search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பை-லக்னோ அணிகள் இன்று மோதல்
    X

    மும்பை-லக்னோ அணிகள் இன்று மோதல்

    • லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது.
    • இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பெருத்த தடுமாற்றத்தை சந்தித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை முதல் அணியாக பறிகொடுத்தது.

    அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் மாற்றத்தால் வீரர்கள் இடையே ஏற்பட்ட புகைச்சல் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (3 அரைசதம் உள்பட 416 ரன்), ரோகித் சர்மா (ஒருசதம் உள்பட 349 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 சதம், 3 அரைசதம் உள்பட 345 ரன்), இஷான் கிஷன் (306 ரன்), டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பியுஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. லக்னோ தனது கடைசி 3 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது பெருத்த சரிவாக அமைந்தது.

    வெற்றியுடன் விடைபெறுவது யார்?

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதத்துடன் 465 ரன்), நிகோலஸ் பூரன் (2 அரைசதத்துடன் 424 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1 சதம், 2 அரைசதத்துடன் 360 ரன்), குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் நவீன் உல்-ஹக், யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் இரு அணிகளும் வெற்றியுடன் விடைபெறுவதுடன், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்),நேஹல் வதேரா, டிம் டேவிட், பியுஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, நுவன் துஷாரா.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா, ஆயுஷ் பதோனி, அர்ஷத் கான் அல்லது மொசின் கான், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×