என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உள்ளத்தில் அமைதி உருவாகட்டும்
    X

    உள்ளத்தில் அமைதி உருவாகட்டும்

    தவக்காலத்தின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், நம்மையே சுய ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.



    நாம் வாழும் இன்றைய உலகம் போலிகளிலும், கனவுலகத்திலும்தான் மூழ்கி கிடக்கின்றது. உண்மை என்றால் என்ன என தெரியாத மனிதர்கள் தடுமாறி நிற்கின்றனர். கவர்ச்சிகரமானது எது? எளிதில் கவர்வது? என்பதை தேடித்தான் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். தவக்காலத்தின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், நம்மையே சுய ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    புதுப்பித்தலின் அவசியத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குருநாதர் இயேசுவின் வாழ்வு, ஏராளமான மாற்றங்களை இவ்வுலகில் கொண்டு வந்தது. குறிப்பாக பாவிகள், ஒதுக்கப்பட்டவர்கள், நோயாளிகள், பிறஇனத்தார்கள் என ஓரந்தள்ளப்பட்ட மக்களுக்கு வாழ்வு கொடுத்தது. நம்பிக்கை இன்றி, இனி வாழ்வில்லை என ஒதுங்கியவர்களுக்கு மைய இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவ்வாறு மவுனமாய் பல சஞ்சலங்களை உருவாக்கி சென்றது.

    இறைமகன் இயேசுவின் வழிநடத்துதலிலும், பாதையிலும் பயணிக்க நம்மையே ஆயத்தம் செய்கின்ற நாம், நமது கடந்த காலங்களை நினைவில் நிறுத்திப்பார்ப்போம். நமது பலவீனங்கள் என்னென்ன? என்பதை பட்டியலிடுவோம். எவற்றையெல்லாம் விடுத்து வாழ வேண்டும்? எவற்றையெல்லாம் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதனை நாமே கணக்கில் எடுப்போம். “மனம் மாறி என்னிடம் திரும்பி வாருங்கள், என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்ற இயேசுவின் குரலுக்கு காது கொடுப்போம்.

    நம்மை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்துகின்ற செயல்பாடுகளையும், நமக்கும்- இயேசுவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்குகின்றவற்றையும் கண்டுபிடிப்போம். தொலைத்தொடர்பு ஊடகங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை முற்றிலுமாய் புறக்கணிப்போம். தேவையில்லாத வாட்ஸ்-அப் தகவல்களை அனுப்புதல், தேவையின்றி இணையதளத்தில் நட்பை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை அறவே தவிர்ப்போம். போலிகளில் மூழ்கி, போதை மனிதர்களாய் மாறுவதை தவிர்ப்போம்.

    உண்மையான, உயரிய விழுமியங்களை வாழ்வாக்கி தொடர்ந்து வாழ்ந்து காட்ட, நீதி- அன்பு, அமைதி போன்ற பண்புநலன்களால் நம்மை அணி செய்து கொள்வோம். அதற்கான தகுந்த தயாரிப்பு காலமாக இந்நாட்களைப் பயன்படுத்துவோம். உண்மையைப் பேசுவேன், தினமும் ஒரு மணி நேரம் அமைதியாக இருப்பேன், நல்வார்த்தைகளைப் பேசுவேன், உண்மைக்கு எதிரான செயல்பாடுகளில் என்னை இணையேன் போன்றவற்றை வாழ்வாக்க முயற்சி எடுப்போம்.

    அப்போது நம்மிடம் மறைந்திருக்கின்ற போலிச்செயல்பாடுகள் மெதுவாக நம்மைவிட்டு அகன்றுபோகும். ஆரோக்கியமான நல் உறவுகள் நம்மைத் தேடி வரும். இத்தவக்காலம் நீடித்த, நிலையான அமைதியை நமது வீடுகளில், உள்ளத்திலும் உருவாக்கட்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    Next Story
    ×