என் மலர்
ஆன்மிகம்

அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தையொட்டி நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு கீழகாட்டுவிளை அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார்.
இதைதொடர்ந்து, கோட்டார் சமூகசேவை இயக்குனர் அருட்பணியாளர் மரியசூசை மறையுரை நிகழ்த்துகிறார். இதில் பங்குமக்கள் மற்றும் பங்கு பேரவையினர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
2-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமைதாங்குகிறார். அருட்பணியாளர் ஜெகன் அஸ்வின் மறையுறையாற்றுகிறார்.
3-ம் நாள் விழாவான 7-ந்தேதி காலை 6.30 மணிக்கு குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த அன்பியங்களை சேர்ந்த இறைமக்கள், சபையினர், மறைகல்வி மன்றத்தினர் கலந்துகொண்டு சிறப்பு செய்கின்றனர்.
விழாவின் 9-ம் நாளான 13-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் தார்சியுஸ் ராஜ் தலைமைதாங்குகிறார். அருட்பணியாளர் இம்மானுவேல்ராஜ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து, அன்பின் விருந்து நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழாவில் காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருநாள் திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், நற்கருணை ஆசீரும், அதனை தொடர்ந்து திருக்கொடியிறக்கமும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, பங்கு அருட்பணியாளர் ஜாண் பெல்லார்மின், பங்கு அருட்பணிபேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துவருகின்றனர்.
Next Story






