என் மலர்
சினிமா செய்திகள்
பட விழாவில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.
யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:-
‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல விஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது.
தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம்.
ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும். நான் குளிப்பதற்கு ஒரு அரை வாளி தண்ணீருக்காக அரை மணி நேரமாக வீட்டில் காத்து கொண்டு இருந்தேன்’.
இவ்வாறு அவர் கூறினார்.
காமெடியனாக இருந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தில், கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம்.
வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கும் போதும் சந்தானம் அனைவரையும் கலாய்த்து காமெடி செய்துவரும் நிலையில் கவுண்டமணி படத்தில் இணைந்ததால் யார் யாரை கலாய்ப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுட்டுப்பிடிக்க உத்தரவு படம் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கும் சுசீந்திரன், இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவிற்கு தங்க சங்கிலி பரிசாக அளித்திருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்க சங்கிலி பரிசாக அணிவித்து நன்றி தெரிவித்தார். பின்னர் அளித்த பேட்டியில் சுசீந்தரன் கூறியதாவது:-
‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்தை கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொட வேண்டும். அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘கென்னடி கிளப்’, ‘ஏஞ்சலினா’ இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. அதற்கு பின் ‘சாம்பியன்’ வெளியாகும்.
‘ஏஞ்சலினா’ இக்கால இளைஞர்களுக்கான திரில்லர் படமாக இருக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரித்விகா, சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
மெட்ராஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரித்விகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மிகவும் பிரபலமானார். தற்போது இவரது நடிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் உருவாகி வருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார் ரித்விகா. பல ரசிகர்கள் ரித்விகாவிற்கு வாழ்த்து கூறினார்கள்.

இதில் ரித்விகா உடல் நலத்திற்கு தண்ணீர் அதிகமாக குடியுங்கள் என்று கூறினார். இதற்கு ரசிகர் ஒருவர் என்ன தண்ணி என்று கேட்க, கோபமடைந்திருக்கிறார் ரித்விகா. மற்றொருவர் நீங்கள் நல்லாவே இல்லை என்று கூற, நீங்களும் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவித்தார்கள்.
நேற்று அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2017 - 18 உறுப்பினர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தில் முறைகேடாக நீக்கப்பட்டதாக 61 பேர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணைக்குப் பின்னரே இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் மாவட்ட பதிவாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சில நாட்களாக இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனாவிடம் ரசிகர்கள் தளபதி 63 படத்தின் அப்டேட் சொல்லுங்கள் என்று கேட்டு வந்தனர். அவரும் நேரம் வரும் பொழுது அப்டேட் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
#Thalapathy63 update today at 6:00pm Start waiting 😎😎😎 pic.twitter.com/lznC4vjG9g
— Archana Kalpathi (@archanakalpathi) June 18, 2019
இந்நிலையில் இன்று ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
96 படத்திற்குப் பிறகு சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ஓ பேபி படத்தின் மூலம் மீண்டும் டப்பிங் பேச ஆரம்பித்திருக்கிறார் பாடகி சின்மயி.
பாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ என்ற படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். இந்த நிலையில் ‘மீடூ’ வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கினர்.
இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். இனிமேல் என்னால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. நான் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித்து எனக்கு தகவல் வரவில்லை” என்றார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். ஆனாலும் டப்பிங் பேச யாரும் அவரை அழைக்கவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் டப்பிங் பேசியதாக டுவிட்டரில் சின்மயி தெரிவித்து உள்ளார். சமந்தா தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பில் சமந்தாவுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இதற்காக சமந்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இவரது பிரசாரம் சாதாரண மக்களை கவரும் வகையில் இருந்தது. உதய நிதியின் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக தி.மு.க. மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் கட்சியின் முக்கிய பதவியான இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் வெள்ளக் கோவில் சாமிநாதன் தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். இதை ஏற்றுக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உதயநிதி இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடிப்பில் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் முன்னோட்டம்.
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’. KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.
தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்ஷன் 100 (சண்டைப்பயிற்சி), ராம் ராகவ், ஏ ஆர் பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர், பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.
ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகர் கரண் ஓபராய் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகர் கரண் ஓபராய். இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் மீது 34 வயது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி வரை கற்பழித்ததாக போலீசில் கடந்த மே 4-ந் தேதி புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் கரண் ஓபராயை கைது செய்து அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு கீழ் கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து கரண் ஓபராய் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கற்பழிப்பு புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறி கரண் ஓபராய்க்கு கடந்த 7-ந்தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் ஒரு மாதத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையானார்.

இதற்கிடையே நடிகர் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் 2-வது முறையாக போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தான் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தன்னை தாக்கி கற்பழிப்பு புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டினர் என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக 4 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, அப்பெண்ணின் முன்னாள் வக்கீல் அலிகாஷிப்கான் கூறியதால் தாக்குதல் நடத்தினோம் என்று கூறினர். இதையடுத்து அலிகாஷிப்கான் போலீசில் ஆஜராகி, இச்சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தாக்குதலை அப்பெண்தான் திட்டமிட்டு நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இதனால் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் போலீசில் பொய்யான புகாரை கொடுத்து இருப்பதும் தவறான தகவல்களை அளித்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
படப்பிடிப்புகளில் நடந்த விபத்துக்களில் நாகசவுரியா, சந்தீப் கிஷன், சர்வானந்த் ஆகிய 3 கதாநாயகர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
தெலுங்கு படப்பிடிப்புகளில் நடந்த விபத்துக்களில் நாகசவுரியா, சந்தீப் கிஷன், சர்வானந்த் ஆகிய 3 கதாநாயகர்கள் காயம் அடைந்தனர். நாகசவுரியா தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தியா’ படத்தில் நடித்தவர். தற்போது ‘அஸ்வத்தம்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்குவேலியில் நடந்தது.
அங்கு சண்டை காட்சியில் நாகசவுரியா டூப் போடாமல் நடித்தார். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் அவரது இடது கால் மூட்டில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பை நிறுத்தி நாகசவுரியாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு மாதம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழில் யாருடா மகேஷ், நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தற்போது ‘நின்னு வேடனி நீடனு நினே’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு குன்னூரில் நடந்தது. சண்டை காட்சியில் கண்ணாடி துண்டுகள் அவரது முகத்தில் குத்தி ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபோல் எங்கேயும் எப்போது, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள சர்வானந்த் தாய்லாந்தில் நடந்த ‘96’ தெலுங்கு படப்பிடிப்பில் உயரத்தில் இருந்து குதித்தபோது காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா சென்னையில் நடந்த விழாவில் கூறியுள்ளார்.
நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசும்போது, ‘‘தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாற வேண்டுமென்றால் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும். அதேபோன்று தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தை தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் வர்த்தக சபை என மாற்றியே தீருவேன். நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒரு புல்லுருவியாக விஷால் இருக்கிறார். அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று பேசினார்.

நிகழ்ச்சியில் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஐசரி கணேஷ் தனது சொந்த செலவில் இருந்து 26 தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.






