என் மலர்
சினிமா செய்திகள்
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்கள்.

தற்போது அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பல படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் பட நடிகை அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மெக்ரின் பிர்சாடா. அதன்பின் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்தில் நடித்திருந்தார்.
தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மெக்ரின் இணைந்துள்ளார். எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த அந்த படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள் நடித்திருந்தனர்.

தற்போது இவர் இயக்கும் இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தந்தையாக தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்தோடு சினேகா ஜோடிசேர்ந்து நடிக்கிறார்.
மகன் கதாபாத்திரத்திற்கு யார் ஜோடியாக நடிப்பது என்பதை படக்குழு அறிவிக்காத நிலையில் தற்போது மெக்ரின் பிர்சாடா நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சன், தற்போது நடித்து வரும் ‘சேரே’ படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேரே’ என்ற இந்தி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் தற்போது நடித்து வருகிறார். ‘சேரே’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் கடைசி காட்சி ஜூன் 16-ந்தேதி படமாக்கப்பட்டது. இந்நிலையில் ரசூல் பூக்குட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அமிதாப் பச்சன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள், இந்திய சினிமாவில் மற்றொரு வரலாற்றை பதிவு செய்துள்ளார். ‘சேரே’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அவர் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்தார், ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டினர்.

டியர் சார், சந்தேகமே இல்லாமல் நீங்கள் உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர்’’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘கள்வனின் காதலி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் தமிழில் உருவாகும் ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துவருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனுடன் எஸ்ஜே சூர்யாவும் நடித்துவருகிறார்.
சமூக ஆர்வலர் மிருதுளா தேவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வில்லன் நடிகர் விநாயகன் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர் விநாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடித்து திரைக்கு வந்த ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவிக்கு விநாயகன் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதுகுறித்து மிருதுளா தேவி கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக விநாயகனை செல்போனில் அழைத்தேன். அப்போது ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை மட்டுமின்றி எனது தாயும் அவர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று பாலியல் ரீதியாக வற்புறுத்தினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்றார்.

இதுகுறித்து கல்பட்டா போலீசிலும் விநாயகன் மீது புகார் அளித்தார். இந்த புகாரில் விநாயகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மிருதுளா, விநாயகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விநாயகன் பாலியல் பேச்சை மிருதுளா செல்போனில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த செல்போன் ஆதாரத்தையும் போலீசார் ஆய்வு செய்தார்கள். இதனால் விநாயகன் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன் ஜாமீன் பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் பலர் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது விஷால் பற்றி பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
விஷால் பற்றி ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:-
விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று எனக்கு தெரியும். இதை நிரூபிக்கவும் முடியும். இல்லை என்று விஷாலால் நிரூபிக்க முடியுமா? விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறார்.
அவருக்கு ஓட்டு அளிப்பதற்கு முன்னர் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். விஷால் மிகப்பெரிய ஏமாற்றுவாதி. அவருக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபிக்கட்டும்.

என் அம்மாவின் மீதும், எனது தொழிலின் மீதும் சத்தியமிட்டு கூறுகிறேன். நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னைக் கொன்றாலும் சரி, அப்போதும் நான் சொல்வேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர்தான்.
விஷாலின் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் எந்த பெண்ணும் அவருடன் அனுசரித்து செல்ல வேண்டும். இதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன். இதுபோன்ற விஷயங்களுக்காகவே ஒரு குரூப்பை விஷால் வைத்துள்ளதும் எனக்குத் தெரியும்.
அவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியும். இனியும் உங்கள் கோர முகத்தை நீங்கள் மறைத்து எல்லோரையும் ஏமாற்ற முடியாது. விஷாலுக்கு ஓட்டு போடாதீர்கள்.
இவ்வாறு ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
கீ படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொரில்லா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
ஜீவா நடிப்பில் கடந்த மாதம் ‘கீ’ படம் வெளியானது. தற்போது கொரில்லா, ஜிப்ஸி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கொரில்லா படம் வருகிற 21-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். இதே தேதியில் தனுசின் பக்கிரி, விஜய் சேதுபதியின் சிந்துபாத் மற்றும் தும்பா, மோசடி ஆகிய படங்களும் வெளியாகிறது.
இந்த நிலையில் சில பிரச்சினைகளால் கொரில்லா படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. படத்தின் ரிலீசை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனை ஜீவா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

கொரில்லா படத்தில் ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு, சதீஷ், ராமதாஸ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தில் சிம்பன்ஸி குரங்கு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. டான் சாண்டி இயக்கி உள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நடிகர் கதிர், காமெடி நடிகர் சூரியுடன் இணைந்து சர்பத் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர் தற்போது விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘சர்பத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' படத்தை பிரபாகரன் இயக்கி வருகிறார்.
இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள்.

நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பிரபாகரன். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
ஜேசிஎஸ் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், விஜூ, பல்லவி டோரா நடிப்பில் ஜெகதீசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மோசடி படத்தின் முன்னோட்டம்.
ஜேசிஎஸ் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மோசடி. இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ஆர்.மணிகண்டன், இசை - ஷாஜகான், பாடல்கள் – மணிஅமுதவன், கே.ஜெகதீசன், எடிட்டிங் - எஸ்.எம்.வி.சுப்பு, கோபி ரா நாத், நடனம் - விமல், பாலா, தயாரிப்பு - ஜேசிஎஸ் மூவீஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - கே.ஜெகதீசன்.
இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன் என்கிறார் இயக்குனர் கே.ஜெகதீசன்.
சகாப்தம், மதுரவீரன் படத்தை தொடர்ந்து, சண்முக பாண்டியன் அடுத்ததாக தனது தந்தை வழியை பின்பற்றி புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
சகாப்தம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். இப்படத்தை தொடர்ந்து மதுர வீரன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த முறை, அவர் தனது தந்தை மிக வெற்றிகரமாக இருக்கும் ஒரு மண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் 'புரொடக்ஷன் நம்பர் 1' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம், இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
போலீஸ் திரைப்படங்கள் என்றாலே எப்பொழுதும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் படங்களாக தான் அமைந்திருக்கின்றன. ஆனால் பூபாலன் வேறு விதமான ஒரு கதையை சொல்ல இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ண மயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை" என்றார்.

இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நாயகனின் தாயாக நடிக்கிறார். அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
அருண்ராஜ் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு, முரளி கிரிஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிட இருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பற்றியும், அவரது உடல் எடையை பற்றியும் கருத்து தெரிவித்து வம்புக்கு இழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மீதும் புகார் கூறினார் ஸ்ரீரெட்டி. இவர் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சிலரை பற்றி பதிவு செய்து வருவார்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி விமர்சித்துள்ளார். அதில், நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.
உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநதி படம் இயக்குனரால்தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
தனி ஒருவன், வேலைக்காரன் படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் மோகன் ராஜா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டும் இயக்கி வந்த மோகன் ராஜா தனி ஒருவன் மூலம் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.
தற்போது மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது. நடிகர் விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாகவும் மோகன் ராஜா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், விஜய்யுடன் இணைய வேண்டிய படம் தாமதமானதற்கான காரணம் குறித்து மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவருக்கு தனி ஒருவனும், வேலைக்காரனும் மிகவும் பிடித்திருந்தது.
என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான நபர். அவரது நட்பு எனக்கு மிகவும் முக்கியம். ஆனால், தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தை தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களின் பொறுமைக்கு ஏற்ப நிச்சயம் நல்ல படமாகக் கொடுப்பேன்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோலிவுட், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையான ராதிகா ஆப்தே, இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை என்று கூறியிருக்கிறார்.
கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ’நான் நடித்திருக்கும் தி வெட்டிங் கெஸ்ட் படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.

இதை அடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்களை படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக உள்ளது.
இன்று வரை வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்’. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.






