என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும். இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள்.

    இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

    குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்கும் வழிகள் இவை...

    * பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முன்உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும்.



    * ஸ்மார்ட்போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள்.

    * குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள்.

    * குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

    * ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள், கலைப்பொருட்கள் உருவாக்க நேரம் செலவிடுங்கள்.

    * விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    * குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!
    தமிழ் மொழியின் சிறப்பை நம் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்து உரைப்பதுபோல், தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு பெயர் வைத்து சிறப்பு சேர்ப்போம்.
    ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி’ என்பார்கள். முன்பெல்லாம் தன் தந்தையின் பெயரையே தன் குழந்தைக்கு வைத்து மகிழ்ந்தனர். இந்த பெயர்களை வைத்தே அவர்களின் முன்னோர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. ஆனால் இன்று பலருக்கு தன் தாத்தாவின் பெயர்கூட தெரியவில்லை. 

    தன் மொழியின் இனிமை வேறு மொழிக்கு கிடையாது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அர்த்தம் உள்ள தமிழ் பெயர்களை வைத்து அதன் பொருளையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அதன் மூலம் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க கற்றுக்கொள்வார்கள். 

    தமிழுக்கு ஒரு இழுக்கு என்று முகநூலில் வரும்போது அதைக்கண்டு பொங்கி எழுந்து நம்முடைய மன வருத்தத்தை பதிவு செய்கிறோம். அதில் கூட பலர் தமிழ் எழுத்துக்களை தவறாகத்தான் பதிவு செய்கிறார்கள். நாம் புதுமைக்கு மாறுவதாக நினைத்து பழமையை மறந்து, பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மறந்து வருகிறோம். 

    நவீனகால பெயர் சூட்டுகிறோம் என்று நினைத்துக்கொண்டு வாயில் நுழையாத பெயரை வைத்து அதையும் சுருக்கி அழைக்கிறோம். அவர்களின் பெயரைக்கூட அழைக்க முடியாமல் பெரியவர்கள் திணறுகிறார்கள் என்பது வேதனையே. ஒருவரின் பெயரில் எத்தனை உயிரோட்டம் உள்ளது என்பதை உணர்ந்தே நம்முன்னோர்கள் நமக்கு பெயர் வைத்துள்ளனர்.

    உதாரணமாக கார்மேகம் என்று தன்னுடைய குழந்தையை அழைக்கும் தாய், அந்த வருண பகவானையே இந்த மண்ணிற்கு மழையாக வா என்று அழைப்பது போல் உள்ளது. இந்த பொருள் பொதிந்த தமிழ் மொழியின் உன்னதத்தையும், சிறப்பையும் நம் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்து உரைப்பதுபோல், இனி அனைவரும் தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு பெயர் வைத்து சிறப்பு சேர்ப்போம்.

    -உமரியான்
    பச்சிளம் குழந்தைகளின் சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதனால் குழந்தை பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.
    பச்சிளம் குழந்தைகளின் சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதனால் குழந்தை பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.

    குறிப்பாக குழந்தையின் முதுகெலும்பு பகுதி வலுவாக இருக்காது. அதன் காரணமாக தலை பாரத்தை சுமக்கும் வலிமை கொண்டிருக்காது. தொட்டிலில் இருந்து தூக்கும்போது கவனமாக கையாள வேண்டும். மற்றவர்கள் கொஞ்சுவதற்கு தூக்கும்போதும் குழந்தையின் தலைப்பகுதியை தாங்கி பிடிக்கும் வகையில் கைகளை வைத்திருக்கிறார்களா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால் அதற்கு பசி மட்டுமே காரணமாக இருக்காது. சோர்வாகவோ, அசவு கரியமாகவோ இருந்தால் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தூங்கும் நேரம் அதிகமாக இருப்பதே அதன் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். ஆதலால் பச்சிளம் குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    குழந்தைக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தாய்ப்பால் கொடுப்பதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நேர வரை முறையில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது. நேரம் தவறாமல் பசியை போக்குவது அதன் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடல் எடை அதிகரிப்புக்கும், வளர்ச்சிக்கும் துணை புரியும்.



    குழந்தையை கொஞ்சும்போது தூக்கிப்பிடித்தோ, குலுக்கவோ கூடாது. அது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். குளிப்பாட்டும்போதும் கவனமாக கையாள வேண்டும். வெதுவெதுப்பான நீரில்தான் குளிக்க வைக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துவது சிறப்பானது. மிருதுவான சருமமாக இருக்கும் என்பதால் அதற்கேற்ற மென்மையான சோப்பு மற்றும் எண்ணெய்யை உபயோகிக்க வேண்டும். 

    காதுகளிலோ, மூக்கிலோ தண்ணீர் உட்புகாதபடி கவனமாக குளிக்க வைக்க வேண்டும். குழந்தையின் ஆழ்ந்த தூக்கத்திற்கு குளியல் அவசியம் என்பதால் அந்த வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் மட்டுமே குளியல் விஷயத்தில் டாக்டரிடம் கலந்தா லோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    குழந்தையின் கைவிரல் நகங்கள் மென்மையாகவும், மெல்லியதாகவும் இருக்கும். அவை வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் நகம் வெட்ட வேண்டியிருக்கும். நகவெட்டியை உபயோகிக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். குளிர் காலத்தில் பனி தாக்கங்களை கட்டுப்படுத்தும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
    குழந்தைகளை எவ்வித குறையுமின்றி, நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக அவர்களை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும்.
    குழந்தைகளை எவ்வித குறையுமின்றி, நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக அவர்களை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளை சில பழக்கங்கள் பெரிதும் பாதிக்கின்றன.

    அவற்றை நீங்கள் அறிந்திருந்தும், அதனை நீங்கள் கண்டு கொள்வதில்லை; அவற்றை சரிசெய்ய பெரிதாய் அக்கறை காட்டுவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளின் சில மோசமான பழக்கங்கள் பற்றி பார்க்கலாம். குறிப்பாக, குழந்தைகள் குறட்டை விடுவது சரியா தவறா என பார்க்கலாம்.

    குறட்டை என்பது சுற்றியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்று மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் குறட்டையால் உடலின் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றது என்பதை நாம் அறிவதில்லை. குழந்தைகள் குறட்டை விட்டால், முதலாக அவர்களின் கற்றல் திறன் பாதிப்படைகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

    11 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அக்குழந்தைகள் அதிக அளவில் குறட்டை விடுகின்றனர் என்றும், தொடர்ச்சியாக குறட்டைவிடும் குழந்தைகள் பகலில் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் இருப்பதாகவும், படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாகவும், அவதானிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், மந்த வளர்ச்சி நிலை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.



    இன்றைய கால குழந்தைகள் சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையே உண்ணுகிறார்கள். இது பெற்றோர்களுக்கு சர்வ சாதாரணமாக தோன்றினாலும், குழந்தைகள் வளர வளர உப்பு அதிகமுள்ள உணவுகளுக்கு அடிமையாகி, இது ஒரு பெரும்  பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. அதிக உப்பு சேர்த்த உணவுகளை உண்பதால், குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், வாதம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

    இந்நோய் பாதிப்புகளைத் தடுக்க, குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்; மேலும் இளம்வயதிலேயே, அதாவது குழந்தை பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுமுறை குறித்து கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும், காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

    உங்கள் குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உங்களின் இன்றைய குழந்தைகள் இருமடங்கு உப்பை உண்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த மோசமான உண்மையை, உணர்ந்து பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை குழந்தைகளுக்கு பழக்க முயற்சிக்க வேண்டும்.
    குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்பதையும், அமைதிப்படுத்தும் வழிகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்பதையும், அமைதிப்படுத்தும் வழிகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம். 

    பொதுவாக, குழந்தைகளின் அழுகைக்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

    1. பசியினால் அழலாம்
    2. வயிற்றில் உள்ள வாயு வெளியேறுவதற்காக
    3. சிறுநீர் கழிப்பதற்காக

    குழந்தைகள், இவை போன்ற அசாதாரண நிலையைத் தெரிவிப்பதற்காகவே அழுவார்கள்.

    சில குழந்தைகள், அம்மாவின் அரவணைப்பைத் தேடி அழும். சில, அம்மா நம்மை ரொம்ப நேரமாக கவனிக்கவில்லையே என்பதற்காக அழும். ஈ, எறும்பு தொந்தரவு இருந்தாலும் படுக்கை வசதி சரியில்லாமல் இருந்தாலும் அழுவார்கள்.

    பிறந்த குழந்தை, பால் குடித்து வயிறு நிறைந்துவிட்டால், இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் வரை தூங்கும். அரை மணி நேரத்துக்குள் அழுதால், என்ன பிரச்சனை என்பதை அறிய வேண்டும். டாக்டரிடம் காட்டி, அதைச் சரிசெய்ய வேண்டும். நான்கு, ஐந்து மாதங்கள் வரைதான் இந்தப் பிரச்னைகள் இருக்கும்.

    சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு :

    கூட்டமான இடங்களில் இரைச்சலாக இருப்பது, சுவாசிக்க போதுமான காற்று இல்லையென்றால், பூச்சிக் கடித்திருந்தால், வயிறு வலித்தால், குளிர் காலத்தில் மற்றும் சளி இருந்தாலும் காது வலிக்கும் இவற்றாலும் குழந்தைகள் அழக்கூடும்.

    குழந்தையைப் பாதுகாக்கும் பெற்றோர் கீழ்காணும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

    1. தாய்ப்பால் முழுமையாகக் கொடுக்க வேண்டும்.
    2. கதகதப்பாக வைத்துக்கொள்ளவும்.
    3. குழந்தையைத் தூக்கும் முன், நம் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
    4. ஜலதோஷம் உள்ளவர்கள் தூக்கக்கூடாது.

    மிதமான காற்றும் லேசான சூரிய ஒளியும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இப்படியெல்லாம் உங்கள் குழந்தையைப் பார்த்துக்கொண்டால், எப்போதும் புன்னகைதான்.

    உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதா? உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதா? உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

    1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.

    2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும்.



    3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வீட்டுப் பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள். இப்போது டோராவின் வீட்டுப் பாடம் முடிந்துவிட்டது. இனி சோட்டா பீமின் வீட்டுப் பாடம் மட்டுமே மீதம் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்தப் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை தரும்.

    4. குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது. வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது அடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள். ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்.

    5. உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்ட  சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட சொட்டு மருந்து முகாம், ஜனவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படவுள்ளது. 

    இளம்பிள்ளை வாதம் உங்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க, எளிமையான வழிகள் பலஉள்ளன. குழந்தை பிறந்த பிறகு, 6, 10 மற்றும் 14-வது வாரங்களில் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்; அதன் பின்னர், ஒன்றரை வருடத்திலும், குழந்தைக்கு 5 வயதாகும்போதும் போலியோ சொட்டு மருந்து கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

    ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



    போலியோ எனப்படுகிற வைரஸ் தொற்று, வாந்தி, தலை மற்றும் தசைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தென்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    போலியோவால் தாக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் ஒரு பகுதி தளர்ச்சி அடையும் அல்லது செயல்படாதவாறு முடம் ஆகலாம். பெரும்பாலும், இளம்பிள்ளை வாதம் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ வரலாம். நாட்கள் செல்லச்செல்ல முடங்கிய கால், மற்ற காலினைப் போல், சீராக வளராமல் சூம்பி காணப்படும்.

    போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமாக எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது. கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே ஊசி போடலாம். அவசியம் இன்றி போடப்படும் ஊசியால் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மழலைப் பருவத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. எனவே, இளம் தாய்மார்கள் கூடுமான வரை தொடர்ந்து குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது. 
    குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
    குழந்தைகளுக்கு விளையாடும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு, இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. மோசமான மிகவும் ஆழமான வெட்டுக் காயங்களால் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் தொற்றுகள் சில சமயம் எலும்புகளைப் பாதித்து ஆஸ்டியோமைலிட்டிஸ் என்கின்ற எலும்பு தொற்று நோயை உருவாக்கும். 

    இந்த எலும்பு தோற்றினை ஸ்டெப்பெல்லோ காக்கஸ் ஏரியஸ் என்கின்ற பாக்டீரியாவே பொதுவாக ஏற்படுத்துகிறது. 
    குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.

    எலும்புகளில் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    எலும்புகளில் பாக்டீரியா தொற்றுவது பல வழிகளில் ஏற்படுகிறது. உடலில் பாக்டீரியாவானது ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக எலும்புகளுக்குள் நுழைகின்றன. இதற்கு யஹமட்டோஜெனஸ் ஆஸ்டியோ மைலிட்டிஸ் என்று பெயர் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் தொற்றே ஏற்படுகிறது.

    சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமான/ஆழமான வெட்டுக் காயங்களின் வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியாக்கள் திசுக்களின் ஊடாகவும், எலும்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் மூலமும் ஆஸ்டியோமைலிட்டிஸ் உருவாக காரணமாக ஆகி விடுகிறது.

    வயதானவர்களிடம் கால் மற்றும் பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த இடத்தில் நடைபெறும் ரத்த ஒட்டத்தினாலும் இந்தத் தொற்று ஏற்படலாம்.

    இதன் நோய் அறிகுறி குணங்கள என்ன?

    (ஆஸ்டியேமைலிட்டிஸ்) எலும்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலபேருக்கு காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாம்.

    பாதிக்கப்பட்ட எலும்புகள் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம், அல்லது சிவந்து வீங்கியும். தடித்தும் இருக்கலாம். ஆனால் குழந்தைகளிடம், பச்சிளம் சிறார்களிடமும் இது எந்த ஒரு வலியோ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையோ இது வெளிப்படுத்தாது. மேலும் வயதான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்கள் நரம்புகளால் இந்த வலியை உணர முடிவதில்லை.

    மருத்துவ சிகிச்சைகள் என்ன?

    பாதிக்கப்பட்ட எலும்புகளில் வலி அல்லது வீக்கம், ஆனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால் ஆஸ்டியோ மைலிட்டிஸ் நமது எலும்புகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதனை மறந்து விட கூடாது.

    இதற்கான சிகிச்சைகள் தற்போது தாராளமாக அனைத்து நகரங்களிலும் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியில் இருந்து ஊசி மூலம் பாக்டீரியாவினை எடுத்து அது எந்த வகையான பாக்டீரியா என சோதனை மூலம் கண்டறியப்படும் அதன் பிறகு அதற்கு தந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.

    மேலும் சில பேருக்கும் எலும்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட எலும்பு சிதைவுகளில் உள்ள சீழ், போன்றவற்றை வெளியே எடுத்து விடுவதன் மூலம், அந்த எலும்புப் பகுதி சுத்தம் அடைகிறது. இதனால் விரைவாக குணமடையலாம்.

    இந்நோய் வருவதற்கு காரணமான ஆழ்ந்த வெட்டுக் காயங்கள் இரத்தக் காயங்கள் போன்றவை ஏற்படும். பட்சத்தில் சோப் அல்லது குழாயில் ஊற்றும் நீரினால் நன்றாக குறைந்தது 5 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காயம்பட்ட இடத்தில் ஆன்டிபயாடிக் கிரீம் தடவ வேண்டும்.

    அக்காயத்தை சுத்தமாக வைக்க கிருமிகள் நீக்கப்பட்ட வலைத்துணியால் மூட வேணடும். அதில் கிருமிநாசினி மருந்தை தடவ வேண்டும். காயம் ஆறாமல் இருந்தாலோ அல்லது அதில் தொடர்ந்து வலி இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
    செயல் வழிக்கற்றல் முறையை சிறப்படைய செய்ய வகுப்பறையில் படைப்பாற்றல், அனுபவ முதிர்ச்சியில் ஆசிரியர்கள் பொறுப்புணர்வை பள்ளிகளில் வெளிப்படுத்த வேண்டும்.
    தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அடைய வேண்டிய திறன்கள் ஒரு ஏணி வடிவில் அமைக்கப்பட்டு, அதில் பல மைல் கற்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஏணியின் ஒவ்வொரு படிக்கும் உரிய பல செயல்முறைகளும் அவற்றிற்கான குறியீடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்ட குழந்தை ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்கிறது.

    வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள். பல குழுக்களாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து, ஆசிரியரின் துணையுடனோ, சக மாணவர் துணையுடனோ, தாமாகவோ கற்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்குச் சமமாகத் தரையில் அமர்ந்து கற்பிக்கிறார். பாடப் புத்தகத்துக்குப் பதிலாகப் படங்களும், சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் செயல்வழிக் கற்றல் முறை அரசு பள்ளிகளில் பெயரளவில் செயல்படுத்தப்படுவதால், அதன் தாக்கம் மாணவர்களை முழுமையாக சென்றடையவில்லை. எனவே, அரசு கொண்டுவர இருக்கும் புதிய கற்பித்தல் முறைகளில் செயல்வழி கற்றலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சமீபத்தில் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளின் சிறப்பு குழுக்கள் தமிழக அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ததில் செயல்வழி கற்றல் பல பள்ளிகளில் செயல்படாததை கண்டறிந்தது. இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. கல்வி முறைகளை சரியாக பின்பற்றுவதில் தொடக்க பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது, ஆசிரியர் பற்றாக்குறை. இன்று செயல் வழிக் கற்றல் வேண்டாமென எதிர்க்கும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டும் முதல் காரணம் இதுதான். இன்று தமிழக ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகளே.

    கட்டணம் வசூலிக்கும் எந்தப் பள்ளியாவது ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியரின்றி நடைபெற இயலுமா? கதியற்ற ஏழைக் குழந்தைகளுக்குத்தான் இந்நிலை. செயல்வழிக் கற்றல் பற்றி ஒரு கருத்து நிலவுகிறது. பல வகுப்பு மாணவர் ஒன்றாகக் கற்பதால் ஒரு ஆசிரியரே போதுமானது என்பது பொய்யான வாதம். செயல்வழிக் கல்வியில் ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவரைப் பற்றியும், மாணவர்களின் பலம், பலவீனங்கள் குறித்தும் சரியான கணிப்பு தேவை. ஆகவே இத்திட்டத்திற்குத் தேவைப்படுவது முன்பைவிட அதிக ஆசிரியரேயன்றிக் குறைவாக அல்ல. இத்திட்டத்தின் முதல் தேவை வகுப்பிற்கு ஓராசிரியர். இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்திலேயே கற்க முடியும் என்றாலும், ஒரு ஆண்டிலோ அல்லது நான்கு ஆண்டுகள் முடியும்போதோ குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை அனைத்துக் குழந்தைகளும் அடையச் செய்ய வேண்டும். மூன்றாம், நான்காம் வகுப்புகளிலுள்ள குழந்தைகள் சுயமாகக் கற்கும் திறமைகளை அடைந்துவிட வேண்டும். ஆனால் இன்று பாதிக்குக் குறைவாகத்தான் ஒரு எளிய கதை வாசிக்கும் திறமை பெற்றவர்களாக உள்ளனர்.

    குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் வார்த்தைகள் வாசிப்பதைத் தாண்டி, அடுத்த படிக்கு முன்னேறவில்லை. கணிதத்திலும் இதே நிலைதான். தாழ்வுற்ற இந்தத் திறமை நிலைக்குச் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று சொல்லவில்லை. ஆனால், இவ்வழிக் கற்றல் திறமை அடைவுகளில் முன்னேற்றம் எதையும் உண்டாக்கியிருப்பதாகத் தெரியவில்லை.

    செயல்வழிக் கற்றல் கல்வி அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே ஏன் நடைபெறுகிறது? மெட்ரிக் பள்ளிகளில் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? வசதிபடைத்த குழந்தைகள் ஏன் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்? இலவசப் பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் என்பது ஏற்கனவே இருவகைப் பள்ளிகளுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகரிக்குமோ? வசதியற்ற குழந்தைகள் போட்டிக் களத்தில் முன்பைவிட வலுவிழந்தவர்களாக ஓரங்கட்டி ஒதுக்கப்படும் நிலை ஏற்படுமோ? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. பல ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டம் மெட்ரிக் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளன. அதிலும், புதிய கல்விக் கொள்கை, புதிய கற்பித்தல் முறைகள் குறித்துப் பேசிவரும் தமிழக அரசு முதல் கட்டமாக இத்திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்க வேண்டும்.

    செயல்வழிக் கற்றல் ஆசிரியரை சிந்திக்க வைப்பதாக இல்லை. இத்திட்டத்தின் ஒவ்வொரு ஏணியின் ஒவ்வொரு மைல் கல்லும், ஒவ்வொரு மைல்கல்லின் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு படியின் ஒவ்வொரு செயல்பாடும், இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இறுக்கமாக வரையறுக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. இது கற்பித்தலின் ஜீவனையே கொன்றுவிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. செயல்வழிக் கற்றல் முறையோடு தொடர் மதிப்பீட்டு முறையும் இணைக்கப்பட்டுள்ளதால், பள்ளி நடக்கும் ஒரு நாளைக்குரிய 8 மணி நேரத்தில் 16 வகையான பதிவேடுகளை பராமரிப்பதிலேயே பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.

    இன்று இத்திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கற்றல் கல்வி முறையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அதன் அடிப்படை தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் குறித்து, அறிவுப்பூர்வமாக, அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க அரசை வற்புறுத்த வேண்டும்.

    நீண்ட காலமாக கல்வித் துறையில் இயங்கும் பல பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக செயல் வழிக்கற்றல் முறையை சிறப்படைய செய்ய வகுப்பறையில் படைப்பாற்றல், அனுபவ முதிர்ச்சியில் ஆசிரியர்கள் பொறுப்புணர்வை பள்ளிகளில் வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்து குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். செயல்வழிக்கற்றல் முறையும் முழுமைபெறும். எனவே செயல் வழிக்கற்றல் பாணியில் புதிதாக வரவிருக்கும் புதிய தொடக்கக் கல்வி கற்பித்தல் முறை மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து தொடராமல், அவற்றிற்கு தீர்வு காணப்பட்டு கற்பித்தலில் ஆசிரியர்களின் சிந்தனையை தூண்டுவதாக அமைய வேண்டும்.

    க.தர்மராஜ், ஆசிரியர்
    பிள்ளைகளுக்கு செய்தித் தாள்கள் (நாளிதழ்கள்) வாங்கித்தரலாம்; வீட்டுக்கு உள்ளேயே தரமான விவாதங்களில் ஈடுபடுத்தலாம்; சுயமாக சிந்திக்க, செயல்பட ஊக்குவிக்கலாம்.
    “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு”. நூறாண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதி சொன்னது. உண்மைதான். அகன்ற கல்வியும், ஆழ்ந்த அறிவும் தமிழ் இனத்தின் தனி அடையாளங்கள்.

    ஆனால் இதனை, காதலும் வீரமும் என்று எப்போது மாற்றினோமோ அப்போதே தொடங்கிவிட்டது நமது பின்னடைவு. தமிழகத்தில் கல்வி நிலை குறித்த ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. 14 முதல் 18 வயது வரை உள்ள உயர் நிலைப்பள்ளி மாணவர்களில், 24.6 சதவீத பேருக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில் சாதாரண கழித்தல் கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறது. 28.4 சதவீத பேருக்கு மட்டுமே, இரண்டு இலக்க எண்ணைப் பார்த்த உடனேயே, சரியாகச் சொல்ல முடிகிறது. இதை எல்லாம்விட, 17 சதவீத பேரால், இரண்டாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தைப் படிக்க முடியவில்லையாம்! அதிர்ச்சி தருகிறது இந்த ஆய்வறிக்கை. இதிலே வருத்தம் தருகிற இன்னொரு செய்தி, இந்த ஆய்வு தென் தமிழகத்திலே நடத்தப்பட்டு இருக்கிறது.

    பொதுவாக தமிழ்நாடு, கல்வி நிலையில் மேம்பட்டு இருந்தாலும், தென் தமிழகம் அதனினும் பல படிகள் மேலே, உலகத்தின் தலைசிறந்த கல்வி மண்டலமாகத் திகழ்கிற ஒரு பகுதி. தமிழ்நாட்டின் பிற பகுதிகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. விவசாயத்துக்கு, நெசவுக்கு, தொழில் முன்னேற்றத்துக்கு என்று தனித்தனியே பிரபலமாக சில மண்டலங்கள் இருப்பது போன்று, கல்விக்கு தென் தமிழக மாவட்டங்கள்.

    கல்வி நிறுவனங்கள், இவற்றை நிர்வகிக்கிற சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் நிறைந்து இருக்கிற, தமிழகத்தின் அறிவு மையமாகவே, பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது தென் தமிழகம். அங்கிருந்து வந்தவர்தான் பாரதியார். அதனால்தான் தமிழ்நாட்டின் கல்வி நிலை, அறிவு மேம்பாடு குறித்து, வானளாவப் புகழ்கிறார். அத்தனை உயரத்தில் இருந்த தென் தமிழகத்திலேயே, கல்வித் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. தாள முடியாத அதிர்ச்சி. இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆய்வறிக்கை சொல்வது ‘மொபைல் போன்’ பயன்பாடு.

    இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள், தங்களின் பொன்னான நேரத்தை ‘மொபைல்’களில் வீண் அடிக்கிறார்கள்; தவறான சிந்தனைகளுக்கும், தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிப் போகிறார்கள். போதாக்குறைக்கு, விதவிதமாய் வாகனங்கள், மது வகைகள், கேளிக்கைகள் வேறு. கல்வியில் நாட்டம் குறையத்தானே செய்யும்?



    இந்தச் சரிவுக்கு, பள்ளிகளையும் ஆசிரியர்களையும் குறை சொல்லி, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். குடும்பத்தில், பெரியவர்களின் பொறுப்பின்மைதான், இந்த அவல நிலைக்கு நேரடிக்காரணம். ‘படிக்கிற வயசுல எதுக்கு உனக்கு வண்டி...?’ என்று கேட்ட பெற்றோரை இன்று காணவில்லை. எட்டு வயது கூட நிரம்பாத, கீழே ஊன்றுவதற்கு கால் எட்டாத பையனை, ‘டூ வீலர்’ ஓட்டுவதற்கு அனுமதிக்கிற அம்மா, அப்பாக்கள் எத்தனை பேரைப் பார்க்கிறோம்...?

    ‘காலை எழுந்தவுடன் படிப்பு. விளக்கு வைக்கிற நேரம் வந்தா, ‘அரட்டை அடிச்சதெல்லாம் போதும்... கை கால் கழுவிட்டு, படிக்கிற வேலையைப் பாரு..’ என்று அதட்டிப் படிக்க வைத்த பெற்றோர் இருந்தார்கள். தினந்தோறும் காலையும், மாலையும் ஒவ்வொரு வீடும், ஒரு பள்ளி வகுப்பறை போலவே இருந்தது. இன்று...?

    ஒரு ஆச்சரியமான முரண்பாடு. அந்தக் காலத்துல, பெற்றோருக்கு படிப்பு இல்லை; ஆனால், பிள்ளைகள் நன்றாகப் படிப்பதற்கு, ஒழுக்கமாக வளர்வதற்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்களின் ஆசியால் நன்கு படித்து, நல்ல வேலையில், நல்ல சம்பாத்தியத்துடன் இருக்கின்றனர். இன்றைய பெற்றோர். என்ன நிலைமை? தங்களின் பிள்ளைகளுடன் சேர்ந்து தாமும் ஏதாவது வாசிக்கிற அறிவு, இன்றைய பெற்றொருக்கு நிரம்ப இருக்கிறதே...! ஆனால்... மன்னிக்கவும். பிள்ளைகளை விட, பெற்றோர்தாம் குடும்பங்களைக் கேளிக்கை மையங்களாக மாற்றி வைத்து இருக்கிறார்கள். இன்று, எத்தனை வீடுகளில் இருந்து, சிறுவர்கள் வாய் விட்டு உரக்க படிக்கிற சத்தத்தைக் கேட்க முடிகிறது... தமக்கு வாய்க்காத வசதியும், சுதந்திரமும் தம் பிள்ளைகளுக்குக் கிடைக்கட்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால், படிப்பு விஷயத்தில், இந்த தாராளம் வேண்டாமே...!

    பிள்ளைகளுக்கு செய்தித் தாள்கள் (நாளிதழ்கள்) வாங்கித்தரலாம்; நூலகங்களுக்கு செல்கிற வழக்கத்தை ஏற்படுத்தலாம்; வீட்டுக்கு உள்ளேயே தரமான விவாதங்களில் ஈடுபடுத்தலாம்; சுயமாக சிந்திக்க, செயல்பட ஊக்குவிக்கலாம்.

    இவை எல்லாம் வீட்டில், பெற்றோரும் பிற பெரியவர்களும் செய்ய வேண்டியவை. இது ஒரு குடும்பப் பொறுப்பு என்பதைத் தாண்டி, சமூகக் கடமை.

    ‘அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயம்’ நம் வீட்டில், நம் குடும்பத்தில், நம் வளர்ப்பில்தான் உருவாகிறது. நாம் அப்படித்தானே வளர்ந்தோம்? நிசந்தானே..?

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க...
    அம்மாவின் ஸ்மார்ட்போன்தான் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருளா? குட்டீஸ். “ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்துக்கிட்டேதான் சாப்பிடுவேன்” “செல்போனை விளையாட கொடுத்தாத்தான், ஹோம் ஒர்க் பண்ணுவேன்னு” அடம்பிடிக்கும் அம்முக்குட்டியா நீங்கள்?

    ஸ்மார்ட்போன் ஒரு பூதம் மாதிரி நம்மை கவர்ந்து இழுத்து பாழுங்குழியில் தள்ளுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை நீங்கள் அறிவீர்களா? இதோ கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க...

    இருந்த இடத்திலிருந்து இடையூறின்றி பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை, பொழுதுபோக்கு சாதனமாக எண்ணி விடாமல் பிடித்துக் கொண்டதுதான் நாம் செய்யும் முதல் தவறு என்கிறார்கள் விஞ்ஞானி அங்கிள்கள். மணிக்கணக்கில் நாம் ஸ்மார்ட்போனில் விளையாடுவதால் ஏற்படும் உடல் - மன மாற்றங்களை அவர்கள் பெரிய பட்டியலாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

    ‘புளூவேல்’ விளையாட்டின் விபரீதம் புரியாமல் விளையாடி உயிரைவிட்ட சகோதர சகோதரிகளின் கதைகளை நாம் செய்தியாகப் படித்தோம். ஆனால் நாமும் ஸ்மார்ட்போன் அடிமையாக இருக்கிறோம் என்பதை நம்ப மறுக்கிறோம். அம்மாவும், அப்பாவும் எவ்வளவு சொன்னாலும் நம்மால் செல்போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை. அது ஏன் அம்மூஸ்?. நாமும் செல்போன் அடிமையாகிவிட்டதன் அறிகுறிதான் அது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    உங்களுக்கு வீடியோ வழியாக கதை சொல்லவும், ரைம்ஸ் காட்டுவதற்கும் ஆரம்பத்தில் அம்மா ஸ்மார்ட்போனை கொடுத்தார்கள், பாடங்களைக்கூட படங்களாக ஸ்மார்ட்போன் வழியே காட்டினார்கள். அதை ரசித்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் படிப்பதற்குத் தவிர பொழுது போக்குவதற்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தவறு இல்லையா? அதை அம்மா சொல்லிக் காட்டினால், அப்பா கண்டித்தால் அடம் பிடிப்பது நியாயமா? கோபித்துக் கொள்வது முறையா? அம்மாவும், அப்பாவும் உங்கள் நன்மைக்காகத்தானே சொல்வார்கள் என்பதை புரிஞ்சுக்க மாட்டீங்களா குட்டீஸ்.

    உங்களுக்கு செல்போனில் என்ன விஷயம் வேண்டுமானாலும் பிடித்திருக்கலாம், ஆனால் அதற்காக நேரம் காலமின்றி போன்களை கைகளில் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கு நல்லதில்லையே?

    போன்கள் உங்கள் கைகளில் நீண்ட நேரம் இருப்பதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது தெரியுமா...



    நமது மண்டை ஓடு, முழுமையாக வளர்ச்சி அடைய 13 வயதாகும். ஸ்மார்ட்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு எளிதாக மூளையைத் தாக்கக்கூடியது என்று கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா? அதுவும், முழுமையாக வளராத மண்டை ஓட்டைக் கடந்து உங்களின் மென்மையான மூளையை அதிகமாக பாதிக்கிறது செல்போன் கதிர்வீச்சு.

    கதிர்வீச்சு அபாயத்தால் சிந்திக்கும் ஆற்றல் குறையும்னு சொல்றாங்க. ஹார்மோன்களும் சுரப்பும் தாறுமாறாகிறதாம். உங்களுக்கு அதிக கோபம் வருவதற்கு, பொறுமையிழந்து செயல்படுவதற்கும் இந்த ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களே காரணம்னு கண்டுபிடிச்சிருக்காங்க ஆராய்ச்சியாளர்கள்.

    ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்களால் அறிவு வளர்வதைவிட, தீமைகளே அதிகமாக உள்ளன. உங்கள் புத்திசாலித்தனம் தூண்டப்படுவதைவிட அதிகமாக கோபமும், ஆத்திரமும்தான் தூண்டப்படுகிறது. இதனால் மனஅழுத்தமும் அதிகரிக்கிறது. கண்டிக்கும் பெற்றோர் மீதும் பாசம் குறைந்து, ஆத்திரம் வருகிறது.

    ‘அம்மா எதற்கெடுத்தாலும் திட்றாங்க’ என தவறாக சிந்திக்கும் அளவுக்கு மூளையை மழுங்கடித்துவிடுகிறது ஸ்மார்ட்போன்கள். நம் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. அடம்பிடிக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. பெற்றோரை உதாசீனப்படுத்தும் குணத்தையும் தூண்டுகிறது.

    ஓடி, ஆடி விளையாடும் விருப்பத்தை குறைக்கும் செல்போன்கள் உங்கள் உடல் வளர்ச்சியுடன், மனவளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான் போன்ற தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 80 முதல் 90 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் அடிமையாகி இருக்கிறார்களாம். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதில்லை.

    ஆம், உங்களால் செல்போன் இன்றி இருக்க முடியவில்லைதானே, அப்போ அவங்க சொல்றது உண்மைதான். அம்மா, அப்பா சொன்னதையேதான், ஆராய்ச்சியாளரும் சொல்லியிருக்காங்க. நீங்க எப்போ செல்போனை பயன்படுத்தமாட்டேன்னு சேலஞ்ச் செய்யப்போறீங்க? குட்டீஸ். உடனே உங்களை மாத்திக்கிட்டா நீங்கதான் சமர்த்து!
    குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.
    பழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நல்லதுக்கு கண்டித்தால் கூட விபரீத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? தீர்வு என்ன? என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகள் விடை தெரியா கேள்விகள் அல்ல.

    குழந்தைகள் மனவலிமை பெற முதல் வழி குழந்தை வளர்ப்பு. அண்டை வீட்டாரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ட காலங்களில் குழந்தைகளுக்கு பாசம், விட்டு கொடுக்கும் பக்குவம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் முடித்து, சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாடிய காலம் அது. தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான். 

    காலத்தின் கட்டாயம் கூட. ஆனால், இந்நாட்களில் போலி முகமூடியிட்டு, அரிய நம் வாழ்வை நாமே தொலைத்து வருகிறோம். அதையே நம் குழந்தைகளுக்கு பெருமையோடு புகட்டுகிறோம். என் பையனுக்கு மொபைலில் இருக்கும் அத்தனை 

    அப்ளிகேஷன்களும் அத்துப்படி, அவனே டவுன்லோடு செய்து கேம்களை விளையாடுகிறான் என பல அம்மாக்களும், அப்பாக்களும் பெருமை பேசுகிறார்கள். பழைய கால விளையாட்டுகளில் கிடைத்த மகிழ்ச்சி, உடல் மற்றும் மன திடத்துக்கு பதிலாக, ஏக்கத்தையும், அகங்காரத்தையுமே இன்றைய செல்போன், கணினி விளையாட்டுகள் விதைக்கின்றன. தான் என்ற அகங்காரம், ஆணவத்தையும், இல்லை என்ற ஏக்கம் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தும்போது விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.

    நம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடலாக விளங்குகிறோம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்ற மனோபாவத்தை கடந்து நல்லொழுக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களின் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை விட, சற்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும். 

    ஒவ்வொரு பள்ளிக்கும் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும். மாதந்தோறும், ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் சந்திப்புகள் நடைபெறுவது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளை அரவணைத்து, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.

    -கலைச்செல்வி சரவணன்
    ×