search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    மன்னிப்பின் மகத்துவத்தை உணர்த்திய இயேசு

    கடவுளின் அன்பை விளக்கவும், பாவிகளை கடவுள் ஏற்றுக்கொள்வாரா என்பதை விளக்கவும், இயேசு தன் சீடர்களுக்கு ஊதாரி மகனின் கதையை கூறினார்.
    “ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் தன்னுடைய அப்பாவிடம் வந்து, ‘தந்தையே, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கை இப்போதே பிரித்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டான். அதனால், அவர் தன்னுடைய சொத்துகளைப் பிரித்து அவனுக்குரியதைக் கொடுத்தார். சில நாட்கள் கடந்தன. அந்த இளைய மகன் தனக்குப் பாகமாகக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான்.

    அங்கே அவன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான். அப்போது அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான். அதனால் ஒருவரிடம் போய் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். அவர் தன்னுடைய பன்றிகளை மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். பன்றித் தீவனம் சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் ஏங்கினான். ஆனால், அவனுக்கு யாரும் எதையும் கொடுக்கவில்லை.

    அவனுக்குப் புத்தி வந்தபோது, ‘என் தந்தையின் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயிறார சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் என் தந்தையிடம் போய், மன்னிப்பு கேட்பேன்’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன் தந்தையிடம் புறப்பட்டுப் போனான். அவன் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார்.

    கண்கள் பஞ்சடைந்து, கிழிந்துபோயிருந்த அங்கியை அணிந்தபடி, காலணிகள் இல்லாத பாதங்களோடு தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்த அவனது தோற்றத்தைக் கண்டு அவருடைய மனம் உருகியது. ஓடிப்போய் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். அப்போது அவன், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்குத் தகுதியில்லை. என்னை உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னான்.

    ஆனால், அவனுடைய அப்பா தன் வேலையாட்களை நோக்கி, ‘விரைந்து சென்று முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்கு அணிவியுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் கால்களுக்குச் செருப்பையும் அணிவியுங்கள். கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து சமையுங்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம்’ என்று சொன்னார். இதைகேட்டு மகிழ்ந்த வேலைக்காரர்கள் அவர் கூறியபடியே செய்தார்கள். மனம் திருந்தி வந்த ஊதாரி மகனின் வருகையை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கினார்கள்.

    ஊதாரி மகன் வீட்டுக்குத் திரும்பி வந்த நேரத்தில் அவருடைய மூத்த மகன் வயலில் இருந்தான். கொடுத்த சொத்தை அழித்து, திரும்பி வந்த தம்பியை தந்தை ஏற்றுக்கொண்டதை நினைத்து அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. வீட்டுக்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, அவனுடைய தந்தை வெளியே வந்து, மூத்த மகனைக் கெஞ்சி அழைத்தார். அதற்கு அவன் தன்னுடைய தந்தையிடம், ‘இத்தனை ஆண்டுகளாக நான் உங்களுக்காகப் பாடுபட்டு வேலை செய்திருக்கிறேன், உங்கள் பேச்சைத் தட்டியதே இல்லை.

    இருந்தாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூடக் கொடுத்ததில்லை. ஆனால், தம்பி தீய வழியில் உல்லாசமாகத் தன் நாட்களைச் செலவழித்து உங்கள் சொத்துகளை வீணாக்கினான். அவன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னான். அதற்கு அவர், ‘மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய்; என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவைதான். ஆனால், உன் தம்பி செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான். இந்த மகிழ்வை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டார்” என்றார்.

    மனம் திருந்தி வருகிற பாவிகளிடம் கடவுளாகிய தந்தை காட்டுகிற அணுகுமுறையை ஊதாரி மகன் கதையின் மூலம் இயேசு எடுத்துக்காட்டுகிறார். இந்தக் கதையைக் கேட்டபோது பேதுரு இயேசுவை நோக்கி “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
    Next Story
    ×