search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய குழந்தை இயேசுவின் தெரசாள்
    X
    தூய குழந்தை இயேசுவின் தெரசாள்

    செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் பங்குதலம்

    தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர்.
    குன்றின் மீது ஒளிரும் தீபம் குழித்துறை மறை மாவட்டத்தின் துடிப்புமிக்க இறைசமூகங்களில் ஒன்று செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் பங்குதலம்.

    இயேசுவின் நற்செய்தி விதையை நூறாண்டுகளுக்கு மேலாகவே உள்வாங்கிக் கொண்ட இந்த பகுதிக்கு செட்டிச்சார்குழிவிளை என்பதே இயற்பெயராகும். கிறிஸ்து பிறப்பு விழாவில் முளைப்பாரி வைப்பதில் தமக்கும் உரிமை வேண்டும் என்ற உணர்வு கொண்ட சுயமரியாதை இறை நம்பிக்கையாளர்கள் தமக்கென ஓர் ஓலைக்குடிசையாவது இறை வழிபாட்டுக்கு வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிறு குடிசையை உருவாக்கி அதனை சிறுமலர் தூய குழந்தை இயேசுவின் தெரசாவுக்கு அர்ப்பணித்தனர். ஊரின் உருவாக்கத்திலும் குருசடி அமைத்தலிலும் குறிப்பிடத்தக்கவர்கள் மரிய மெய்யல், நாடகக்கார ஆசான் சவரியாரடிமை, மரிய அருளப்பன், சத்தியநாதன், வைத்தியநாதன் ஆவர்.

    தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர். இறைவன் அருளால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்ந்து வந்தது. இந்தநிலையில் 21-1-1950-ல் இந்த பகுதியை சேர்ந்த இறைமக்களின் ஆன்மிக பராமரிப்பு பணி மணலிக்கரையை தலைமையிடமாகக் கொண்ட கார்மல் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துறவற தவ வாழ்வில் தன்னிகரற்று விளங்கும் கார்மல் சபை துறவிகளின் அரும்பணியால் 60 ஆண்டுகாலம் செட்டிச்சார்விளை பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டது. 1951-ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஓலைகள் வேயப்பட்ட சிறு குருசடி திருக்கோவிலாய் எழுந்தது. 1964-ல் கோபுரம் அமைக்கப்பட்டு வேர்க்கிளம்பி-சுவாமியார்மடம் சாலையில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது. மக்களின் எண்ணிக்கை மேலும் உயரவே தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1999-ம் ஆண்டு ஆயர் லியோன் தர்மராஜ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அதன் தொடர்ச்சியாக 2008-ல் ஆலயத்திற்கு அழகு சேர்க்க வானுயர்ந்த எழில் கோபுரம் நிறுவப்பட்டது.

    உள்ளூர் மக்களுக்கும், அருகில் உள்ள கிராமத்தினருக்கும் தரமான ஆங்கில கல்வி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 2006-ல் லிட்டில் பிளவர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பங்குமக்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது.கார்மல்சபை துறவிகளின் தியாகத்தொண்டு காலத்தால் மறக்க இயலாத மாணிக்க வரலாறு. கார்மல்சபை அருட்தந்தையர் ஸ்டீபன் மேரி, கமால்ஸ், பாஸ்கல், ஜெரோம், இரபேல், ஆல்பர்ட், பீட்டர், கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோபர், ரசல்ராஜ் உள்ளிட்டவர்கள் செட்டிச்சார்விளையை செழுமைப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    இறையாட்சி பயணத்தில் அடுத்த கட்டமாக 9-6-2010 அன்று செட்டிச்சார்விளை இறைச்சமூகம் அந்த நாளைய ஒருங்கிணைந்த கோட்டார் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை மரிய அற்புதம் முதல் பங்கு பணியாளராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அருட் தந்தையர் ஜார்ஜ் யூஜின்ராஜ், ராபர்ட் பென்னி, ஜாக்சஸ் இளங்கோ ஆகியோர் சிறப்பாக பணியாற்றி பங்கின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தனர். 7-6-2021-ல் அருட்தந்தை டேவிட் மைக்கேல் பங்கு பணியாளராக பொறுப்பேற்று பணிகளை தொடர்கின்றார்.

    ஆன்மிக மறுமலர்ச்சி, சமூக மேம்பாடு, பொருளாதார தன்னிறைவு, உறவால் சமூக கட்டுமானம், இளைஞர் நலம், ஆரோக்கியமான குடும்பம் ஆகிய இலக்குகளை கொண்டு இறையாட்சி பாதையில் வீறுநடை போடுகிறது.. விசுவாச வாழ்வின் மையமான திருக்கோவில் தூய குழந்தை இயேசுவின் தெரசாவின் பாதுகாவலில் மக்களின் பங்கேற்புடன் எழில் மாளிகையாய் நிமிர்ந்து நிற்கிறது. அழகுற புதுப்பிக்கப்பட்ட ஆலயம், திருப்பலி பீடம், மண்ணின் மைந்தர் சிற்பக்கலைஞர் ஜாண்குமாரால் நன்கொடையாய் வடிவமைக்கப்பட்ட வியத்தகு வியாகுல அன்னை கெபி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. எழிலாய் ஒளிரும் ஆலயம் போல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்.

    -அருட்தந்தை டேவிட் மைக்கேல்
    Next Story
    ×