என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஆங்கிலத்தில் ‘பாஸோவர்’ என்றும், தமிழில் ‘பஸ்கா’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விழா ‘பெஷாக்’ எனும் எபிரேய வார்த்தையிலிருந்து உருவானது.
    விழாக்கள் அர்த்தம் பொதிந்தவை. வரலாற்றை அறிந்து கொள்ளவும், அவை சொல்லும் ஆன்மிக ஆழங்களை தலைமுறை தோறும் சுமந்து செல்லவும் விழாக்கள் பயன்படுகின்றன. விவிலிய விழாக்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன.

    அவற்றில் மிக முக்கியமான ஒன்று பாஸ்கா பண்டிகை. ஆங்கிலத்தில் ‘பாஸோவர்’ என்றும், தமிழில் ‘பஸ்கா’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விழா ‘பெஷாக்’ எனும் எபிரேய வார்த்தையிலிருந்து உருவானது. ‘கடந்து செல்லல்’ என இதற்குப் பொருள் கொள்ளலாம்.

    இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்து சேர்கின்றனர். ஒரு சின்ன குழுவாக இருக்கும் அவர்கள் அங்கே வாழ்ந்து, பலுகிப் பெருகி மிகப்பெரிய இனமாக உருவாகின்றனர். இப்போது எகிப்திய மன்னனுக்கு இந்த வேற்று தேச வாசிகளை சொந்த மக்களாய் நடத்த மனம் இல்லாமல் போகிறது. அவர்களை அடிமைகளாக மாற்றுகிறார்.

    சுகமாய், சுதந்திரமாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள், எகிப்து நாட்டுக்குள் அடிமைகளாக அவதிப்பட ஆரம்பித்தனர். நானூறு ஆண்டுகள் அவர்களுடைய நிம்மதியை ஒட்டு மொத்தமாகச் சிதைத்து விட்டது. அவர்கள் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் ஒரு விடுதலை வீரரை களமிறக்கினார். அவர் தான் மோசே.

    மோசே, அவரது சகோதரன் ஆரோன் இருவரும் கடவுளின் துணையோடு எகிப்திய மன்னனிடம் சென்று இஸ்ரயேல் மக்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மன்னன் மசியவில்லை.

    கடவுள் மன்னனுக்கும் அவன் மக்களுக்கும் எதிராக போர் தொடுக்க ஆரம்பித்தார். தவளைகள், பூச்சிகள், உடலில் கொப்பளங்கள் என பல்வேறு எச்சரிக்கைகளை அனுப்பினார். இது எகிப்து மக்களை மட்டுமே பாதித்தது, இஸ்ரயேல் மக்களை பாதிக்கவில்லை. எனினும் எகிப்திய மன்னன் மனம் இளகவில்லை.

    கடைசியாக இறைவன் தலைப்பேறு களைக் கொன்றுவிட முடிவெடுத்தார். இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகள் இதிலிருந்து தப்ப வேண்டுமெனில் நிசான் மாதத்தின் 14-ம் நாளன்று, வயது ஒன்று நிரம்பிய ஆடு ஒன்றை பலியிட்டு, அதன் ரத்தத்தை வீட்டுக் கதவின் நிலைகளின் மேல் பாகத்திலும், இரண்டு பக்கங்களிலும் பூசவேண்டும்.

    இரவில் கடவுளின் தூதர் அந்த நாடு வழியாக பயணிப்பார். ரத்தம் பூசப்பட்ட வீடுகள் தப்பும். மற்ற வீடுகளிலுள்ள தலைச்சன் பிள்ளைகள் இறக்கும்.

    இஸ்ரயேல் மக்கள் அப்படியே செய்தனர், தப்பித்தனர்.

    எகிப்தியர் வீடுகள் அனைத்திலும் தலைப்பேறுகள் இறந்தன. மன்னனின் மகனும் மரணமடைந்தான். ஒற்றை நாளில் எகிப்து தேசம், கண்ணீர் கடலானது. மன்னன் வெலவெலத்தான். அடிமை மக்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கொடுத்தான்.

    சாவின் தூதன் ‘கடந்து சென்ற’ அந்த விழா தான் ‘பாஸ்கா’ என யூதர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப் படுகிறது. சுமார் 3300 ஆண்டுகள் பழமையான இந்த விழா, புதிய ஏற்பாட்டில் புதிய பரிமாணம் பெறுகிறது.

    புதிய ஏற்பாட்டை நிஜம் என்றும், அதன் நிழல் தான் பழைய ஏற்பாடு என்றும் விவிலிய ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விழா இயேசுவின் மரணத்தின் நிழல்.

    பாஸ்கா விழாவுக்கு ஒரு ஆடு கொல்லப்பட வேண்டும். புதிய ஏற்பாடு இயேசுவை ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிடுகிறது.

    பாஸ்காவில் கொல்லப்படும் ஆட்டின் வயது ஒன்று, அது மனித வயதோடு ஒப்பிடுகையில் 30 என்கின்றனர் ஆய்வாளர்கள். இயேசுவின் வயது 33.

    பாஸ்காவில் ஆடு கொல்லப்பட வேண்டிய நேரம் மதியம் சுமார் மூன்று மணி. இயேசு கொல்லப்பட்ட நேரம் மதியம் மூன்று மணி.

    இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறியபின் மன்னன் மீண்டும் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பழிவாங்க முயல்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக கடவுள் செங்கடலை இரண்டாய் பிரிக்க, மக்கள் அதன் வழியே நடந்து மறுகரைக்குச் செல்கின்றனர். துரத்தி வந்த எகிப்திய படை நீரில் மூழ்கி அழிகிறது. இப்போது முழுமையான விடுதலை. இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாவது நாள் இது நிகழ்கிறது. இயேசு மரணத்தை வென்று உயிர்த்தது மூன்றாவது நாள்.

    இப்படி இயேசுவின் மீட்பின் வாழ்க்கை இஸ்ரயேல் மக்களின் விடுதலை வாழ்க்கையோடு நெருக்கமாய் இணைந்து விடுகிறது.

    ‘நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்’ (1 கொரி 5:7) எனும் விவிலியம் இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ‘புதிய பாஸ்கா’ வாகக் கொண்டாடுகிறது.

    பாவம் எனும் இருள் கொண்டு வருகின்ற சாவை, இயேசுவின் ரத்தம் எனும் பலி மீட்கிறது. அதை நினைவுகூர்ந்து பாவவாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் எனும் சிந்தனையை இந்த விழா நமக்கு விளக்குகிறது.
    தவக்காலத்தில் ஏசுவின் பாடு மரணத்தை தினமும் தியானிக்கிற வேலையில் ஏசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து ரத்தத்தை சிந்தி மரிப்பதற்கான உரிய காரணங்களைப் பார்ப்போம்.
    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த தவக்காலத்தில் ஏசுவின் பாடு மரணத்தை தினமும் தியானிக்கிற வேலையில் ஏசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து ரத்தத்தை சிந்தி மரிப்பதற்கான உரிய காரணங்களைப் பார்ப்போம்.

    யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன், நல்லமேய்ப் பன் ஆடுகளுக்காகத்தன் ஜீவனைக்கொடுக்கிறார். ஏசாயா 53:6-ல் கூறப்பட்டபடி நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பி திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம். கர்த்தரே நம் எல்லோருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். நாம் பாதுகாக்கப்பட அவர் மரித்தார்.

    ஏசாயா 53:12 அநேகருடைய பாவத்தையும் தாமே சுமந்து ஏற்றுக்கொண்டு ரத்தம் சிந்தினார். எபிரேயர் 9:22-ம் வசனத்தின்படி ரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது நமக்கு பாவமன்னிப்பு உண்டாக அவர் நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு மரித்தார்.

    யோவான் 11:52 தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறப்படவும் சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகள் ஒன்று சேரவும் மரித்தார். ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று தீர்க்க தரிசனமாய் கூறினார்கள். பல தீர்க்கதரிசனங்களாய் சொல்லப்பட்டது நிறைவேறும்படியாய் மரித்தார்.

    எபிரேயர் 2:14 மரணத்திற்கு அதிகாரியான பிசாசை தமது மரணத்தினால் அழிக்கும்படிக்கு சிலுவையில் மரித்தார்.லூக்கா 23:12 பகையாக இருந்த இரண்டுபேர் ஒன்று சேர்ந்து சமாதானமாய் நாட்டை ஆள அவர் மரித்தார்.

    ஏசாயா 53:5-ம் வசனத்தின்படி நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. இன்றைக்கு இதை வாசிக்கும் உங்களுக்கும் சமாதானத்தையும், மன்னிப்பை யும், அன்பையும், ஆசீர்வாதத்தையும், பாதுகாப்பையும், பாவத்திலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலையும் தர வல்லமையுள்ளவர்.

    - பாஸ்டர். ஏ. ஏசையன்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் தூய வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 10-ம் நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் திருப்பலி மற்றும் சிலுவைபாதை, மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலையை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் அருளுரை ஆற்றினார். கொடியேற்றத்தின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை ஸ்டீபன், இணை பங்குத்தந்தை பிரைட், திருத்தொண்டர் சஜூ, பங்கு பேரவை துணைத்தலைவர் பயஸ்ராய், செயலாளர் தேவசகாயம், பொருளாளர் ஞானசேகர், துணை செயலாளர் கலையரசி, வட்டார துணைத்தலைவர் ஜேக்கப் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் சதீஸ்குமார் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் நற்கருணை பவனியும், 9-ம் நாள் திருவிழாவன்று நடைபெறும் மாலை ஆராதனையில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்கிறார். தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் தேர்பவனியும் நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவில் தேர்பவனி மற்றும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாற்று நாடகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    இயேசு, நோன்பு இருத்தலைப் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும், அதை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் குறித்தும் கூறுகிறார்.
    இறையரசு பண்பாட்டின் சில உட்கூறுகளான அறச்செயல்கள் புரிதல், தர்மம் செய்தல், இறைவேண்டல் புரிதல், போன்றவற்றைக் கூறுகின்ற இயேசு, நோன்பு இருத்தலைப் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும், அதை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் குறித்தும் கூறுகிறார்.

    நாம் முற்றிலும் இறைவனைச் சார்ந்து வாழ்கிறோம் என்ற நினைவு நம்மை விட்டு அகலாமல் இருப்பதற்கும், மனிதரின் தன்னலங்களாலும், சுரண்டலாலும் பசியாயிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அனுபவத்தை நாம் பெற்று உணரவும் நோன்பிருத்தல் நல்லது.

    நோன்பு

    ‘நெஸ்டியா’ என்ற கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதே ‘நோன்பு’ எனும் வார்த்தை. ‘உணவைத் தவிர்த்தல்’ என்பதே இதன் முதன்மைப் பொருள். உணவைக் குறைத்தல், உண்ணா நிலை மற்றும் பிற புலனடக்க கட்டுபாடுகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இது சமயச்சடங்கின் ஒரு பகுதியாகும்.

    யூதர்களின் நோன்பு


    யூதர்கள் கதிரவன் உதிக்கும் நேரம் முதல் மறையும் நேரம் வரை நோன்பிருந்தனர். இறைவனின் கவனத்தை தம்பக்கம் ஈர்த்திடவும், தங்களின் மனம் வருந்துதலின் அடையாளமாகவும், மக்கள் பார்க்க வேண்டுமெனவும் மூன்று வகை மனநிலையுடன் நோன்பிருந்தனர். நோன்பிருத்தலை பக்தி வைராக்கியத்தின் உயர்நிலை என்றே கருதினர்.

    யூதர்கள் மகிழ்ச்சியான காலங்களில் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தை கழுவி புத்துணர்வுடன் காணப்படுவர். நோன்பு காலங்களினை தவிர மற்ற சமயங்களில் வழக்கமான அனைத்து உணவு வகைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டனர். தம் நெருங்கிய உறவினர்கள் அல்லது உடன்பிறப்புகள் மரித்துப் போன தருணங்கள், நாட்டின் நலனைப் பாதுகாக்க, மாபெரும் இயற்கை பேரழிவிலிருந்து விடுவிக்க வேண்டி, யூதர்கள் தனிநபராகவும், கூட்டாக இணைந்தும் நோன்பை கடைப்பிடித்தனர். இந்த நாட்களில் திராட்சை மதுவையும், இறைச்சியையும் தவிர்த்தனர்.

    ஆண்டவர் இயேசுவின் காலத்தில் நோன்பு

    ஆண்டவர் இயேசுவின் காலத்திலும் நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இயேசுவின் காலத்தில் யூதர்கள் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளில் மட்டும் கட்டாய நோன்பு கடைப்பிடித்தனர். இந்த நாள் வருடந்தோறும் ‘திஸ்ரி’ எனும் யூதர்களின் பத்தாவது மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது (திப.27:9). நம்முடைய செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களை அது குறிக்கும். இந்த நாளில் காலை முதல் மாலை வரை மக்கள் தங்களை இறைவன் தூய்மையாக்கும்படி அர்ப்பணிக்க வேண்டும்.

    நோன்பு நேரங்களில் உண்ணவும், பருகவும், குளிக்கவும், ஒருவரை அருள்பொழிவு செய்யவும், மிதியடி அணியவும், தாம்பத்ய உறவு கொள்ளவும் யூதர்களின் திருச்சட்டம் தடைசெய்கிறது. சிறுவர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு நோன்பு மேற்கொள்ள ஆயத்தப்படுத்தப்பட்டனர்.

    வாரத்தின் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு இருந்தனர் (லூக்கா 18:12). இந்த இரண்டு நாட்கள் யூதர்களின் சந்தை கூடும் நாட்கள். சந்தைகளில் பல பட்டணங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் அநேக மக்கள் திரளாக கூடுவார்கள். மாபெரும் மக்கள் கூட்டத்தில் தங்கள் பகட்டு நோன்பை பகிரங்கப்படுத்தினார்கள். இவர்கள் தலையில் எண்ணெய் தேய்க்காமல், முகத்தைக் கழுவாமல், முகவாடலாய் தோன்றினார்கள். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொண்டார்கள்.

    பெரும்பாலானவர்கள் நோன்பிருத்தலை சுய அர்ப்பணிப்பாக கருதுவதற்கு பதிலாக, சுய கவுரவமாக, சுயநீதியாக கருதிக் கொண்டு பிறர் பார்க்க வேண்டும் என்றே நோன்பிருந்தனர். ஆதலால் ஆண்டவர் இயேசு நோன்பு பற்றி யூதர்கள் கொண்டுள்ள கருத்துக்கள் தவறானவை என எடுத்துக்காட்டுகிறார்.

    ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு


    நோன்பு கடைப்பிடிப்பது உடல் நலத்திற்கு சிறந்தது, சுய ஒழுக்கத்திற்கு உதவுகிறது. சில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதிலிருந்து பாதுகாக்கிறது. சில ஆடம்பர பொருட்களை இழந்தாலும் வாழ முடியும் என்ற படிப்பினையைக் கற்றுத் தருகின்றது. இறைவன் முன் மனிதன் ஒன்றுமற்றவன் என்ற நிர்வாண நிலையை உணர்த்துகிறது.

    நோன்பு என்பது உணவைத் தவிர்த்தலும், உறவை விலக்கலும், உலகைத் துறத்தலும் மட்டும் ஆகாது. அற்கும் மேலான ஒரு தூய பண்பட்ட வாழ்வுக்கு நம்மை அது வழிநடத்த வேண்டும். அது தான் ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு ஆகும். ‘பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரை கானும் போது அவர் களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு’ (ஏசாயா 58:7) என்கிறார்.

    நோன்பு என்பது கடமைக்காகவோ, கட்டுப்பாடுகளை நிறைவேற்றவோ, சமயச் சடங்காச்சாரத்திற்காகவோ செய்யப்படாமல் முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும் ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து செய்யப்படுமாயின் நோன்பின் உண்மையான, உயரிய நோக்கம் நிறைவு பெறும். ஆன்மிகத்தை உயர்த்திப் பிடிக்காமல் மனித நேயத்தின் மாண்பினை தெளிவுற உணர்ந்து கொண்டு, அதை நிறைவேற்றுவதே ஆண்டவருக்கு ஏற்ற நோன்பாகும்.

    அருட்பணி. ம. பென்னியமின், பரளியாறு
    இயேசுவைப் பின்பற்றும் வாழ்க்கை என்பது அன்பில் திளைத்தும், அன்பில் நிலைத்தும் இருக்க வேண்டிய வாழ்க்கையாகும்.
    கிறிஸ்தவ வாழ்க்கை எது என்பதில் பலருக்கும் குழப்பம். அந்தக் குழப்பத்திற்கு காரணம் இறைவார்த்தையைத் தவறாகப் புரிந்து கொள்வது தான். இறைவார்த்தைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைக்கேற்ப எடுத்துப் பயன்படுத்துவது அதன் முழுமையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

    இறை வார்த்தை என்பதை இறைவனாகவே பார்க்கிறது கிறிஸ்தவம். ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை கடவுளோடும், கடவுளாயும் இருந்தது என்கிறது விவிலியம்.

    ஆதியில் இருந்த அந்த வார்த்தையானவர் தான் மனிதனாய் மண்ணில் வந்த இறைமகன் இயேசு என்பதை “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவான் 1:14) எனும் இறை வார்த்தை விளக்குகிறது.

    வார்த்தையான இறைவனின் வரவு, நமக்கு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை விளக்குகிறது. அவற்றில் ஒரு சில சிந்தனைகளை நாம் பார்ப்போம்.

    தாழ்மை அணி

    விண்ணில் சர்வ அதிகாரமும் படைத்தவராய் இருந்த இறை மகன் இயேசு, அனைத்தையும் விட்டு விட்டு, ஏழையிலும் ஏழையாக பிறந்தார். தனது இறைத் தன்மையை விட்டு விட்டு எல்லோருக்கும் பணி செய்யும் பணியாளராய் வந்தார்.

    எல்லாவற்றிலும் பெரியவரான இறைமகன், எல்லாரையும் விட எளியவராய் வந்தது தாழ்மையின் மிகப்பெரிய உதாரணம்.

    எல்லோரையும் விட தன்னை உயர்த்த‌ நினைத்த லூசிபர் சாத்தான் ஆனான். எல்லாரையும் விட தன்னைத் தாழ்த்திய இயேசு மீட்பர் ஆனார். தாழ்மை மனிதனை இறைவனின் சாயலாய் மாற்றுகிறது. தாழ்மை நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முதல் பாடம்.

    தூய்மை கொள்

    “அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” என்கிறது 1 யோவான் 2:6 வார்த்தை.

    இயேசு நம்மைப் போல எல்லா விதங்களிலும் சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாதவராய் இருந்தார் என்கிறது விவிலியம். பாவம் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை என்பது தான் உலகம் நமக்குச் சொல்லும் செய்தி. “ஊரோடு ஒத்து வாழ்” என்பது அவர்கள் சொல்லும் சாக்குப் போக்கு. “இப்படியெல்லாம் வாழவே முடியாது” என்பது அவர்கள் நம்பும் மாயை. ஆனால் இயேசுவோ பாவமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அந்தக் கூற்றையெல்லாம் பொய்யாக்கினார்.

    தூய்மை நாம் பெற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்.

    சோதனை தாண்டு

    மனிதனாய் வந்த கடவுளின் மகனுக்கு சோதனைகள் வந்தன. சாத்தான் அவரைச் சோதித்தபோது அவர் இறைவார்த்தையைக் கொண்டே சாத்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

    அதாவது, இறைவார்த்தையின் மனித வடிவம், இறைவார்த்தையைக் கொண்டு சாத்தானை விரட்டியது எனலாம். நாமும் நமது வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு சோதனையையும் இறைவார்த்தையைக் கொண்டும், இயேசுவின் வாழ்க்கையைக் கொண்டும் எதிர்க்க வேண்டும் என்பதே கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

    சோதனைகளைத் தாண்ட இறைவன் நமக்கு அளித்திருக்கும் தேற்றரவாளன் தான் தூய ஆவியானவர். ஆவியானவரை இதயத்தில் அழைத்தால் அவர் நமக்குள் இருந்து நம்மை ஞானத்தின் வழியில் நடத்துவார்.

    சோதனைகள் நாம் தாண்டிச் செல்லவேண்டிய சாத்தானின் தடைக்கல்.

    வலிமை கொள்

    இயேசுவின் வாழ்க்கை வலிமையாய் இருந்தது. அவர் தனது வாழ்க்கைக்கான வலிமையை ஜெபத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அதற்காகத் தான் அடிக்கடி தனிமையான இடங்களுக்குச் சென்று செபிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.

    தனது விருப்பத்தை விட தந்தையின் விருப்பத்தையே செயல்படுத்தினார் இயேசு. ஆன்மிகத்தின் ஒருவரி விளக்கம் இது தான். நமது விருப்பங்களையல்ல, இறைவனின் விருப்பங்களை மட்டுமே விரும்புவது. அதற்காகவே அவர் தந்தையோடு எப்போதும் ஜெபத்தில் ஒன்றித்திருந்தார்.

    இயேசுவின் வாழ்க்கை நமக்கு ஜெபத்தின் தேவையைப் புரிய வைப்பதாய் இருக்க வேன்டும். ஜெபம் நமது வாழ்வின் மையமாகும் போது, தோல்விகள் நம் வீட்டுக் கொல்லைப் பக்கம் வழியாக வெளியேறிவிடும்.

    வலிமை நாம் இறைவனோடு இணைவதில் பெற்றுக் கொள்ளவேண்டிய வரம்.

    அன்பாய் இரு

    இயேசுவின் வாழ்க்கையை உற்றுப் பார்க்கும் போது அவர் எளிய மக்கள் மீது வைத்திருந்த‌ அன்பும் கரிசனையும் நமக்கு சட்டென விளங்கும்.

    கடவுளை நேசி, பிறனை நேசி என கட்டளைகளை அன்பில் அடக்கியவர் இயேசு. போதனைகளில் ஏழைகளை முதன்மைப்படுத்தியவர் இயேசு. அத்துடன் நிற்கவில்லை, எதிரிகளையும் நேசியுங்கள் என அன்பின் அடுத்த பக்கத்தையும் நமக்கு அறிமுகம் செய்து வைக் கிறார்.

    அன்பைத் தாண்டிய எந்த வேலையையும் இயேசு செய்யவில்லை. இயேசுவைப் பின்பற்றும் வாழ்க்கை என்பது அன்பில் திளைத்தும், அன்பில் நிலைத்தும் இருக்க வேண்டிய வாழ்க்கையாகும்.

    அன்பு நாம் இறைவனின் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்ற நிலை.

    சேவியர், சென்னை
    இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுபடுத்தும் விதமாக கிறிஸ்தவர்களுக்கான தவக்காலம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இன்று தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறுகிறது.
    கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயித்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வருகிறது.

    இந்த பண்டிகைக்கு முன்பு இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று வருவதால், கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.

    இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும். கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாக விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு மற்றும் திருப்பலி இன்று (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    சாம்பல் புதன் வழிபாட்டின்போது ஆயர், பங்குத்தந்தையர்கள், அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, “மனந்திரும்பு, நற்செய்தியை நம்பு” என்று கூறுவார்கள். இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து சாம்பல் தயாரிப்பார்கள்.

    இதே போல் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு இன்று நடைபெறுகிறது.

    இயேசு சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும்.

    தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். மேலும் தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும். ஆலயங்களில் தவக்காலத்தில் வசூலிக்கப்படும் சிறப்பு காணிக்கை ஏழைகளின் பசி, பிணி போக்குவதற்காக பயன்படுத்தப்படும்.

    கிறிஸ்தவர்களின் வீடுகளில் தவக்காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. ஆனால் ஏழை, எளியவர்களுக்கு இந்த தவக்காலத்தில் தானம், தர்மம் வழங்குவார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்தல், அவர்களை வீடுகளுக்கு அழைத்து வந்து உணவு, உடையும் வழங்குவது வழக்கம்.
    தவக்காலத்தின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், நம்மையே சுய ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.



    நாம் வாழும் இன்றைய உலகம் போலிகளிலும், கனவுலகத்திலும்தான் மூழ்கி கிடக்கின்றது. உண்மை என்றால் என்ன என தெரியாத மனிதர்கள் தடுமாறி நிற்கின்றனர். கவர்ச்சிகரமானது எது? எளிதில் கவர்வது? என்பதை தேடித்தான் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். தவக்காலத்தின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், நம்மையே சுய ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    புதுப்பித்தலின் அவசியத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குருநாதர் இயேசுவின் வாழ்வு, ஏராளமான மாற்றங்களை இவ்வுலகில் கொண்டு வந்தது. குறிப்பாக பாவிகள், ஒதுக்கப்பட்டவர்கள், நோயாளிகள், பிறஇனத்தார்கள் என ஓரந்தள்ளப்பட்ட மக்களுக்கு வாழ்வு கொடுத்தது. நம்பிக்கை இன்றி, இனி வாழ்வில்லை என ஒதுங்கியவர்களுக்கு மைய இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவ்வாறு மவுனமாய் பல சஞ்சலங்களை உருவாக்கி சென்றது.

    இறைமகன் இயேசுவின் வழிநடத்துதலிலும், பாதையிலும் பயணிக்க நம்மையே ஆயத்தம் செய்கின்ற நாம், நமது கடந்த காலங்களை நினைவில் நிறுத்திப்பார்ப்போம். நமது பலவீனங்கள் என்னென்ன? என்பதை பட்டியலிடுவோம். எவற்றையெல்லாம் விடுத்து வாழ வேண்டும்? எவற்றையெல்லாம் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதனை நாமே கணக்கில் எடுப்போம். “மனம் மாறி என்னிடம் திரும்பி வாருங்கள், என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்ற இயேசுவின் குரலுக்கு காது கொடுப்போம்.

    நம்மை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்துகின்ற செயல்பாடுகளையும், நமக்கும்- இயேசுவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்குகின்றவற்றையும் கண்டுபிடிப்போம். தொலைத்தொடர்பு ஊடகங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை முற்றிலுமாய் புறக்கணிப்போம். தேவையில்லாத வாட்ஸ்-அப் தகவல்களை அனுப்புதல், தேவையின்றி இணையதளத்தில் நட்பை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை அறவே தவிர்ப்போம். போலிகளில் மூழ்கி, போதை மனிதர்களாய் மாறுவதை தவிர்ப்போம்.

    உண்மையான, உயரிய விழுமியங்களை வாழ்வாக்கி தொடர்ந்து வாழ்ந்து காட்ட, நீதி- அன்பு, அமைதி போன்ற பண்புநலன்களால் நம்மை அணி செய்து கொள்வோம். அதற்கான தகுந்த தயாரிப்பு காலமாக இந்நாட்களைப் பயன்படுத்துவோம். உண்மையைப் பேசுவேன், தினமும் ஒரு மணி நேரம் அமைதியாக இருப்பேன், நல்வார்த்தைகளைப் பேசுவேன், உண்மைக்கு எதிரான செயல்பாடுகளில் என்னை இணையேன் போன்றவற்றை வாழ்வாக்க முயற்சி எடுப்போம்.

    அப்போது நம்மிடம் மறைந்திருக்கின்ற போலிச்செயல்பாடுகள் மெதுவாக நம்மைவிட்டு அகன்றுபோகும். ஆரோக்கியமான நல் உறவுகள் நம்மைத் தேடி வரும். இத்தவக்காலம் நீடித்த, நிலையான அமைதியை நமது வீடுகளில், உள்ளத்திலும் உருவாக்கட்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலய விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய 122-ம் ஆண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வெரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது.

    முன்னதாக மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மெயின்கார்டுகேட் நுழைவு வாயில் வழியாக என்.எஸ்.பி ரோட்டில் சென்று தெப்பக்குளம் வழியாக நந்திகோவில், காளியம்மன் கோவில் தெரு, சத்திரம் பஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதற்காக கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியைய்யா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    புங்கனூரில் புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.
    திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூரில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்ட அங்குள்ள கிறிஸ்தவ சமுதாய மக்களால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன் தினம் புதிய புனித அந்தோணியார் ஆலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஆயர் தலைமையில் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்ட கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. விழாவில் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடாவும், டி.டி.வி.தினகரன் அணி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான மனோகரன், எஸ்.ஏ.எஸ். கல்வி நிறுவனத்தின் தாளாளர் செபாஸ்டியன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அலெக்ஸ் தலைமையில் புங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜார்ஜ், தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அருள்ராஜ், புங்கனூர் சேசுராஜ், டி.டி.வி.தினகரன் அணி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
    இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதிலும், உண்ணா நோன்பு இருப்பதிலும், கடன் திருநாட்களை கடைப்பிடிப்பதிலும் அடங்கியிருப்பதில்லை.
    தவக்காலம் தொடங்கியதும், கடவுளுக்காக என்று கூறி, நாம் நோன்பு இருக்க ஆரம்பித்து விடுகிறோம். நம்முடைய தவக்கால நோன்பு, இறைமகன் ஏசுவுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? தவக்காலத்தில் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    உண்மையான வழிபாடு எது? தூய நோன்பு எத்தகையது? கடவுள் விரும்பும் செயல்கள் எவை? கடவுளை வழிபடுபவர்களுக்கு விடுதலையையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தருபவை எவை? என்ற கேள்விகளுக்கு விடைதருகிறார் தீர்க்கதரிசி ஏசாயா. ' ஒருவன் நாணலைப்போல் தன் தலையை தாழ்த்தி சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்துகொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நோன்பு என்றும், ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் நீங்கள் அழைக்கிறீர்கள்? கொடுமை தடைகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தடியை உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு' (ஏசாயா 58:5-6).

    இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதிலும், உண்ணா நோன்பு இருப்பதிலும், கடன் திருநாட்களை கடைப்பிடிப்பதிலும் அடங்கியிருப்பதில்லை. மாறாக, நல்லதைசெய்வதிலும், ஏழைகள், எளியவர்கள் மீது இரக்கம் காட்டுவதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களுக்கு உதவி புரிவதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    'பசித்தோர்க்கு உங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரை காணும்போது அவர்களுக்கு உடுக்க கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்து கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு ' (ஏசாயா 58:7) என்கிறார் கடவுள்.

    நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது இதுதான். ஆனால் நாம் இவைகளை பின்பற்றாமல், நம்மை வருத்திக்கொண்டு நோன்பு இருக்கிறோம். இறைவனின் விருப்பப்படி சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்காக நோன்பு இருப்போம். அடுத்தவர் மீது அக்கறை இல்லாமல் ஆண்டவரை வழிபடுவது வெற்று வழிபாடு என்பதையும், பகிராத உண்ணா நோன்பு பொருளற்றது என்பதையும் உணர்ந்துகொள்வோம்.

    ஏழை, எளியவர்கள் ஏற்றம் பெறுவதற்கும், ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட நிலைகளில் வாழும் மனிதர்களுக்கு விடுதலையை பெற்று தருவதற்காகவும் நம்மை நாம் முழுவதுமாய் அர்ப்பணிப்போம். இதுதான் அர்த்தமுள்ள நோன்பு என்பதை புரிந்து கொண்டு, இந்த தவக்காலத்தில் இறைவனோடு இணைந்து வாழ்வோம். உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.

    -சகோதரி.சகாயம்
    இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டம் என்பது வணக்க வழிபாடு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், குடும்ப விவகாரம், மார்க்கக்குற்றம், மனிதக்குற்றம் என அனைத்துக்குமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.
    மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு சில சட்ட திட்டங்கள் அவசியமாய் தேவைப்படுகின்றன. மனிதனால், சட்டம் என்ற கடிவாளம் இன்றி சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வது மிக கடினமே. இது போன்ற சூழ்நிலையில் தான் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் அவசியம் கட்டாயம் தேவைப்படுகின்றன.

    ஷரீஅத் சட்டம் என்பது சர்வ தேசத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய சட்டத் தொகுப்பல்ல. இறைவனால் ‘வஹி’ எனும் இறை அறிவிப்பின் வழியாக அவனது திருத்தூதருக்கு அவ்வப்போது அருளப்பட்டு விதிக்கப்பட்ட ஒரு சட்டத்தொகுப்பு தான் ஷரீஅத் சட்டமாகும்.

    இதுகுறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-

    ‘(நபியே) மார்க்கத்தின் நேரான ஒரு (ஷரீஅத்தின்) வழியில் தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின் பற்றி நடப்பீராக. கல்வி ஞானமற்ற இந்த மக்களின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்’ (45:18).

    ஷரீஅத் சட்டங்கள் தெளிவாக, துல்லியமாக, சமநிலையுடன் இருக்கின்றன. இதில் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் என்று எவ்விதக் குளறுபடிகளும் இல்லை.

    ‘என் பாச மகள் பாத்திமா திருடினாலும் அவரது கை நிச்சயம் வெட்டப்படும்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    ‘எனக்குப் பின் நபி மூசா (அலை) அவர்கள் வந்தாலும், அவர் எனது ஷரீஅத்தைத்தான் பின்பற்ற வேண்டும். இறுதி காலத்தில் தோன்றும் நபி ஈசா (அலை) எனது ஷரீஅத்தைத் தான் பின்பற்றுவார்’ என்ற நபி மொழிகள் எல்லாம் இந்த இறுதி ஷரீஅத் வழி தான் நிலையானது; அது நிறைவானது; நிரந்தரமானது என்பதையே அறிவிக்கின்றது.

    திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் குறித்த விவரங்கள் வருமாறு:-

    ‘(நபியே) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீங்கள் சட்டப்படி தீர்ப்பளிப்பதற்காக, முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கியிருக்கின்றோம்’ (4:105).

    ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே’ (5:44).

    ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள் தான்’ (5:45).

    ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள் தான்’ (5:47).

    “(நபியே, முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ் வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள்.

    உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்). ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம் தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கு அறிவித்து விடுவான்”. (5:48)

    ‘(நபியே) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (5:49)

    ‘அறியாமைக்காலத்தின் சட்ட(திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?’ (5:50)

    மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் இறைச்சட்டமான ஷரீஅத் சட்டப்படி தான் எந்தவொரு தீர்ப்பும் வழங்கப்பட வேண்டும். அவற்றில் நீங்கள் மிகக்கவனமாக இருங்கள், திருவேதத்தை விட்டும் நீங்கள் திசை திரும்பி விடாதீர்கள் என்று பன்முறை நம்மை எச்சரிக்கிறது.

    அவற்றை மதித்து நடப்பதும், மறுத்து நடப்பதும் நம் கை களில் தான் இருக்கிறது. நமக்கு சாதகமான சட்டங்களை எடுப்பதும், நமக்கு பாதகமான சட்டங்களை தடுப்பதும் எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.

    ஷரீஅத் சட்டம் என்று வந்துவிட்டால் அதன் முன்அனைவரும் சமம். அதில் ஏற்றத்தாழ்வு என்பது அறவேயில்லை. ஏனெனில் இறை வசனம் ஒன்று நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறது:

    ‘(சட்டப்படி) தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?’ (95:8)

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டம் என்பது வணக்க வழிபாடு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், குடும்ப விவகாரம், மார்க்கக்குற்றம், மனிதக்குற்றம் என அனைத்துக்குமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.

    ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முழுச்சட்ட திட்டங்களும் ஷரீஅத்தில் உண்டு. எனவே தான் நமது ஷரீஅத் சட்ட திட்டங்களில் யாருடைய தலையீடும் இருப்பதில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது நம் ஷரீஅத் சட்டதிட்டத்திற்கும் நன்கு பொருந்தும்.

    நிறைவான இறை சட்டங்களை போற்றுவோம், அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி, ஈரோடு-3
    தனது பாவங்களுக்குப் பலியாகத் தான் இறைமகன் இயேசு உயிர்விட்டார் எனும் சிந்தனையை மனதில் இருத்தி, தன் பாவ வாழ்க்கையை விட்டு மனம் திரும்பும் காலம்.
    கிறிஸ்தவர்களின் புனித நாட்கள் என்னென்ன என ஒரு கேள்வி எழுப்பினால் சட்டென நினைவுக்கு வரக்கூடிய நாட்கள் இரண்டு. ஒன்று, கிறிஸ்து பிறப்பு, இன்னொன்று ஈஸ்டர். ஒன்று இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மனிதனாக மண்ணில் பிறந்த தினம். இரண்டாவது மனிதனாய் வந்த இறைவன் கொல்லப்பட்டு மீண்டும் விண்ணுக்காய் உயிர்த்த தினம்.

    அதென்ன தவக்காலம்?

    ஈஸ்டர் தினத்துக்கு முன்பு வருகின்ற, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த, நாற்பது நாட்களைக் கிறிஸ்தவர்கள் ‘தவக்காலம்’ என அழைக்கின்றனர். அந்த தவ நாட்களின் தொடக்கம் ஒரு புதன் கிழமையில் ஆரம்பமாகும். அந்த நாள் தான் ‘சாம்பல் புதன்’. அதாவது தவத்தின் தொடக்கப் புள்ளி அந்த நாள் தான்.

    ‘லெந்து காலம்’ என்றும் ‘தவக்காலம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த காலம் மனம் திரும்புதலின் காலம். தனது பாவங்களுக்குப் பலியாகத் தான் இறைமகன் இயேசு உயிர்விட்டார் எனும் சிந்தனையை மனதில் இருத்தி, தன் பாவ வாழ்க்கையை விட்டு மனம் திரும்பும் காலம்.

    ‘மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்’ எனும் இறைவார்த்தையே தவக்காலத்தின் மையம். மண்ணிலிருந்து இறைவன் ஆதாமைப் படைத்தார். மனித குலம் அங்கிருந்து ஆரம்பமானது. மனிதனின் வாழ்க்கை இறுதியில் மண்ணோடு தான் கரைந்து முடிகிறது. எனில் ஆன்மா இறைவனோடு இளைப்பாற வேண்டும். அதற்கு நம் முடைய வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையாய் அமைய வேண்டும். இதுவே தவக்காலத்தின் அடிப்படைச் சிந்தனை.

    அது ஏன் நாற்பது நாட்கள்?

    நாற்பது என்பது விவிலியத்தில் மிக முக்கியமான எண். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களின் விடுதலை நாயகனாக இருந்தவர் மோசே. அவர், ஆரம்ப நாட்களில் எகிப்தியன் ஒருவனை அடித்துக் கொன்றார். அதன் பின் அந்த நாட்டை விட்டே பயந்து ஓடினார். மீதியானி எனுமிடத்தில் அவர் மறைந்து வாழ்ந்த ஆண்டுகள் நாற்பது.

    பத்து கட்டளைகள் பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இறைவன் அதை சீனாய் மலையில் வைத்து மோசேக்கு வழங்கினார். அதற்காக சீனாய் மலையிலே மோசே கடவுளோடு இருந்த நாட்கள் நாற்பது. எகிப்திலிருந்து அழைத்து வந்த இஸ்ரவேல் மக்கள் பாலை நிலைத்தில் அலைந்து திரிந்த வருடங்கள் நாற்பது. அந்த மோசே எழுதிய விடுதலைப்பயணம் பிற்காலத்தில் நாற்பது அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டதும் இறை சித்தமன்றி வேறில்லை. இறைமகன் இயேசு நேரடியாக உண்ணா நோன்பு இருந்து தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருந்த நாட்கள் நாற்பது. இப்படி நாற்பது என்பதன் முக்கியத்துவம் விவிலியம் முழுவதும் தொடர்கிறது. அதுவே இந்த தவக்காலத்திலும் நீள்கிறது.

    கி.பி. 900-ம் ஆண்டு முதல் இந்த சாம்பல் புதன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அது ஏன் சாம்பல்?

    சாம்பல் என்பது எல்லோராலும் நிராகரிக்கப்படும் ஒரு பொருள். உதாசீனத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் மக்களும், மன்னர்களும் கோணியை ஆடையாய் உடுத்திக் கொண்டு, சாம்பலில் அமர்ந்து நோன்பு இருப்பார்கள். தங்கள் உடலெல்லாம் சாம்பல் பூசி, இறைவன் முன்னால் தாங்கள் வெறும் சாம்பல் போன்றவர்கள் என குறிப்பால் உணர்த்துவார்கள். தன்னை வெறுமையாக்கி, இறைவனை மட்டுமே மகிமைப்படுத்தும் நிகழ்வு அது.

    அதன் அடிப்படையில் தவக்காலத்தின் தொடக்க நாளான புதன் கிழமையில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் இடும் வழக்கம் பெரும்பாலான கிறிஸ்தவர்களிடையே உண்டு. நெற்றியில் இடும் சிலுவை, வெற்றி தந்த இயேசுவின் சிலுவையை நினைவு கூரும் அடையாளம். இனி அவரது வாழ்க்கையை எனக்குள் சுமப்பேன் என்பதன் உறுதி மொழி.

    ஏன் நோன்பு?

    நோன்பு என்பது ஒறுத்தலின் அடையாளம். தியாகத்தின் வெளிப்பாடு. ஆடம்பரங்கள், சிற்றின்பங்கள் தவிர்த்து இறைவனோடு இணைந்திருப்பதே நோன்பின் அடிப்படை.

    நோன்பு இருக்கும் போது பிறருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்றார் இயேசு. நோன்பு என்பது விளம்பரத்துக்கான விஷயமல்ல, அது இறைவனோடான தொடர்பின் அடையாளம். இந்த நோன்பை பெருமைக்காகவும், பெயருக்காகவும், கண் துடைப்புக்காகவும் செய்யாமல் உண்மை அன்போடு செய்ய வேண்டும்.

    எதற்காக நெற்றியில்?

    நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டு கிறது.

    ‘நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது’ எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.

    ‘செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை’ என்பதே விவிலிய வாக்கு. இந்த தவக்காலம் வெறும் அடையாளங்களோடு முடிவதல்ல. தனது பாவங்களை உணர்ந்து மனம் திரும்புவது ஒரு நிலை. மனிதத்தின் கரம் பிடித்து இறைவனின் அன்பை பிறருக்கும் பகிர்ந்து கொடுப்பது உயர் நிலை.

    அடையாளங்களை அறிந்து கொள்வோம், அன்பை அணிந்து கொள்வோம்.

    சேவியர், சென்னை.
    ×