என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவோண பண்டிகை கொண்டாட்டத்திற்கு மூல காரணமாக அமைந்து இருப்பது, இறைவனின் தசாவதாரத்தில் ஒன்றான வாமன அவதாரத்தின் திருவிளையாடல் ஆகும். இது பற்றி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதனை பற்றி காண்போம்.
    மகாபலி மன்னன், தன்னுடைய அசுர குலத்தின் கொள்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, தனது நாட்டை செம்மையாக ஆட்சி செய்து வந்தார். இது தேவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. இவர்களது சூழ்ச்சியின் முடிவாக, மகாவிஷ்ணுவின் உதவியை நாடினர். மகாபலியின் பெருமையை விஷ்ணுவும் நன்றாகவே அறிந்து இருந்ததால், அவரை தண்டிக்காமல் சோதனைக்கு உள்ளாக்க முடிவு செய்தார்'.

    இதற்காக அவர் தனது உருவத்தை சுருக்கி, 2 அடி உயரமுள்ள வாமன குள்ளச் சிறுவனாக மாறினார். தொடர்ந்து மகாபலியை நாடிச் சென்றார். கையில் கமண்டலம், திருத்தண்டி, ஓலைக் குடை சகிதம் இளம் துறவியாக காட்சி அளித்த அந்த சிறுவனின் தெய்வீக தோற்றம், மகாபலி மன்னரின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து, தனது மனைவி விந்தியா தேவியுடன் இணைந்து, அந்த வாமனச்சிறுவனை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அப்போது. "தாங்கள் ஆட்சி செய்யும் இந்த பூமியில் நான் தவம் மேற்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன். அதற்காக தாங்கள் எனக்கு 3 அடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும்" என்று தனது தேவையை கூறினார் வாமனன். அதற்கு அவர் சம்மதித்தார்.

    இந்த நேரத்தில் வாமன ரூபத்தில் இருந்த மகாவிஷ்ணு, தனது உருவத்தை பெரிதாக்கி, வான் அளவுக்கு விஸ்வ ரூபம் எடுத்தார். அவர், முதல் அடியை எடுத்து வைக்க பூலோகமும், 2-வது அடியை எடுத்து வைக்க மேலோகமும் அவரது காலடியில் அடங்கியது. மேலும், 3-வது அடியை எடுத்து வைக்க இடம் இல்லாமல் போனது. இதையடுத்து வாமனன் மகாலியை நோக்கி, ஈரடிக்குள் பூலோகமும், மேலோகமும் எனக்கு கிடைத்து விட்டது. எஞ்சியுள்ள மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டான்.

    கொடுத்த வாக்கை குறைவின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கருதிய மகாபலி, வாமனன் முன் தலை குனிந்து, "தங்களது பொற்பாதங்களை எனது தலையின் மீது வைக்கலாமே" என்றார் பணிவுடன். அதன்படி, வாமன ரூபத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் மகாபலியின்தலை மீது தனது பாதத்தை வைத்தார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி, பூமியில் இருந்து தாழ்ந்து பாதாளம் செல்லும் நிலை ஏற்பட்டது.

    கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்த மகாபலி சக்கரவர்த்திக்கு, விஷ்ணு வரம் அருளவும் தயாரானார். அப்போது மகாபலி, கேட்ட வரத்தை அருளியதோடு அவருக்கு விண்ணுலகத்திலும் இடம் கொடுத்தார் மகாவிஷ்ணு. இந்த வரத்தின்படி, மகாபலி தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை சந்திக்க வீதியில் உலா வரும் நாளே திருவோண திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தப்பூ கோலமிட்டு மகாபலி அரசனை மக்கள் வரவேற்பார்கள்.
    ஏராளமான சுமங்கலி பெண்கள் அவரவர் இல்லங்களில் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தனர். இதில் உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டு சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு லட்சுமி சகஸ்ர நாமம் சொல்லி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
    இந்துக்களின் முக்கிய விரதங்களில் வரலட்சுமி நோன்பும் ஒன்று. ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பவுர்ணமி நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் அவரவர் இல்லங்களில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். கணவனின் நலம், தாலி பாக்கியம், இல்லத்தில் செல்வம் நிலைக்க இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

    அதன்படி ஏராளமான சுமங்கலி பெண்கள் அவரவர் இல்லங்களில் நேற்று வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தனர். இதையொட்டி வீட்டில் கோலமிட்டு, வாழை இலையில் அரிசி, கும்பம், தங்க ஆபரணங்கள், மாவிலைக்கொத்து, தேங்காய் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டு சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு லட்சுமி சகஸ்ர நாமம் சொல்லி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமத்தையும் பிரசாதமாக வழங்கினர்.
    வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால் வேலூரில் கோட்டை கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்படபல்வேறு கோவில்களில் வாசலிலேேய நின்று பக்தர்கள் வணங்கி விட்டு சென்றனர்.
    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க அவர்கள் அதிகம் வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு தடை விதித்து மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    மற்ற 4 நாட்கான திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே கோவில், தேவாலயம், மசூதிகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பையொட்டி வீட்டில் வழிபட்ட பெண்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் முடப்பட்டிருந்தது. பலர் வாசலிலேயே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    மேலும் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் நேற்று வருகை தந்தனர். கோவில் நடை மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று வழிபட்டனர்.

    இதேபோன்று செல்லியம்மன் கோவிலும் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். எனினும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வழக்கம்போல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.

    இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.
    நாகராஜா கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் தெற்கு வாசல் வழியாகத் தான் பக்தர்கள் செல்கின்றனர். இந்த வாசலுக்கு ‘மகாமேரு மாளிகை என்று பெயர்.

    கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் என்று அதிகமான நாகர்சிலைகள் காணப்பட்டாலும், நாகராஜ சுவாமி கருவறைக்கு முன்பாக இரண்டு பெரிய நாகர் சிலைகள், துவாரபாலகர்களாக இருக்கும். இதில் ஒன்று தர்னேந்திரன் என்ற ஆண் நாகம், மற்றொன்று பத்மாவதி என்ற பெண் நாகம்.

    நாகங்கள் வசிப்பதாக நம்பப்படுவதால், நாகராஜர் கருவறையின் மேற்கூரை மட்டும் இன்றளவும் ஓலைக்கூரையாகவே இருக்கிறது. ஆடி மாதத்தில் இதனைப் பிரித்து, புதிய கூரை கட்டுவார்கள்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையத்தில் அமைந்துள்ளது, நாகராஜ சுவாமி திருக்கோவில். இந்தப் பகுதியில் பெண் ஒருத்தி நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தபோது, ரத்தம் பீறிட்டது. ஊர்மக்கள் அனைவரும் வந்து பார்த்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னிதி அமைத்தனர் என்று கோவில் தல வரலாறு சொல்கிறது.

    இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.

    ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய தீர்த்த குளத்துக்குள் ஏராளமான பாம்புகள் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே அந்த தீர்த்தக் குளத்தை பூட்டியே வைத்திருக்கிறார்கள். ஆலயத்தின் வெளியேயும் தீர்த்தக்குளம் உள்ளது.

    இங்கு ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.

    இந்த ஆலயத்தில் உள்ள அனந்தகிருஷ்ணர், கடுசர்க்கரையால் செய்யப்பட்டவர். இதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இவரது சன்னிதி முன்பாக மட்டுமே கொடி மரம் உள்ளது. இதில் கருடனுக்கு பதிலாக ஆமை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாகம், கோவில் கொண்டிருக்கும் இடம் என்பதால் கருடனுக்கு பதில் ஆமை இருப்பதாக கூறுகிறார்கள்.

    உத்திராயனம், தட்சிணாயனம் தொடங்கும் போது நிறைபுத்தரிசி பூஜை செய்வது வழக்கம். பயிரிட்டு விளைந்த முதல் நெல்லை கொண்டு வந்து, நாகருக்கு படைத்து பூஜை செய்வதை ‘நிறைபுத்தரிசி பூஜை’ என்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தோல் நோய், உடற்பிணி நீங்க இங்கே வந்து வழிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

    இந்த ஆலயத்தில் நாகராஜர் பிரசாதமாக, வாழை இலையில் சந்தனம், பூ மற்றும் மண் பிரசாதம் வழங்குவார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்புக்குரியது.
    பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்திருக்கும் மாதமாகவும், பயிரிட்டப் பொருட்களை அறுவடை செய்யும் மாதமாகவும் விளங்குவதால் இந்தப் பெயர் வந்தது.
    தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரள மாநிலத்தில் சிங்கம் மாதம் முதல் மாதமாகும். நமக்கு ஆவணி மாதம்தான், கேரளாவில் சிங்கம் மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் கேரளாவில் நடைபெறும் மிக முக்கியமான கொண்டாட்டமாக ‘ஓணம் பண்டிகை’ இருக்கிறது. இதனை ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பார்கள். பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்திருக்கும் மாதமாகவும், பயிரிட்டப் பொருட்களை அறுவடை செய்யும் மாதமாகவும் விளங்குவதால் இந்தப் பெயர் வந்தது.

    ஓணம் பண்டிகை விழாவானது, மகாபலி சக்கரவர்த்தியுடன் தொடர்புடையது. இந்த மன்னன், நரசிம்மரின் ஆசி பெற்ற பிரகலாதனின் பேரன் ஆவார். மகாபலி சக்கரவர்த்தி, அதற்கு முந்தைய பிறவியில் ஒரு எலியாக பிறந்திருந்தார். சிவன் கோவில் ஒன்றில் அணைய இருந்த தீபத்தை, தன்னுடைய மூக்கால் தூண்டிவிட்டதன் பலனாக, அவருக்கு அடுத்த பிறவியில் இந்த சக்கரவர்த்தி பதவி கிடைத்தது. இருப்பினும் அவர் அசுர குலத்தில் பிறந்தார். அவர் ஆட்சி செய்த பகுதியே தற்போதைய கேரளம் என்று சொல்லப்படுகிறது. அவரது மக்கள் பணி சிறப்பாக இருந்த காரணத்தால், தேவர்களும் இவருக்கு அஞ்சினர். இந்த நிலையில் மகாபலி ஒரு யாகம் நடத்த முடிவு செய்தார். அது நிறைவேறினால், அவருக்கு யாராலும் அழிக்க முடியாத சக்தி கிடைத்துவிடும். அதனால் அசுர குலம் தழைக்க வாய்ப்பிருப்பதாக கருதிய தேவர்கள், அதை தடுத்து நிறுத்த மகாவிஷ்ணுவை வேண்டினர்.

    மகாவிஷ்ணுவும் வாமனராக குள்ளமான அவதாரம் எடுத்துச் சென்று, மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மன்னன் சம்மதிக்கவே, உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் கொண்டு, முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையும் அளந்தார். ‘மூன்றாம் அடியை எங்கே வைப்பது?’ என்று மகாபலியிடம் கேட்க, அவரோ ‘தன் தலை மீது வையுங்கள்’ என்றார். இதையடுத்து மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது வைத்து, அவரை பாதாள லோகத்தில் தள்ளினார், பெருமாள்.

    மகாபலி, ‘ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று பெருமாளிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பெருமாள் அனுமதியளித்தார். அதன்படி அவர் தன்னுடைய சொந்த மக்களை சந்திக்க வரும் அந்த நாளையே கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகை’யாக கொண்டாடுகிறார்கள். இந்த விழா 10 நாட்களாக நடைபெறும். மன்னனை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் நிகழ்வாக முதல் 9 நாட்கள் இருக்கும். 10-ம் நாளில் மகாபலி சக்கரவர்த்தி போல் வேடமிட்டவர்கள், கேரள மாநிலம் முழுவதும் வலம் வருவார்கள். அவர்களிடம் மக்கள் ஆசி வாங்குவார்கள். சாதி, மத உணர்வுகளைக் கடந்து, கேரள மக்கள் அனைவரும் கொண்டாடும் நிகழ்வாக, ஓணம் பண்டிகை இருக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

    அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 டிக்கெட்டுகளை வெளியிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைபட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.
    1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.
    2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
    3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.
    4. வரும் சந்தர்ப்பங் களை நழுவவிடக்கூடாது.
    5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.
    6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
    7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
    8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
    9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.
    10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.
    11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
    12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

    மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

    இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம்.
    வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதே போல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம். அந்த வழிபட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை.
    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப்பட்டுள்ளது.
    லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது. திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.
    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப்பட்டுள்ளது.

    வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.
    ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும்.
    திருப்பதி திருமலை:- திருப்பதி திருமலை க்ஷேத்திரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

    ஸ்ரீரங்கம்:-

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன. அவை முறையே

    1. ஸ்ரீ வித்யலட்சமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோக்ஷ லட்சுமி, 6. ஸ்ரீ சௌர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சௌபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.

    பெங்களூர்:-

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில் ஒன்றுள்ளது. இதில் பலகாலமாக அஷ்டல லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள். இப்போது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும். செஞ்சந்தன மரத்தில் மஹாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

    திருவலம்:- சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம். இத்தலத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது. இங்கு அஷ்டலட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    மதுராந்தகம்:-

    சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார் அருள் பாலித்து வருகிறாள். மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது. இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி ஸௌந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.

    திருவாரூர்:- திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்ற ஒரு லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருக்ஷமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார். எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப்பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.


    பெருமாளிடம் அஷ்டலட்சுமிகள்

    சென்னை திருமழிசையில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலில். அஷ்டஐஸ்வரியங் களையும் அருளும் அஷ்ட லட்சுமிகளும் பெருமாளிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெரு மாளின் மார்பில் இருவர். சிரசில் பொருத்தப்ப ட்டிருக்கும் கிரீடத்தில் நான்கு லட்சுமியர், பெருமாளின் இரு புறமும் பக்கத்திற்கு ஒருவர் என்று அஷ்ட லட்சுமியுடன் அருள்கிறார். சனிக் கிழமைகளில் இந்த பெருமாளை துளசி மாலை சாற்றி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும்.
    திருமலையில் பவித்ரோற்சவம் 2-வதுநாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை ஹோம பூஜைகள், காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    கோவிலில் உள்ள மூலவர் ஏழுமலையான், கருடாழ்வார், வரதராஜசாமி, வகுளமாதா, யோகநரசிம்மர், யாக சாலை, தங்கக் கோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்பட பல்வேறு சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை யாக சாலையில் வைதீக காரியகர்மங்கள் நடந்தது. பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை யாக சாலையில் வைதீக காரியகர்மங்கள் நடந்தது.

    அதில் பெரியஜீயா்சுவாமி, சின்னஜீயர்சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படைத்துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ஆவணி மாத பவுர்ணமியையொட்டி அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இன்று (20-ந் தேதி) பிரதோ‌ஷமும், 22-ந் தேதி பவுர்ணமியும் ஆகும். ஏற்கனவே ஆடி அமாவாசைக்கு கொரோனா தொற்று காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவணி பிரதோசத்துக்கு சதுரகிரிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மலையடி வாரப்பகுதி களில் உள்ள தோட்டங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு உள்ளிட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இதனிடையே சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு வழக்கம் போல் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×