என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    எரிகோவிற்கு செல்லும் வழியோரமாய் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பார்வை இழந்த ஒருவர், மக்கள் கூட்டம் தன்னைக் கடந்து போவதை உணர்ந்தார்.
    ‘ஜெபம்’ என்பது, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் நம்மை படைத்த இறைவனுடன் உறவாடவும், அவருடன் பேசவும் ‘ஜெபம்’ நமக்கு உறுதுணையாக இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு தேவையின் போதும், வேதனை மற்றும் சோதனையின் போதும் நம்முடைய குரல் இறைவனை எட்ட வேண்டும் என்றால், அதற்கு அவரை நோக்கி ஜெபிப்பது ஒன்றுதான் வழி. ஏனெனில் இறைவன் என்றுமே, தன்னை நாடுபவா்களின் குரலைக் கடந்து செல்பவர் அல்ல. நம்முடைய குரலைக்கேட்டு, நின்று நமக்கு பதில் தரக்கூடியவர் அவர் ஒருவரே.

    “அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்” என்று திருப்பாடல் 90:15-ல் நமக்கு அவர் உறுதியளித்திருக்கிறார். தேவன் என்றுமே நம்முடைய வேண்டுதல்களையோ, ஜெபத்தையோ புறக்கணிப்பவர் அல்ல. நிச்சயமாய் முடிவினை தருபவர். எனவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் நம்முடைய ஜெபத்தினை நிறுத்தாமல், தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் இறைவனின் ஆசிர்வாதத்தை நாம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

    எரிகோவிற்கு செல்லும் வழியோரமாய் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பார்வை இழந்த ஒருவர், மக்கள் கூட்டம் தன்னைக் கடந்து போவதை உணர்ந்தார். உடனே அதற்கான காரணத்தை அங்கிருந்தவர்களிடம் அவர் கேட்ட போது, ‘நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார்' என்று தெரிவித்தார்கள்.

    அதை கேட்டவுடன் அவர் ‘‘இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்’’ என்று கூக்குரலிட்டார். உடனே அருகிலிருந்த மக்கள் அவரை அமைதியாய் இருக்குமாறு அதட்டினார்கள். ஆனால் அவர், ‘‘தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்’’ என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

    அவருடைய குரலை கேட்ட இயேசு உடனே நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், ‘‘நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்’’ என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ‘‘ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று’’ என்றார். அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

    சூழ்ந்திருந்த மக்கள் தன்னை அமைதியாய் இருக்கும்படி அறிவுறுத்தியபோதும், இயேசுவால் மட்டுமே தனக்கு விடுதலை தர முடியும் என்று முழுமையாய் விசுவாசித்தார் அந்த பார்வை இழந்தவர். அந்த உறுதியான விசுவாசத்தின் காரணமாகதான், அவர் முன்பை விட இன்னும் அதிக சத்தத்துடன் இயேசுவை நோக்கி குரல் கொடுத்தார்.

    ‘துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள். உங்களை காத்திடுவேன். அப்போது நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்’ என்ற திருப்பாடல் 50:15 வார்த்தையின்படி, இயேசு தன்னை நோக்கி அழைத்த அந்த பார்வையற்றவரின் குரலைக் கேட்டு அதற்கான பதிலையும் கொடுத்தார். அதனால் பார்வை பெற்றவர் மட்டுமல்ல, அவரை அமைதியாய் இருக்கும்படி அதட்டிய மக்களும் அவருடன் சேர்ந்து கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.

    பழைய ஏற்பாட்டில் யோசுவா தன்னுடைய வேண்டுதலால், சூரியனை கிபியோன் மீதும், சந்திரனை அய்யலோன் பள்ளத்தாக்கிலும் நிற்கும்படி கூறினார். அவருடைய குரலைக் கேட்டு சூரியன் அஸ்தமிக்க நினைக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றதாக விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.

    அன்று யோசுவாவின் குரல் படைப்பைத்தான் நிறுத்தியது. ஆனால் இங்கு பார்வையற்றவரின் குரலோ அனைத்தையும் படைத்தவரையே நிற்க வைத்தது. அவர் கூக்குரலிட்டபோது இயேசு அதனை கடந்து செல்லாமல், அவருடைய குரலை கேட்டு நின்று அவருக்கு விடுதலையை கொடுத்தார். அதே இயேசு கிறிஸ்து இன்றும் நம் மத்தியில் உலாவி கொண்டுதான் இருக்கிறார். இப்போதும் அவர், ‘அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்’ என்ற வாக்குத் தத்தத்தின் படி நம்முடைய குரலை கடந்து செல்பவராய் அல்ல, அதற்கு பதில் அளிப்பவராகவே இருக்கிறார். அந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும் நாமும் ஜெபிப்போம், இறை ஆசிர்வாதத்தை பெற்றவர்களாய் அவரை மகிமைப்படுத்துவோம்.
    அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.

    விஜயதசமி தினத்தன்று கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவையில் உள்ள டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து இருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஆலயங்களுக்கு வந்தவர்களிடம் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையில் நடந்த பிரார்த்தனைக்கு சென்றது மன நிம்மதியாக இருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
    "தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார் இயேசு
    இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு தமது பாடுகள், உயிர்த்தெழுதல் பற்றி கூறுவதும் அதேவேளை தன்னை பின்பற்ற விரும்பினால் தன்னலம் துறந்து தம் சிலுவையை சுமந்து கொண்டு தன் பின்னே வரட்டும் என தெரிவித்ததையும் நமக்கு கூறுகிறது.

    உலகில் ஒவ்வொரு மனிதனும் சுயநலத்துடன் வாழ்ந்தால் சக மனிதர்கள் வாழ முடியாது போகும். அதனால் தான் தன்னை பின்பற்றுகிறவர்களை தன்னலம் துறந்து வாருங்கள் என இயேசு அழைக்கின்றார். மக்களை அன்பு செய்வதற்காகவே இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

    அதேபோன்று அவரை பின்பற்றுகின்ற நாமும் அனுதினம் நாம் சுமக்கும் சிலுவை களோடு அவரை பின் தொடருமாறு அவர் அழைக்கின்றார்.

    சத்திய வேதம் பிறரன்பு மற்றும் தன்னைப் போல பிறரை நேசிக்கும் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

    எமது குடும்ப வாழ்வில், பொது வாழ்வில் இன்னோரன்ன நாம் சந்திக்க நேரும் அனைத்து சவால்களிலும் இயேசு எப்போதும் எம்முடனே இருக்கின்றார் என்பதை விசுவாசிப்போம்.

    எமது கஷ்டங்கள் சிலுவைகளை நாம் தனித்து சுமக்கவில்லை அவர் வாழ்க்கையில் எம்மைத் தாங்கி நம் முன் செல்கின்றார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தவக்காலத்தில் பயணிப்போம்.

    "தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார் இயேசு
    திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
    ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். கால்நடைகள், நிலபுலன்கள், வேலையாட்கள் என அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தார்கள்.

    மூத்த மகன் அமைதியானவன். தந்தைக்கு உதவியாய் இருந்தான். இளையவன் அவனுக்கு நேர் எதிர். உல்லாசப் பேர்வழி. ஒரு நாள் அவன் தந்தையிடம் வந்தான்.

    ‘அப்பா... நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்’.

    ‘என்ன முடிவு?’

    ‘நம்முடைய சொத்தில் எனக்குச் சேரவேண்டிய பாகத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள், நான் போகிறேன்’.

    தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவன் கேட்கவில்லை, எனவே தந்தை சொத்தைப் பிரித்து இருவருக்கும் அளித்தார்.

    இளையவன் சொத்தையெல்லாம் விற்று பெரும் பணம் திரட்டினான்.

    ‘வாருங்கள் நாம் வெளியூர் சென்று உல்லாசமாய் இருக்கலாம்’ என்று அவன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் வெளியூர் சென்று விடுதிகளிலும், சூதாட்ட இடங்களிலும் சென்று ஆனந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்.

    வருடங்கள் கடந்தன. அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போக, நண்பர்கள் விலகினர். விடுதியிலிருந்தும் துரத்தப்பட்டான்!

    செல்வத்தின் மீது நிமிர்ந்து படுத்திருந்த அவன் இப்போது கோணிக்குள் உடல் சுருக்கி தெருவோரத்தில் கிடந்தான். பசி அவனுடைய வயிற்றைக் கிள்ளியது.

    ‘ஐயா... எனக்கு ஏதாவது ஒரு வேலை தாருங்க ளேன்...’ என்று கேட்டு அவன் வேலை தேடி அலைந்தான், எதுவும் கிடைக்கவில்லை.

    கடைசியில் ஒருவர் இரக்கப்பட்டு பன்றிகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தான்.

    அந்த நாட்டில் பஞ்சம் பரவத் தொடங்கியது. எனவே அவன் பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டை உண்ணத் தொடங்கினான். அதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உரிமையாளர் அவனை அடித்துத் துரத்தினார்.

    அப்போது தான் அவன் தன் தவறை உணர்ந்தான். தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவருடைய வேலைக்காரர்களில் ஒருவராக வாழலாம் என முடிவெடுத்தான். தந்தையின் இல்லம் நோக்கி நடந்தான்.

    அழுக்கடைந்த ஆடைகளுடன் ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்ட தந்தை அவனை அடையாளம் கண்டுகொண்டார்! அவனை நோக்கி ஓடினார்.

    ‘மகனே...’ என தன்னை நோக்கி ஓடி வரும் தந்தையைக் கண்டு மகன் கண் கலங்கினான்.

    ‘அப்பா... மன்னியுங்கள்... விண்ணகத் தந்தைக்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்து விட்டேன். இனிமேல் எனக்கு உமது மகனாய் இருக்கும் தகுதி இல்லை. என்னை உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவராக எண்ணி உணவளிப்பீரா?’ - அவன் சொல்ல நினைத்திருந்ததை சொல்ல ஆரம்பிக்கும் முன், தந்தை பணியாளரை அழைத்தார்.

    ‘முதல் தரமான ஆடைகளைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். விரல்களுக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் உடனே அணிவியுங்கள். கொழுத்த கன்றை அடித்து விருந்து வையுங்கள்’.

    மாலையில் மூத்த மகன் வயலிலிருந்து வீடு திரும்பினான்.

    ‘இசை கேட்கிறது, நடனச் சத்தம் கேட்கிறது, என்ன விஷயம்?’ - பணியாளர் ஒருவரிடம் கேட்டான்.

    ‘உமது தம்பி திரும்பி வந்திருக்கிறார், எனவே தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார்’.

    ஒரு உதவாக்கரைக்கு இத்தனை பெரிய விழாவா? அண்ணனின் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டுக்குள் நுழையாமல் வெளியே நின்றான்.

    தந்தை வெளியே வந்தார்.

    ‘மகனே உள்ளே வா... உன் தம்பி திரும்பி வந்திருக்கிறான்’.

    ‘உம் சொத்தையெல்லாம் அழித்து விட்டு வந்த மகனுக்காக விருந்தா...? ரொம்ப நல்லது. நீங்கள் விருந்து கொண்டாடுங்கள். நான் உள்ளே வரவில்லை’.

    ‘ஏன் இத்தனை கோபம்?’

    ‘இருக்காதா? நான் இத்தனை காலம் உம்மோடு இருக்கிறேனே. நான் விருந்துண்டு மகிழ எனக்கு ஒரு ஆட்டுக் குட்டியையாவது நீர் தந்ததுண்டா? இதோ கூத்தடித்து வந்த மகனுக்காய் கன்றை அடிக்கிறீர்’.

    ‘மகனே... நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். நாம் இப்போது மகிழ்வது தான் முறை. ஏனென்றால், உன் தம்பி இறந்து போயிருந்தான், உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான், கிடைத்துவிட்டான்’ என்றார்.

    அண்ணனோ வீட்டுக்குள் நுழைய மனம் இல்லாமல் இருந்தான், தம்பியோ வீட்டுக்குள் தந்தையின் அன்பில் இணைந்திருந்தான்.

    விண்ணகத் தந்தையின் அன்பை விட்டு விலகிச் செல்லும் போது, பாவத்தில் விழுகிறோம். அந்த தற்காலிக இன்பங்களே முழுமை என நினைக்கிறோம். அவற்றை விட்டு விலகி மீண்டும் தந்தையின் அன்பில் இணைய விரும்பி வருபவர்களை தந்தை எந்த கேள்வியும் இன்றி அன்புடன் அரவணைக்கிறார்.

    நாம் நம் பாவத்தை விட்டு மனம் திரும்பி இறைவனிடம் வரும் மகனாய் இருக்க வேண்டும். திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
    தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர்.
    குன்றின் மீது ஒளிரும் தீபம் குழித்துறை மறை மாவட்டத்தின் துடிப்புமிக்க இறைசமூகங்களில் ஒன்று செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் பங்குதலம்.

    இயேசுவின் நற்செய்தி விதையை நூறாண்டுகளுக்கு மேலாகவே உள்வாங்கிக் கொண்ட இந்த பகுதிக்கு செட்டிச்சார்குழிவிளை என்பதே இயற்பெயராகும். கிறிஸ்து பிறப்பு விழாவில் முளைப்பாரி வைப்பதில் தமக்கும் உரிமை வேண்டும் என்ற உணர்வு கொண்ட சுயமரியாதை இறை நம்பிக்கையாளர்கள் தமக்கென ஓர் ஓலைக்குடிசையாவது இறை வழிபாட்டுக்கு வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிறு குடிசையை உருவாக்கி அதனை சிறுமலர் தூய குழந்தை இயேசுவின் தெரசாவுக்கு அர்ப்பணித்தனர். ஊரின் உருவாக்கத்திலும் குருசடி அமைத்தலிலும் குறிப்பிடத்தக்கவர்கள் மரிய மெய்யல், நாடகக்கார ஆசான் சவரியாரடிமை, மரிய அருளப்பன், சத்தியநாதன், வைத்தியநாதன் ஆவர்.

    தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர். இறைவன் அருளால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்ந்து வந்தது. இந்தநிலையில் 21-1-1950-ல் இந்த பகுதியை சேர்ந்த இறைமக்களின் ஆன்மிக பராமரிப்பு பணி மணலிக்கரையை தலைமையிடமாகக் கொண்ட கார்மல் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துறவற தவ வாழ்வில் தன்னிகரற்று விளங்கும் கார்மல் சபை துறவிகளின் அரும்பணியால் 60 ஆண்டுகாலம் செட்டிச்சார்விளை பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டது. 1951-ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஓலைகள் வேயப்பட்ட சிறு குருசடி திருக்கோவிலாய் எழுந்தது. 1964-ல் கோபுரம் அமைக்கப்பட்டு வேர்க்கிளம்பி-சுவாமியார்மடம் சாலையில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது. மக்களின் எண்ணிக்கை மேலும் உயரவே தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1999-ம் ஆண்டு ஆயர் லியோன் தர்மராஜ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அதன் தொடர்ச்சியாக 2008-ல் ஆலயத்திற்கு அழகு சேர்க்க வானுயர்ந்த எழில் கோபுரம் நிறுவப்பட்டது.

    உள்ளூர் மக்களுக்கும், அருகில் உள்ள கிராமத்தினருக்கும் தரமான ஆங்கில கல்வி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 2006-ல் லிட்டில் பிளவர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பங்குமக்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது.கார்மல்சபை துறவிகளின் தியாகத்தொண்டு காலத்தால் மறக்க இயலாத மாணிக்க வரலாறு. கார்மல்சபை அருட்தந்தையர் ஸ்டீபன் மேரி, கமால்ஸ், பாஸ்கல், ஜெரோம், இரபேல், ஆல்பர்ட், பீட்டர், கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோபர், ரசல்ராஜ் உள்ளிட்டவர்கள் செட்டிச்சார்விளையை செழுமைப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    இறையாட்சி பயணத்தில் அடுத்த கட்டமாக 9-6-2010 அன்று செட்டிச்சார்விளை இறைச்சமூகம் அந்த நாளைய ஒருங்கிணைந்த கோட்டார் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை மரிய அற்புதம் முதல் பங்கு பணியாளராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அருட் தந்தையர் ஜார்ஜ் யூஜின்ராஜ், ராபர்ட் பென்னி, ஜாக்சஸ் இளங்கோ ஆகியோர் சிறப்பாக பணியாற்றி பங்கின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தனர். 7-6-2021-ல் அருட்தந்தை டேவிட் மைக்கேல் பங்கு பணியாளராக பொறுப்பேற்று பணிகளை தொடர்கின்றார்.

    ஆன்மிக மறுமலர்ச்சி, சமூக மேம்பாடு, பொருளாதார தன்னிறைவு, உறவால் சமூக கட்டுமானம், இளைஞர் நலம், ஆரோக்கியமான குடும்பம் ஆகிய இலக்குகளை கொண்டு இறையாட்சி பாதையில் வீறுநடை போடுகிறது.. விசுவாச வாழ்வின் மையமான திருக்கோவில் தூய குழந்தை இயேசுவின் தெரசாவின் பாதுகாவலில் மக்களின் பங்கேற்புடன் எழில் மாளிகையாய் நிமிர்ந்து நிற்கிறது. அழகுற புதுப்பிக்கப்பட்ட ஆலயம், திருப்பலி பீடம், மண்ணின் மைந்தர் சிற்பக்கலைஞர் ஜாண்குமாரால் நன்கொடையாய் வடிவமைக்கப்பட்ட வியத்தகு வியாகுல அன்னை கெபி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. எழிலாய் ஒளிரும் ஆலயம் போல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்.

    -அருட்தந்தை டேவிட் மைக்கேல்
    விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார்.
    ‘விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து, நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.’

    இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று. இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார். இந்த உவமையும் உலக முடிவில் அளிக்கப்படும் தீர்ப்புநாளைக் குறிக்கின்றது.

    விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். மீன்களைப் பிடிப்பதற்காகவே மீனவர் கடலில் வலைவீசுகின்றனர். ஆனால், வலையில் மீன்களோடு, உண்ணத் தகாத மீன்களும், பிற உயிரினங்களும் சேர்த்து அள்ளப்படுகின்றன. அவ்வாறே, விண்ணரசின் நற்செய்தியாகிய வலை மக்கள் நடுவே வீசப்படுகிறது. நாம் திருச்சபையில் சேர்க்கப்படுகிறோம். நாம் அனைவரும் நல்ல மீன்களாகவும், கெட்ட மீன்களாகவும் திருச்சபையில் இருக்கிறோம். நாம் அனைவரும் நம்மை நேர்மையாளராகவும், இறைவனின் பிள்ளைகளாகவும், இறையாட்சியைப் பெற்றவராகவும் நம்புகிறோம்.

    பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இவ்வாறே தம்மை நேர்மையாளராகவும் விண்ணரசுக்கு உரியவராகவும் எண்ணினர். இன்னும் வலை நிறையவில்லை, கரைசேர்க்கப்படவில்லை. இப்போது நடப்பது இரக்கத்தின் காலம். நாம் வலைக்குள் மீனாக இருக்கிறோமா அல்லது தேவையில்லாத உயிரினங்களாக இருக்கிறோமா என்பதை நாம் இப்போதே அறியவேண்டும். நம் பாவங்களை நாம் அறிந்திருக்கிறோமா?, மனம் மாற விரும்புகிறோமா?, இயேசுவின் மன்னிப்பை பெற்றிருக்கிறோமா?, இயேசுவின் இறையாட்சியின் அன்பு, பரிவு, தாழ்மை போன்ற ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகிறதா? என்பதை கடைசி நாளாகிய இப்போதே அறிந்துகொள்வது நமக்கு நல்லது.

    வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து நல்லவற்றை கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் வானதூதர் நேர்மையாளி இடையே இருந்து தீயோரைப் பிரிப்பார். வலை நிறைவடைவதே உலகின் முடிவு. திருச்சபையிலுள்ள நேர்மையாளரையும் வெளிவேடக்காரரையும் வானதூதர் பிரிக்கின்றனர். நல்லவர் நிலைவாழ்விலும், கெட்டவர் அழியா நெருப்பிலும் சேர்க்கப்படுகின்றனர்.

    “அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்று சொல்வீர்கள். ஆனாலும், ‘தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்லப்படும்” என்று இயேசு கூறுகிறார்.

    நமது தீர்ப்பல்ல, இறைவனின் தீர்ப்பே நேர்மையாளரையும், தீயோரையும் பிரிக்கிறது என்பதை அறியவேண்டும். வலை இழுக்கப்படுவதற்கு முன், மனம் மாறி நற்செய்தியைக் கைகொள்ளுவோம்.
    நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 14-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
    நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருவிழா திருப்பலி நடக்கிறது.

    திருக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் துரைசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா திருப்பலியும், திருக்குடும்பம் ஒரு பொறுப்பு என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் ஸ்டான்லி மறையுரையாற்றுகிறார்.

    13-ந் தேதி அன்று காலை 6 மணி திருப்பலிக்கு கார்மல் பள்ளி அருட்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனையும், திருக்குடும்பம் ஒரு திருஅவை சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜாய் தலைமை தாங்க அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    14-ந்தேதி அன்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்தும், திருக்குடும்பம் ஒரு கோவில் சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு தேர் திருப்பலி நடக்கிறது. பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஊர்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்தது. இதனையொட்டி குழந்தைகள் பெரிய ஜெபமாலையை கையிலேந்தி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் சிறிய தேருடன் ஜெபமாலை பவனி பசிலிக்கா வளாகத்திற்குள் வலம் வந்தது.

    இதனை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், தாமஸ், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழா அன்று மாலை ஆராதனை நடந்தது.
    தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட குரு ரோலிங்டன், வடக்கலூர் பங்குதந்தை ஜேம்ஸ் அமிர்தராஜ், தாளமுத்துநகர் துணை பங்குதந்தை பிபின் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை மறையுரை நற்கருனை ஆசி் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழா அன்று மாலை ஆராதனை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. மறைமாவட்ட பொருளாளா் சகாயம் மறையுரையாற்றினார். நிகழ்ச்சியில் முதல் திருவிருந்து பெறும் சிறுவர், சிறுமிகள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை நெல்சன், துணைபங்கு தந்தை பிபின் மற்றும் திரு இருதய சகோதரிகள், ஊா் நிர்வாகிகள், அன்பியங்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தரின் 42 அடி உயர சொரூபம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.
    திருவாடானை தாலுகா ஓரியூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது. இங்கு புனித அருளானந்தருக்கு 42 அடி உயரத்தில் புதிதாக சொரூபம் நிறுவப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.

    இதனை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து வைத்தார். தொழில் அதிபர் சேவியர் பிரிட்டோ புனித அருளானந்தர் சொரூபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அனைத்து கட்டுமானப் பணி களையும் மேற்கொண்ட புனித அருளானந்தர் மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் பால் செங்கோல்ராஜ் கல்வெட்டை திறந்துவைத்தார். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் முன்னிலையில் பங்கு இறைமக்களால் ஜெப வழிபாடு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து அருட் தந்தையர்கள் கூறுகையில், புனித அருளானந்தர் சொரூபம் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதுவரை புனித அருளானந்தருக்கு இதுபோன்று பெரிய அளவிலான சொரூபம் எங்கும் அமைக்கப்படவில்லை.

    இங்கு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 4-ந் தேதி புனித அருளானந்தர் மறை சாட்சியாக தன்னுயிர் ஈந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியும், திருப்பவனியும், நற்கருணை ஆசீரும், அன்னதானமும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
    புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.
    கண்டன்விளை காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப்பெரியதாக இருந்தமையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென விரும்பிய அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

    1923-ஆம் ஆண்டு ரோமை நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் சிறுமலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4-1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

    நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி பாளைமறைமாவட்ட பணிநிறைவு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை ஸ்டாலின், துணைத்தலைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    இந்த உலகில் பல பயணங்களை நாம் மேற்கொண்டாலும், நமக்கென்று ஒரு முக்கியமான பயணம் உள்ளது. அது விண்ணுலகை நோக்கி நாம் செல்ல வேண்டிய பயணம்.
    மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், மன நிம்மதிக்காகவும், வாழ்நாள் முழுவதும் பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்கிறார்கள். அத்தகைய பயணங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களையும், அனுபவங்களையும் பெற உதவுகிறது. இன்னும் சிலருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது. ‘மீண்டும் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா?’ என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. அப்படிபட்ட சில பயணங்கள் விவிலியத்தில் தொடக்க நூல் முதல் வெளிப்பாடு வரை காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை குறித்து பார்ப்போம்.

    விண்ணுலக பயணம்

    விவிலியத்தில் வித்தியாசமான பயணம் மேற்கொண்டவர்களில் இருவர் ஏனோக்கும், எலியாவும். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்த போது அவரை காணவில்லை. ஏனெனில் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார். எலியாவையோ ஆண்டவர் சுழற்காற்றின் வழியாக விண்ணுலகுக்கு அழைத்துக்கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு காலங் களில் வாழ்ந்தாலும், தேவன் தாமே அவர்களை உயிருடன் விண்ணகத்திற்கு அழைத்துக் கொண்டார் என்று விவிலியம் கூறுகிறது.

    நோவாவின் பேழை பயணம்

    மனிதர்களால் மண்ணுலகில் பாவம் பெருகியபோது, அதை கண்ட தேவன், மனிதரை உருவாக்கியதற்காக மனம் வருந்தினார். அதனால்தான் படைத்த மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் வரை அனைத்தையும் அழிக்க அவர் திருவுளமானார். அதேவேளையில் நோவாவோ தம் காலத்தவருள் நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார். அதனால் தேவன், அவரை ஒரு பேழை செய்யச் சொன்னார். அந்த பேழையில் நோவாவையும் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடியை ஏற்றி கதவினை அடைத்தார். மண்ணுலகில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. உயர்ந்த மலைகள் கூட நீரில் மூழ்கிப்போயின. ஆனால் நோவா இருந்த பேழையோ, பெரு வெள்ளம் வற்றும் வரை நீரின் மீது பயணம் செய்தது.

    செங்கடல் பயணம்

    எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரவேல் மக்கள், மோசே தலைமையில் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் செங்கடல் அருகே வந்தபோது, எகிப்து அரசன் பார்வோன், தன்னுடைய படைகளுடன் அவர்களை பிடிக்க பின்தொடர்ந்து வந்தான். இறைவன் மோசேயை கொண்டு செங்கடலை இரண்டாக பிரித்து, வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரளை அவர்களுக்குச் சுவராக நிற்க வைத்து, அதன் நடுவே உலர்ந்த தரையில் அவர்களை நடக்கச் செய்தார். அவர்களுக்கு பின்னால் பார்வோனின் படைகளும் பின் வந்தது. நடுக்கடலில் வந்தபோது அந்த படைகளின் தேர் சக்கரங்களை தேவன் மண்ணில் புதைந்து போக செய்தார். மேலும் பிரிந்த நீர் திரள் ஒன்றாய் சேர்ந்ததில், பார்வோன் படையினர் நீரீல் மூழ்கி இறந்தனர். இஸ்ரவேல் மக்களோ தங்கள் கால்கள் நனையாதபடி செங்கடலை கடந்து பயணம் செய்தனர்.

    யோனாவின் பயணம்

    இறைவன், தன்னுடைய பணியை செய்யும்படி யோனாவை நினிவே மாநகருக்கு போகச் சொன்னார். அவரோ அதைக் கேட்காமல் ஆண்டவரிடம் இருந்து தப்பியோட நினைத்து, கப்பலில் ஏறி தர்சீசுக்குப் புறப்பட்டார். ஆனால் இறைவன் கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மாலுமிகள் மூலம் அவரை கடலில் தூக்கி எறியும் படிச் செய்தார். கடலில் விழுந்த யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கும்படி செய்த தேவன், அந்த மீனின் வயிற்றில் இருந்தபடியே யோனாவை, நினிவே மாநகரை அடையும்படி செய்தார்.

    இவ்வாறு விவிலியத்தில் பல பயணங்கள் யாரும் கற்பனை செய்திராத வகையில் அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இயேசு, தனது தந்தையின் கட்டளைப்படி பயணப்பட்டு நம்மை மீட்க விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்தார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றியவுடன், மீண்டும் விண்ணுலகிற்கு ஏறிச் சென்றார்.

    இந்த உலகில் பல பயணங்களை நாம் மேற்கொண்டாலும், நமக்கென்று ஒரு முக்கியமான பயணம் உள்ளது. அது விண்ணுலகை நோக்கி நாம் செல்ல வேண்டிய பயணம். எனோக்கு, நோவா மற்றும் எலியாவை போன்று நாமும் இறைவனின் சித்தத்தை உணர்ந்து அதன்படி செய்யும் போது, செங்கடலில் கால் நனையாமலும், நீரில் சிக்கிக்கொள்ளாமலும் அதனை கடந்து சென்ற இஸ்ரவேல் மக்களைப் போல, இந்த உலகின் பொல்லாப்புகளில் இருந்து நம்மை தப்பிவித்து, நாம் விண்ணகத்தை நோக்கி பயணம் செய்ய இறைவன் நமக்கு அருள் செய்வார்.
    ×