என் மலர்
ஆன்மிகம்

முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்தின் போது கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்ற காட்சி.
முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இது தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆலய திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் மாலை 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை செயலாளர் நார்பர்ட் தாமஸ் கொடியேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் பங்கு தந்தைகள் அந்தோணி ஜெகதீசன், பீட்டர்பால், மெர்லின், ப்ரீத்குமார், ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறும். 9-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி திருவிழா மாலை ஆராதனை, நள்ளிரவு புனிதரின் தேர்பவனி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்கு தந்தை சி.மணி அந்தோணி, தர்மகர்த்தா மெல்கிஸ், கணக்கர் மரியசீமோன் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story






