என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இந்த மனந்திரும்புதலுக்குப் பின்னர் பழைய பாவங்களும், பிறவிக் குணங்களும் பக்தனை அண்டவிடாமல், இயேசு வழிநடத்திச் செல்வதை அதிசய அற்புதமாக உணரலாம்.
    பாவமன்னிப்பு, மனந்திரும்புதல் போன்ற பக்தி வழியைப்பற்றி எத்தனையோ கருத்துகளை எல்லாருமே தினமும் ஏதோ ஒரு வகையில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். பல போதனைகள் உள்ளத்தைத் தொடுவதில்லை. ஆனால் மனந்திரும்புதலுக்கென்று உள்ளத்தைத் தொடும் கருத்துகளை உணரும்போதும்கூட பலர் அதை ஏற்பதில்லை. பழைய வாழ்க்கையையே தொடர்கின்றனர்.

    எனவே மனமாற்றம் அடையச் செய்வதற்காக மனிதனுக்கு துன்பம் சூழும் காலங்களை இறைவன் அனுமதிக்கிறார். அப்போது, நிம்மதியையும் விடுதலையையும் பெறுவதற்கான உண்மை போதனைகளை மனிதன் நாடித்தேடி ஓடுகிறான். ஆனால் மாற்று போதனைகளில் சிக்கிக்கொள்கிறான்.

    பாவமன்னிப்பு, மனந்திரும்புதலைப் பற்றி யோவான் ஸ்நானன் கண்டித்து போதித்தான். அதைத் தொடர்ந்து இயேசு பல அற்புதங்களைச் செய்து பிரசங்கித்தார். அவர்களின் போதனையை அப்போது பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உலகத்தில் இயேசு வந்த உண்மை நோக்கத்தை அப்போ தலர்கள் விளக்கிய போதுதான், அந்த உண்மை போதனையை பலர் ஏற்றுக்கொண்டனர் (அப்.2:37,41).

    இயேசுவின் நோக்கம் என்ன? மனிதனை பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பச் செய்து, அவனுக்கு பக்திக்கான வழியைக்காட்டுவதற்காக தன் மகனான இயேசுவை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பினார். இது ஞானிகள், தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே தெரியும்.

    ஆனால், இயேசுவை அறியாத அனைத்து தரப்பு மக்களுக்கு அவரை அடையாளம் காட்ட வேண்டும். அடையாளத்துக்காகவே இயேசுவினால் பல அற்புதங்களை இறைவன் நடத்தினார் (அப்.2:23) என்று அப்போஸ்தலர்கள் போதித்தனர். இதுவே உண்மையான போதனை. இயேசு தங்களுடன் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவதற்காக சில அற்புதங் களையும் அப்போஸ்தலர்கள் செய்து காட்டி போதித்தனர்.

    எத்தனையோ மந்திர, தந்திரங்கள் மூலமாக அற்புத அடையாளங்கள் நடந்தாலும், அந்த மந்திர, மாய, தந்திரங்களால் இறந்தவரை எழுப்ப முடியவில்லை; நோயை குணப்படுத்தவில்லை; இயற்கைச் சீற்றத்தை தடுக்கவும் இயலவில்லை. ஆனால் இயற்கையையும் மீறி அற்புதம் செய்து உலகத்தில் இயேசு தன்னை அடையாளம் காட்டினார்.

    அந்த அடையாளங்களைக் கண்ட பிறகாவது மக்கள் தன்னை இறைமகன் என்று ஏற்றுக்கொண்டு, தான் சொன்னபடி பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பிவிட வேண்டும் என்பதுதான் மனிதனைப்பற்றிய இயேசுவின் நோக்கம். அதற்காக இறைவனின் சித்தப்படி குறிப்பிட்டவர்களுக்கு இயேசு அற்புதங்களைச் செய்தார்.

    அதுபோல, இன்றும் இயேசுவை அறியாத மக்களுக்கு அவரை அடையாளம் காட்டுவதற்குத்தான் பக்தர் களுக்கு வல்லமை தரப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுவை பின்பற்றினால் அற்புதங்களை அடையலாம் என்று சுவிசேஷம் தலைகீழாக, சுயலாபங்களுக்காக போதிக்கப்படுகிறது. அதற்காக அற்புத அடையாளங்களே முக்கியப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது உண்மையற்ற போதனை. உண்மையில்லாத போதனைகளால் மனிதனுக்கு மனமாற்றம் ஏற்படாது. அற்புதங்களை இயேசுவின் பிறப்புக்கு முந்தைய காலத்திலும் இறைவன் நடத்தியிருக்கிறார். எனவே இயேசுவை இதற்கென்று பிரத்யேகமாக உலகத்துக்கு அனுப்ப அவசியம் இல்லை. உலகத்துக்கு இயேசு வந்த நோக்கம், மனிதனின் மனந்திரும்புதலும், பாவம் நீங்கி அவன் பரிசுத்தமாகுதலும் தான்.

    ஆனால் அதுபற்றிய போதனைகள் இரண்டாம் பட்சமாகிவிட்டன. அதிசயம், அற்புதமெல்லாம் உயிர் மீட்சி, வியாதி போன்ற சரீர ரீதியான மீட்புக்குத்தான் உதவும். ஆனால் மனமாற்றம் என்பது சரீர அற்புதமல்ல. அது மனிதன் எடுக்க வேண்டிய மனரீதியான முடிவு.

    மனமாற்றம் என்றால் என்ன? பிறருக்கு எதிராக செய்த பாவங்களை, அவர்களிடமும், இறைவனிடமும் சொல்லி மன்னிப்பு கேட்பதும்; இனி சரீர மற்றும் மன ரீதியான பாவங்களையும், பிறவிக் குணங்களின்படியான குற்றங்களையும் செய்யமாட்டேன் என்று திருந்துவதே மனமாற்றமாகும். திருடியதையும், ஏமாற்றியதையும் உரியவரிடம் திருப்பித்தராதவன், மனந்திருந்தியவன் அல்ல.

    இந்த மனந்திரும்புதலுக்குப் பின்னர் பழைய பாவங்களும், பிறவிக் குணங்களும் பக்தனை அண்டவிடாமல், இயேசு வழிநடத்திச் செல்வதை அதிசய அற்புதமாக உணரலாம். எனவே இயேசுவின் நோக்கமான பாவமன்னிப்பு, மனந்திரும்புதல் போன்ற இறைநீதிக்கு முன்னுரிமை அளிப்பதையே நாடுங்கள் (மத்.6:33).
    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    இதையொட்டி பங்கு ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஆலய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆசீர், சிறப்பு பிரார்த்தனை உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடக்கிறது. 13-ம் திருவிழாவான அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி காலையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.
    முக்கியமான கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில், ஒன்றான நாங்குநேரி அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில், நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீராத நோயுற்றவர்கள் பலர் தங்கியிருந்து பிரார்த்தனை செய்து சுகம் பெற்று செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 

    திருவிழாவில் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் தினமும் ஜெபமாலை, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. நள்ளிரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான புனிதரின் தேர் பவனி நடக்கிறது. 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    விழாவில் மறையுரை, புது நன்மை திருப்பலி, நற்கருணை பவனி, அசன விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்கு தந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா மெல்கிஸ், கணக்கர் மரிய சீமோன் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.
    தன்னை முன்னிலைப்படுத்தி வாழ விரும்பும் மனிதர்கள் மத்தியில், நல்லவர் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர்வழி சென்று, அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் மாமனிதர்.
    தன்னை முன்னிலைப்படுத்தி வாழ விரும்பும் மனிதர்கள் மத்தியில், நல்லவர் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர்வழி சென்று, அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் மாமனிதர்.

    அனைத்து வித துன்பங்களில் இருந்தும் தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என யூதர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், யூதேயா மலைநாட்டில் அபியா வகுப்பை சேர்ந்த குரு செக்கரியாவுக்கும், அவரின் மனைவி எலிசபெத்-க்கும் மகனாக யோவான் தோன்றினார். யோவானின் பிறப்பு இறைதூதரால் முன்னறிவிக்கப்பட்டு கடவுளின் வல்லமையால் நிகழ்ந்த ஒன்று.

    ‘எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் மிகச்சிறந்தவர்‘. மெசியாவின் வருகைக்காக மக்களின் மனங்களை செம்மைப்படுத்தி கொண்டிருந்து யோவானின் நற்செயல்களை கண்ட எருசலேமிலுள்ள யூதர்கள் அவரை ‘மெசியா‘ என எண்ணினர். அவரோ, தன்னை பின்பற்றி வந்த சீடரிடம், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தை போக்குபவர்“ (யோ 1:29) என இயேசுவை சுட்டிக்காட்டி சான்று பகர்ந்தார்.

    பார்வை பெற்றவர்கள், தொழுநோய் நீங்க பெற்றவர்கள், கேட்கும் திறன் பெற்றோர், நோய்கள் பல நீங்கி நலம் பெற்றவர்கள், தீய சக்தியிலிருந்து விடுதலை பெற்றவர்கள், உளநோய் நீங்கி புது வாழ்வு பெற்றவர்கள் என எல்லோரும் இயேசுவே உண்மையான இறைமகன் என சான்று பகர்ந்தனர். இன்றைய நாட்களிலும், அன்பு வழியில், அமைதி வழியில் பிறருக்கு சேவையாற்றிய அன்னை தெரசாவின் வாழ்வு ஒரு சான்று வாழ்வு. வாய்மை எனும் ஆயுதத்தால் அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியின் வாழ்வு ஒரு சான்று வாழ்வு. ஏழைகளின் தோழனாக, அகதிகளின் அன்பனாக, அனைத்து மக்களின் விரும்பத்தக்க தலைவனாக வாழும் திருத்தந்தை பிரான்சிஸ்-ன் வாழ்வு ஒரு சான்று வாழ்வு.

    தங்களது சொல்லாலும், செயலாலும், கிறிஸ்துவை போன்று வாழ்பவர்கள் கிறிஸ்துவின் உண்மை சான்றுகள். எனவே, சான்று வாழ்வு வாழ இந்த தவக்காலத்தில் முயற்சி எடுப்போம்.

    அருட்சகோதரி. சாந்தாமேரி, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல். 
    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சேதுக்குவாய்த்தான் தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சேதுக்குவாய்த்தான் தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    9-ம் திருநாளான வருகிற 27-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 10-ம் திருநாளான 28-ந்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, புதுநன்மை, உறுதிப்பூசுதல் வழங்குதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 29-ந்தேதி மதியம் அசன விருந்து நடக்கிறது.
    மும்பை காட்கோபர், காமராஜர் நகர் புனித அந்தோணியார் ஆலய 26-வது ஆண்டு திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
    மும்பை காட்கோபர், காமராஜர் நகர் புனித அந்தோணியார் ஆலய 26-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. 

    திருவிழாவையொட்டி அனைத்து நாட்களிலும் 6.30 மணிக்கு ஜெபமாலை முடிந்து திருப்பலி நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் திருப்பலியும், தியானமும் நடைபெறுகிறது. 

    இந்த திருப்பலியை பாளையங்கோட்டையில் இருந்து வரும் சகோதரர் சேவியர் மைக்கிள் நிறைவேற்றுகிறார். 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 1 மணிக்கு சமபந்தி நடக்கிறது. 6.30 மணிக்கு தேர்பவனி நடைபெற உள்ளது.
    இறைமகன் இயேசு தன் கருத்துக்களை வெளிப்படுத்த எளிமையான முறையில் மக்கள் புரிந்து கொள்ள பல உவமைகளை கூறியிருக்கின்றார்.
    இறைமகன் இயேசு தன் கருத்துக்களை வெளிப்படுத்த எளிமையான முறையில் மக்கள் புரிந்து கொள்ள பல உவமைகளை கூறியிருக்கின்றார். அதில் திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமையும் ஒன்று. விண்ணரசை ஒப்பிட்டு இந்நிகழ்ச்சியை சொல்கிறார்.

    நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாட்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே செல்கிறார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாட்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்புகிறார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே செல்கிற பொழுது சந்தைவெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். 

    அவர்களிடம் “நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்கு போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்” என்கிறார். அவர் களும் செல்கிறார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும், ஐந்து மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்கிறார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளர்களிடம், “வேலையாட்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்” என்றார். 

    உடனே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக்கொள்கின்றனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாக கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு தெனாரியம் வீதம் தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, “கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப்பளுவையும், கடும் வெயிலையும் தாங்கி எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே” என்றார்கள்.

    நிலக்கிழார் “தோழரே நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்” என்றார்.

    இவ்வுவமை யூதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் ஒரு வழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது. செப்டம்பர் மாத இறுதியில் திராட்சை பழங்கள் அறுவடைக்கு தயாராகி விடும். பின் தொடர்ந்து, மழைக்காலம் என்பதால் அறுவடை செய்யாவிடில் திராட்சை பழங்கள் மழையினால் சீரழிந்துவிடும். இதனால் இவ்வேளைகளில் அறுவடைப் பணி மிக விரைவாக நடைபெறும். எந்த ஒரு தொழிலாளியும் ஏற்றுக்கொள்ளப்படுவார். குறிப்பாக ஒருவர் ஒருமணிநேரம் பணி செய்ய முன்வந்தாலும் அவரையும் ஏற்றுக்கொள்வார்கள். ஒரு நாள் பணி செய்கின்றவருக்கு ஒரு தெனாரியம் ஊதியம் என்பது பொதுவானது.

    இங்கே முதலாவது ஒப்பந்தம் அடிப்படையில் வேலையாட்களை பணி அமர்த்துகிறார். பின் மீண்டும் மீண்டும் நிலக்கிழார் கடைத்தெருவிற்கு சென்று, மாலை ஐந்து மணி வரை மூன்று, நான்கு பாகமாக வேலையாட்களை அழைத்து வருகின்றார். கடைசியாக வேலைக்கு அழைக்கப்பட்டவர்கள் நம்பிக்கையற்ற, நிச்சயமில்லாத வாழ்வு வாழ்ந்தனர். முன் வந்தவர்கள் ஒரு குழுவில் நிரந்தரமாக இடம்பிடித்திருந்தனர். ஆனால் கடைசியாக வந்தவர்களோ, எந்தக் குழுவிலும் இணைந்திருக்கவில்லை. இவர் களுக்கு வேலைவாய்ப்பு என்பது கருணை அடிப்படையில்தான் கிடைத்தது. அதனால் அவர்களது வாழ்வு எப்பொழுது அரை பட்டினியிலேயே கழிந்தது. ஒருநாள் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வீட்டில் குழந்தைகள் அன்று பட்டினி தான்.

    இவ்வுவமையில், முந்தினோர் எனப்படுவோர் யூதர்கள், தாங்களே உயர்ந்தவர், சிறந்தவர், முதன்மையானவர் என்ற எண்ணம் அவர்களிடம் காணப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அமர்த்தப்படுவோராகிய புற இனத்தார் ஆனாலும் சரி, ஆயக்காரர், கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகள் போன்றோரும் சரி, எவ்விதத்திலும் இறுதிக்கணிப்பில் குறைந்து மதிப்பிடப்போவதில்லை. 

    யாவருக்கும் கிடைக்கப்போவது இறையருளால் நாம் பெறப்போகும் நிலை வாழ்வு தான். இறுதியில் பணியமர்த்தப்படுவோருக்கு ஏதோ கொஞ்சம் கிடைக்கும் என்ற எண்ணம், அது போதாதே என்ன செய்வது என்ற கவலை வாட்டியிருக்கும். எனவே தான் நிலக்கிழார் அவர்தம் கவலையை முந்திப் போக்குகிறார். கிறிஸ்து கையாளும் இந்த புரட்சிகரமான கணிப்பு நம்முடைய சமுதாய அமைப்புகளையும், நம்முடைய பொருளாதார நியாயங்களையும் பாதிக்குமானால் இவ்வுலகமே மோட்சமாகிவிடும்.

    திக்கற்றவர்களை தாங்குவதும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெறச் செய்வதும், அவர்களோடு இணைந்து, சந்தோஷப்படுவதும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற உதவுவதும் தான் தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமய வாழ்வாகும்.

    “பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம். பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாக சேவை செய்யுங்கள். கடவுளே உங்கள் அருகே வருவார்” என்கிறார், அன்னை தெரசா. இந்த உலகத்தில் யாரும் அனாதை இல்லை, ஏனெனில் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தோரின் காப்பாளராகவும் இருப்பவர் தூயகத்தில் உறையும் கடவுள் (திருப்பாடல்கள் 68:5).

    -அருட்பணி ம.பென்னியமின்.
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்று நோக்குவோம். இந்த அத்தியாயத்தில் இயேசு பணக்காரர், ஏழை பற்றி எடுத்துரைக்கிறார்.
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்று நோக்குவோம். இந்த அத்தியாயத்தில் இயேசு பணக்காரர், ஏழை பற்றி எடுத்துரைக்கிறார்.

    நிறைந்த செல்வம் வைத்திருக்கும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் நாள்தோறும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவார். தினமும் அறுசுவை விருந்துண்பார். எப்பொழுதும் இன்பமாக இருப்பார். 'லாசர்’ என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவர் இருந்தார். 

    அவர் உடல் முழுவதும் புண்ணாக இருந்தது. அவர் அந்தப் பணக்காரனின் வீட்டு வாசல் அருகே கிடந்தார். அவர் பணக்காரரின் மேஜையில் இருந்து விழும், சில உணவுப் பருக்கைகளை உண்டு பசியாற விரும்பினார். நாய்கள் வந்து அவரது புண்களை நக்கும். ஒருநாள் அந்த ஏழை இறந்தார். வானத் தூதர்கள், அவரை அபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். பணக்காரரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார். அண்ணாந்து பார்த்தார். 

    மிகத் தொலைவில் அபிரகாம் இருப்பதையும், அவர் மடியில் லாசர் கிடப்பதையும் கண்டார். அங்கிருக்கும் மகிழ்ச்சியை கண்ட அவர் அபிரகாமைப் பார்த்து, ‘அபிரகாமே! என் மேல் இரங்கும். லாசர், தன் விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து என் நாவைக் குளிரச் செய்ய அவரை இங்கு அனுப்பும். நான் இங்கு தீப்பிழம்பில் வேதனைப்படுகிறேன்’ என்று மிகவும் சப்தத்துடன் கூறினார்.

    அதற்கு அபிரகாம் அந்தச் செல்வந்தரை நோக்கி, ‘மகனே! நீ, இவ்வுலகில் வாழ்ந்தபோது, நலன்களையே பெற்றாய். அதே சமயத்தில் லாசர் துன்பங்களையே அடைந்தார். அதை எண்ணிப் பார். அவர் இப்பொழுது ஆறுதல் பெறுகிறார். நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அதுமட்டுமல்ல, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரும் பிளவு இருக்கிறது. அதனால் இங்கிருந்து ஒருவர் அங்கு வர விரும்பினாலும் வர இயலாது; அங்கிருந்து நீங்களும் எங்களிடம் கடந்து வர இயலாது’ என்றார்.

    உடனே அந்தப் பணக்காரர், அபிரகாமை நோக்கி, ‘தந்தையே! அவரை என் தந்தை வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார் கள். அவர்களும் வேதனையான இந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது. அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். 

    அதற்கு அபிரகாம் மறுமொழியாக, ‘மோசேயும், இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு இவர்கள் செவி சாய்க்கட்டும்’ என்றார். அதற்கு அந்தச் செல்வந்தர், அபிரகாமை நோக்கி, ‘தந்தை அபிரகாமே! இறந்த ஒருவர், அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார்.

    ‘மேசேக்கும், இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காதவர்கள், இறந்த ஒருவர் உயிர்த்து எழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்று அபிரகாம் கூறினார். 

    இயேசு பிரான் சொன்ன செய்தியில் இருந்து சில உண்மைகளை நாம் உணர வேண்டும்.

    'செல்வத்து பயனே ஈதல்’ என்று கூறுகிறது தமிழ் மரபு. பிறருக்குக் கொடுத்தல் என்பதுதான் இயல்பானது. செல்வந்தர்கள் இதற்கு முரண்படுபவர்களாக இருக்கக் கூடாது. எளிமையாக, மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடை பெறும் ஒரு நிகழ்வாக மக்கள் உணர, இச்சம்பவத்தை இயேசு பிரான் எடுத்துரைக்கிறார்.
    இந்த உலகில் துன்பங்களை அனுபவிப்பவர்கள், மறு உலகில் இன்பம் அடைகின்றனர். இவ்வுலகம் நிரந்தரமானது அல்ல. மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மறைந்தே தீர வேண்டும். ஆகவே மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் அடிப்படையான தத்துவம் ஆகும். 

    ‘ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்; ஆனால் செல்வந்தன் பேரின்பத்தை அடைய மாட்டான்’ என்று வேறு ஓர் இடத்தில் இயேசு பிரான் கூறுவதையும் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும். 

    சிந்தனை:

    இந்தச் சம்பவத்தை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். இருவேறு வாழ்க்கை வாழும் இரண்டு மனிதர்களை நமக்குக் காட்டுகிறார். தினமும் பகட்டான ஆடை உடுத்தி அன்றாடம் விருந்து உண்ணும் செல்வந்தர் ஒரு பக்கம்; சிதறும் உணவுக்காக ஏங்கும் ஏழை மறுபக்கம். அதுமட்டுமல்ல, உடல் முழுவதும் புண்ணாகி, நாய்கள் அப்புண்ணை நக்கிக் கொண்டிருக்கும் நிலையை நமக்குக் காட்டுகிறார்.

    இவ்வளவு இழிவான தன்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவருக்கு இரக்கம் காட்டாத செல்வந்தர் இறந்த பிறகு நடக்கும் நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார்.
    பேரின்ப வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த ஏழை லாசர், இவ்வுலகில் வாழ்ந்தபோது செல்வந்தரால் கொஞ்சம்கூட கவனிக்கப்படவில்லை. 

    துன்பம், துயரம் போன்றவைகளை இவ்வுலகில் காணாத செல்வந்தர், பாதாளத்தில் ஒரு கணம்கூட இருக்க முடியவில்லை. நா வறட்சியால் துடிக்கிறார். ஏழை லாசரின் விரல் நுனியால் நீர் தொட்டு, தன் தாகத்தைத் தீர்க்க வேண்டி கெஞ்சுகிறார். தனக்கு ஏற்பட்ட துன்பம், தன்னைச் சார்ந்து வாழ்ந்த தனது சகோதரர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்.

    இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதற்கு இயேசு பிரான் எடுத்துரைத்த இச்செய்தியைப் பின்பற்றி, சகோதர நேயத்தோடு மனிதாபிமானத்தோடு வாழ்வோம். அவரின் நற்செய்தியை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்போம். வாழ முற்படுவோம்.
    முக்கூடல் அருகே சிங்கம்பாறையில் புனித சின்னப்பர் ஆலய திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 8 மணிக்கு ஊர் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்ட சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர் வானுயர பறக்கும் கொடிக்கு வழிபாடு செய்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து, ஆரவாரத்துடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து புறாக்கள் பறக்கவிடப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா வருகிற 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், உணவு ஒன்றிப்பு விழா,

    புதுநன்மை பெருவிழா, நற்கருணை பவனி, தேரடி திருப்பலி திருவிழா, கூட்டுத்திருப்பலி, தேர் பவனி, திருவிழா திருப்பலி மற்றும் தேர் பவனி திருமுழுக்கு திருப்பலி ஆகியன நடக்கிறது.

    10-ம் திருநாளான 25-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு மாவட்ட அளவிலான 15-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடக்கிறது. இந்த போட்டி சிங்கம்பாறை புனித பவுல் மேல்நிலைப்பள்ளி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்திடலில் நடக்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.20 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான ஏற்பாடுகளை புனித சின்னப்பர் விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர் இயக்கம் இணைந்து செய்து வருகிறது.
    ஆண்டவர் இயேசுவின் போதனைகள் நம் வாழ்வில் செயலாக்கம் பெறும் வேளையில், நாம் கடவுளுக்கு உகந்தவர்கள் என்ற தகுதியைப் பெற முடியும்.
    இறைமகன் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், மனிதரிடம் கடவுள் எதிர்பார்க்கும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தந்தார். சாதாரண தத்துவ ஞானிகளின் போதனை களைப் போலன்றி, கடவுளுக்குரிய மேன்மையோடு இயேசுவின் போதனைகள் அமைந்திருந்தன. ‘இது என்ன?, இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே!’ (மாற்கு 1:27) என்று மக்கள் கூட்டம் அவரைப் பார்த்து வியந்தது.

    அன்பையும், நீதியையும், தனிமனித சுதந்திரத்தையும் வலியுறுத்திய இயேசு, கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது என்று போதித்தார். உணவு, உடை பற்றி கவலைப்படாமல் கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு வாழுமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

    ‘உயிர் வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, அவற்றுக்கு களஞ்சியமும் இல்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறிப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா!’ (லூக்கா12:22-28) என்ற இயேசுவின் வார்த்தைகள் அவரது இறைத்தன்மையை உணர்த்துகின்றன.

    ஒருமுறை இயேசுவிடம் வந்த ஒருவர், அவரது சகோதரருடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு கேட்டார். இயேசு அவரை நோக்கி, ‘என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது’ (லூக்கா 12:13-15) என்று பதிலளித்தார்.

    கடவுள் படைத்த உலகத்தை மனிதர் கூறுபோடுவதை இறைமகன் இயேசு விரும்பவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. ‘பெரிய களஞ்சியங்களைக் கட்டி தானியங்களை சேர்த்து வைத்த பணக்காரனின் வாழ்வு அவற்றை அனுபவிக்காமலே முடிந்ததாக’ (லூக்கா 12:16-21) இயேசு கூறிய உவமையும் உலகப் பற்றை நீக்குமாறு அழைப்பு விடுக்கிறது.

    உலக மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகவும், இறுதி கட்டளையாகவும் இருந்தது.

    ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவான் 13:34-35) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

    நமக்கு தீமை செய்தவர்களை நாம் மன்னித்தால் மட்டுமே, கடவுளின் மன்னிப்பை நாம் பெற முடியும் என போதித்த இயேசு, ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்’ (மத்தேயு 6:12) என்று கடவுளிடம் வேண்டுமாறு கற்றுத் தருகிறார்.

    ‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்’ (மத்தேயு 7:12) என்ற பொன்னான விதியை இயேசு நமக்கு வழங்கியுள்ளார். பிறரிடம் அன்பையும், நீதியையும், சுதந்திரத்தையும் எதிர்பார்க்கும் நாம், மற்றவர்களுக்கு அவற்றை வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவர் இயேசுவின் அறிவுரை.

    ‘கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்’ என்பதே கடவுளின் நீதி என இயேசு நமக்கு கற்றுத் தந்துள்ளார். நமது செயல்களைக் கொண்டே கடவுள் நமக்கு தீர்ப்பிடுவார் என்பதே மனிதராக வந்த இறைமகனின் எச்சரிக்கை.

    ‘உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்’ (மத்தேயு 20:26-27) என்று போதித்த இயேசு, சீடர்களின் பாதங்களை கழுவி (யோவான் 13:4-17) அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். சமூக, சமய அடக்குமுறைகளை எதிர்த்த காரணத்தால், இயேசுவுக்கு சிலுவை மரணமே பரிசாக கிடைத்தது.

    ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ (மத்தேயு 5:44) என்று அறிவுரை வழங்கிய இயேசு, தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்ததைக் காண்கிறோம். சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என வேண்டியதாக லூக்கா (23:34) நற்செய்தி கூறுகிறது.

    இயேசுவின் போதனைகளை கேட்ட மக்களுக்கு, கடவுளே நேரில் வந்து அறிவுரை வழங்குகிறார் என்ற உணர்வு ஏற்பட்டது. எனவேதான் அவர்கள், ‘கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்’ (லூக்கா 7:16) என்றனர். தாமே நல்ல ஆயர் (யோவான் 10:11) என்று குறிப்பிடும் இயேசு, அவருக்கு செவிகொடுத்து வாழும் ஆடுகளாக மாற நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர் இயேசுவின் போதனைகள் நம் வாழ்வில் செயலாக்கம் பெறும் வேளையில், நாம் கடவுளுக்கு உகந்தவர்கள் என்ற தகுதியைப் பெற முடியும்.

    டே.ஆக்னல் ஜோஸ்
    அடுத்தவர் மீது அக்கறை இல்லாமல் ஆண்டவரை வழிபடுவது வெற்று வழிபாடு என்பதையும், பகிராத உண்ணா நோன்பு பொருளற்றது என்பதையும் உணர்ந்துகொள்வோம்.
    தவக்காலம் தொடங்கியதும், கடவுளுக்காக என்று கூறி, நாம் நோன்பு இருக்க ஆரம்பித்து விடுகிறோம். நம்முடைய தவக்கால நோன்பு, இறைமகன் ஏசுவுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? தவக்காலத்தில் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    உண்மையான வழிபாடு எது? தூய நோன்பு எத்தகையது? கடவுள் விரும்பும் செயல்கள் எவை? கடவுளை வழிபடுபவர்களுக்கு விடுதலையையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தருபவை எவை? என்ற கேள்விகளுக்கு விடைதருகிறார் தீர்க்கதரிசி ஏசாயா. 'ஒருவன் நாணலைப்போல் தன் தலையை தாழ்த்தி சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்துகொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நோன்பு என்றும், ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் நீங்கள் அழைக்கிறீர்கள்? கொடுமை தடைகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தடியை உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு’ (ஏசாயா 58:5-6).

    இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதிலும், உண்ணா நோன்பு இருப்பதிலும், கடன் திருநாட்களை கடைப்பிடிப்பதிலும் அடங்கியிருப்பதில்லை. மாறாக, நல்லதைசெய்வதிலும், ஏழைகள், எளியவர்கள் மீது இரக்கம் காட்டுவதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களுக்கு உதவி புரிவதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 'பசித்தோர்க்கு உங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரை காணும்போது அவர்களுக்கு உடுக்க கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்து கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு ’ (ஏசாயா 58:7) என்கிறார் கடவுள்.

    நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது இதுதான். ஆனால் நாம் இவைகளை பின்பற்றாமல், நம்மை வருத்திக்கொண்டு நோன்பு இருக்கிறோம். இறைவனின் விருப்பப்படி சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்காக நோன்பு இருப்போம். அடுத்தவர் மீது அக்கறை இல்லாமல் ஆண்டவரை வழிபடுவது வெற்று வழிபாடு என்பதையும், பகிராத உண்ணா நோன்பு பொருளற்றது என்பதையும் உணர்ந்துகொள்வோம். 

    ஏழை, எளியவர்கள் ஏற்றம் பெறுவதற்கும், ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட நிலைகளில் வாழும் மனிதர்களுக்கு விடுதலையை பெற்று தருவதற்காகவும் நம்மை நாம் முழுவதுமாய் அர்ப்பணிப்போம். இதுதான் அர்த்தமுள்ள நோன்பு என்பதை புரிந்து கொண்டு, இந்த தவக்காலத்தில் இறைவனோடு இணைந்து வாழ்வோம். உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.

    - சகோதரி சகாயம்
    சுயபலம், வைராக்கியம் ஆகியவைகளைச் சாராமல் தினமும் தேவனுடைய கிருபையின்மேல் சாய்ந்து ஜெபம், தியானம், தேவ ஐக்கியம் ஆகிய அனுபவங்கள் மூலம் அந்த மன வலிமையையும், பக்குவத்தையும் பெறவேண்டும்.
    “எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 3:5)

    தினமும் இரண்டு முறை ஒரு உயரமான மலையின்மேல் ஏறி இறங்கவேண்டும். ஒரு பெரிய சுமையை தலையில் வைத்துக்கொண்டு ஒரு ஆலயத்தை தினமும் 7 முறை சுற்றி வரவேண்டும். மாதந்தோறும் ஒரு பெருந்தொகையை கோவிலில் காணிக்கையாக கொடுக்கவேண்டும். இப்படிப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றினால்தான் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். இந்த விதமாக கிறிஸ்து நமக்கு சொல்லியிருந்தால் உண்மையாகவே சிரமப்பட்டாகிலும் இவைகளை நிறைவேற்றி தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற நாம் தீவிரமாக முன்வருவோம். ஆனால் கிறிஸ்து இந்தவிதமாக எதையும் நமக்கு சொல்லவில்லை.

    கிறிஸ்துவோ பிறரை நேசிக்கவேண்டும். பொருமையைக் கடைபிடிக்கவேண்டும். சாந்தமாக வாழவேண்டும் என்பது போன்ற கட்டளைகளையே நிறைவேற்ற நமக்கு சொன்னார். முன்னர் சொன்னவைகளை நம்முடைய உடல் வலிமையினால் எப்படியாவது செய்துவிடலாம். ஆனால், பின்னர் சொல்லப்பட்டவைகளை சுயபலம், உடல் பலம் வைராக்கியம் ஆகியவற்றால் நிறைவேற்ற முடியாது. அவைகளை நிறைவேற்ற உள்ளான நிலையில் மன வலிமையும், பக்குவமும் அவசியம். அநேகர் சரீர நிலையில் தங்களை ஒடுக்கி சிரமப்படுத்திக்கொள்வதையே அதிகபக்தியின் அடையாளமாக எண்ணுவதுண்டு.

    இந்த நாட்களில் மிஷினரி ஸ்தாபனங்களுக்காக வாரிவழங்குவோர் அநேகர் உண்டு. சொந்த செலவில் மணிக்கூண்டுகளையும், தேவாலயங்களையும் கட்டிக்கொடுப்போர் உண்டு. பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்து புகழ்பெற்ற போதகர்களை பேச வைக்கின்றவர்கள் உண்டு. ஆயினும், இவ்விதம் தாராளமாக செயல்படுகின்ற பலரிடம் ஒரு சில சாதாரண கிறிஸ்தவ குணங்களும், பண்புகளும் கூட இருப்பதில்லை. ஒரு நல்ல விசுவாச வாழ்க்கையும், ஜெப வாழ்க்கையும் அவர்களுக்கு கூடாத காரியம், ஆனால் இது கடவுளை பிரியப்படுத்தாத வாழ்க்கை. பரலோகத்தில் யார் எவ்வளவு கிறிஸ்தவத்திற்காக பாடுபட்டார்கள் என்பது அல்ல. யார் கிறிஸ்துவின் வழியில் நடக்க முயற்சித்தார்கள் என்பதே பார்க்கப்படும். ஆனால், கடவுள் நம்முடைய இதய நிலையில் நாம் சிரமத்தை ஏற்பதையும் கடவுளின் விருப்பத்திற்கு இசைந்து வாழும் கடினமான பாதையை தெரிந்துகொள்ளுவதையே விரும்புகின்றார்.

    அந்த மன வலிமையோ, பக்குவமோ, நம்மிடம் போதுமான அளவு இல்லை. என்ன செய்வது! நம்மால் அது இயலாது என்பதை உணர்ந்து கடவுளுடைய கிருபையால் அதனை தினமும் அடைய முன்வரவேண்டும். சுயபலம், வைராக்கியம் ஆகியவைகளைச் சாராமல் தினமும் தேவனுடைய கிருபையின்மேல் சாய்ந்து ஜெபம், தியானம், தேவ ஐக்கியம் ஆகிய அனுபவங்கள் மூலம் அந்த மன வலிமையையும், பக்குவத்தையும் பெறவேண்டும். அப்போது கடவுளுடைய கட்டளைகள் எளிதாக நிறைவேறும். ஆசீர்வாதங்களும் பெருகும்.

    “ இறைவனை பயத்துடன் வழிபடுகிறவனாக அல்ல.
    அன்புடன் அவர் வழியில் நடக்கிறவனாக இரு. அதுவே பக்தி.“

    -சாம்சன் பால் 
    ×