என் மலர்

    ஆன்மிகம்

    கிறிஸ்தவம் : இயேசு போதித்த வாழ்வியல்
    X

    கிறிஸ்தவம் : இயேசு போதித்த வாழ்வியல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டவர் இயேசுவின் போதனைகள் நம் வாழ்வில் செயலாக்கம் பெறும் வேளையில், நாம் கடவுளுக்கு உகந்தவர்கள் என்ற தகுதியைப் பெற முடியும்.
    இறைமகன் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், மனிதரிடம் கடவுள் எதிர்பார்க்கும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தந்தார். சாதாரண தத்துவ ஞானிகளின் போதனை களைப் போலன்றி, கடவுளுக்குரிய மேன்மையோடு இயேசுவின் போதனைகள் அமைந்திருந்தன. ‘இது என்ன?, இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே!’ (மாற்கு 1:27) என்று மக்கள் கூட்டம் அவரைப் பார்த்து வியந்தது.

    அன்பையும், நீதியையும், தனிமனித சுதந்திரத்தையும் வலியுறுத்திய இயேசு, கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது என்று போதித்தார். உணவு, உடை பற்றி கவலைப்படாமல் கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு வாழுமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

    ‘உயிர் வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, அவற்றுக்கு களஞ்சியமும் இல்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறிப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா!’ (லூக்கா12:22-28) என்ற இயேசுவின் வார்த்தைகள் அவரது இறைத்தன்மையை உணர்த்துகின்றன.

    ஒருமுறை இயேசுவிடம் வந்த ஒருவர், அவரது சகோதரருடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு கேட்டார். இயேசு அவரை நோக்கி, ‘என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது’ (லூக்கா 12:13-15) என்று பதிலளித்தார்.

    கடவுள் படைத்த உலகத்தை மனிதர் கூறுபோடுவதை இறைமகன் இயேசு விரும்பவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. ‘பெரிய களஞ்சியங்களைக் கட்டி தானியங்களை சேர்த்து வைத்த பணக்காரனின் வாழ்வு அவற்றை அனுபவிக்காமலே முடிந்ததாக’ (லூக்கா 12:16-21) இயேசு கூறிய உவமையும் உலகப் பற்றை நீக்குமாறு அழைப்பு விடுக்கிறது.

    உலக மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகவும், இறுதி கட்டளையாகவும் இருந்தது.

    ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவான் 13:34-35) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

    நமக்கு தீமை செய்தவர்களை நாம் மன்னித்தால் மட்டுமே, கடவுளின் மன்னிப்பை நாம் பெற முடியும் என போதித்த இயேசு, ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்’ (மத்தேயு 6:12) என்று கடவுளிடம் வேண்டுமாறு கற்றுத் தருகிறார்.

    ‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்’ (மத்தேயு 7:12) என்ற பொன்னான விதியை இயேசு நமக்கு வழங்கியுள்ளார். பிறரிடம் அன்பையும், நீதியையும், சுதந்திரத்தையும் எதிர்பார்க்கும் நாம், மற்றவர்களுக்கு அவற்றை வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவர் இயேசுவின் அறிவுரை.

    ‘கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்’ என்பதே கடவுளின் நீதி என இயேசு நமக்கு கற்றுத் தந்துள்ளார். நமது செயல்களைக் கொண்டே கடவுள் நமக்கு தீர்ப்பிடுவார் என்பதே மனிதராக வந்த இறைமகனின் எச்சரிக்கை.

    ‘உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்’ (மத்தேயு 20:26-27) என்று போதித்த இயேசு, சீடர்களின் பாதங்களை கழுவி (யோவான் 13:4-17) அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். சமூக, சமய அடக்குமுறைகளை எதிர்த்த காரணத்தால், இயேசுவுக்கு சிலுவை மரணமே பரிசாக கிடைத்தது.

    ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ (மத்தேயு 5:44) என்று அறிவுரை வழங்கிய இயேசு, தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்ததைக் காண்கிறோம். சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என வேண்டியதாக லூக்கா (23:34) நற்செய்தி கூறுகிறது.

    இயேசுவின் போதனைகளை கேட்ட மக்களுக்கு, கடவுளே நேரில் வந்து அறிவுரை வழங்குகிறார் என்ற உணர்வு ஏற்பட்டது. எனவேதான் அவர்கள், ‘கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்’ (லூக்கா 7:16) என்றனர். தாமே நல்ல ஆயர் (யோவான் 10:11) என்று குறிப்பிடும் இயேசு, அவருக்கு செவிகொடுத்து வாழும் ஆடுகளாக மாற நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர் இயேசுவின் போதனைகள் நம் வாழ்வில் செயலாக்கம் பெறும் வேளையில், நாம் கடவுளுக்கு உகந்தவர்கள் என்ற தகுதியைப் பெற முடியும்.

    டே.ஆக்னல் ஜோஸ்
    Next Story
    ×