என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இறைவனிடம் மிளிரும் நற்பண்புகளான ஞானம், நீதி, ஆற்றல், பேரன்பு போன்றவைகளை ஆண்டவர் இயேசு பல்வேறு உவமைகள் வாயிலாக தெளிவுற விளக்குகிறார்.
    இறைவனிடம் மிளிரும் நற்பண்புகளான ஞானம், நீதி, ஆற்றல், பேரன்பு போன்றவைகளை ஆண்டவர் இயேசு பல்வேறு உவமைகள் வாயிலாக தெளிவுற விளக்குகிறார். இதில் ‘நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றியதொரு எளிய உவமையில் நீதி வழங்குகிற இறைவனைக் குறித்துக் கூறுகிறார்.

    ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். இவர் கடவுளுக்கு அஞ்சி நடவாதவராகவும், மக்களை மதியாதவராகவும் இருந்தார். அந்த நகரிலே ஆதரவற்ற ஒரு ஏழை கைம்பெண்ணும் இருந்தார். அந்த நடுவரிடம் கைம்பெண் சென்று, ‘‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’’ என்று தொடர்ந்து பலமுறை கேட்டுக்கொண்டே இருந்தார்.

    நெடுங்காலமாக இதை கவனத்தில் கொள்ளாமல், எதுவும் செய்யாத நடுவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சாதவன், மக்களை மதியாதவன் என்பதை அறிந்தும் இந்த கைம்பெண் அடிக்கடி தொல்லைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள். அதனால் நான் இவருக்கு நீதி வழங்குவேன், இல்லையானால் இவள் என் உயிரை வாங்கிக் கொண்டேஇருப்பாள்’ என்று ஆத்திரம் கொண்டார். நேர்மையற்ற நடுவரே நீதி செய்வாரென்றால், தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது இறைவன் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார்.

    நீதி வழங்குதல் தொடர்பாக யூத சமூகத்தில் அடிக்கடி நடைபெறுகின்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உவமை கூறப்பட்டுள்ளது. இங்கு இருவகைப் பண்பு களைக் கொண்ட மாந்தர்களைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று நேர்மையற்ற நடுவர், மற்றொன்று மனந்தளராத கைம்பெண். இங்கு சித்தரிக்கப்பட்டுள்ள நடுவரின் செயல்பாடுகளின் வாயிலாக இவர் உறுதியாக யூதரல்லாத ஒருவர் என்பதை யூகிக்க முடிகிறது.

    இயல்பாகவே, யூதர் களின் வழக்குகள் மூப்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமே தவிர அதற்கு மாறாக யூதர்கள் அவர்தம் வழக்குகளை நீதிமன்றம் கொண்டு செல்வதில்லை. யூதர் களின் திருச்சட்டத்தின்படி ஒருவர் மட்டும் நடுவராக இருந்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவும் இயலாது. அங்கே மூன்று நீதிபதிகள் இருப்பார்கள் (இணைச் சட்டம் 19:15). பாதிக்கப்பட்டவாதியின் சார்பாக ஒருவர், குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதியின் சார்பாக மற்றொருவர், இவர்கள் இருவரோடும் தொடர்பு இல்லாத, நடுவராய் நியமிக்கப்பட்ட வேறொருவர்.

    மூன்றாம் நடுவர், கலிலேயா ஆட்சியாளர் ஏரோதுவினால் அல்லது உரோமைப் பேரரசால் நியமிக்கப்பட்டு ஊதியம் பெறுகின்ற நடுவராய் இருப்பார். இதில் சில நடுவர்கள் பொதுப் பழிப்புக்கு ஆளானவர்களாயும், மக்களின் வெறுப்புக்குள்ளாகியவர்களாகவும் இருந்தனர். இவ்வகை நடுவருக்கு கையூட்டு அளிக்கும் அளவிற்கு பணபலமில்லாதவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மக்கள் அனைவரும் இதை நன்றாக அறிவர். இவர்கள் பண ஆசைப் பிடித்தவர்களாக, சிற்றின்பவாதிகளாகவும் இருந்தனர். இவர்களின் தேவைகளை நிறைவேற்றாத வாதிகளை தண்டனைக்கு உட் படுத்துவார்கள், இவர்களை மக்கள் ‘திருட்டு நடுவர்கள்’ என்றே அழைத்தனர்.

    ஆதரவற்ற மற்றும் ஏழைகளின் அடையாளமாகவே இந்த கைம்பெண் இங்கு காட்டப்படுகிறார். பணம், பொருள் என எவ்வித ஆதாரமும் இவரிடம் இல்லை. இவ்வகையான நடுவரிடமிருந்து நேர்மையான நீதி பெறுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாத போதும் இந்த கைம்பெண் இந்த நடுவரை நாடுகிறார். இவரிடம் இருந்த ஒரே ஆயுதம் மனந்தளராமை.

    இரக்கம், தயை, அன்பு, கடமையை நிறைவேற்றுதல், இறை அச்சம், மக்களை மதித்தல் ஆகிய எந்தவொரு லட்சணமும் அற்றவர்தான் இந்த நேர்மையற்ற நடுவர், என்றாலும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் நியாயம் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். “இவள் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பாள்” என்று சொல்லுமளவிற்கு மனந்தளராமல் நீதிபெறும் வரை முயற்சிக்கிறாள், விடா முயற்சியின் விளைவாக நீதி பெற முற்படுகிறாள். நேர்மையற்ற நடுவரே இப்படி இருக்கும் போது, பேரன்புமிக்க நம் தந்தையாம் கடவுள் தம் பிள்ளைகளுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ? விரைவில் நீதி வழங்குவார்.

    ஆண்டவர் இயேசு அனைத்து தரப்பு மக்களும் சமூகத்தில் நீதியைப் பெற்று நிறைவாழ்வு வாழ வேண்டும் எனும் பேராவல் கொண்டிருந்தார். ஆதலால் தான் இறைமகன் இயேசுவின் போதனைகள் சமூகநீதிக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இறைவன்" நீதியின் வடிவமாகவும், இறைவனே நீதியாகவும் விளங்குகிறார். “கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி! நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன்" (திருப்பாடல்கள் 7:11).

    “நான் வெல்வதை விட, என் அகவெளிச்சத்தின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்” என்றார் ஆபிரகாம் லிங்கன். நீதி புரட்டப்படுகிறபொழுது, நீதி மறுக்கப்படுகிறபொழுது, தாமதப்படுகிறபொழுது இறைவன் சினங்கொள்கிறார். ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார் (திருப்பாடல்கள் 11:7). மனந்தளராமல் மன்றாடுங்கள். நீங்கள் நீதியைப்பெறுவது உறுதி. ஏனெனில் அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. (இணைச் சட்டம் 10:18)

    - அருட்பணி. ம.பென்னியமின்.
    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தென்னகத்து பதுவை என அழைக்கப்படும் புளியம்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா திருப்பலி நடந்தது.
    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தென்னகத்து பதுவை என அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மதியம், மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 30-ந் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    நேற்று முன்தினம் காலையில் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு அன்னை மரியாவின் திருச்செபமாலை நடந்தது. 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு புதுமைக்கிணறு வளாகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட புதுமை புனித அந்தோனியார் சொரூபம் மந்திரிக்கப்பட்டு அந்தோனியார் சப்பர பவனி நடந்தது. அப்போது பக்தர்கள் நேமிசமாக உப்பு மிளகு ஆகியவற்றை சப்பரத்தின் மீது போட்டு வழிப்பட்டனர்.

    பக்தர்கள் நேமிசமாக குழந்தைகளை விற்று, மீண்டும் விலை கொடுத்து வாங்கினர். நேற்று அதிகாலையில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கேரளா மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புளியம்பட்டி பங்கு தந்தை மரியபிரான்ஸ், உதவி பங்கு தந்தைகள் மிக்கேல், ஜேக்கப் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    நெல்லை மாவட்டம் நாங்குநேரி முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தின் சைவ கத்தோலிக்க திருத்தலமாக கருதப்படும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முத்துலாபுரத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் காலை, மாலை ஜெப மாலை, திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடந்தன.

    8-ம் திருவிழா அன்று காலை புதுநன்மை, திருப்பலி, மாலை நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று நேற்று முன்தினம் மாலை குணமளிக்கும் திருப்பலி, தொடர்ந்து திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் மறையுரை ஆற்றினார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி நள்ளிரவு 12 மணியளவில் நடந்தது. அப்போது செபஸ்தியார், மாதா, அந்தோணியார் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் எழுந்தருளினர். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 10-ம் திருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது.

    விழாவில் பங்கு தந்தைகள் பாஸ்கர், அந்தோணியார், நார்பர்ட் தாமஸ், அந்தோணி ஜெகதீசன், செல்வராயர், பீட்டர்பால், அருள் அந்தோணி, அன்புசெல்வன், கிங்ஸ்டன், சகாயராஜ், சகாய ஜஸ்டின், ஹெர்மன்ஸ், ராபின், வின்சென்ட், குழந்தைராஜன், பிரகாஷ், ஆரோக்கியராஜ், விக்டர், மெர்லின், ப்ரீத்குமார், ஜேம்ஸ், செல்வரத்தினம், கலைச்செல்வன், ரெமிஜியுஸ், நெல்சன்ராஜ், ராயப்பன், ரூபன், லாரன்ஸ், ராபின்ஸ்டன்லி, அமலன், ஜாண் பிரிட்டோ, சேகரன், ஜெரால்டு எஸ்.ரவி, ததேயுஸ் ராஜன், நெல்சன் பால்ராஜ், அமலதாஸ், விக்டர் சாலமோன், டென்சில்ராஜா, வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வாணவேடிக்கைகள், அசன விருந்து, விளையாட்டு போட்டிகள், நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை சி.மணி அந்தோணி, தர்மகர்த்தா டி.எஸ்.மெல்கிஸ், கணக்கர் எஸ்.மரியசீமோன் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.
    குமரி மாவட்டம் மார்த்தாண்டம், வெட்டுவெந்நியில் தூய அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த திருத்தலத்தின் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள் ஜெபமும் தொடர்ந்து, சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சியில், குழித்துறை மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியூஸ் மறையுரை வழங்குகிறார்.

    மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜான் குழந்தை மறையுரை நிகழ்த்துகிறார்.

    நாளை (புதன்கிழமை) மாலை அருட்பணியாளர் ஜேசுரெத்தினம் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் போர்ஜியோ மறையுரையாற்றுகிறார். 8-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் அந்தோணி முத்து தலைமையிலும், 9-ந் தேதி காலையில் அருட்பணியாளர் அன்பரசன் தலைமையிலும், மாலையில் அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

    11-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையில் முதல்திருவிருந்து திருப்பலி நடைபெறும். அருட்பணியாளர் ஜெயப்பிரகாஷ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 12-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் இன்னசென்ட் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    13-ந் தேதி காலை 8 மணிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து சமபந்தி விருந்து நடைபெறும். 9.30 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு சீரோமலபார் வழிபாட்டு முறை திருப்பலியும், மதியம் 12 மணிக்கு மலங்கரை வழிபாட்டு திருப்பலியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. அதில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் மாலை திருப்பலியை தொடர்ந்து பொதுக்கூட்டமும், 8,9 ஆகிய தேதிகளில் நாடகங்களும் நடக்கிறது.
    இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம்.
    ஒரு இளைஞனுக்கு இந்த உலகமே மாபெரும் துன்பகர அனுபவமாக தென்பட்டது. எப்படியாவது இன்பத்தையும், மகிழ்வையும் கண்டுபிடித்து விடவேண்டும் என ஆசைப்பட்டான். என்ன செய்வது, யாரிடம் ஆலோசனை கேட்பது என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. காட்டில் வாழும் முனிவர்களிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என முடிவெடுத்து காட்டை நோக்கி பயணமானான். முனிவரை சந்தித்து ஆலோசனை கேட்டான். அவர் பின்வரும் நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

    காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். அரசனுக்கு காலில் முள் தைத்து விட்டது. உடனே அமைச்சரை அழைத்து பாதை மோசமாக இருப்பதால், நாடு முழுவதும் மாட்டுத்தோலில் கம்பளம் விரிக்கும்படி ஆணையிட்டான். அதைப்பார்த்த துறவி, மன்னரை அணுகி ஏன் வீண் செலவு? உன் கால்களைக் காக்க இரண்டு மாட்டுத்தோல் போதுமே என்றார். அரசன் உத்தரவால் மிதியடி உருவானது.
    நிகழ்வினை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன், இந்நிகழ்வுக்கும் என் கேள்விக்கும் என்ன தொடர்பு என்றான்? அதற்கு முனிவர் உலகம் மகிழ்வானதாக மாற வேண்டுமெனில், உன் உள்ளம் மகிழ்வாக மாற வேண்டும், என்றார்.

    இறைமகன் இயேசுவின் சீடர்கள், அவரின் துன்பங்களையும், பாடுகளையும் முழுமையாக அறிந்து கொண்டதால் தான், அர்த்தமிக்க சீடத்துவ வாழ்வு வாழ்ந்தனர். தம்மையே முழுமையாய் இறைவனுக்கு கையளித்தனர். பலரின் வாழ்வுத்தரம் உயர மாபெரும் தூண்டுகோலால் திகழ்ந்தனர். ஆதலால் நாமும், நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாய் மாற்ற, முழுதாய் அர்ப்பணிக்க முயற்சி செய்வோம். எவையெவை என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்போம்.

    இறைவனோடு இணைந்திருப்பதில் முழுமையான ஆனந்தம் மறைந்திருக்கிறது. இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம். தவக்காலத்தின் சிறப்பே உடல் ஒறுத்தல் செய்வதில் தான் முழுமை பெறுகின்றது.

    எவையெவை எனக்கு ஆடம்பரங்களை உருவாக்கிக் கொடுக்கின்றது? எவையெவை என் வாழ்வின் லட்சிய பயணத்துக்கு தடையை உருவாக்குகின்றது? என்பதையெல்லாம் கண்டுபிடிப்போம். தன்னை அர்ப்பணித்து வாழ்வதற்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தெருவோர வாழ்வுச்சூழலை தெரிவு செய்து கொண்டார். தனக்கென சொந்தமும், சுற்றமும் இல்லாது சிலுவையில் உயிர் விட்டார். இத்தகைய உயரிய வாழ்வுச்சூழலை நினைத்து இறைவழியில் நடக்க, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

    உறவின்றி மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. முழுமையுமில்லை என்பதனை அறிந்த நாம், நம்மால் முடிந்த அளவுக்கு கைவிடப்பட்டவர்களைத்தேடிச் செல்வோம். வீதியோரங்களிலும், சாலை ஓரங்களிலும் உறங்குகின்ற மனிதர்களுக்கு காவலாய் இருப்போம். அவர்களுக்கு முகவரியமைத்து கொடுக்க தகுந்த வழியினை கண்டுபிடிப்போம். பொன்னையும், பொருளையும் கொடுப்பதை விட உயர்ந்தது நமது நேரங்களையும், ஆற்றல்களையும் செலவழிப்பதாகும். அதிலேதான் உண்மையான அர்ப்பணம் மறைந்து இருக்கின்றது என்ற பேருண்மையை கற்றுக்கொள்வோம். நல்வார்த்தைகளை, நற்சிந்தனைகளை நாளுக்கு நாள் விதைத்துக் கொண்டு தொடர்ந்து வளர்வோம்

    -அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார்
    பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:17)
    “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:17)

    பக்தியுள்ள தந்தை ஒருவர் மிகவும் தவறாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னுடைய மகனை எண்ணி மிகவும் வருந்தினார். எனவே பல போதகர்களை அழைத்துவந்து தன் மகனுக்கு புத்திமதி கூறசொல்வார். ஒரு முறை போதகர் ஒருவர் அவனுக்கு புத்திமதிகூற வந்தபோது அவனுக்கு மிகவும் எரிச்சல் வந்துவிட்டது. எல்லோரும் என்னிடத்தில் இருக்கும் குறைகளை யெல்லாம். சொல்லிவிட்டு செல்கின்றனர். ஆனால், என்னிடத்தில் இருக்கின்ற எல்லா குறைகளும் எனக்கு தெரிந்தவைதான். நீங்கள் என்னசொல்லப்போகிறீர்கள் என்று மகன் போதகரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் எல்லோரும் நீ அறிந்து வைத்திருப்பதைதான் சொன்னார்கள். நானோ, நீ அறியாமலிருப்பதை சொல்கிறேன். இந்த குறைபாடுகள் யாவும் நீங்கி நீ ஒரு மிக நல்ல மனிதனாக மாறுவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறாய். அதனை நீ இன்னும் அறியவில்லையே என்றார். அந்த மகனுக்கு போதகர் சொன்ன அந்த வார்த்தை மிகவும் மனதை தொட்டது.

    நம்முடைய தவறுகளை நாம், அறிந்திருக்கலாம். நம்முடைய குறைகளை நாம் புரிந்துவைத்திருக்கலாம். ஆனால், நம்முடைய தவறுகளை ஒத்துக்கொள்வது நேர்மையானது அல்ல. நாம் தவறுகளை உணர்ந்து அது மாறுவதற்கான வழிகளை தேடவேண்டும். அநேகர் பிரார்த்தனை மேற்கொள்ளும்போது இறைவனிடம் நாங்கள் வழிதவறிபோன ஆடுகள் என்றும் எங்களுக்கு சமாதானம் இல்லை என்றும் அறிக்கை செய்துவிட்டு மீண்டும் தங்களுடைய தவறுகளை தொடரவே செய்கின்றனர்.

    அவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை அறிக்கையிட்டும் கடவுள் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்துள்ள நிறைவான வாழ்க்கையை குறித்த உணர்வோ, தேடலோ அவர்களிடம் இல்லை. அவர்கள் தங்கள் நிலைமையை பார்க்க அறிந்திருந்தும் கிறிஸ்துவுக்குள் தங்களுக்கு இருக்கும் உயர்ந்த நிலைமையை நம்பிக்கையோடு பார்த்து அனுபவிக்க முன்வரவில்லை.

    தந்தையிடம் சொத்தில் பங்கை பிரித்து எடுத்து சென்ற மகன் ஒருவன் சொத்துக்களை தவறான வழியில் செலவிட்டு கடைசியில் உணவுக்காக பன்றிகள் சாப்பிடும் தவிடுகூட கிடைக்காத இழிவான நிலையை தாமதமாக உணர்ந்தான். ஆனால், அதை நினைத்து நொந்துகொண்டு தொடர்ந்து அவ்வாறே வாழ்ந்திருந்தால் எந்த நன்மையும் அவனுக்கு ஏற்பட்டிருக்காது.

    அவன் ஒரு மாற்றத்தை விரும்பினான். மீண்டும் தந்தையை நோக்கி ஓடினான். எனவே, அவனுக்காக வைத்திருந்த உயர்ந்த திட்டம் மற்றும் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தான். ஆம் அதுபோல நாம் கடவுளால் மாற்றப்பட்டு சந்தோஷமும், சமாதானமும் உயர்ந்த தரிசனமும் உன்னத குணங்களும் உடைய உயர்ந்ததோர் வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றோம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. நம்மை பாவி என்று அறிக்கையிடுவதில் அல்ல. நம்மை கடவுளால் மாற்றப்பட்ட பரிசுத்தம் உடையவனாக பிறருக்கு காண்பிப்பதுதான் ஆன்மீகம்.

    “தவறை செய்வது சாதாரணமானது.

    அதனை உணர்த்தும்போது உணர மறுப்பதே பயங்கரமானது”.

    -சாம்சன் பால்

    ஆழமான அன்பின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவோம். வேற்றுமையும், வெறுப்பும் இல்லாத ஒரு அன்பின் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.
    ஆன்மிகம் என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நேரடி உறவைக் குறிப்பது. மதம் என்பது அந்த ஆன்மிக உறவை உருவாக்கித் தர இருக்கின்ற கட்டமைப்பு. ஆன்மிக செழுமையையே மதங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்கான ஒருமைப்பாடே இன்றைக்கு மிகவும் அவசியமான ஒன்று.

    ஒருமைப்பாடு எப்போதும் நல்லதா? சர்வதேச நாடுகளை வன்முறையால் அழிக்க நினைக்கும் தீவிரவாத இயக்கங்களிடமும் ஒருமைப்பாடு இருக்கிறதே. நாட்டை கொள்ளையடிக்க நினைக்கும் ஆள்பவர்களிடையேயும் புரிந்துணர்வு இருக்கிறதே. ஏன், இயேசுவைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்த மதத் தலைவர்களிடமும் ஒற்றுமை இருந்ததே. எனில், ஒருமைப்பாடு என்பது எப்போதும் நல்லது என்று சொல்லி விடமுடியாது.

    ஒருமைப்பாடு நன்மையாகவோ, தீமையாகவோ முடியலாம். நாம் எதன் அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை வைத்தே அது தீர்மானிக்கப்படும். நன்மையின் பக்கம் இணைந்து நிற்பது நன்மையில் முடியும். தீமையின் பக்கம் தலைசாய்த்தால் அது தீமையாகவே முடியும்.

    கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது வேறு, கிறிஸ்துவோடு இணைந்து நிற்பது என்பது வேறு. கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது எப்போதும் நல்லது என்று சொல்ல முடியாது. கருப்பர்களுக்கு எதிராக இணைந்து போராடிய அமெரிக்க திருச்சபைகள் ஏராளம். விவிலியம் எதிர்க்கின்ற பாலியல் உரிமைகளுக்காக இணைந்து போராடிய இறைமக்கள் ஏராளம்.

    ஆன்மிக ஒருமைப்பாடு என்பது எப்படி இருக்க வேண்டும்?

    1. அன்பின் ஒருமைப்பாடு

    ‘முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்’ என்கிறது எபேசியர் 4:2,3 வசனங்கள்.

    அன்பின் ஒருமைப்பாடு என்பது தூய ஆவி அருளும் வாழ்க்கையை வாழ்வதே. அவரது கனிகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே. இயேசுவின் மரணத்துக்குப் பின், அச்சத்தால் பயந்து கிடந்த அப்போஸ்தலர்களை இணைத்து, வலுவூட்டியவர் தூய ஆவியானவர். அந்த தூய ஆவியானவரின் ஒருமைப்பாடு நமக்கு வலிமையையும், சரியான வழியையும் காட்டும்.

    ஆழமான அன்பு கிறிஸ்தவ ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும். குடும்பங்களில் தொடங்கி, திருச்சபைகளில் வளர்ந்து, சமூகத்தில் பரவும் இந்த அன்பு தான் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அத்தகைய அன்பு கொள்வதில் ஒருமைப்பாட்டோடு இருக்க வேண்டும்.

    2. ஒன்றித்தலின் ஒருமைப்பாடு

    ‘நானே திராட்சைக்கொடி, நீங்கள் அதன் கிளைகள்’ என்றார் இயேசு. திருச்சபையின் மக்கள் அனைவருமே இயேசு எனும் கொடியின் கிளைகளே. அந்த கிளைகள் பார்வைக்கு வேறுபடுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. ஆனால் இலக்கு ஒன்றே.

    செடியோடு இணைந்தே இருப்பது. செடியோடு இணைந்தே வளர்வது. கொடியை விட்டு தனியே செல்கின்ற கிளை விறகாகும். அதில் ஆன்மிக பச்சையம் இருப்பதில்லை.

    3. பொதுநலத்தின் ஒருமைப்பாடு

    உலக ஒருமைப்பாடுகள் பெரும்பாலும் லாப நோக்கத்துக்கானவையே. ஒரு தொழில் ஆனாலும் சரி, ஒரு அலுவலக வேலையானாலும் சரி அல்லது வேறெந்த பணியாய் இருந்தாலும் சரி. லாப நோக்கங்களும், சுயநல கணக்குகளுமே தொடர்புகளை உருவாக்கும். ஆனால் இறைவன் விரும்பும் ஒருமைப்பாடு சுயநலமற்ற சிந்தனைகளின் விளைவாக இருக்க வேண்டும்.

    ‘கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்’ என்கிறது பிலிப்பியர் 2:3. அடுத்தவரை உயர்வாய்க் கருதும் இடத்தில் சுயநல சிந்தனைகள் செயலிழக்கும்.

    4. எதிர்நோக்கின் ஒருமைப்பாடு

    ‘அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம்’ (எபேசியர் 4:13) என்கிறது விவிலியம்.

    கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை இறைமகன் மீதான எதிர்நோக்கு தான். அந்த விசுவாசத்தின் மீது கட்டியெழுப்பப்படாத எந்த கட்டிடமும் நிலைப்பதில்லை.

    5. செபத்தில் ஒருமைப்பாடு

    ‘உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர் களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார் இயேசு.

    மனமொத்த செபத்தை இயேசு முன்மொழிகிறார். கூடி செபிக்கும்போது செபம் தன்னலத் தேவைகளைத் தாண்டியதாக மாறி விடுகிறது. இறைவன் விரும்புகிற ஒருமைப்பாடு என்பது பணி சார்ந்ததாக இருக்க வேண்டும். வெறுமனே வார்த்தைகளால் இறைவனைப் புகழ்வதோ, அடையாளங்களால் அவரை வெளிப்படுத்துவதோ இறைவனின் விருப்பத்துக்குரியதல்ல. அவரோடு இணைந்து பணியாற்றுவதன் முதல் பணி, செபத்தில் ஒன்றிணைவதே.

    இந்தகைய ஆழமான அன்பின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவோம். வேற்றுமையும், வெறுப்பும் இல்லாத ஒரு அன்பின் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.

    -சேவியர்
    பெரம்பூரில் உள்ள தூய லூர்து அன்னை தேவாலயத்தின் 118-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
    சென்னை பெரம்பூரில் தூய லூர்து அன்னை தேவாலயத்தின் 118-வது ஆண்டு பெருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் கலந்துகொண்டு கொடியேற்றி வைக்கிறார்.

    தினமும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் சென்னை- மயிலை மறை மாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ், செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு பாக்கிய ரெஜிஸ், புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட கல்வி ஆணைக்குழு செயலாளர் ஜோசப்ராஜ், சென்னை-மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜன் தலைமையில் 10-ந் தேதி நற்கருணை பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.
    கருத்தபிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    கடையம் அருகே உள்ள பாளை மறை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கருத்தபிள்ளையூர் கருணை வீரன் புனித அந்தோணியார் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கடந்த 18-ம் தேதி சேர்த் தோட்டம் கெபியிலிருந்து திருக்கொடி பவனி வந்து மாலை 6.30 மணிக்கு பாதிரியார் ஜோசப் கென்னடி தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. அடுத்த 2 நாட்கள் விவிலிய போட்டி நடந்தது. 21-ம் தேதி காலையில் விளையாட்டு போட்டியும், மாலையில் பொன் விழா தம்பதியருக்கு பாராட்டு விழாவும், மறை கல்வி மாணவ மாணவிகளின் வகுப்பு வாரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    22-ம் தேதி குடும்பங்கள் ஒன்றிப்பு விழா, அன்பிய ஒருங்கிணைப்பு மற்றும் மண்டலங்களின் சார்பில் கலை விழா நடந்தது. 23-ம் தேதி இறை மக்களின் பட்டிமன்றம் நடந்தது. 24- ம் தேதி ஆர்.சி. தொடக்க பள்ளியின் கலை நிகழ்ச்சி நடந்தது. 25- ம் தேதி சிறப்பு பட்டிமன்றமும், 27-ம் தேதி புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 28-ம் தேதி புது நன்மை விழா, திருமுழுக்கு விழா, நற்கருணை பவனி நடந்தது.

    கடந்த 29-ம் ம்தேதி சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்தும், அதை தொடர்ந்து வான வேடிக்கையுடன் புனித அந்தோணியாரின் திருவுருவ தேர் பவனியும் நடந்தது. இதில் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்று திருப்பலி, நன்றி திருப்பலி, கொடியிறக்கம் மற்றும் இளையோர் கலை நிகழ்ச்சி நடந்தது. நவ நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருவிழா திருயாத்திரை குழுவினரின் சிறப்பு ஜெப வழிபாடும், மாலை 6.30 மணிக்கு நவ நாள் ஜெபம், திருப்பலி மறையுரை, நற்கருணை, ஆராதனை ஆகியன நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அந்தோணி வியாகப்பன், திருவிழா குழுவினர் மற்றும் அன்பிய இறை மக்கள் செய்திருந்தனர்.
    நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இது தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆலய திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் மாலை 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை செயலாளர் நார்பர்ட் தாமஸ் கொடியேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் பங்கு தந்தைகள் அந்தோணி ஜெகதீசன், பீட்டர்பால், மெர்லின், ப்ரீத்குமார், ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறும். 9-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி திருவிழா மாலை ஆராதனை, நள்ளிரவு புனிதரின் தேர்பவனி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்கு தந்தை சி.மணி அந்தோணி, தர்மகர்த்தா மெல்கிஸ், கணக்கர் மரியசீமோன் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    நம் ஆண்டவரோ நம் ஜெபத்தை மட்டுமல்லாது நம் அனைத்துத் தேவைகளையும் சந்திக்கிற தேவன். ஏனெனில் நமக்கு என்ன என்ன தேவையோ அதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.
    நம் தேவன் தான் நம்மை ஆசீர்வதிக்கிறார், அவர் நிரம்பி வழியும்படி எண்ணற்ற ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகிறவர். நாம் நம்முடைய குறுகிய வட்டத்திலிருந்து நம் தேவைகளைப் பார்த்து சந்தியும் ஐயா என ஜெபிக்கிறோம். ஆனால் நம் ஆண்டவரோ நம் ஜெபத்தை மட்டுமல்லாது நம் அனைத்துத் தேவைகளையும் சந்திக்கிற தேவன். ஏனெனில் நமக்கு என்ன என்ன தேவையோ அதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.

    சாலொமோனின் வேண்டுதல்

    “அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கிற ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.” (II நாளாகமம் 1:7,10)

    சாலொமோன் ஆண்டவரிடத்தில் கேட்டது ஞானம் மட்டுமே. அவனுடைய அப்போதைய அத்தியாவசியமான தேவை ஞானம்தான். ஆனால் நம் ஆண்டவரோ ஞானத்தை அளவில்லாமல் அருளினது மட்டுமல்லாமல், அவன் கேளாத ஐசுவரியத்தையும், சம்பத்தையும், கனத்தையும், சத்துருக்கள் மேல் வெற்றியையும் தந்தார்.

    சாலொமோனை ஆசீர்வதித்த தேவன் நம் தேவனல்லவா? உங்கள் வேண்டுதல்களை மட்டுமல்ல உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    அக்சாளின் வேண்டுதல்

    “எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தர வேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.” (நியாயாதிபதிகள் 1:15)

    அக்சாளுக்கு அவன் தகப்பன் நிலங்களைக் கொடுத்திருந்தான். ஆனால் அவைகள் வறட்சியானவைகள். எனவே தகப்பனிடம் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைத் தாரும் எனக்கேட்டாள். அவள் தகப்பனோ, கீழ்ப்புறத்தில் மட்டுமல்லாமல் மேற்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தார். நம் ஆண்டவரும் நமக்கு உன்னதத்தின் ஆசீர்வாதங்களினாலும் பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புகிறவர்.

    “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக்கா 11:13)

    இந்நாளில் ஆண்டவர் உங்களை உலக ஆசீர்வாதம், செழிப்பு, ஆரோக்கியம், சமாதானம்... போன்ற ஆசீர்வாதங்களினால் நிரப்புவதுமின்றி, ஜெப ஆவி, தியான அபிஷேகம், வல்லமை, வரங்கள், ஆவியின் கனிகள் போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கூட தந்து உங்களை நித்திய ராஜ்யத்திற்கென்று தகுதிப்படுத்துவார்.

    “அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங் களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.” ஆதி.49:25

    எஸ்தரின் வேண்டுதல்

    “ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.” (எஸ்தர் 7:3)

    யூதகுல மக்கள் அழிக்கப்பட வேண்டுமென்கிற சட்டம் சூசான் அரண்மனையில் பிறந்தவுடனே ராஜாவினிடத்தில் எஸ்தர் ஜெபித்த வேண்டுதலை தான் நாம் வாசித்தோம். தன் ஜனங்களின் அழிவுக்காக, தேசத்தின் பாதுகாப்புக்காக எஸ்தர் ராஜாவினிடத்தில் மன்றாடி ஜெபித்தபோது ராஜ சட்டம் மாற்றப்பட்டு யூதமக்களின் ஜீவன் காப்பாற்றப்பட்டது. ஜனங்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள்.

    ஆனால் எஸ்தருக்கும், மொர்தெகாய்க்கும் கிடைத்த ஆசீர்வாதங்கள் அளவில்லாதவை. ஆஸ்தியும், ஐசுவரியமும், கனமும் கூடக் கிடைத்தது.

    ஆம், நாம் நம் தேசத்திற்காய் ஜெபித்தால் தேசம், மக்கள் மட்டும் தான் ஆசீர்வதிக்கப்படும். நம் வாழ்வு அப்படியேதான் இருக்கும் என தப்புக்கணக்குப் போடாதீர்கள். நிச்சயம் உங்களை உயர்த்தி, கனம் பண்ணுவார். நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாய் கிரியை செய்கிற நம் ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன்
    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல 418-வது குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல 418-வது குடும்ப விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாள் திருவிழாவையொட்டி காலை 7 மணிக்கு இறைவனடி சேர்ந்தவர்களுக்கான திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள், நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் 2-ம் நாள் முதல் 7-ம் நாள் வரை தினமும் மாலை ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    3-ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் குருக்கள் இல்லம் அருட்பணியாளர் செல்வராஜ் தலைமையில் கோட்டார் மறை வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சல் மறையுரை ஆற்றுகிறார். ஓய்வு பெற்ற ஆயர் ரெமிஜியுஸ் தலைமையில் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு திருப்பலி, 9 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இருந்து மெழுகுவர்த்தி பவனியுடன் புனித காணிக்கை அன்னையின் திருவுருவப்பவனி தொடங்குகிறது. இந்த பவனி காமராஜ் பஸ் நிறுத்தம், காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு வழியாக புனித காணிக்கை அன்னை ஆலயம் சென்றடைகிறது.

    9-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு நோயாளிகளின் சிறப்பு திருப்பலி, 10 மணிக்கு திருமுழுக்கு அருளடையாளம், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், ஆராதனை நடக்கிறது. நிறைவு விழாவன்று காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் பிஷப் ரெமிஜியுஸ் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூட தாளாளர் ஸ்டான்லி மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நிகழ்ச்சியுடன் குடும்ப விழா நிறைவடைகிறது.
    ×