என் மலர்
ஆன்மிகம்

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது
முக்கியமான கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில், ஒன்றான நாங்குநேரி அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில், நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீராத நோயுற்றவர்கள் பலர் தங்கியிருந்து பிரார்த்தனை செய்து சுகம் பெற்று செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
திருவிழாவில் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் தினமும் ஜெபமாலை, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. நள்ளிரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான புனிதரின் தேர் பவனி நடக்கிறது. 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.
விழாவில் மறையுரை, புது நன்மை திருப்பலி, நற்கருணை பவனி, அசன விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்கு தந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா மெல்கிஸ், கணக்கர் மரிய சீமோன் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story






