என் மலர்
கிறித்தவம்
பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை.
இறைமகன் இயேசு மனிதராக இந்த உலகில் வாழ்ந்த காலத்தில், கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததாக பைபிள் கூறுகிறது. அவர் இன்றும் வாழும் கடவுளாக இருக்கிறார் என்பதற்கு மக்கள் மத்தியில் நிகழும் பல்வேறு அற்புதங்கள் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்து சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக, பைபிளில் சேர்க்கப்படாத சில பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால், இயேசுவின் இறையாட்சிப் பணியில் முதல் அற்புதம் கானா ஊர் திருமண வீட்டில் நடைபெற்றதாக பைபிள் சொல்கிறது. திருமண விருந்துக்கான திராட்சை ரசம் தீர்ந்துபோன நிலையில், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். “எனது நேரம் இன்னும் வரவில்லை” என இயேசு முதலில் கூறினாலும், அவரது தாய் மரியாவின் பரிந்துரையை ஏற்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக நற்செய்தியாளர் யோவான் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். இஸ்ரவேலில் தோன்றிய இறைவாக்கினர்கள், முன்பு அறிவித்த இறையாட்சியை செயல்படுத்த வந்த ‘இறைமகன்’ இயேசு தான் என்ற யூதர்களின் நம்பிக்கைக்கு, அவரது அற்புதங்கள் அனைத்தும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தமது வாழ்நாளில் மூன்று விதமான அற்புதங்களை இயேசுபிரான் செய்ததாக காண்கிறோம்.
முதலாவதாக, அவர் பலவித பிறவிக் குறைபாடுகள் கொண்டவர்களையும், காய்ச்சல், தொழுநோய், ரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களையும் குணப்படுத்தினார். தீய ஆவியின் தொல்லைகள் என்று கருதப்பட்ட மனநோய், வலிப்பு போன்றவற்றையும் சுகமாக்கினார்.
இயேசுவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, கடவுள் ஆட்சியில் நிகழவிருக்கும் அற்புதங்களாக முன்னுரைத்தவை இயேசுவின் காலத்தில் நிறைவேறின. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என்ற இறைவாக்கை இயேசு நிறைவு செய்தார்.
இரண்டாவதாக, இயேசு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்ததை (யோவான் 2:1-11) பைபிள் எடுத்துரைக்கிறது. இரவு முழுவதும் உழைத்து பலன் கிடைக்காத சீமோன் குழுவினருக்கு, வலைகள் கிழியும் அளவுக்கு மீன் கிடைக்கச் செய்ததை லூக்கா (5:1-11) நற்செய்தி கூறுகிறது.
இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக (மாற்கு 6:34-44) நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன. கலிலேய கடல் மீது இயேசு நடந்த அதிசயத்தையும் (மாற்கு 6:46-51), காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அற்புதத்தையும் (மத்தேயு 8:23-27) நற்செய்திகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

மூன்றாவதாக.. இயேசு கிறிஸ்து வாழ்வின் மீது, அதாவது உயிரின் மேல் அதிகாரம் கொண்டிருந்தார். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, இறந்துபோன மூன்று நபர்களை மீண்டும் உயிருடன் எழுப்பியதாக நற்செய்திகளில் காண்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர் ஒருவரின் இறந்துபோன மகளுக்கு, அவரது வீட்டிலேயே இயேசு உயிர் கொடுத்ததாக (மத்தேயு 9:23-26, மாற்கு 5:35-43) நற்செய்திகள் கூறுகின்றன. நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசு உயிர்பித்ததாக லூக்கா (7:11-17) நற்செய்தியாளர் கூறுகிறார். அதையும் தாண்டி இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களான பிறகு, தமது நண்பர் லாசரை இயேசு உயிரோடு எழுப்பியதாக யோவான் (11:17-44) நற்செய்தி எடுத்துரைக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு, சாவை வென்று தாமே உயிர்த்தெழுந்து தம் சீடர்களுக்கு காட்சிக்கொடுத்தது, அவரது இறைத்தன்மைக்கு சிறப்பான சான்றாக உள்ளது. “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக் கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” (யோவான் 10:18) என்று கூறிய இயேசு உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் தம் உயிரையே கையளித்தார். இருந்தாலும், இறந்த மூன்றாம் நாளில் அதை இறைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்ற அற்புதமே, அவர் மனிதராய் தோன்றிய கடவுள் என்பதை சீடர்கள் உறுதியுடன் நம்ப வழிவகுத்தது. பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்களின் நாயகரான இறைமகன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டால், நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும் என்பது உறுதி!
- டே.ஆக்னல் ஜோஸ்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மற்றும் பங்கு நூற்றாண்டு தொடக்க விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மற்றும் பங்கு நூற்றாண்டு தொடக்க விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
நாளை மாலை 5.45 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு முன்னாள் பங்குத்தந்தை அந்தோணி எம்.முத்து தலைமை தாங்குகிறார். நாஞ்சில் வழிகாட்டி மைய இயக்குனர் ஜோஸ் ராபின்சன் மறையுரையாற்றுகிறார்.
13-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது. இதற்கு முன்னாள் பங்குத்தந்தை இயேசு ரெத்தினம் தலைமை தாங்குகிறார். முன்னாள் இணை பங்குத்தந்தை சர்ஜின் ரூபஸ் மறையுரையாற்றுகிறார்.
14-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல் நடக்கிறது. இதற்கு தக்கலை அருட்பணி மரிய டேவிட் தலைமை தாங்குகிறார். முன்னாள் இணை பங்குத்தந்தை சுஜன்குமார் மறையுரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு முன்னாள் பங்குத்தந்தை மரியவின்சென்ட் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகத்தின் 100-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நடக்கிறது.
15-ந் தேதி திருப்பலி முளகுமூடு மறைவட்ட முதல்வர் ஹிலாரி தலைமையிலும், 16-ந் தேதி திருப்பலி முன்னாள் பங்குத்தந்தை சேவியர்புரூஸ் தலைமையிலும் நடக்கிறது.

17-ந் தேதி திருப்பலி அருட்பணி தீஸ்மாஸ் தலைமையில் நடக்கிறது. அருட்பணி எக்ரமென்ஸ் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.
18-ந் தேதி 7-ம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு முன்னாள் இணை பங்குத்தந்தை குணபால் தலைமை தாங்குகிறார். அருட்பணி அருளானந்த் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
19-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணி ஆன்றனி செலஸ்டின் ஜெயபாலன் தலைமை தாங்குகிறார். காலை 11 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு திருத்துவபுரம் முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
20-ந் தேதி 9-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு அருட்பணி சாலமன் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
21-ந் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை ஆல்வின் விஜய், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
ஒரு மனிதனின் பண்புகளில் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால், அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.
“மனுஷன் முகத்தைப் பார்ப்பான்...- 1 சாமுவேல் 16:7”
சிலருடைய முகத்தோற்றம் மிகுந்த மலர்ச்சியாகவும், புன்னகை பூக்கள் பூத்துக் குலுங்குவது போலவும் தோன்றும். அவர்கள் யாரிடமும் எப்போதும் எந்த ஒரு விஷயத்தையும், சிரித்து சிரித்துப் பேசுவார்கள். அதைப் பார்க்கும் போது அவர்கள் நம்முடைய இருதயத்தை ஈர்த்து விடுவார்கள். அவர்களின் முக பாவனைகள் யாவும் அன்பையும், கபடமற்ற பணிவையும், மிகுதியாய் பிரகாசிக்கச் செய்யும். ஆயினும் இவர்கள் யாவரும் அன்பில் மிகுந்தவர்களாகவும், கபடமற்ற புறாக்களாகவும் இருப்பார்கள் என்று நம்பி விட்டால் ஏமாற்றங்கள் ஏராளமாக வரும். அவர்களின் இயற்கையான அந்த தோற்றத்திற்கும், இருதயத்தின் தன்மைக்கும் தொடர்பே இல்லாமல்இருக்கும்.
அதே வேளையில் சிலரை பார்த்ததும் அவர்கள் கடும் கோபிகள் போலவும், பெருமை மிக்கவர்கள் போலவும், இரக்கமற்ற இருதயக்காரர்கள் போலவும் தோன்றுவார்கள். அவர்களின் முகத்தில் தேடித் தேடிப் பார்த்தாலும், ஒரு புன்னகையோ, அன்பின் தோற்றங்களையோ பார்க்க முடியாது. ஆயினும் இவர்களில் சிலர் 24 மணி நேர புன்னகை ராஜாக்களை விடவும், சிரித்து சிரித்தே சிந்தை கவருகிறவர்களை விடவும் நல்லவர்களாகவும், அன்பு மிக்கவர்களாகவும், தாழ்மையாளர்களாகவும் இருப்பதுண்டு.
அகத் தோற்றம் முகத்தோற்றத்தில் பிரதிபலிக்கும் என்பது உண்மை. ஆனால் முகத்தோற்றத்தை அகத்தோற்றத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ள இயலாது. மனிதனின் உண்மையான இருதய தோற்றத்தை முக பாவனைகளிலேயே பார்த்து உறுதி படுத்தி விடக்கூடாது. அவனுடைய செயல்கள், குணங்கள், கொள்கைகள், நடத்தைகள், பண்புகள் போன்றவை தான் அவன் உண்மையில் எப்படி இருக்கின்றான் என்பதை விளக்கும்.
எனவேதான் ஏசு கனிகளினால் மரம் இன்னதென்பதை முடிவு செய்யும் ஆலோசனையை நமக்கு கொடுத்தார். ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளில் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால், அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன். அநேகர் பிறருடைய முகத்தோற்றங்களாலும், வசீகரமான வார்த்தைகளாலும், எளிதாக வஞ்சிக்கப்பட்டு விடுகின்றனர். ஏனென்றால், அவர்களின் இருதயம் நல்ல பண்புகளை விட, நல்ல சுபாவங்களை வெளிப் புறத்தோற்றத்தையே மேன்மையாக எண்ணி விடுகிறது.
“அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாம். ஆனாலும்
முகத்தின் அழகை அகத்தின் அழகு என்று எண்ணாதே..”
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்’. எபே.3:20
‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்’. எபே.3:20
இந்த வசனத்தின்படி, நீங்கள் விரும்புவதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர் வதித்து உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம்முடைய ஆண்டவருடைய சித்தமாகும்.
வீட்டாரை ரட்சிக்கும் தேவன்
‘அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருடைய ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள், பவுல் சொல்லியவைகளை கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தை திறந் தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்’. அப்போஸ்தலர் 16:14,15
மேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசிக்கும் போது லீதியாள் என்னும் பெயருள்ள பெண் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போஸ்தலர் 16:15 சொல்லுகிறது, ‘அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ் நானம் பெற்றார்கள்’.
இதிலிருந்து நாம் அறிந்துக் கொள்கிறது என்ன? ஒரு குடும்பத்தில் ஆண்டவர் ஒரு நபரை சந்திக்கும்போது அந்த நபர் மூலமாக முழு குடும்பத்தையும் ரட்சிக்க தேவன் வல்லவராக இருக்கிறார்.
மேலும், பவுலும் சீலாவும் நடுராத்திரியில் ஜெபம் பண்ணி தேவனை துதித்து பாடினபோது சிறைச்சாலையின் அஸ்திவாரங்கள் அசைந்தது. உடனே கதவுகள் திறந்தன. எல்லாருடைய கட்டுகளும் கழன்றது. அதை அறிந்த சிறைச்சாலைக்காரன் வாளை உருவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தபோது பவுலுடைய வார்த்தையை கேட்டு ரட்சிப்புக்குக் தன்னை அர்ப்பணித்தான்.
‘இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான்’ அப்போஸ்தலர் 16:30. அதற்கு பவுல் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த அனைவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்’. அப்போஸ்தலர் 6:31,32
மேலும், அவ்வதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது ‘வீட்டார் அனைவரோடும் கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்’. (அப்.16:34) என காண்கிறோம்.
நம்முடைய ஆண்டவர் ஒரு வீட்டில் ஒருவரை ரட்சிப்பாரென்றால் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு முழுக்குடும்பத்தையும் ரட்சித்து எபேசியர் 3:20-ன் படி தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவார்.
நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தை அருளும் தேவன்
‘அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள், அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக் கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்’. II ராஜாக்கள் 4:7
நம்முடைய கர்த்தர் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டும் கொடுக்கிறவரல்ல, உலகப்பிரகாரமான ஐசு வரியத்தையும், செழிப்பையும் அருளுகிற தேவன் என்பதை மறந்து போகக்கூடாது.
உதாரணமாக மேலே குறிப்பிட்ட அதிகாரத்தில் ஆவியானவர் ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறார். ஒரு தீர்க்கதரிசி மரிக்கும்போது கடன்காரனாக மரித்தான். விதவையான அவருடைய மனைவி தன்னுடைய 2 பிள்ளைகளோடு தன்னுடைய பிரச்சினையிலிருந்து விடுதலையடைவதற்காக எலிசா தீர்க்கதரிசியை அணுகினாள்.
‘வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல்?’ என்று தீர்க்கதரிசி கேட்டபோது ‘ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் என் வீட்டில் ஒன்றும் இல்லை’ என்றாள் என II ராஜாக்கள் 4:2 கூறுகிறது.
ஆனால் நடந்தது என்னவெனில் வேறே பாத்திரம் இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு எல்லா பாத்திரங்களையும் கர்த்தர் எண்ணெய்யால் நிரப்பினார். மேலும், அந்த எண்ணெய்யை விற்று தன்னுடைய கடனை எல்லாம் அடைத்து, மீதமுள்ள எண்ணெய்யை வைத்து தானும் தன்னுடைய பிள்ளைகளும் ஜீவனம் பண்ணக் கூடிய அளவிற்கு நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தைக் கர்த்தர் கட்டளையிட்டார்.
அந்த விதவையோ கடனை அடைப்பதற்கு வழியைத் தேடி தேவ மனுஷனை அணுகினாள். கர்த்தரோ அவளுடைய கடனை மட்டுமல்ல, அவளும், அவளுடைய பிள்ளைகளும் வாழ்க்கை நடத்துவதற்கான வழியையும் திறந்து கொடுத்தார். அந்த விதவைக்கு அற்புதம் செய்த கர்த்தர் உங்களுக்கும் அற்புதத்தை செய்து நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தினால் நிச்சயம் நிரப்புவார்.
ஏனெனில் எபேசியர் 3:20-ன்படி நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் உங்களில் கிரியை செய்கிறவர்.
- ஜி.பி.எஸ்.ராபின்சன்.
நாம் உண்மையாய் ஆண்டவரை தேடினால் எல்லா வியாதியிலிருந்தும், ஆபத்துகளில் இருந்தும், எல்லா நெருக்கடிகளில் இருந்தும் நம்மை தப்புவித்து ஆசீர்வதிப்பார். ஆமென்.
‘அவன் உண்மையுள்ளவனாயிருந்த படியால் அவன்மேல் சுமந்த யாதொரு குற்றமும் குறையும் காணப்படவில்லை’ (தானி.6:4).
அரச குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர், தானியேல். சிறுவயதில் பகைவரால் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். ஆனால், ‘என்ன நேர்ந்தாலும் உயிருள்ளவரை கர்த்தரையே உண்மையாய் பின்பற்றுவேன்’ என்று உறுதிபூண்டவர். சிறை பிடித்து போகப்பட்ட இடத்தில் தரியுராஜா என்ற அரசனிடம் பிரதான மந்திரியாக தானியேல் இருந்தார்.
ஒரு நாள் தரியுராஜா, ‘என் ஜனங்கள் எனக்கு கீழ்படிகின்றார்களா?’ என்று சோதிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, ‘முப்பது நாள்வரை எந்த தேவனையாகிலும், யாதொரு மனிதர்களும் விண்ணப்பம் செய்து ஜெபம் செய்யக்கூடாது. மீறினால் அவன் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் போடப்படுவான்’, என்று ராஜா கட்டளை பிறப்பித்தார்.
ஆனால், ராஜாவின் உத்தரவை தானியேல் ஏற்கவில்லை. உண்மையாய் இறைவனிடத்தில் அன்புகூர்ந்து, முன்பு செய்து வந்தபடியே தன்னுடைய வீட்டு பால்கனியில் எருசலேம் தேவாலயத்தை நோக்கி மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு விண்ணப்ப ஜெபம் செய்து தேவனை பணிந்து கொண்டான்.
தேசாதிபதிகளும், பிரதானிகளும் தரியுராஜாவிடத்தில் சென்று, ‘தானியேல் ராஜாவை மதியாமல் தினமும் மூன்று வேளையும் ஜெபம் செய் கிறான்’ என்றார்கள். ராஜா கட்டளையிட தானியேலை சிங்கங்களின் கூண்டுக்குள் போட்டார்கள். ஒரு இரவு முழுவதும் தானியேல் சிங்கங் களின் கூண்டுக்குள் இருந்தான்.
தானியேல் சர்வ வல்லமையுள்ள தேவனை உண்மையாய் தேடினபடியால் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். மறுநாள் காலையில் தரியுராஜா சிங்கங்களின் கூண்டு அருகே வந்து தானியேலை நோக்கி, ‘ஜீவனுள்ள தேவனுடைய தாசனே நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங் களுக்கு தப்புவித்தார்’ என்றான். தானியேல் சிங்கங்களின் கூண்டில் இருந்து வெளியே வந்தான். அவன் உடலில் ஒரு சேதமும் காணப்படவில்லை. உண்மையாய் ஆண்டவரை தேடுகிறவர்களுக்கு எந்த ஆபத்தான சூழ்நிலைகள் வந்தாலும் ஒரு சேதமும் ஏற்படுவது இல்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
‘தேவனோ அவனுடனேகூட இருந்து எல்லா உபத்திரவங் களின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமூகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார். அந்த ராஜா அவனை எகிப்து தேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்’ (அப்.7:10)
யாக்கோபுக்கு பன்னிரெண்டு பிள்ளைகளில் யோசேப்பு உண்மையாக இறைவனை தேடினான். யாக்கோபு இறக்கின்ற வேளையில் எல்லா பிள்ளைகளையும் அழைத்து ஆசீர்வதித்தான். யாக்கோபு, யோசேப்பை எல்லாரையும்விட அதிகமாக ஆசீர்வதித்தான்.
யோசேப்பு உண்மையாய் தேவனை தேடினபோது பதினேழு வயதிலே தேவதரிசனத்தை கண்டு தன் எல்லா சகோதரரையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதை கண்டான். அவன் சகோதரர்கள் பொறாமையால் அவனை ஆழமான குழியிலே போட்டார்கள். பின்பு குழியில் இருந்து தூக்கி எடுத்து மீதியானியருக்கு விற்றனர். மீதியானியர்கள் யோசேப்பை எகிப்தில் பார்வோன் மன்னனுக்கு விற்றார்கள்.
யோசேப்பு அழகான தோற்றமும், கவர்ச்சியான முக அழகும் உடையவனாக இருந்தான். வீட்டு எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல் போனதால் சிறைச்சாலைக்கு சென்றான். ஆனால் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். சிறைச் சாலைத் தலைவனிடத்தில் யோசேப்புக்கு தயவு கிடைத்தது.
ஆண்டவர் பார்வோன் அரசருக்கு ஒரு தேவ தரிசனத்தை கொடுத்தார். அதன் அர்த்தத்தை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. யோசேப்பு சொல்லுவார் என்று கேள்விப்பட்டு சிறைச்சாலையில் இருந்து யோசேப்பை அழைத்து வந்தார்கள். பார்வோன் அரசன் தேவ தரிசனத்தை சொன்னபோது யோசேப்பு ‘தேவனே மங்களமான உத்தரவு தருவார்’ என்றான்.
தேவ தரிசனத்தின் அர்த்தம் என்ன வென்றால் ‘எகிப்து தேசமெங்கும் ஏழு வருடம் பரிபூரணமான விளைச்சல் உண்டாகும், எல்லா இடமும் ஆசீர்வாதமாக இருக்கும். பின்பு ஏழு வருடம் பஞ்சம் உண்டாகும். வருடந்தோறும் விளையும் தானியங்களை சேர்த்து வைத்து பஞ்சகாலத்தில் பயன்படுத்த வேண்டும்’ என்பதே.
பார்வோன் யோசேப்பை நோக்கி ‘தேவ ஆவியை பெற்ற இந்த மனுஷனைப் போல வேறு யாரும் தேசத்தில் இல்லை’ என்று தன் கையில் போட்டிருந்த முத்திரை மோதிரத்தை கழற்றி யோசேப்பின் கையில் போட்டான். தங்க நகைகளை அணிவித்து, விலை உயர்ந்த உடைகளை உடுத்தி எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான். யோசேப்பின் உத்தரவு தான் எகிப்து தேசம் முழுவதும் செயல்பட்டது. யோசேப்பு உண்மையாய் பரலோக தேவனை தேடினபோது தேவன் அவனை உயர்ந்த இடத்திலே வைத்தார்.
‘உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (சங்.145:18).
‘ஆபிரகாம் உண்மையாய் தேவனை தேடினான். அவன் செல்வ சீமானாயிருந்தான் (ஆதி.24:35). ‘ஈசாக்கு உண்மையாய் தேவனை தேடினான். அவன் நூறு மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டான்’ (ஆதி.26:12). ‘யாக்கோபு உண்மையாய் தேவனை தேடினான். அங்கே அவனை ஆசீர்வதித்தார்’. (ஆதி.32:29)
நாம் உண்மையாய் ஆண்டவரை தேடினால் எல்லா வியாதியிலிருந்தும், ஆபத்துகளில் இருந்தும், எல்லா நெருக்கடிகளில் இருந்தும் நம்மை தப்புவித்து ஆசீர்வதிப்பார். ஆமென்.
ஊ. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
நேர்மையாளர்களை எதுவும் அழித்து விட முடியாது. உண்மையும், நேர்மையும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை உணர வேண்டும்.
அக்காலத்தில், குறுநில மன்னனாக இருந்த ஏரோது என்பவன், இயேசு பெருமானைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டிருந்தான். அவன் தன் ஊழியர்களைப் பார்த்து, இப்படிக் கூறினான்:
“இவர் திருமுழுக்கு யோவான் தான். இறைந்து போன யோவானைக் கடவுள் உயிர் பெற்று எழச் செய்திருக்கிறார். இதனால்தான், இப்படிப்பட்ட வல்ல செயல்களை, இவர் செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறினான்.
ஏரோது என்ற அந்தச் சிற்றரசன், தன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளை வைத்திருந்தான். திருமுழுக்கு யோவான், அவனிடம், “நீ உன் சகோதரன் பிலிப்புவின் மனைவியை வைத்திருப்பது முறையல்ல” என்று கூறினார். இதனால் ஏரோது, யோவானைக் கொலை செய்ய எண்ணினான். ஆகவே அவரைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
மக்கள் கூட்டமோ, இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் இறைவாக்கினர் என்பதால், அவர்கள் விரும்பவில்லை. அவர் களுக்கு ஏரோது பயந்து கொண்டிருந்தான்.
ஏரோதின் பிறந்த நாளில், ஏரோதியாதியாளின் மகள், அவையினர் நடுவில் நடனம் ஆடி, ஏரோதை மகிழச் செய்தாள். அதனால், அவள் எதைக் கேட்டாலும் தருவதாக வாக் குறுதி அளித்திருந்தான். அவள் தன் தாயானவள் சொல்லிக் கொடுத்த படியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து, இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட ஏரோது அரசன் வருத்தமடைந்தான். ஆனாலும், தான் கொடுத்த வாக்குறுதிப்படி, அந்தத் தலையைக் கொடுக்கக் கட்டளையிட்டான். ஆளை அனுப்பிச் சிறையில் இருந்த, யோவானின் தலையை வெட்டச் செய்தான். அவரது தலையை ஒரு தட்டில் வைத்து கொண்டு வரச் செய்து, அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். யோவானுடைய சீடர் கள், அங்கு வந்து அவரது உடலைப் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர். பிறகு இந்த நிகழ்வை இயேசுவிடம் சென்று அறிவித்தனர்.
மத்தேயு எழுதிய இந்நற்செய்தியின் வாசகத்தை உற்றுக் கவனிப்போம். இறைவாக்கினர்கள், இறைவனுடைய வார்த்தைகளை, மக்களிடம் எடுத்து வைப்பதற்காகவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் இவ்வுலகிற்கு வந்தவர்கள். அந்த வழியில், இவ்வுலகிற்கு வந்தவர்தான், திருமுழுக்கு யோவான் என்பவர். அவருடைய போதனை, சாவுக்கும் அஞ்சாத போதனையாக இருந்தது என்பதற்கு, அவருடைய வாழ்க்கையே ஒரு சான்றாக அமைகிறது.
இவ்வுலகில் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், இறைவன் முன் சமம் தான். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைத் திருத்துவதுதான், இறைவாக்கினர் களின் கடமை என் பதை உணர்ந்ததால்தான், ஏரோது செய்கின்ற தவறைச் சுட்டிக் காட்டுகிறார். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நேர்மைக்குப்பங்கம் வரக்கூடாது என்பதில், திருமுழுக்கு யோவான் மிகவும் கவனமாக இருந்தார்.
அக்காலத்தில் இப்படிப்பட்ட செயல்கள், சர்வ சாதாரணம் என்றாலும், ஓர் அரசனே இப்படி நடந்து கொள்வது கூடாது என்பதை எடுத்துரைக் கிறார். பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டியவர்களே தவறு செய்தால், பிறரை எப்படி நல்வழிப் படுத்த முடியும் என்பதுதான் திருமுழுக்கு யோவானின் சிந்தனை.
ஏரோது அரசனை நோக்கி, ‘உன் சகோதரன் மனைவியை, நீ வைத்துக் கொள்வது முறையல்ல’ என்று கடிந்து கொள்கிறார். அதை ஏற்க மனமில்லாதவனாக அரசன் இருந்ததால், அவரைக் கொலை செய்ய எண்ணுகிறான். கொலையை உடனே செய்து விட முடியாததால், சிறையில் அடைத்து வைக்கிறான்.
இவன் எதிர்பாராமலேயே காம வெறியும், ஆசாபாசங்களும், அவனை ஆட்டிப் படைக்கிறது. ஏரோதியாள் உடந்தையாகிறாள். தன் ஆணைப்படியும், கொடுத்த வாக்கின்படியும் நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான், ஏரோது.
‘காமம், வெகுளி, மயக்கம், இவை மூன்றும்
நாமம் கெடக்கெடும் நோய்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளை வைத்து, அக்காலத்தை எண்ணிப் பார்க்கலாம். மேலே சொன்ன காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றும் மனிதர்களைப் பாவக்குழியில் தள்ளுகிறது. கொலைக்கு அஞ்சாத தன்மையை உருவாக்குகிறது. ஏரோதியாளின் பொருட்டு, பரிசுத்தமானவரின் தலையையே வெட்டுகிற அளவுக்குத்துணிகிறான், ஏரோது என்ற அக்கொடிய அரசன்.
மத்தேயுவின் நற்செய்தியை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். எப்பொழுதுமே இறைவாக்கை அறிக்கையிட்டு, மக்களை நல்வழிப்படுத்த நினைப்பவர்கள், எதற்கும் அஞ்சக் கூடாது. இவ்வுலகில் நிலைத்து வாழக்கூடியவர்கள் யாரும் கிடையாது. என்றாவது ஒருநாள், இவ்வுலகை விட்டு மறையத்தான் வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில், நற்செய்தியைக் கேட்டு நல்வழியில் நடந்தால் இவ்வுலகம் போற்றும். அதுமட்டுமல்ல, மறுவுலக வாழ்விலும் நற்கதி அடையலாம் என்பதே உண்மை என்பதை, இறைவாக்கினர் எடுத்துரைக்கின்றனர்.
நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், எவராக இருந்தாலும், ஏழை பணக்காரன் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரும் பதவியில் இருக்கிறார்கள் என்பதற்காகப் பயந்து விடக்கூடாது. நல்ல கருத்தை, நேர்மையான போதனையால் எடுத்துரைக்க வேண்டும்.
இருப்பது ஒரு உயிர்; அது போவதும் ஒருமுறை. நல்லதற்காகப் போகட்டுமே என்று எண்ணிட வேண்டும்.
திருமுழுக்கு யோவானின் துணிச்சலை, நாம் பின்பற்ற வேண்டும். ஓர் அரசனின் தவறைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு, அவரது துணிச்சல் இருந்திருக்கிறது.
அந்தத் துணிவால் தன் உயிரையும் கொடுக்கிறார். தலையானது வெட்டப்பட்ட பிறகு ஏரோது மன்னன் பயப்படுகிறான்.
வந்திருக்கும் இயேசு பிரான், தன்னால் தலை துண்டிக்கப்பட்ட திருமுழுக்கு யோவான் என்று எண்ணுகிறான்.
‘இறந்துபோன யோவானை கடவுள், உயிர் பெற்று எழச் செய்திருக்கிறார். இதனால்தான், இப்படிப்பட்ட வல்ல செயல்களை இவர் செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறுகிறான். அவரை விட வல்ல செயல்களைச் செய்யும் இயேசு பிரான் இவரே என்பதை உணரத் தோன்றவில்லை.
சுருக்கமாகச் சொன்னால், நேர்மையாளர்களை எதுவும் அழித்து விட முடியாது. உண்மையும், நேர்மையும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை உணர வேண்டும். அன்பும், பண்பும் ஒருவரை உயர்த்தும். ஆகவே திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக அமையட்டும்.
-செம்பை சேவியர்.
நாகர்கோவில் குருசடியில் உள்ள தூய அந்தோணியார் ஆலயத்தின் பங்கு குடும்ப விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் குருசடியில் உள்ள தூய அந்தோணியார் ஆலயத்தின் பங்கு குடும்ப விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு புதிய கொடிமரம் அர்ச்சிப்பு, திருக்கொடியேற்றம், கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இதில் கத்தோலிக்க சேவா சங்கம், கத்தோலிக்க சங்கம், புனித வின்சென்ட் தே பவுல் சங்கத்தினர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
இரவு 8 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டமும், அதனைதொடர்ந்து கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
3-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் தார்சியுஸ்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மேலராமன்புதூர் பங்குத்தந்தை ஆன்றனி சகாய ஆனந்த் தலைமயில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடைபெறுகிறது. இதில் வட்டக்கரை பங்குத்தந்தை அமல்ராஜ், அருட்பணியாளர் சகாய கிளாசின் ஆகியோர் மறையுரையாற்றுகின்றனர்.
7-ம் நாள்விழாவில் மாலை 5.45 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தஞ்சாவூர் மறைமாவட்ட அருட்பணியாளர் அந்தோணி பல்தசார் மறையுரையாற்றுகிறார்.
9-ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமைதாங்குகிறார். அருட்பணியாளர் எரோணிமுஸ் மரையுறையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் மறையுரை நிகழ்த்துகிறார்கள். இதைதொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.
14-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு ஓய்வுபெற்ற கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமைதாங்குகிறார்.
காலை 9 மணிக்கு அருட்பணியாளர் சேவியர் மூன்றாம் திருப்பலியும், அருட்பணியாளர் பெர்க்மான்ஸ் மறையுரையும் நிகழ்த்துகிறார்கள். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து, பொதுக்கூட்டமும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு மேய்ப்புப்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தையொட்டி நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு கீழகாட்டுவிளை அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார்.
இதைதொடர்ந்து, கோட்டார் சமூகசேவை இயக்குனர் அருட்பணியாளர் மரியசூசை மறையுரை நிகழ்த்துகிறார். இதில் பங்குமக்கள் மற்றும் பங்கு பேரவையினர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
2-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமைதாங்குகிறார். அருட்பணியாளர் ஜெகன் அஸ்வின் மறையுறையாற்றுகிறார்.
3-ம் நாள் விழாவான 7-ந்தேதி காலை 6.30 மணிக்கு குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த அன்பியங்களை சேர்ந்த இறைமக்கள், சபையினர், மறைகல்வி மன்றத்தினர் கலந்துகொண்டு சிறப்பு செய்கின்றனர்.
விழாவின் 9-ம் நாளான 13-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் தார்சியுஸ் ராஜ் தலைமைதாங்குகிறார். அருட்பணியாளர் இம்மானுவேல்ராஜ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து, அன்பின் விருந்து நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழாவில் காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருநாள் திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், நற்கருணை ஆசீரும், அதனை தொடர்ந்து திருக்கொடியிறக்கமும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, பங்கு அருட்பணியாளர் ஜாண் பெல்லார்மின், பங்கு அருட்பணிபேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துவருகின்றனர்.
ராமன்புதூர் கார்மல் நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது.
ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெற்றன.
10-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு மறையுரை ஆற்றினார்.
பிற்பகல் ஆலய வளாகத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு ஆலய வளாகத்தை சென்றடைந்தது. முன்னதாக தேர் ராமன்புதூர் சந்திப்பு வந்தபோது பரிசுத்த திருக்குடும்ப ஆலய அறக்கட்டளை ஊர் தலைவர் அந்தோணிமுத்து, செயலாளர் வாலன்டின் பிரிட்டோ, பொருளாளர் ராபி ரோசாரியோ ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்திருந்தனர்.
நாம் ஒவ்வொருவரும் நமக்கு அடுத்திருப்பவரில் இயேசுவை கண்டுகொள்கிற உள்ளம் பெற்றிடுவோம். நாம் மாறினால் நம் சமூகம் மாறும்.
தவக்காலம் என்பது அருளின் காலம், தர்மத்தின் காலம், அழைப்பின் காலம், மீட்பின் காலம், வேண்டுதலின் காலம், மனமாற்றத்தின் காலம், இவை அனைத்திற்கும் மேலாக இறை-மனித உறவை புதுப்பிக்கும் காலம்.
இத்தகைய தவக்காலத்தில், கொடிய குத்தகைதாரரின் மனநிலையை (மத் 21:33-43) இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. விவசாயிகளின் போராட்டம், மீனவர்களின் போராட்டம், நெடுவாசல் மக்களின் போராட்டம் என்றாகி விட்ட இன்றைய சூழலில், பிறர் நலனில் அக்கறை இல்லாத மனிதர்களுக்கு எதிரான போராட்டம் இது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.
கிறிஸ்து இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொரு மனிதரும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற கொடிய குத்தகைதாரர்களுக்கு எதிராக குரல் கொடுப்பார் என்பது உண்மை. அதேபோன்று இன்றும் நம் சொந்தங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற கொடிய மனிதர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து இயேசுவுக்கு நிகழ்ந்த அநீதி போன்று, இன்று எந்த ஒரு மனிதருக்கும் நிகழக்கூடாது. அதனால் தான் உண்மைக்கும், நீதிக்கும், உரிமைக்கும் குரல் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அன்பு செய்ய, இரக்கம் காட்ட, மன்னித்து வாழ நினைவூட்டும் இந்த தவக்காலம், பிறர் உழைப்பை உறிஞ்சும், பிறர் உரிமையை பறிக்கும், பிறர்நலம் பகைக்கும் கொடியவனாக இருந்திடாதே, கொடியவனை உருவாக்கிடாதே என்று நமக்கு அறிவுறுத்துகிறது.
எனவே இந்த தவக்காலத்தில் சிந்திப்போம். நாம் ஒவ்வொருவரும் நமக்கு அடுத்திருப்பவரில் இயேசுவை கண்டுகொள்கிற உள்ளம் பெற்றிடுவோம். நாம் மாறினால் நம் சமூகம் மாறும்.
அருட்பணி. ஜே.ஜெரால்டு ஸ்டீபன் செல்வா, உதவி பங்குத்தந்தை, திண்டுக்கல்.
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்தை மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வருகிற 7-ந்தேதி வரை நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வாக 6-ந்தேதி குழந்தை ஏசு திருஉருவ சிலையை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து மணலி புதுநகர் பகுதிகளில் வலம் வருதலும், 7-ந்தேதி காலை முதல் மாலை வரைஆசீர்வாத பெருவிழாவும் நடைபெறுகின்றது. அன்று மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகின்றது.
சிலுவையை தினமும் சுமந்தவர்களாக ஏசுவை பின்பற்றினால்தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசிர்வாதங்களை நாம் அடையமுடியும்.
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற கடவன் ( மத்தேயு 10:38 )
சிலுவை சுமத்தல் என்பது ஒரு முழுமையான அர்ப்பணிப்பிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் அனுபவமாகும். இந்த அனுபவமாகிய சிலுவையை தினமும் சுமந்தவர்களாக ஏசுவை பின்பற்றினால்தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசிர்வாதங்களை நாம் அடையமுடியும். ஏனென்றால் சிலுவை சுமந்து ஏசு உருவாக்கிய மேன்மையான ஆசீர்வாதங்களை நாமும் சிலுவையை சுமக்க முன்வருவதன் மூலமாகத்தான் அடைய முடியும். சிலுவைதான் ஆசீர்வாதத்தின் உண்மையான ஏணியாக உள்ளது. இந்த ஏணி வழியாக ஏறிச்செல்லும் சிரமத்தை ஏற்கவிரும்பாதோர் கடவுளுடைய ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.
அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக உபவாசிக்கின்றனர். நன்றாக ஆராதிக்கின்றனர். நன்றாக தேவவாக்குறுதிகளை நினைவு கூர்ந்து உரிமையோடு கடவுளிடம் கேட்கின்றனர். ஆயினும் அவர்களின் வாழ்க்கையில் தேவஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசித்தாலும், ஆராதித்தாலும், சிலுவையாகிய ஏணியை சரியான அனுதின அர்ப்பணிப்பின் பாதையில் நடக்க மனதை ஆயத்தப்படுத்தாவிடில் ஆசிர்வாதப்பாதை நமக்கு அடைக்கப்பட்டதாகவே இருக்கும்.
சிலர் எவ்வளவு ஆன்மிகமாக வாழ்ந்தாலும் தங்களை பழைய நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். ஜெபித்தாலும், துதித்தாலும், ஊழியம் செய்தாலும் தாங்களோ அந்தப் பழைய மனிதனாகவே உள்ளனர். ஜென்ம சுபாவ இயல்புகள் போதுமான அளவு சிலுவையில் அறையப்படவில்லை. சுயத்தின் சாயல் செயல்களிலும், குணங்களிலும் தெரிகிறது. அர்ப்பணிப்பு என்பதும், சிலுவை சுமத்தல் என்பதும் எவ்வளவு ஜெபிக்கிறீர்கள், எப்படி ஆராதிக்கின்றீர்கள், எவ்வளவு ஊழியம் செய்கின்றீர்கள் என்பவைகளால் கணக்கிடப் படத்தக்கவை அல்ல.
குணம், சுபாவம், இயல்பு ஆகியவை எந்த அளவிற்கு தேவசாயலாக மாறியிருக்கின்றது என்பதின் அடிப்படையிலேயே சிலுவை எந்த அளவு நம்முடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை அறிய முடியும்.
ஆம். சிலுவை உபதேசத்தை ஏற்காதவரை ஆசீர்வாதங்கள் தூரமாகவே இருக்கும். சிலுவையில் சுயமாக அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மிக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.
“இறைவனுடைய சோதனைகள் உன்னைப் பக்குவப்படுத்தும்
அந்தப் பக்குவமே அவரின் நன்மைகளுக்குத் தகுதிப்படுத்தும்”.
-சாம்சன் பால்






