என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பக்தரின் கனவில் உத்தரவான வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

    உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா சென்னிமலை பகுதியைச்சேர்ந்த நாகேஸ்வரி (வயது 31) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    வில்வம் சிவனையும், வேப்பிலை மாரியம்மனையும், துளசி பெருமாளையும், அருகம்புல் விநாயகரையும், விபூதி முருகனையும் குறிக்கிறது. இதை தவிர மஞ்சள் தூள் கிருமி நாசினியாகவும், மங்களகரமானது என்பதையும் குறிக்கிறது.

    இந்த தெய்வங்களின் சக்தி ஒன்று சேர்ந்து தற்போது உள்ள சூழ்நிலையில் உலகத்தை காக்கும் என்றும், மேலும் இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    மிக அதிகம் பேரால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பவர் சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவர் ஆவார். பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். இன்று சிறப்பு மிக்க வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினம். இன்று பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.

    வைகாசி வளர்பிறை அஷ்டமி தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.

    மேற்சொன்ன முறைப்படி வைகாசி வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
    வைகாசி மாதத்தில் (மே - ஜூன்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    16.5.2021 ஞாயிறு பஞ்சமி புனர்பூசம் சித்த காலை 9-10.30

    17.5.2021 திங்கள் பஞ்சமி புனர்பூசம் அமிர்த காலை 6-7

    28.5.2021 வெள்ளி துதியை மூலம் அமிர்த காலை 6-7

    4.6.2021 வெள்ளி தசமி உத்திரட்டாதி சித்த காலை 10-10.30

    6.6.2021 ஞாயிறு ஏகாதசி அசுவினி சித்த காலை 7-8

    13.6.2021 ஞாயிறு திருதியை புனர்பூசம் சித்த காலை 7-8

    14.6.2021 திங்கள் சதுர்த்தி பூசம் சித்த காலை 6-7.30
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவ விழா மூலவர் சன்னதி முன்பாக தொடங்கியது. இந்த விழாவில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா இந்த வருடமும் கோவில் உள் பிரகாரத்திலேயே நடந்தது. இதைப் போலவே நேற்று நடந்த வைகாசி மாத வசந்த உற்சவ விழா இக்கோவிலின் மூலவர் சன்னதி முன்பாக தொடங்கியது.

    இதில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இந்த விழாவில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து இந்த விழா கோவில் மூலவர் சன்னதியிலே நடைபெறுகிறது. மேலும் இந்த விழா வருகிற 26-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    ஆண்டுதோறும் இக்கோவிலின் வசந்த மண்டபத்தில் 10 நாள் நடைபெறும் இந்த திருவிழா இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கோவில் உள் வளாகத்திலேயே நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும்.
    சிவஸ்தலம் பெயர் -    திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று அழைக்கப்படுகிறது)
    இறைவன் பெயர்  - பாதாளேசுவரர்
    இறைவி பெயர்  - அலங்கார நாயகி

    தல வரலாறு: பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார்.

    தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். கோவில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காணபிப்பார்.

    தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

    கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.

    சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

    ஆலய முகவரி    

    அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
    அரித்துவார மங்கலம்
    அரித்துவார மங்கலம் அஞ்சல்
    கும்பகோணம் வட்டம்
    தஞ்சாவூர் மாவட்டம்
    PIN - 612802
    கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் நடை, 6 மாத கால குளிர்கால அடைப்புக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. இந்த பிரசித்தி பெற்ற இமயமலை கோவில் வாயில் கதவுகளை காலை 5 மணிக்குத் திறந்து குருக்கள் பூஜை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி பெயரில் முதல் பூஜை செய்யப்பட்டது.

    நடை திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலைமை குரு பாகேஷ் லிங் உள்ளிட்ட குருக்கள், அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரத் சிங் ராவத், மக்களின் பாதுகாப்பு கருதியே கோவிலுக்கான யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், பக்தர்கள் காணொலி வாயிலாக தரிசித்து, வீட்டிலேயே பூஜை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. தொற்று தணிந்தபிறகு, கேதார்நாத் யாத்திரை தொடங்கும் என்று உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை மந்திரி சத்பால் மகராஜ் தெரிவித்தார்.

    உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரி கோவிலை கடந்த 14-ந்தேதியும், கங்கோத்ரி கோவிலை 15-ந்தேதியும் குருக்கள் திறந்து வழக்கமான பூஜைகளை செய்தனர். பத்ரிநாத் கோவில் இன்று (மே 18) திறக்கப்படுகிறது. ஆனால், கொரோனா சூழ்நிலை காரணமாக, மறுஉத்தரவு வரும் வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது.
    மனித இனம் ஒருவர் மற்றொருவருடன் சார்ந்து இருக்கிறது. முதல் மனிதனுக்கே ஒரு துணை உடன் படைக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைக்கு பெற்றோர்கள் உதவி இல்லையேல் வாழ, வளர முடியாது.

    இவ்வாறே குடும்பங்கள் இணைந்து சமூகம் உருவாகிறது. இத்தகைய நிலையில் குடும்ப, சமூகத்தின் பல தேவைகளும் ஏற்படுகின்றன. அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. நட்பு, அன்பு, தோழமை, மரியாதை, கண்ணியம், பாராட்டு என்று பல்வேறு வகையில் தேவைகள் உருவெடுக்கின்றது.

    இத்தகைய தேவைகளில் ஒன்றுதான் பொருளாதார ஒத்துழைப்பு. சமுதாயத்தில் எல்லோரும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பணக்காரர்கள், ஏழைகள், வறியவர்கள், கடனாளிகள், இயலாதவர்கள், முதியோர், அனாதைகள் என பலதரப்பட்டவர்கள் இருப்பார்கள். சமுதாயத்தின் பரந்து விரிந்த இந்த தேவைகளை புறக்கணித்து உலகில் அமைதியாக வாழவும் முடியாது என்பது நிதர்சன உண்மை.

    இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஓர் நெறியாக இருக்கிறது. சமுதாயத்தின் இத்தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு வணக்கமாக பார்க்கிறது. எனவே வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு செல்வந்தர்களின் செல்வத்திலிருந்து 2.5 சதவீதம் ஜகாத் - ஏழைகளின் பங்காக - வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது. இது உதவி அல்ல, மாறாக ‘ஏழைகளின் பங்கு’ என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்து ஏழைகளை கண்ணியப்படுத்துகிறது.

    “அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது. யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்”. (திருக்குர்ஆன் 70:24)

    ‘ஜகாத்’ என்றால் ‘தூய்மை’, ‘வளர்ச்சி’ என்று பொருள். மனமும் தூய்மை அடைகிறது, பொருளும் வளர்ச்சி அடைகிறது.

    ஜகாத்தின் உண்மையான நோக்கம் வறுமை நீக்கம் ஆகும். செல்வம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கிடையே சுழல்வதற்கு பதிலாக அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இது வட்டிக்கு நேர் எதிரான முறைமை ஆகும். வட்டி ஏழைகளிலிருந்து செல்வந்தர்களுக்கு செல்கிறது. ஆனால் ஜகாத், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றடைகிறது.

    திருக்குர்ஆன் இதை இவ்வாறு பதிவுசெய்துள்ளது:

    ‘நம்பிக்கையாளனே! உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் அவர்களின் உரிமையையும் தந்துவிடு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர்’.

    ‘மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்’. (திருக்குர்ஆன் 30:38-39)

    ஜகாத் ஒரு பொருள் வழி வணக்கம். இஸ்லாத்தின் தூண். இறை கட்டளை. மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை போன்று முக்கியம்.

    ஜகாத்தின் பிரதான நோக்கம் வறுமை ஒழிப்பு ஆகும். ஒரு நபருக்கு இந்த வருடம் கொடுத்தால் அடுத்த வருடம் அவர் ஜகாத் வாங்க தகுதியில்லாத அளவுக்கு அவரை உயர்த்த வேண்டும். சில்லரை காசு கொடுப்பது ஜகாத்தின் நோக்கம் அல்ல. ஆகவே கூட்டு முறையில் ஜகாத் வசூலித்து, உரியவர்களை தேர்வு செய்து ஜகாத் கொடுத்து உயர்த்த வேண்டும். இதற்காக ஜகாத் வசூலிக்கும் நிறுவனங்களும், பணியாளர்களும், சமூக மக்களின் பொருளாதார நிலைபுள்ளி விவரங்களும் அவசியம் தேவைப்படுகிறது.

    இந்த தான தர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:60)

    நபிகள் நாயகம் எச்சரிக்கிறார்கள்: ‘ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத் பிரித்தெடுக்காவிட்டால் அது அசல் பொருளையே அழித்து விடும்’.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
    கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஊரடங்கால் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கோவிலும் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதற்கிடையே திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் முதல் நாளில் காவல்துறை மண்டகப்படி நடைபெறுவது வழக்கம். அதனை கடைபிடிக்கும் விதமாக நேற்று காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வெளியே நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    மகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம் மாலை என உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது நல்லது.
    மனக்கவலைகள், துன்பங்களை போக்கும் சிவ மந்திரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிவன் அருள் கிடைத்தால் வாழ்வு செழித்து ஓங்கும் என்கின்றனர் முதியோர்கள். சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது. தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும்.

    "ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே
    ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ"

    மகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம் மாலை என உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது நல்லது.

    திங்கள் கிழமைகள், மாத சிவராத்திரி பிரதோஷ தினங்களில் வீட்டில் நமது கைவிரல் அளவிற்கும் குறைந்த அளவில் உள்ள சிவலிங்கத்திற்கு தும்பை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து இம்மந்திரத்தை 27முறை துதித்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து மனக்கவலைகள் மற்றும் துன்பங்களும் சிவனின் அருளால் நீங்கும்.

    கயிலாய மலையில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவபெருமான் தனது ஆற்றலால் உலகில் அனைத்திற்கும் காரகனாக இருக்கிறார். வழிபடும் பக்தர்களின் பக்திக்கு எளிதில் வரமளிக்கும் கருணாமூர்த்தியாக இருப்பவர் சிவன். அவரை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது.

    தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும். அந்த சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துக்கங்களும், மனக்கவலைகளும் முற்றிலும் நீங்கும்.
    கெங்கையம்மன் கோவிலில் உற்சவரை பல்லக்கில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கோவில் வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் 3 சுற்றுகள் உலா வந்து அருள்பாலித்தார்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கொரோனா பரவலால் கோவில் வளாகத்திலேயே நடந்தது. அதையொட்டி நேற்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவரை பல்லக்கில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கோவில் வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் 3 சுற்றுகள் உலா வந்து அருள்பாலித்தார். பூப்பல்லக்கை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மனும் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்ம கர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூப்பல்லக்கை காண வந்த பக்தர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
    ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது.
    ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது:

    * சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது.
    * சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது.
    * சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது.
    * சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது.
    * பொதுவாக கடக ராசிக் காரர்களுக்கு புனர்பூ தோஷம் என்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

    புனர்பூ தோஷத்தை போக்கக் கூடிய எளிய பரிகாரங்கள்:

    * சந்திரனின் ஸ்தலமான திருப்பதியில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாட்களிலும், சனி பகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலும் தரிசனம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.
    * சனிக்கிழமையிலோ அல்லது சனி பகவானின் நட்சத்திர நாட்களில் வரும் பௌர்ணமியில், சத்தியநாராயண விரத பூஜை செய்வதால் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் பிரச்னைகளை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும்.
    * சந்திரனின் காரகமாகிய உணவினை சனியின் காரகம் பெற்ற உழைப்பாளிகள், உடல் ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியவர்களுக்கு அன்னதானம் செய்துவர புனர்பூ தோஷம் நீங்கும்.
    * அதே போல, ஊனமுற்றஎளிய வர்க்கதிதில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு அவர்களுக்கு தேவையான திருமண செலவில் உங்களால் இயன்ற பங்களிப்பை அளிப்பது. அவர்களுடைய திருமணத்திற்கு உதவி செய்வது போன்றவற்றை செய்ய புனர்பூ தோஷ பாதிப்புகள் குறையும்.
    * புனர்பூ தோஷத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, ஒன்பதாவது திங்கட்கிழமை திருச்செந்தூர் முருகன் அல்லது உங்கள் பகுதியிலுள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட்டு வர தோஷம் நீங்கும். ஒன்பது வாரத்திற்குக் குறையாமல் விரதமிருப்பது அவசியம்.

    புனர்பூ தோஷம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சனியின் மந்திரங்களை அனுதினமும் கூறி வர புனர்பூ தோஷம் பாதிப்புகள் நீங்கும்.

    சனி காயத்ரி மந்திரம்

    காகத் வஜாய வித்மஹே
    கட்க ஹ’ஸ்தாய தீமஹி
    தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

    சனி ஸ்துதி

    நீலாஞ்சன சமா பாசம்
    ரவிபுத்ரம் யமாக்ஞ்ரஜம்
    சாய மார்த்தாண்ட தம் பூதம்
    தம் நமாமி சனைஸ்வரம்
    தன்னுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவன் அதை இழந்துபோவான்
    இயேசு யூதேயாவில் இருந்த எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் போதித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். நோய்களையும் பலவீனங்களையும் குணமாக்கினார். மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, அவருடைய மனம் உருகியது. ஏனென்றால், மேய்ப்பர் இல்லாத ஆடுகளைப் போல அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தனர். அவர் தன்னுடைய சீடர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானராகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று கூறினார்.

    அதன் பின்னர் தன் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்தார். மனிதர்களைப் பிடித்த பேய்களை விரட்டுவதற்கும் எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். தன் சீடர்களை மற்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்முன் அவர்களுக்கு இயேசு விரிவான அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்.

    “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது எனப் பிரசங்கியுங்கள். நோயாளிகளைக் குணப்படுத்துங்கள், இறந்தவர்களை உயிரோடு எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்தமாக்குங்கள், பேய்களை விரட்டுங்கள். தங்கம், வெள்ளி, அல்லது செப்புக் காசுகளை உங்களோடு கொண்டு போகாதீர்கள். பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ, செருப்புகளையோ, தடியையோ எடுத்துக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

    நீங்கள் எந்த நகரத்துக்குப் போனாலும், எந்தக் கிராமத்துக்குப் போனாலும், தகுதியுள்ளவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவருடனேயே தங்கியிருங்கள். ஒரு வீட்டுக்குள் செல்லும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்; தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்காவிட்டால், அந்த வீட்டையோ, நகரத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்” என்றார்.

    பின்னர் செல்லும் நகரங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை அவர் எடுத்துக் கூறினார். “இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன்; அதனால், பாம்புகளைப் போல் எச்சரிக்கையாகவும், புறாக்களைப் போல் கள்ளம் கபடம் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள். அதே நேரம் கவனமாக இருங்கள்; ஏனென்றால், மனிதர்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்; தங்களுடைய ஜெபக்கூடங்களில் உங்களை முள்சாட்டையால் அடிப்பார்கள். அது மட்டுமல்ல; நீங்கள் என்னுடைய சீடர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள். அப்போது நீங்கள் அவர்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்க முடியும். ஆனாலும், அவர்கள் உங்களை அதிகாரிகள் முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ, என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்குத் தந்தையால் அருளப்படும். அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்.

    நீங்கள் என் சீடர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்பு பெறுவார். அவர்கள் உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனித குமாரன் வருவதற்குள் உலகில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள்” என்றவர், ஊழியப் பயணத்தில் எவ்வாறு பிரசங்கிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

    “மூடி மறைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்ட வெளிச்சமாகாமல் போகாது. நான் உங்களுக்கு இருட்டில் சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; காதோடு காதாகச் சொல்வதை விட்டு வீட்டின் மாடிகளில் நின்று உரக்கப் பிரசங்கியுங்கள். உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள். மனிதர்களுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை என் பரலோகத் தந்தைக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன். என்மேல் காட்டும் பாசத்தைவிடத் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவனும் தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்” என்றார்.
    ×