சட்டை உடன் வருகிறது. சிலமாடல் ஜீன்ஸ் பேண்டுடனும், சில காட்டன் பேண்ட் என்றவாறு உள்ளன. மேல்சட்டை முழுகைசட்டை என்றவாறு உள்ளன. இதன் மேல் அணிகின்ற கோட்தான் டாப். ஆம், வித்தியாசமான பல செட்டுகளுடன் கூடிய கோட். வி-ஷேப், யூ-ஷேப், ஓவல் என அடர்த்தியான வண்ணம், வித்தியாசமான வண்ணம் என்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சில ஜீன்ஸ் பேண்ட் மாடல்களில் மேல் கோட் என்பது டெனிம் கோட்-வுடன் கிடைக்கின்றது. இது இப்பண்டிகை காலத்திற்கு புதுசு.
ஆர்ட் சில்க் ஷெர்வாணி
பிரமாண்ட மற்றும் கம்பீரத் தோற்றத்தோடும் ஷெர்வாணி ஆடைகள் தற்போது சிறப்புமிகு எம்பராய்டரி செய்யப்பட்டு ஆர்ட் சில்க் ஷெர்வாணிகளாக கிடைக்கின்றன. வழவழப்பான துணி வகையில் விதவிதமான புதிய எம்பராய்டரி டிசைன் வேலைப்பாடு மற்றும் கல்வேலைப்பாடு கொண்டவையாக திகழ்கிறது. அதுபோல் ஆர்ட்சில்க் காட்டன் குர்தா பைஜாமா போன்றவையும் கிடைக்கின்றன. இது ஒருநிற மேல் சட்டை மற்றும் பேண்ட் அமைப்புடன் குர்தாவில் மட்டும் சிறு வண்ண நூல் வேலைப்பாடுகள் மற்றும் பட்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சாதாரண பேண்ட் இணைப்பாக அழகிய வண்ண மற்றும் எம்பராய்டரி குர்தாவாகவும் கிடைக்கின்றன.
சளி, காய்ச்சல் என குழந்தைகளின் ஆரோக்கியத்தை முடக்கும் வைரஸ், பாக்டீரியாக்களிடமிருந்து உங்கள் குழந்தையை தற்காத்துக்கொள்வது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.
1. காய்ச்சல் என்பது வியாதி அல்ல, உடலில் ஏற்பட்ட ஓர் உபாதைக்கு எதிராக உடல் மேற்கொள்ளும் போர். நம் உடலுக்குள் நுழைந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை கொன்றொழிக்கும் பொருட்டு ஏற்படுவதுதான் உடற்சூடு. உபாதைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது காய்ச்சல் விடைபெறும்.
2. பாரசிட்டமால் கொடுத்தாலே காய்ச்சல் சரியாகிறது என்றால், அது உடல்வலி மற்றும் சோர்வினால் ஏற்பட்ட காய்ச்சலாக இருக்கலாம். மருந்து கொடுக்கும் இடைவெளி, குறைந்தபட்சம் 4 மணி நேரமேனும் இருக்க வேண்டும். காய்ச்சலால் உடல் தகித்தால், 'ஸ்பான்ச் பாத்' முறையில், ஈரத்துணியை வைத்து உடலை தலை முதல் பாதம் வரை, சூடு தணியும் வரை ஒத்தி எடுப்பது நலம். 48 மணி நேரத்திற்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை காண்பது நலம்.
3. சளியினால் காய்ச்சல் என்றால், எடுத்தவுடன் ஆன்ட்டிப் பயாடிக் மருந்துகளை நாடுவது நல்லதல்ல; மருத்துவர் தரும் வழக்கமான சளி மருந்தே போதும். அவ்வப்போது வெந்நீர் மற்றும் குளிர்ச்சி அல்லாத பொருட்களைத் தருவது போதும்.
4. சுக்கு, மிளகு, சேர்ந்த கஷாயமும், துளசி, ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி, கொஞ்சம் ஆறியப் பிறகு சிறிது தேன் கலந்து, காலை, மாலை என இருவேளைகள் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம்.
5. குடிக்கும் நீரைத் தூய்மைப்படுத்தி காய்ச்சிக் கொடுப்பதாலும், சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமும் டைபாய்ட் மற்றும் சில வைரஸ் காய்ச்சலை தவிர்க்கலாம்
6. போதிய நீரை அவ்வப்போது குடிக்க வைத்து, அடிக்கடிச் சிறுநீர் கழித்தால் நோய்க்கிருமிகள் உடலை விட்டு வெளியேறும். 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற திருக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நோயின் மூலகூறுக்குச் சிகிச்சை செய்வதே நலம்
7. பழம், பழச்சாறு போன்றவைகளை உணவுக்கு முன்பு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னராவது கொடுக்க வேண்டும். அல்லது உணவிற்கு பின்பு இரண்டு மணிநேரமேனும் கழித்துக் கொடுப்பது, அதன் பூரண சக்தியை உடலுக்குத் தரும்.
8. கொசு மருந்துகளையும் கொசுவர்த்திகளையும் தவிர்த்து வேப்பிலைப்புகை, பூண்டு, கற்பூரம், கொசு வலை அடித்தல், வீட்டினை, சுற்றுப்புறத்தைத் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கை வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றலாம்
9. காய்ச்சலில் குழந்தைகள் இருந்தால், மருந்துக் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள், அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் உரையாடிக் கொண்டும் அல்லது உங்கள் அருகாமையைக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் .
10. குழந்தையின் உடல்நலத்திற்கும் மனநலனிற்கும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுங்கள்
தவழ்வது, நடப்பது, ஓடுவது ஆகியவை 5 வயதுக்குள்ளாகவே நிகழ்ந்து விடுவதால் குழந்தைகளின் இந்த வயது காலங்களில் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டவேண்டும்.
உரிய கவனிப்பு இன்மை காரணமாக குழந்தைகள் இறப்பது உலகம் முழுக்க அதிகரித்து வருகின்றது. அதுவும் வீடுகளில் பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்களுடன் வசிக்கும்போதே உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு சுமார் 1,70,000-ஐ தொடுகிறது. குறிப்பாக சமையல் அறை, வசிப்பறை, மாடி அறை, பால்கனி ஆகியவற்றில் அதிகளவில் குழந்தைகள் விபத்துகளை சந்திக்க நேரிடுகின்றது.
குளியல் அறையில் தண்ணீருக்குள் மூழ்குதல், மண்எண்ணெய் மற்றும் தவறான மாத்திரைகள் விழுங்குதல், மருந்துகளை குடித்தல் போன்றவற்றினால் களவாடப்பட்ட பிஞ்சு உயிர்களும் அதிகம். மாடியில் இருந்து தவறி விழுவதால் இறக்கும் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு சுமார் 43 ஆயிரமாம்.
இவை தவிர, குறைப்பிரசவம், பிறப்பின்போது மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, மலேரியா ஆகியவற்றினால் நேரிடும் மரணங்களும் குறிப்பிடத்தகுந்தவை. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 56 லட்சம் முதல் 60 லட்சம் குழந்தைகள் வரை உயிர் இழக்கின்றன. 5 வயதை எட்டுவதற்குள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 45 சதவீத குழந்தைகள் இறக்கிறார்கள்.
இந்த இறப்புகள் தவிர்க்கக் கூடியவைதான் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதியமான ‘யுனிசெப்’ கூறுகின்றது. பிஞ்சு குழந்தைகள் பலியாவதற்கு குடும்பத்தினரின் அசட்டையே முக்கிய காரணம் என்று குழந்தைகள் விபத்து தொடர்பான ஆய்வறிக்கைகளும், புள்ளி விவரங்களும் கூறுகின்றன.
தவழ்வது, நடப்பது, ஓடுவது ஆகியவை 5 வயதுக்குள்ளாகவே நிகழ்ந்து விடுவதால் குழந்தைகளின் இந்த வயது காலங்களில் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டவேண்டும். சுட்டிக் குழந்தைகளை மட்டுமே நன்கு கண்காணிக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் பெற்றோரிடையே காணப்படுகின்றது. இதில் சுட்டி, நடுத்தர, மந்த குழந்தைகள் என பிரிக்க இயலாது. ஒரு சில நொடிப்பொழுது கூட குழந்தைகள் தங்களது கண்காணிப்பை மீறாத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும். அதனால்தான் என்னவோ நமது முன்னோர்கள் குழந்தை வளர்ப்பை ஒரு கலை என கூறினர் போலும்.
-லால்குடி மாயவன்
இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.
இசையும் , நடனமும், குழந்தைகளின் புலன்களுக்கு இனிமையாகவும், தாளகதியுடனும் இருத்தல் அவசியம். பாடலின் அர்த்தத்தை விட ஒலியின் அழகை அவர்களை ரசிக்க வைக்கச் செய்ய வேண்டும்.உயிர்ப்புள்ள அசைவுகளும், பதிவுகளும், அவர்கள் காதுகளையும், மனதையும் மகிழ்விக்கின்றன.தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.
1. பாடல்களைப் பாடவும்: சூழ்நிலைக் கேற்றவாறு, உறங்க வைப்பதற்கோ, வெளியில் அழைத்துச் செல்கையிலோ அதற்கேற்ற விதமான பாடலைப் பாடவும். குழந்தை பாடா விட்டாலும், அதனுடன் தொடர்புடைய செயலை (கைதட்ட, தலையாட்ட) செய்ய ஏதுவாக இருக்கும்.
2. நீங்களே முழுப் பாடலையும் பாடவும். வரி வரியாக சொல்லித் தர முயற்சிக்காமல், முழுப்பாடலையும், குழந்தை கவனிக்குமாறு பாடவும். ஒரே பாடலை பலமுறை பாடிக் காட்டவும்.
3. பாடலின் எல்லா வார்த்தைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிக்காதீர்கள். எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பாடட்டும். அதுவே இன்பமாக இருக்கும்.
4. பாடலின் ராகம், டெக்னிக் போன்றவைகளை வலியக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டாம். அவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை விட பாடுகிறார்கள் என்பது முக்கியமானது.

5. குழந்தையின் பாடலை ரெகார்ட் செய்து அவர்களுக்கு மீண்டும் போட்டுக் காட்டவும். அந்தப் பாடலுக்கே அவர்களை ஆடச் சொல்லவும்.
6. அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடல், ரைம்ஸில் அதில் வரும் பெயரை எடுத்து விட்டு, அவர்கள் பெயரைப் போட்டுப் பாடவும். உதாரணம்: ஜானி ஜானி எஸ் பாப்பா
7. மிக மெதுவாக, குழந்தை நீங்கள் விட்ட சொல்லை நிரப்புமாறு பாடவும்.
இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, பிற்காலத்தில் இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.
இசையினால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் வளர்ச்சிகள் எல்லாமே, வெறுமனே இசையை, அவர்கள் கேட்பதால் மட்டுமே நிகழ்ந்து விடுவதில்லை. ஏதேனும் ஒரு இசைக் கருவியை (பியானோ அல்லது வயலின் அல்லது வேறு ஏதேனும் ஒன்று) வாசிக்கப் பயிற்சி பெறுவதே எல்லா நல்ல பலன்களையும் ஒருசேர அளிக்க வல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் வாழும் குழந்தைகளைவிட, வீட்டில் ஒற்றைக் குழந்தையாக வளர்கிறவர்களுக்கு எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கூட்டுக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்டின் நிலை வேறு.
மற்ற சகோதர உறவுகளுடன் இணைந்து வாழ்வதால் சிங்கிள் சைல்ட் என்று நினைக்க வேண்டியதில்லை. அதுவே, மற்றவர்களுடன் தன்னுடைய உணர்வுகளையும், உடமைகளையும் கூட்டுக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்ட் பகிர்ந்துகொள்ளப் பழகியிருக்கும். ஆனால், தனிக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்ட் அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது.
எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.
2, 3 வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும்.






