search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்தையும் அள்ளும் மீன் வலை
    X
    அனைத்தையும் அள்ளும் மீன் வலை

    அனைத்தையும் அள்ளும் மீன் வலை

    விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார்.
    ‘விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து, நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.’

    இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று. இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார். இந்த உவமையும் உலக முடிவில் அளிக்கப்படும் தீர்ப்புநாளைக் குறிக்கின்றது.

    விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். மீன்களைப் பிடிப்பதற்காகவே மீனவர் கடலில் வலைவீசுகின்றனர். ஆனால், வலையில் மீன்களோடு, உண்ணத் தகாத மீன்களும், பிற உயிரினங்களும் சேர்த்து அள்ளப்படுகின்றன. அவ்வாறே, விண்ணரசின் நற்செய்தியாகிய வலை மக்கள் நடுவே வீசப்படுகிறது. நாம் திருச்சபையில் சேர்க்கப்படுகிறோம். நாம் அனைவரும் நல்ல மீன்களாகவும், கெட்ட மீன்களாகவும் திருச்சபையில் இருக்கிறோம். நாம் அனைவரும் நம்மை நேர்மையாளராகவும், இறைவனின் பிள்ளைகளாகவும், இறையாட்சியைப் பெற்றவராகவும் நம்புகிறோம்.

    பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இவ்வாறே தம்மை நேர்மையாளராகவும் விண்ணரசுக்கு உரியவராகவும் எண்ணினர். இன்னும் வலை நிறையவில்லை, கரைசேர்க்கப்படவில்லை. இப்போது நடப்பது இரக்கத்தின் காலம். நாம் வலைக்குள் மீனாக இருக்கிறோமா அல்லது தேவையில்லாத உயிரினங்களாக இருக்கிறோமா என்பதை நாம் இப்போதே அறியவேண்டும். நம் பாவங்களை நாம் அறிந்திருக்கிறோமா?, மனம் மாற விரும்புகிறோமா?, இயேசுவின் மன்னிப்பை பெற்றிருக்கிறோமா?, இயேசுவின் இறையாட்சியின் அன்பு, பரிவு, தாழ்மை போன்ற ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகிறதா? என்பதை கடைசி நாளாகிய இப்போதே அறிந்துகொள்வது நமக்கு நல்லது.

    வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து நல்லவற்றை கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் வானதூதர் நேர்மையாளி இடையே இருந்து தீயோரைப் பிரிப்பார். வலை நிறைவடைவதே உலகின் முடிவு. திருச்சபையிலுள்ள நேர்மையாளரையும் வெளிவேடக்காரரையும் வானதூதர் பிரிக்கின்றனர். நல்லவர் நிலைவாழ்விலும், கெட்டவர் அழியா நெருப்பிலும் சேர்க்கப்படுகின்றனர்.

    “அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்று சொல்வீர்கள். ஆனாலும், ‘தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்லப்படும்” என்று இயேசு கூறுகிறார்.

    நமது தீர்ப்பல்ல, இறைவனின் தீர்ப்பே நேர்மையாளரையும், தீயோரையும் பிரிக்கிறது என்பதை அறியவேண்டும். வலை இழுக்கப்படுவதற்கு முன், மனம் மாறி நற்செய்தியைக் கைகொள்ளுவோம்.
    Next Story
    ×