என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் ஒரு தமிழ் படத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    இசையமைப்பாளர் இளையராஜா லவ் அண்ட் லவ் ஒன்லி என்ற ஆஸ்திரேலிய படத்துக்கு ஏற்கனவே இசையமைத்து உள்ளார். இந்நிலையில் ஒரு தமிழ் படத்துக்காக ஆங்கில பாடலுக்கு இசையமைத்து உள்ளார்.

    முன் பதிவு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கே.எம்.துரைபாண்டியன் இயக்குகிறார். டைரக்டர் கவுதமனின் மகன் தமிழ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கிராமத்துக்கு செல்லும் கதாநாயகன், கதாநாயகி அங்கு இருக்கும் சிறுவர்களுடன் இணைந்து பாடுவது போல் இந்த ஆங்கில பாடல் அமைக்கப்பட்டுள்ளது.



    இப்படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால் செய்கிறார். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டான 2.0 திரைப்படம் சீனாவில் வெளியாக இருப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    ரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இது முதன்முறையாகும். கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியான 2.0 திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    சீன மொழியில் ஒரே நேரத்தில் 50ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதால் அங்கும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனாவில் வெளியிட இருந்த நிறுவனம் தற்போது பின்வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    சமீபத்தில் சீன மொழியில் வெளியான பேட்மேன் திரைப்படம், அங்கு எதிர்பார்த்த வசூலை பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும்.

    மேலும், ‘2.0’ வெளியாகும் சமயத்தில் தி லயன் கிங் படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், 2.0 வெளியீட்டை விநியோக நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் ‘சைரா’ படத்தின் கதைக்கரு. 

    இந்த படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகிறது. நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, அனுஷ்கா, ஜெகபதிபாபு, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    200-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகர்களும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. கடைசி நாள் படப்பிடிப்பின்போது அனுஷ்காவுக்கு காயம் ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக இதை காட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.
    ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஜோதிகா, அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார்.
    ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ராட்சசி’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா பேசும்போது, ‘ராட்சசி பட இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவராக இருக்கிறார் என்று தெரியவில்லை. 

    ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியாக காண்பிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் பணிபுரியும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. இந்தப் படத்தின் நாயகன் ஷான் ரோல்டன். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் பாடல்கள் கேட்டேன். கேட்டவுடனே பிடித்திருந்தது. 



    ட்விட்டரில் சிலர் பெண் சமுத்திரக்கனி, சாட்டை படம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்தப் படத்தில் அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், படம் அப்படியில்லை. 100 படங்கள் இதே போன்று வந்தாலும் கூட, இது சமூகத்துக்கு தேவை தான். பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படம் மட்டும் ஏன் பள்ளிக்கூடம், சாட்டை மாதிரி இருக்கிறது என சொல்வது ஏன் என தெரியவில்லை’ என்றார்.


    தமிழ், தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது தி லயன் கிங் படத்தின் மூலம் சிங்கத்திற்கு குரல் கொடுக்க இருக்கிறார்.
    2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. 

    அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது. லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அருமையான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா. வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார். 



    "லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”என மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்.

    டிஸ்னியின் தி லயன் கிங் வரும் ஜூலை 19 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
    மறைந்த நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கிரேசி மோகன் நடத்தி வந்த நாடகத்தை கமல் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேசி மோகன் கடந்த 10-ந்தேதி காலமானார்.

    சென்னை நகர சபாக்களின் கூட்டமைப்பும் தமிழ்நாடு நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து கிரேசி மோகனுக்கான நினைவேந்தல் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் கிரேசி மோகனுடன் திரைத்துறை, நாடகத்துறையில் பணிபுரிந்தவர்கள் கலந்துகொண்டு அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    கிரேசி மோகனின் தம்பி மாது பாலாஜி பேசும்போது, ‘அவன் இறந்து ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கும். கமல் சார் கால் பண்ணினார். ‘இனி அடுத்து என்ன பண்ணப்போறீங்க?’ன்னு கேட்டார். அதான் தெரியல சார், என்று சொன்னேன்.



    உடனே அவர், அப்படியெல்லாம் விடக்கூடாது. கிரேசி கிரியே‌ஷன்ஸ் தொடர்ந்து மோகனோட நாடகத்தையெல்லாம் போடணும். இதுமட்டுமல்லாம அவர் எழுதி இன்னும் நாடகமாக்கப்படாமல் இருக்குறதையும் உலகத்துக்கு எடுத்துட்டுப் போகணும். உடனே சபா புக்பண்ணுங்க. அவரோட கிரேசி ப்ரிமியர் லீக்கோட 100வது நாள் ஷோவை நானும் மவுலி சாரும் நடத்திக் கொடுக்குறோம்.

    இனிமேல் கிரேசி மோகன் இருந்த இடத்துல உங்களுக்கு நான் இருப்பேன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்தார் என கண்களில் நீர் வழிய கூறினார்.
    வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீவி’ படத்தின் முன்னோட்டம்.
    'ஜீவி' படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. 

    இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, "ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்" என்றார்.



    வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல். (படத்தொகுப்பு), வைரபாலன் (கலை) மற்றும் ஐ.பி.கார்த்திகேயன் (லைன் புரொடுயூசர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணிபுரிய, பாபு தமிழ் கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.
    வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
    தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி...’ என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருக்கிறார்.



    ஜி.வி.பிரகாஷின் ஜெயில் படத்திலும் தனுஷ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், அனைவரையும் திருப்திபடுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
    தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-



    சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குகின்றனர். அவர்களுக்கு இதுதான் வேலையே... எனது பெற்றோர், நண்பர்கள் கருத்தை மட்டும்தான் நான் மதிப்பேன். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்‌ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் தர்‌ஷன் பல வேலைகள் பார்க்கும் துடிதுடிப்பான இளைஞர். கவனக்குறைவால் பெட்ரோல் பங்க் வேலை பறிபோகிறது. இவரது நண்பர் தீனாவுக்கு காட்டில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் கிடைக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் தர்‌ஷன் பணத்துக்காக தீனாவுடன் பெயிண்ட் அடிக்க காட்டுக்குள் செல்கிறார். 

    இன்னொரு பக்கம் நாயகி கீர்த்தி காட்டில் வனவிலங்குகளை படம் பிடிக்க ஆவலுடன் வருகிறார். இதற்கிடையே கேரளாவில் ஒரு காட்டில் இருந்து தும்பா என்ற புலி தப்பித்து தமிழ்நாடு காட்டுக்குள் வருகிறது. அதை சட்டவிரோதமாக பிடித்து விற்க வன அதிகாரி திட்டமிடுகிறார். 



    காட்டுக்குள் தர்ஷனுக்கு கீர்த்தியுடன் பழக்கம் ஏற்படுகிறது. கீர்த்தியின் வேண்டுகோளுக்காக அந்த புலியை தேடி தர்‌ஷனும் தீனாவும் செல்கிறார்கள். இறுதியில் கீர்த்தி அந்த புலியை படம் பிடித்தாரா? வன அதிகாரி அந்த புலியை சட்ட விரோதமாக விற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தர்‌ஷனுக்கு இது இரண்டாவது படம். முடிந்தவரை நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனை. முகத்தில் குழந்தைத்தனம் நிறைய தெரிகிறது. இவற்றை மாற்றிக்கொண்டால் கதாநாயகனாக ஒரு சுற்று வரலாம்.



    தீனா படம் முழுக்க வருகிறார். சில இடங்களில் மட்டும் அவரது காமெடிக்கு சிரிப்பு வருகிறது. கீர்த்திக்கு இது அறிமுக படம். படம் முழுக்க டவுசரிலேயே வருகிறார். அவருக்கு கவர்ச்சி செட் ஆகவில்லை. தர்‌ஷன், தீனாவை திட்டும் இடங்களிலும் புலிக்குட்டியை பொத்தி காப்பாற்றும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார். ஜெயம் ரவி ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போகிறார்.

    நரேன் இளனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். காட்டின் அழகையும் குளுமையையும் அழகாக படம் பிடித்துள்ளது. கதை, திரைக்கதையில் புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும் நரேனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என 3 இசையமைப்பாளர்கள். பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.



    வனவிலங்குகளை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம். சுவாரசியமான திரைக்கதை வசனம் அமைத்து இருந்தால் குழந்தைகள், குடும்பங்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு படமாக இருந்து இருக்கும். இருந்தாலும் விசுவலாக படம் நம்மை கவர்கிறது. புலி, குரங்கு, யானை என்று கிராபிக்ஸ் மூலம் விலங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். புலி வரும் காட்சிகளில் நம்பகத்தன்மை இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தும்பா’ விஸ்வல் ட்ரீட். 
    தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ஸ்டைலை அவரது பேரன் வேத் பின்பற்றி வருவதாக மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.
    ரஜினியின் மகளான சௌந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் ரஜினியுடன் சூட்டிங் ஸ்பாட்டில் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

    தற்போது ரஜினி ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை போன்று தன் மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் தாத்தா போலவே பேரன் என்று இந்த புகைப்படத்தை குறிப்பிட்டிருக்கிறார் சௌந்தர்யா. 



    ரஜினி தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    அட்லி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் பிகில் படத்தில் பிரபல நடிகர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
    அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

    நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்னு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.



    தற்போதைய இப்படத்தில் இடம்பெறும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விஜய்க்கு தந்தையாக வருகிறார் என்கிறார்கள். விஜய்யுடன் சத்யராஜ் நண்பன், தலைவா, மெர்சல் படங்களுக்கு பின்னர் இணையும் படம் இது.
    ×