என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    யோவான் 2:13-35 இயேசு தன் வாழ்வில் கடினமாக நடந்து கொண்ட நேரங்களில் இந்தப்பகுதியும் ஒன்று.இயேசு அப்படி என்ன கடினமாக நடந்துகொள்கிறார்? என்று அறிந்து கொள்ளலாம்
    யோவான் 2:13-35 இயேசு தன் வாழ்வில் கடினமாக நடந்து கொண்ட நேரங்களில் இந்தப்பகுதியும் ஒன்று.இயேசு அப்படி என்ன கடினமாக நடந்துகொள்கிறார்?இயேசு கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி கோவிலில் அமர்ந்து புறா விற்பவர்களையும், நாணயம் மாற்றுவோரையும் அடித்து வெளியேற்றுக்கின்றார்.இதில் நாம் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவெனில்.இயேசு தானே தன் கைகளால் ஒரு சாட்டை பின்னுவதாக நற்செய்தி நமக்கு கூறுகிறது. அத்தோடு நில்லாமல் அந்த சாட்டையைகொண்டு கடவுளுக்கு ஒவ்வாத செயல்களை செய்பவர்களை அடித்து துரத்துகிறார்.

    இயேசு கடினமான சொற்களை பயன்படுத்தி வியாபாரிகளை கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கலாம் அல்லது அன்பாக எடுத்துக்கூறி அறிவுரை சொல்லி கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கலாம்.இப்படி எல்லாம் செய்ய முடியாமல் கடினமான முறையை ஆண்டவர் இயேசு பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்த செயலில் இருந்து தவக்காலத்திற்கான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். சாட்டை அடக்கும் கருவிகளுள் ஒன்று. தறிகெட்டு ஓடும் கட்டுக்கு அடங்காத குதிரைகளையும்,காளைகளையும் அடக்க பண்படுத்தும் கடினமான கருவியாகும்.

    இதேபோல ஒரு சாட்டையைத்தான் ஆண்டவர் இயேசு இந்த தவக்காலத்தில் நம்மை பின்னச்சொல்கிறார். எதற்காக?தறிகெட்டு ஓடும் நம் மன குதிரையை இந்த சாட்டையை கொண்டு அடக்குவதற்காக,நீண்ட நாட்களாக உள்ளத்தில் குடியிருந்து உள்ளம் என்னும் கோவிலின் புனிதத்தை கெடுத்து. நம்மை வாட்டி வதைக்கும் பாவ செயல்களை இந்த சாட்டையைக்கொண்டு விரட்ட வேண்டும். உதாரணமாக கோபம் என்னும் பாவத்தை எடுத்துக்கொள்வோம்.இது நம் உள்ள ஆலயத்தில் தூய்மையை கெடுக்கின்ற ஒரு பாவம். இந்த பாவத்தை எந்த சாட்டை கொண்டு விரட்டுவது?பொறுமை என்னும் சாட்டையைக்கொண்டு கோபம் என்னும் பாவத்தை அடித்து விரட்டுவோம். பொறுமை என்னும் சாட்டையை பின்ன என்னென்ன கயிறுகள் நமக்குத்தேவை?

    1)நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து தியானம் செய்யும் கயிறு.2)ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது மவுனமாக இருத்தல் என்னும் கயிறு.3) பிறரின் சொல்லுக்கு கவனம் என்னும் கயிறு.4)தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தல் என்னும் கயிறு.5) கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு அகலுதல் என்னும் கயிறு.இந்த கயிறுகளை கொண்டு பொறுமை என்னும் சாட்டையை நாம் பின்னிவிட முடியும்.பிறகென்ன?கோபம் என்னும் மனக்குதிரை தானாக அடங்கி பொறுமை என்னும் வளையத்திற்குள் வந்துவிடுவோம்.

    இதுபோன்று ஒவ்வொறு பாவத்திற்கும் ஒவ்வொரு சாட்டையை பின்னுவோம். இந்த தவக்காலத்தில் நம் மனதை மிகவும் வருத்தும் ஏதாவது ஒரு பாவத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை விரட்ட என்னென்ன கயிறுகள் கொண்டு சாட்டை பின்னலாம் எனயோசிப்போம். ஏனெனில் தவக்காலம் பாவத்திற்கு எதிராக சாட்டை பின்னும் காலமாகும். ஆமென்.

    போதகர் லூயிஸ், அந்தியூர்.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் நாளை (வியாழக்கிழமை) 31-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நடக்கிறது.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் பிரசித்தி பெற்ற சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 31-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    நாளை காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில், அருட்திரு அறிவர் மோகன்ராஜ் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் கலந்துகொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.

    அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.

    விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்விதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
    கடவுளின் அன்பை விளக்கவும், பாவிகளை கடவுள் ஏற்றுக்கொள்வாரா என்பதை விளக்கவும், இயேசு தன் சீடர்களுக்கு ஊதாரி மகனின் கதையை கூறினார்.
    “ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் தன்னுடைய அப்பாவிடம் வந்து, ‘தந்தையே, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கை இப்போதே பிரித்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டான். அதனால், அவர் தன்னுடைய சொத்துகளைப் பிரித்து அவனுக்குரியதைக் கொடுத்தார். சில நாட்கள் கடந்தன. அந்த இளைய மகன் தனக்குப் பாகமாகக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான்.

    அங்கே அவன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான். அப்போது அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான். அதனால் ஒருவரிடம் போய் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். அவர் தன்னுடைய பன்றிகளை மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். பன்றித் தீவனம் சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் ஏங்கினான். ஆனால், அவனுக்கு யாரும் எதையும் கொடுக்கவில்லை.

    அவனுக்குப் புத்தி வந்தபோது, ‘என் தந்தையின் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயிறார சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் என் தந்தையிடம் போய், மன்னிப்பு கேட்பேன்’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன் தந்தையிடம் புறப்பட்டுப் போனான். அவன் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார்.

    கண்கள் பஞ்சடைந்து, கிழிந்துபோயிருந்த அங்கியை அணிந்தபடி, காலணிகள் இல்லாத பாதங்களோடு தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்த அவனது தோற்றத்தைக் கண்டு அவருடைய மனம் உருகியது. ஓடிப்போய் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். அப்போது அவன், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்குத் தகுதியில்லை. என்னை உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னான்.

    ஆனால், அவனுடைய அப்பா தன் வேலையாட்களை நோக்கி, ‘விரைந்து சென்று முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்கு அணிவியுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் கால்களுக்குச் செருப்பையும் அணிவியுங்கள். கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து சமையுங்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம்’ என்று சொன்னார். இதைகேட்டு மகிழ்ந்த வேலைக்காரர்கள் அவர் கூறியபடியே செய்தார்கள். மனம் திருந்தி வந்த ஊதாரி மகனின் வருகையை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கினார்கள்.

    ஊதாரி மகன் வீட்டுக்குத் திரும்பி வந்த நேரத்தில் அவருடைய மூத்த மகன் வயலில் இருந்தான். கொடுத்த சொத்தை அழித்து, திரும்பி வந்த தம்பியை தந்தை ஏற்றுக்கொண்டதை நினைத்து அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. வீட்டுக்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, அவனுடைய தந்தை வெளியே வந்து, மூத்த மகனைக் கெஞ்சி அழைத்தார். அதற்கு அவன் தன்னுடைய தந்தையிடம், ‘இத்தனை ஆண்டுகளாக நான் உங்களுக்காகப் பாடுபட்டு வேலை செய்திருக்கிறேன், உங்கள் பேச்சைத் தட்டியதே இல்லை.

    இருந்தாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூடக் கொடுத்ததில்லை. ஆனால், தம்பி தீய வழியில் உல்லாசமாகத் தன் நாட்களைச் செலவழித்து உங்கள் சொத்துகளை வீணாக்கினான். அவன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னான். அதற்கு அவர், ‘மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய்; என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவைதான். ஆனால், உன் தம்பி செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான். இந்த மகிழ்வை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டார்” என்றார்.

    மனம் திருந்தி வருகிற பாவிகளிடம் கடவுளாகிய தந்தை காட்டுகிற அணுகுமுறையை ஊதாரி மகன் கதையின் மூலம் இயேசு எடுத்துக்காட்டுகிறார். இந்தக் கதையைக் கேட்டபோது பேதுரு இயேசுவை நோக்கி “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
    ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்ட் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் ஜெபமாலை, மாலை ஆராதனை, திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் திருப்பயணிகள் திருப்பலி, இரவு வாணவேடிக்கை போன்றவை நடந்தன.

    விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடந்தன. அலங்கரிக்கப்பட்ட வியாகுல அன்னை தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வீதி வீதியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும், பின்னர் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது.திருவிழா ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.இந்த ஆலயமானது வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் அழைத்து வருகின்றனர்.

    இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் இறைச்சி உண்ணாமல் இருந்து 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி தவக்காலம் தொடங்கியது. இந்த தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருந்து 35 பேர் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்தனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    தேவசகாய மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய விழாவில் நற்கருணை பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

    விழாவில் நேற்று காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ் மாலை நடைபெற்றது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை ரால்ப்கிராண்ட் மதன் தலைமை தாங்கினார். பனவிளை பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மறையுரையாற்றினார். பின்னர் நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கத்தோலிக்க சங்கம் சார்பில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்கத்தலைவர் சகாயபென்சிகர் தலைமை தாங்கினார். பங்கு தந்தை பிரைட், வட்டாரபேரவை தலைவர் ஜேக்கப் ்மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் 8, 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற‌ மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் நோயுற்ற ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப் பட்டது. இதில் பங்குபேரவை துணைத் தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச்செயலாளர் சகாயரூபிலெட் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
    இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
    உபவாசம் என்பது இந்த தவக்காலத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட வேண்டியது அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் உபவாசம் இருந்து கடவுளோடு நம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் நாம் பல்வேறு விஷேச நாட்களில் பல்வேறு  சிறப்பான உணவுகளை உண்பது போல இந்த தவக்காலத்தில் நாம் மிகவும் உபவாசம் இருந்து தேவனை மகிமைப்படுத்தி இன்னும் அதிகமாக கர்த்தரிடத்தில் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.

    எனவே இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய  வேண்டும். அதாவது நாம் நம்மை பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும். அதே போல நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணங்களையும் பெற்று கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

    மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தியே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தவறுகளுக்காக மனம் மாறுதல், மன்னிப்பு கேட்டல் ஆகியவை நம்மை மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

    உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெயத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. இந்த மூன்று காரியங்களும் ஒன்று சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நிகழ்கிறது.

    எனவே இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.

    சகோ. மைக்கேல், காங்கேயம் ரோடு, திருப்பூர்.
    தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
    இறைவன் இந்த உலகத்தின் ஒவ்வொரு படைப்புகளையும் அர்த்தமுள்ளாகவே படைத்துள்ளார். அது போலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலாகவே படைத்துள்ளார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இப்படி தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

    அன்றைய நாட்களிலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். பெரியவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரையும் மதிக்க வேண்டும் என்று நல்ல பழக்கங்களை கற்று கொடுத்தனர். ஆனால் இந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இப்படி இருக்கக்கூடாது. நன்றாக படிக்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை பார்த்து போதும் நிறுத்துங்கள் என்று கூறி தங்கள் பெற்றோர்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

    மேலும் இப்போது வாலிபர்களின் நிலை காலையில் எழுத்தவுடன் எது இப்படி இருந்தால் என்ன எங்கு என்னுடைய செல், யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள், யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கிறனர்.

    இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆனால் இயேசுவோ, தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளைமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணாக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    வேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாமிசத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல் பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.

    சகோ.சாம்ராஜ், கோவில்வழி.
    தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.
    ஒருநாள் இயேசு எரிகோ என்னும் பட்டணத்திற்கு வந்தார். அவர் வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் மக்கள் கூட்டம் கடல் போல் திரண்டது. இந்த கூட்டத்தில் சகேயு என்னு பெயர் கொண்ட மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் ரோம பேரரசிற்காக மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்க வேலை செய்தவன். இவனுக்கு எல்லாம் நிறைவாய் இருந்தது. ஆனால் அவன் சொந்தநாட்டு மக்களே அவனை வெறுத்தனர். மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததே  அதற்கு காரணம்.

    இயேசு குருடர், செவிடர், முடவர், குஷ்ட ரோகி யாவரையும் குணமாக்கியிருக்கிறார். மரிதோரையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று கேள்விபட்ட சகேயு இப்பேற்பட்ட பரிசுத்த தேவ குமாரனை எப்படியாவது காண வேண்டுமென்ற மிகுந்த ஆசையோடும், ஆவலோடும், அருகிலிருந்த காட்டத்தி மரத்தில் ஏறினான். சகேயு குள்ளாயிருந்தபடியால்  அப்படி செய்தான்.

    இயேசு அந்த மரத்தின் கீழ் வந்தபோது சகேயுவே நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். சகேயு உடனே கீழே இறங்கி மிகுந்த சந்தோஷமாய் இயேசுவை பார்த்து என் ஆதிகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன். ஒருவரிடத்தில்  அதிகமாய் எதையாகிலும் பெற்றிருந்தால் 4 மடங்காய் திருப்பி தருகிறேன் என்றான். அதற்கு இயேசு அவனிடம் இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றார். இயேசு சகேயுவின் வீட்டிற்கு வந்ததும் பாவம் போனது. இரட்சிப்பு வந்தது. தெய்வீக சமாதான வீட்டை நிறைத்தது.

    நாமும் நம் பாவம் நீங்கி, இரட்சிப்பு அடைந்து சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ இயேசுவை நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தங்குவதற்று அழைப்போமா?

    வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரம் 20-ம் வசனத்தில் இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என்(இயேசு) சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம் பண்ணுவான் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் நம் ஒவ்வொருவடைய வீட்டிலும் இயேசு பிரவேசிக்க அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நாம் ஒவ்வொருவருக்கும் தெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக ஆமென்.

    சகோதரி.ரூத்பிமோராஜ்,
    கே.ஜி.கார்டன், திருப்பூர்.
    நாம் பயப்படும் போது இயேசு கிறிஸ்துவை தைரியமாய் நம்பி நிற்போம். இந்த தவக்காலத்தல் விசுவாத்தோடு ஜெபித்து ஜெயம் பெறுவோம்.
    யோவான் 14-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவசமாயிருங்கள். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்டுள்ளதை நாம் வேதாகமத்தில் படிக்க முடியும். ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய இருதயம் அநேக காரியங்களை குறித்து இன்றைய உலக சுகாதார சூழ்நிலையக் கண்டு கலங்காதவரே இல்லை.

    ஆனால் நம் தேவனோ நம்மை பயப்படவே வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்துகிறார். அதனால் தான் பயப்படாதே, திகையாதே கலங்காதே என்று ஆண்டவர் நம்மை ஆற்றித் தேற்றுவதை பார்க்கலாம். பயப்படாதே என்று வார்த்தை மட்டும் 365 முறை பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது கர்த்தர் நம்மை பார்த்து பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று அன்போடு சொல்கிறார்.

    கர்த்தர் இத்தனை கரிசனையோடு ஏன் பயப்படாதே என்று தன் பிள்ளைகளுக்கு சொல்கிறார் தெரியுமா? பயம் சாத்தானுடைய கொடிய ஆயதங்களில் ஒன்று பயம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் முற்றிலும் நிர்மூலமாக்கக்கூடியது. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று 1 யோவன் 5-ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பயம் நம்முடைய ஜெயத்தை தடை செய்யும் ஆயுதமாயிருக்கிறது.

    பயப்படும் எந்த கிறிஸ்தவனாலும் திறப்பில் நின்று பாரத்தோடு தன் தேசத்திற்காக ஜெபிக்க முடியாது. அற்புதத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவே முடியாது. சங்கீதம் 56-ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் என்று நாம் வாசிக்கிறோம். எனவே நாம் பயப்படும் போது இயேசு கிறிஸ்துவை தைரியமாய் நம்பி நிற்போம். இந்த தவக்காலத்தல் விசுவாத்தோடு ஜெபித்து ஜெயம் பெறுவோம்.

    சகோதரி.ரூத்பிமோராஜ். கே.ஜி,கார்டன்,திருப்பூர்.
    தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களாய் காணப்பட தேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
    மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்ளுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்( 1 பேதுரு 5:5) பெருமையுடையவன் எனக்கு எல்லாம் தெரியும். ஒருவரும் எனக்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றிலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம், எரிச்சல், பேராசை, பொறாமை என்ற துர்குணங்கள் தோன்றும். நான் செய்வது சரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைப்போல காணப்படும். ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்தி பெருமை கொண்ட போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் வேத பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்து போனான்.பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம், தாழ்மையுள்ள ஒரு மனிதன் அவமானப்படும் போதும். நிந்திக்கப்படும் போதும் துன்புறுத்தப்படும்போதும், தன் உணர்வால் அவன் மனதை புண்படுத்த முடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை புண்படுத்த முடியாது. தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.

    தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை. தாழ்மையுடைவர்கள் சாந்தமும் சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார்.

    இதேபோல் தான் ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் எனறு தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மை தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

    எனவே தேவ பிள்ளைகளே இந்த தவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களாய் காணப்பட தேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    சகோ. அல்போன்ஸ், பல்லடம்
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் மறைசாட்சி தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி காலையில் திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. குரும்பனை இணை பங்குத்தந்தை ஜேக்கப், மேல மணக்குடி இணை பங்குதந்தை ராய், இளங்குருமடம் புனித அலோசியஸ் வினட் மேக்சன் அருளுரை ஆற்றினார்கள்.

    மதியம் 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம் முழங்கியது. அதனைத் தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமாலையும் புகழ் மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

    இதில் கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை உரையும், முட்டம் மறைவட்ட முதல்வர் ஜான் ரூபஸ் அருளுரையும் ஆற்றினர். கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச் செயலாளர் சகாயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், அருட் சகோதரிகள், தேவசகாயம் மவுண்ட் வட்டார துணைத்தலைவர் ஜேக்கப் மனோகரன், மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.

    விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனியும், 9-ம் திருவிழாஅன்று இரவு வாண வேடிக்கையும், அதனை தொடர்ந்து தேர்ப்பவனியும், 10-ம் திருவிழா அன்று மாலையில் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாட்டை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.
    ×