என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.
பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான்.
இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.
ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.

ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது.
விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும்.
கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.
குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் பெற்றோரும், ஆசிரியரும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆண்டு தோறும் பாதுகாப்பான பயணம் குறித்தும், சாலை பாதுகாப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்திடும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைப் பிடிக்கப்பட்டு பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘விபத்தில்லாத தேசம்’ என்ற திட்டத்தோடு, ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. சாலையை பயன்படுத்துவோரின் அலட்சியமே 90 விழுக்காடு விபத்துக்கு காரணம் என்று இந்தியாவிலும் உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வளரும் நாடுகளில் ஏற் படும் அதிகப்படியான விபத்துக்கு காரணம் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.
“சாலை விதிகளை மதிப்போம்
மரணத்தை தவிர்ப்போம்”
வேகமாய் செல்வதை தவிர்க்கவேண்டும். சாலைகளில் செல்லும்போது கவனத்தை சிதறவிடும் செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்கு வரத்தை கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டு சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
உங்கள் கவனத்திற்கு..
* குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் பெற்றோரும், ஆசிரியரும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது நம்முடைய பாதுகாப்புக்காகவும்தான். ஆகையால், சாலை விதிகளை ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.
* சாலை விதிகள் என்ன, அவற்றை எப்படிச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள சின்னங் களுக்கு என்ன அர்த்தம்? ஆகிய விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
* போக்குவரத்துக் காவலர், சிக்னல் விளக்குகள் உள்ள இடங்களில் போக்கு வரத்துச் சின்னங்களின் கட்டளைகளான நிற்க, வழிவிடு சின்னங்கள் இருப்பின், அந்த இடங்களில் நின்று, இருபக்கமும் பார்த்து எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்புதான் சாலையை கடக்க வேண்டும்.
* பள்ளிக்கு நடந்து செல்பவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும் சாலையில் கவனமாக செல்ல வேண்டும்.
* சைக்கிளில் செல்லும்போது வலது-இடது திசை பார்த்து கவனம் சிதறாமல் சைக்கிளை ஓட்டிச்செல்லவேண்டும்.
* முன் செல்லும் வண்டியினை முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
* தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்றவைகளுக்கு தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
* போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.
* வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்டவேண்டும்.
* மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு பற்றி தெரிந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1 இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
2 இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.
3 சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை அதிகரிக்கும். ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.

4 ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.
5 மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.
6 தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
7 ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.
8 குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
ஒரு மொழியை கற்றுக்கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் வளரும்போது அதை தாங்களாகவே கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.
‘எந்த ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதும் உள்ளார்ந்த செயலாகும். அதாவது, ஒருவரது ஆர்வம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு மொழியைக்கற்றுக்கொள்வது அவசியமாகிறது’ என்கிறார் அவ்ரம் நோம் சோம்சுக்கி என்ற அமெரிக்க மொழியில் அறிஞர். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து தன்னைச்சுற்றி பேசப்படும் மொழியை கூர்ந்து கவனிக்கிறது. மேலும் வார்த்தைகளையும் கோர்த்து வாக்கியங்களாக மாற்றி பேசும் திறனை குழந்தைகள் இயல்பாகவே பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு மொழியை கற்றுக்கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் வளரும்போது அதை தாங்களாகவே கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள், அவர்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்ன மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அந்த மொழியை கற்றுக்கொள்வதில் எந்த வயது வித்தியாசமும் இருப்பதில்லை. எல்லாக்குழந்தைகளும் ஒரே வயதில் தான் தங்களது முதல் வார்த்தையை பேசவும், சொற்களை சேர்த்து வாக்கியங்களாக பேசவும் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் மொழியியல் வல்லுனர் நோம் சோம்சுக்கி.
அதேநேரத்தில் இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறார் பி.எப். ஸ்கின்னர் என்ற மற்றொரு மொழியியல் அறிஞர். ஒரு குழந்தை தனது அனுபவம், தனக்கு அளிக்கப்படும் பயிற்சி, தனக்கு அளிக்கப்படும் வெகுமதி, மற்றும் தண்டனை போன்றவற்றில் இருந்து மொழிகளை கற்றுக்கொள்கிறது என்று குறிப்பிடுகிறார் ஸ்கின்னர். இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.
அதாவது, ஒரு அறையில் நாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு தாய் தன் குழந்தையிடம் இது நாய் என்று கூறுகிறார். இதை அந்தக் குழந்தை நன்கு கவனித்துக்கொள்கிறது. பின்னர் அந்த தாய் இது என்ன? என்று நாயை சுட்டிக்காட்டி கேட்கும்போது, அந்தக்குழந்தை நாய் என்று சரியாக பதில் அளித்தால், அதை பாராட்டி அந்த தாய் ஒரு இனிப்பு பரிசளிக்கிறார். அப்போது அந்தக்குழந்தையின் மனதில், இது ஒரு நாய், இதன் பெயரை சரியாக சொன்னால் தனக்கு இனிப்பு கிடைக்கும் என்ற உணர்ந்துகொள்கிறது.

எனவே அடுத்த முறை நாயை பார்த்ததும் அந்தக் குழந்தை நாய் என்று சரியாக பேசுகிறது. இங்கே பாராட்டு என்பது இனிப்பாக மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு அன்பான புன்னகை, ‘ஹை நீ சரியாகச் சொல்லி விட்டாய்’ என்று ஒரு பாராட்டு போன்றவற்றின் மூலமும் குழந்தையை உற்சாகப்படுத்தலாம். இவ்வாறாகத்தான் குழந்தைகள் ஒவ்வொரு சொல்லாக கற்றுக்கொள்ளத்தொடங்குகிறது.
இதன் அடிப்படையில், வீட்டில் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஒரு மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் பிழையாக எதையும் உச்சரித்தால் அதையும் திருத்துகிறார்கள். மேலும் அவர்கள் சரியாகச்செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பரிசளித்து, பாராட்டி ஊக்கப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் சிறிய தண்டனைகள் மூலமும் அவர்களது தவறுகளை திருத்துகிறார்கள்.
ஒரு மொழியைக்கற்றுக்கொள்ள எந்த வயது ஏற்றது?
ஒருவர் ஒரு மொழியை பேசுவதற்கு கற்றுக்கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. எந்த வயதிலும் யாராலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் ஒரு மொழியை புதிதாக கற்றுக்கொள்ள வயது ஒரு தடையாக இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள். 5 வயதிற்குள் ஒரு மொழியை கற்றுக்கொள்வது மிக எளிது, அது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்தால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மீண்டும் பார்வையை கொடுக்க முடியும்.
ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்தால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் இலகுவாக மீண்டும் பார்வையை கொடுக்க முடியும். குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாததிற்குப் பின்னர் அதன் பார்வையை ஒரு தாயால் பரிசோதிக்க முடியும்.
உங்கள் குழந்தை உங்கள் முகத்தைப் பார்த்து சிரிக்கின்ற அதே வேளை ஏதாவது வெளிச்சத்தைக் காட்டும் போது அதனை நோக்கிப் பார்க்கின்றதா? என்பது தான் முதல் பரிசோதனை.
அத்துடன் ஒரு பொருளை சத்தம் செய்யாமல் அதன் கண்களில் தெரியும் படி காட்டி, குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி கொண்டு செல்லும்போது அப்பொருளை நீங்கள் காட்டும் திசையை நோக்கி திரும்பி பார்க்கின்றதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஏன் பொருளை சத்தம் செய்யாமல் காட்ட வேண்டும் என்றால், சிலவேளைகளில் சத்தத்தினை செவிமடுத்து சத்தம் வருகின்ற திசையை நோக்கி கூட அது பார்க்கலாம், அதனை கொண்டு நாம் குழந்தையின் பார்வை சரியாக இருக்கின்றது என்ற தீர்மானத்திற்கு வர முடியாது.
இது குழந்தை பிறந்து சுமார் இரண்டு மாதத்திற்குப் பின்னர் நீங்கள் அவர்களின் பார்வை தொடர்பாக செய்ய வேண்டிய சோதனைகள். இச்சோதனைகளை செய்யும்போது குழந்தைகளின் பார்வையில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கண் வைத்தியரை நாடுங்கள்.
புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை ஸ்நாக்ஸ் வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம்.
தயிர் சாதம், கேரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும். தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும்.
புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.
குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையின் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.
பெற்றவர்கள், அவர்கள் அறியாமலேயே செய்கிற சில தவறுகளால், பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.
பெற்றவர்கள், அவர்கள் அறியாமலேயே செய்கிற சில தவறுகளால், பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவை என்னென்ன தவறுகள் என்று தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாமே...
* குழந்தைகளுடன் நடந்துபோகையில், அவர்கள் எப்போதும் நம் வலது கையைப் பிடித்துக்கொண்டே நடக்கப் பிரியப்படுவார்கள். நம்முடைய வலது பக்கம், எப்போதும் வண்டிகள் போகும் சாலையின் பக்கமாக இருக்கும். அந்தக் கையால் பிள்ளை பிடித்துக்கொண்டு நடந்தால், முட்டுச்சந்தில்கூட பைக் ரேஸாக வண்டியை முறுக்கும் பையன்களால் ஆபத்து ஏற்படும்.
* டூ வீலரில் செல்லும்போது... ஸ்கூலுக்கு லேட்டாகி, பிள்ளையைச் சரியான நேரத்தில் விடவேண்டும் என ஆக்ஸிலேட்டரை முறுக்குவார்கள் சில அப்பாக்கள். இதுபோன்ற சமயங்களில் டூ வீலரில் ஹெல்மெட் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பயணிக்கும் குழந்தையின் நிலை ஆபத்தை உண்டாக்கும்.

* காரில் போகும்போது... சீட் பெல்ட் போடாமல் குழந்தைகளை அழைத்துச் செல்லுதல், பத்தே நிமிடத்தில் ஷாப்பிங்கை முடித்துவிடலாம் என்று குழந்தையை காரிலேயே விட்டுச்செல்லுதல் இரண்டுமே குழந்தைக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்... குழந்தையை காரில் விட்டுச்செல்கிற நேரத்தில், அவை காரின் ஏ.சி.யை அணைத்துவிட்டாலோ, ஏ.சி.யில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, காருக்குள் சூடு அதிகமாகி, குழந்தை மூச்சுத்திணறி இறக்க நேரிடலாம்.
* இன்றைய குழந்தைகள் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். சமையலும் இதற்கு விதிவிலக்கில்லை. நீங்கள் சமைக்கும்போது, பிள்ளைகள் சமையல் மேடையில் ஏறி, நானும் சமைக்கிறேன் என்று அடம்பிடிக்கும். குழந்தை ஆர்வமாகக் கேட்கிறதே என்று விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்போம். இது, நம் கண் முன்னால் நடப்பதோடு நிற்குமா? நாம் இல்லாத நேரத்தில் நடந்தால்... எனவே, கிச்சனுக்குள் அனுமதிக்க வேண்டாம்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக அக்கறை செலுத்துவதே, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
குழந்தைகளின் மேல் கொள்ளை பிரியமும் அதீத அக்கறையும் உடைய பெற்றோரா நீங்கள்? உங்கள் பாசத்தை கொஞ்சம் அளவாகவே காட்டுங்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக அக்கறை செலுத்துவதே, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பெற்றோர்கள் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகவே, அவர்களின் எல்லா செயல்களையும் கவனிக்கிறார்கள். அக்கறையும் செலுத்துகிறார்கள். அவர்கள் சொல்லும் அறிவுரைகளும் ஊக்கப்படுத்துதலும் வளர்ந்துவரும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வளர்ந்துவிட்ட பிள்ளைகள் செய்யும் வேலைகளை கவனித்துப் பாருங்கள். ஆனால், அது தொடர்பான கருத்துக்களை அவர்கள் செய்து முடித்த பிறகு சொல்லுங்கள். அவர்கள் ஒரு வேலையைத் தொடங்கும்போதே அதில் குறுக்கிடவோ, அவர்களுக்கு முன்முடிவுகளைத் தருவதோ கூடாது.
உங்களுடைய முடிவுகளைச் சொல்லி, அவர்களுடைய முடிவெடுக்கும் திறனைக் குறைக்கிறீர்கள். ஒரு குறுகிய வட்டத்தை விட்டு அவர்களால் வெளியே செல்ல முடியாமல் போகும். அவை அவர்களுடைய மனஅழுத்தத்தை அதிகரிக்கும்.
பெற்றோர்களில் குறிப்பாக, அம்மாக்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய முன்முடிவுகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பதால், குழந்தைகள் அந்த வட்டத்தைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். அப்படி செய்வது பெற்றோரின் கருத்துக்களை அவமதிக்கும் செயல் என்று கருதுகிறார்கள்.
அவர்களுடைய விருப்பங்களும், யோசிக்கும் திறனும் முடிவெடுக்கும் திறனும் குறைந்துவிடுகிறது. அது அவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தத்தைத் தருகிறது. சில நேரங்களில், அதுவே அவர்களைப் பெற்றோர்களிடம் இருந்து மனதளவில் விலகியிருக்க வைத்துவிடுகிறது.
பெற்றோர்களே உஷார்... நீங்கள் வாழ்க்கையில், சிறப்பாக முடிவெடுக்கும் ஆற்றல் உடையவராக இருந்தால், அதைப்பார்த்து வளரும் பிள்ளைகள், தானாகவே அவற்றைப் பின்பற்றும். பிள்ளைகள் அவர்களுடைய வேலைகளில் முடிவெடுக்கும்போது, ஒருபோதும் தேவையில்லாமல் அதில் நுழைந்து அக்கறை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாமே..
பெற்றோர் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தடுக்காமல், அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தடுக்காமல், அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினால், நீங்களும் உடன் சேர்ந்து சென்று அவர்களைக் கொஞ்சம் கண்காணியுங்கள். உங்களால் அவர்களுடன் சேர்ந்து நேரம் செலவிட முடியவில்லை என்பதற்காக அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது மிகத்தவறான விஷயம்.
குழந்தைகள் இயற்கைச்சூழலில் சென்று விளையாடுவதால் அவர்களின் உடல் நலம் மேம்படும். அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாடுவதால் அவர்களுடைய தசைகள் மற்றும் எலும்புகள் உறுதியாகின்றன.
வீட்டில் தனியே உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற தேவையில்லை. அவர்கள் ஓடியாடி விளையாடுவதே சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் வியர்வையாக வெளியேறும். அவர்கள் வெயிலில் விளையாடு போது அவர்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும். இதனால் அவர்கள் உடலளவில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.

குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் அவர்களது கற்கும் திறன் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் நட்புடன் பழகுதல், திட்டமிட்டு செயல்படுதல் போன்ற நற்குணங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதனால் புதிது புதிதாக கற்று கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். பள்ளியிலும்கூட அதே கவனத்துடன் அவர்களால் செயல் பட முடியும்.
மற்ற நண்பர்களுடன் இணைந்து விளையாடும்போது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படும் குழந்தைகளுக்கு மன உறுதியைத் தரும். அச்சத்தைப் போக்கி தைரியத்தை உண்டாக்கும்.
படைப்பாற்றல் அதிகரிக்கும்.
கூடி வாழ்தல், மற்றவர்களுடன் ஒத்துப்போதல் போன்ற சமூக வாழ்வியலைக் கற்றுக்கொள்ள முடியும்.
இதெல்லாம் சரி தான். இருந்தாலும் அப்படி விளையாட வெளியில் அனுப்பும்போது நீங்களும் அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கண்காணித்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டயட் என்ற பெயரில் கட்டாயத்துடன் சாப்பிடக் கொடுத்து, குழந்தைகள் அவற்றை முற்றிலும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்!
ஒருநாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்குப் பதிலாக வெறும் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடுவது, அல்லது காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடுவதான் டீடாக்ஸ் டயட். இதைக் கடைபிடிக்கும்போது முகப்பொலிவுடனும், இளமையாகவும், ஸ்லிம்மாகவும் இருக்கலாம். காய்கறிகளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்(antioxidants) உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றிவிடுவதே அதற்குக் காரணம்.
இந்த டயட் கன்ட்ரோல் முறையை 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் தற்போது பல பெற்றோர்கள், தங்களின் பள்ளி செல்லும் வயதுக் குழந்தைகளுக்கும், அவர்களின் உடல் பருமனைக் குறைக்க வேண்டி இந்த டீடாக்ஸ் டயட்டை பின்பற்றச் செய்கிறார்கள்.
குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட் கொடுப்பது தவறு. பொதுவாக மனிதர்களின் உடலுக்குக் கால்சியம், புரோட்டின், வைட்டமின் மற்றும் மினரல் ஆகிய சத்துகள் சரிவிகித அளவில் தேவை. அதுவும் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு இச்சத்துக்கள் கட்டாயமாகத் தேவை. அதனால் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு நாளன்றோ, அல்லது ஒரு நாளின் ஒரு வேளை என பல வேளைகளுக்கோ டீடாக்ஸ் டயட் கொடுக்கும்போது, அவர்களுக்கு மற்ற அத்தியாவசியச் சத்துகள் கிடைக்காமல் தடைபடும். எனவே, டீடாக்ஸ் டயட் குழந்தைகளுக்கு வேண்டாம்.

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகைப் பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம்.
குழந்தைகளின் எடை குறைய, டயட் வழியல்ல. அவர்களை ஓடியாடி விளையாடவிடவும். அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைக்கலாம். பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் என்றாலே முகம் சுளிக்கும் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டயட் என்ற பெயரில் அதை ஒருவிதக் கட்டாயத்துடன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்து, குழந்தைகள் அவற்றை முற்றிலும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்!
குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று கொண்டாடும் நம் சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை, எத்தனை வேதனை.
தேச மற்றும் சர்வதேச அரங்கில் தமிழகத்துக்கென்று தனியிடம் உண்டு. பண்பாட்டால், கலாசாரத்தால், பாரம்பரியத்தால் மாறுபட்ட தமிழகம் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஆனால் பெண்ணியம் போற்றும் தமிழகத்தின் நிலையை இன்றைக்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். பெண்களை தெய்வமாய் போற்றும் நம் மாநிலத்தில், பெண்களுக்கு எதிராக அரங்கேறும் நிகழ்வுகள் நாம் கட்டி காத்து வரும் பாரம்பரியத்தை, கலாசாரத்தை சீர்குலைப்பதாக இருக்கிறது. அதிலும், உலகம் அறியா குழந்தைகளும் பாலியல் ரீதியாக சீண்டப்படுவது, சிதைக்கப்படுவது வேதனையின் உச்சம்.
சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினி, மெத்த படித்த காமுகனின் காம பசிக்கு இரையாக்கப்பட்ட துயரம் தமிழகம் மட்டுமின்றி தேசம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பசியை தீர்த்துக்கொண்ட அந்த கயவன், சிறுமியை கொடூரமாக கொலையும் செய்தான். சிறை சென்று வெளியே வந்த அவன் தன் தாயையும் கொன்றது வேறு கதை.
இதனால் ரணமான இதயம் இன்னும் ஆறவில்லை. அதற்குள் (சில நாட்களுக்கு முன்பு) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் 4 வயது குழந்தையை இன்னொரு வாலிபன் பலாத்காரம் செய்து கொன்றுள்ளான். அடுத்த ஒரு, சில நாட்களில் அதே மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மூன்று வயது குழந்தையை முதியவர் சீரழித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகத்தை தரவும் தவறவில்லை. இவையெல்லாம் தமிழகம் மீது படிந்த, படியும் அகற்ற முடியா கறை. தமிழகத்துக்கு வந்த அவமானம், தலைகுனிவு.
பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொல்லப்படுவது தமிழகத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு துளியும் இல்லை என்பதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. இப்படியொரு நிலை, நம் தேசம் முழுமைக்கும் அடியெடுத்து வைத்து இருக்கிறது. அதாவது, கடந்த ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதில் கணிசமான குற்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் நடந்து இருக்கின்றன.

வெளிச்சத்துக்கு வந்துவிட்ட குற்றங்கள் தவிர்த்து, இன்னும் கவுரவத்துக்காக மூடி மறைக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் உண்டு. எங்கே போய்கொண்டிருக்கிறது சமூகநியதிகளும், நீதியை நிலைநாட்டும் சட்டங்களும்? பச்சிளம் குழந்தைகளை தம் இச்சைக்கு இரையாக்கும் கயவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக ஊடுருவி எளிதில் வெளிவந்து விடுகிறார்களே? சிறுமி ஹாசினியை கற்பழித்து, கொன்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி பாதியிலேயே சிறையில் இருந்து வெளிவந்து விட முடியும் என்றால், போலீசும், சட்டமும் இருந்து என்ன பயன்?
குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று கொண்டாடும் நம் சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை, எத்தனை வேதனை. புன்னகைக்கும் குழந்தைகளை போகப்பொருளாக பார்ப்பது தமிழ் சமூகத்துக்கே வந்த இழுக்கு அல்லவா? இதுபோன்ற துயர, அவமானகர, அபாயகர நிகழ்வுகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சமூகம் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது.
இதற்கு அரசின் பங்கு மிக முக்கியமானது. ஆபாச படங்களை அள்ளித்தரும் இணையங்களை இழுத்து மூட வேண்டும். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாச காட்சிகள் இடம்பெறாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மதுவினால் தான் குற்றங்கள் பன்மடங்கு பெருகுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, மதுவில்லா தமிழகத்தை பிரசவிக்க உடனடியாக தமிழக அரசு முன்வர வேண்டும்.
தவறு செய்யும் காமுகர்கள், கயவர்களை சட்டத்தின் பிடி ஒருபோதும் தப்புவிக்க கூடாது. இதற்கு வலுவான ஆதாரங்கள், சாட்சியங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை பெற்றுத்தர போலீஸ் துறை முன்வர வேண்டும். குழந்தைகளை சீண்டினால் ஒருபோதும் சிறைவாசம் விடாது என்பதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
இதில் பெற்றோருக்கு இருக்கும் பங்கும் அதிமுக்கியம். வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுத்தராமலும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் குழந்தைகளுக்கு புகட்டாமலும் பணத்தை மட்டும் நாடி என்ன பயன்? ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே நல்ல செயல்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். யாரிடம் எப்படி பழக வேண்டும்? யாரிடம் விலகி நிற்க வேண்டும்? என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைவரையும் தன் உறவினர்களாக, குடும்பத்தில் ஒருவராக பாவிக்கும் பண்பை சிறு வயதில் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும்.
பெற்றோர், சமூகம், சட்டம், அரசு தன் கடமையை செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்க முடியும். தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும். இனியொரு விதி செய்வோம். குழந்தைகளை காப்போம்.
சேலம் சுபா, எழுத்தாளர்
எப்போது குழந்தைகள் தவழவும், நிலை தடுமாறி நடக்கவும் துவங்குகிறார்களோ, அப்போது அவர்களை பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
குழந்தைகள் பிறந்து தவழ, நிலை தடுமாறி நடக்க ஆரம்பிக்கும் போது, அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அப்போது நிறைய பொறுமையும், அமைதியும் தாய்க்கு வேண்டும். இந்த நேரத்தில் குழந்தைகளை எப்படி கவனமாக பாதுகாக்க வேண்டும் மற்றும் எவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
1. எப்போது குழந்தைகள் தவழவும், நிலை தடுமாறி நடக்கவும் துவங்குகிறார்களோ, அப்போது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், அவர்கள் முன் நின்று அவர்களை அழைக்கலாம் அல்லது அவர்கள் முன் ஏதேனும் அவர்கள் கண்ணை பறிக்கும் வகையான பொருட்களை வைத்து அவர்கள் எடுக்க முன் வரும்படி செய்யலாம்.

2. எப்போது குழந்தையானது தவழ ஆரம்பிக்கிறதோ, அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் எந்த ஒரு பொருளையும் ஜன்னல் அருகே வைக்க வேண்டாம். ஏனெனில் அந்த பொருள் அவர்கள் கண்களைப் பறித்தால் கண்டிப்பாக எப்போதாவது அதை எடுக்க அவர்கள் முயற்சி செய்து, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எந்த ஒரு கூர்மையான பொருளையும் அவர்கள் முன்னாடி வைக்காதீர்கள். வீட்டின் கதவை திறந்து வைத்து வேலை செய்யாதீர்கள். சொல்லப்போனால், எந்த வேலை செய்தாலும், எப்போதும் அவர்களை கவனித்துக் கொண்டே செய்யுங்கள்.
3. குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் தவழ ஆரம்பித்தால், அவர்களை கட்டிலில் தனியாக விட்டு விட வேண்டாம். என்ன தான் அவர்களைச் சுற்றி தலையணை, விளையாட்டுப் பொருட்கள் என்று வைத்தாலும், தவழ ஆரம்பித்தால் அவர்கள் கை, கால்கள் துறுதுறுவென்று இருக்கும். அப்போது கட்டிலில் விட்டால் அவர்கள் விழ வேண்டிவரும். கட்டிலானது உயரம் குறைவாக இருந்தால் பாரவாயில்லை, ஆனால் உயரமாக இருந்தால் ஆபத்து தான். ஆகவே உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்தால் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் வைத்து செயல்படுங்கள்.






