என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுவாதி கொலை வழக்கு அடிப்படையில் உருவான ‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
    சென்னை:

    விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவி தேவன் தயாரிப்பில் புது முகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நுங்கம்பாக்கம் திரைப்படத்தைப் பார்த்தார். பிறகு அங்கு இருந்த நிருபர்களிடம் பேசியதாவது:-

    ‘இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிற ஒரு கலை படைப்பாகும். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

    சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த திரைப்படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர அனைத்து அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது.

    ஊர்பெயர்கள், நபர் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தோடு மாறுபடாமல் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் காவல் துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்களும் என்னை வந்து சந்தித்தார்கள்.

    இந்த படம் தயாரிக்கத் தொடங்கிய போதே ராம் குமார் அவர்களின் தந்தை மற்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் ஆகியோர் என்னிடத்தில் வந்து இது குறித்து கலந்துரையாடல் செய்தனர்.

    இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு, வெளிவந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை பின்னியிருக்கிறார் என்றாலும் கூட, மாற்றுக் கருத்துக்களும் வலுவாக இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    குறிப்பாக ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். அந்த கொலையை கண்டித்தோம். சுவாதியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். அப்போது தான் உண்மை வெளிவரும் என்று கூறினோம்.

    இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது. வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    திருமாவளவன்


    ராம்குமாருக்கு எதிரான கருத்து, ராம்குமாருக்கு ஆதரவான கருத்து என இரண்டு தரப்பு கருத்துகளையும் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு விவாதமாக, நீண்ட உரையாடலாக பதிவு செய்திருக்கிறார். அதனால், எந்த சிக்கலும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இருக்காது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் போக்கு அமைகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன். சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

    அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்று மில்லாமல் செய்து விட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியது தான் என்பது என்னுடைய நிலைப்பாடு. என்னுடைய கருத்து. விடுதலை சிறுத்தைகளின் கருத்து.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    அமலா பால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆடை’ படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
    அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆடை. இந்த படத்தில் சுமார் ஒரு மணி நேரம் அமலாபால் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கி இருக்கும் இந்த படம் ரிலீசுக்கு முன்னர் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ரிலீசாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு படம் கடந்த 19-ந் தேதி இரவு தான் ரிலீசானது.

    இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆடை படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என்பது போல் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஒரு டுவிட்டை பதிவிட்டுள்ளார்.

    பார்த்திபனின் டுவிட்டர் பதிவு


    அதில், ஆடை படம் தான் 15 வருடங்களுக்கு முன்பு நடித்து, இயக்கிய 'குடைக்குள் மழை' என்ற படத்தின் காப்பி என்பது போல் அவர் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் வெளியானபோது இந்த படம் தான் நடித்த 'உள்ளே வெளியே' படத்தின் காப்பி என்று பார்த்திபன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    அமலாபால் நடித்துள்ள ஆடை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சம் கொடுத்து அவர் உதவி இருக்கிறார்.
    அமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படம் திரைக்கு வந்தபோது பண பிரச்சினையால் சிக்கல் ஏற்பட்டது. காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    பின்னர் அமலாபால் பண உதவி செய்து படத்தை திரைக்கு கொண்டுவர உதவி உள்ளார். இதற்காக அவருக்கு தயாரிப்பாளர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியதாவது:-

    “ஆடை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதும் அமலாபால் வடபழனியில் உள்ள லேப்புக்கே வந்துவிட்டார். படம் வெளியாகவில்லை என்றதும் அழுதார். பலருடையை எதிர்ப்பை சம்பாதித்து கஷ்டப்பட்டு நடித்தேன். சம்பளம் கூட முழுதாக கிடைக்கவில்லை. இப்போது படம் வெளியாகவில்லை என்பது மேலும் வேதனை அளிக்கிறது என்றார்.

    பின்னர் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை வழங்கினார். சம்பளத்திலும் ஒரு பகுதியை அவர் வாங்கவில்லை. படம் வெளியானபிறகுதான் அங்கிருந்து போனார்.

    அமலாபால்

    தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படி எந்த நடிகையும் தயாரிப்பாளருக்கு உதவி செய்ததது இல்லை.

    பேச்சுவார்த்தை நடந்தபோது நானும் சிவா, அருண்பாண்டியன் ஆகியோரும் அங்கு இருந்தோம். ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் திரைக்கு வருவதற்கும் ரூ.32 லட்சம் கொடுத்து உதவினார். அதுபோல் அரவிந்தசாமியும் உதவினார். உதவி செய்த அமலாபாலுக்கு நன்றி சொல்வது திரையுலகினரின் கடமை.” இவ்வாறு கே.ராஜன் கூறினார்.
    பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மேடையில் நடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
    பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் நாயுடு மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்தார்.

    ஆனால் அதை அறியாத ரசிகர்கள் நாடகத்தில் இதுவும் ஒருகாட்சி என்று அவர் துடிதுடித்து விழுந்து உயிரை விட்டதையும் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதேயான மஞ்சுநாத் நாயுடு, துபாயில் மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

    மஞ்சுநாத் நாயுடு

    வழக்கமாக மேடையில் தோன்றினாலே ரசிகர்களை சிரிக்க வைக்கக் கூடிய இந்த காமெடி நடிகர் தற்போது அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்.
    தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நடிகரை அஜித்துடன் சில படங்களில் நடித்த நடிகை திருமணம் செய்துள்ளார்.
    அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் பூஜா பத்ரா. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா பத்ராவுக்கு தற்போது 42 வயது ஆகிறது. பூஜா பத்ராவுக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடந்தது.

    அதன்பிறகு அமெரிக்காவிலேயே தங்கி குடும்பம் நடத்தினார். 2010-ல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு இந்தியா திரும்பிவிட்டார். இந்த நிலையில் இந்தி நடிகர் நவாப் ஷாவுக்கும், பூஜா பத்ரா வுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். பூஜா பத்ராவும், நவாப் ஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

    பூஜா பத்ரா, நவாப் ஷா


    இருவரும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் முதல் முறையாக சந்தித்தனர். புதுடெல்லியில் கடந்த 4-ந்தேதி குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் திருமணம் ஆர்ய சமாஜ் முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களையும் தகவலையும் தற்போதுதான் இருவரும் வெளியிட்டுள்ளனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.
    புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று காப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
    சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த ‘காப்பான்’ படம் நிச்சயம் வெற்றி பெறும். சூர்யா விடாமுயற்சியால் முன்னேறி இருக்கிறார். ‘நேருக்கு நேர்’ படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்படி இல்லை. அதன்பிறகு பாலாவின் ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் சிறந்த நடிகனாக தன்னை செதுக்கி உயர்ந்த இடத்துக்கு வந்தார்.

    ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘அயன்’ என்று பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவகுமார் வளர்த்து இருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள்.

    நடிகர் சூர்யா


    சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. ‘ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்’ என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலே மோடி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார்.

    எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். இந்த படத்தில் ஆர்யாவும் நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ படத்தில் அகோரியாக அவர் நடித்ததை பார்த்து வியந்திருக்கிறேன்.

    நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். எதிரே வந்த அகோரி ஒருவர் என்னை பார்த்து, ‘ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா... அது கிடைக்கும்’, என்று கூறிவிட்டு சென்றார். அதுபோல ஒரு ஆசிரமத்துக்கு சென்றபோது ஒரு பெண், ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு எனக்கு ருத்ராட்ச மாலையை கொடுத்தார். இதுதான் அகோரிகளின் மகத்துவம்.

    கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலை படித்தேன். சிறப்பாக இருந்தது. அனைவரும் அதனை படிக்கவேண்டும்.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

    விழாவில் நடிகர்கள் சிவ குமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் உள்பட கலந்துகொண்டனர்.
    தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
    தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர்கள் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர்.

    தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின. இதனால் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து (ஜூலை 21-ந்தேதி) இன்று தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இயக்குனர்கள் சங்க தேர்தல்

    அதன்படி இன்று காலை முதல் மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான 1503 வாக்குகளில் ஆர்.கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
    சுப்ரமணியம்சிவா இயக்கத்தில் உருவாகும் ’வெள்ளை யானை’ படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நாயகி நடிக்க உள்ளார்.
    2003-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் என்ற படங்களை இயக்கியவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். சின்ன இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை நாயகனாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் வெள்ளை யானை.

    ஆத்மிகா, சிவகார்த்திகேயன்

    இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணையவுள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு. ‘மனம் கொத்திப் பறவை’ ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வைட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.
    புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தனக்கு தெரியாது என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
    சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர் ஷங்கர் வாக்களித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், "நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது; நான் அதை படிக்கவில்லை” என கூறினார். 

    ஷங்கர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த சீமான், உயர்ந்த நிலையிலுள்ள இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான் என தெரிவித்தார்.
    புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாக்களித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், நம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. அது எல்லோருக்கும் நடந்துள்ளது. அது போலவே சூர்யாவுக்கும் நடந்துள்ளது. இருந்தாலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பெற்றுள்ளது.
    அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்தது.

    அவதார்

    முன்னதாக அவதார் படம் முதலில் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது 2.749 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருந்தது. பின்னர் மீண்டும் 2010-ம் ஆண்டு மறு வெளியீடு செய்த போது 33 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது. மொத்தமாக 2.789.7 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் இருந்து வந்தது.

    அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

    இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் கடந்த வெள்ளி வரை 2.789.2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருந்தது. சுமார் 5,00,000 அமெரிக்க டாலர் வசூலில் பின் தங்கியிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அவதார் வசூலை  அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தா சுப்பராயன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மயூரன்’ படம், கல்லூரி விடுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
    கல்லூரிகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஏராளமானப் படங்கள் வெளியானாலும், கல்லூரி விடுதிகளை மையப்படுத்திய படம் என்பது அரிதான ஒன்று தான். அந்த அகையில், கல்லூரி விடுதிகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘மயூரன்’ கல்லூரி விடுதிகளின் மற்றொரு பக்கத்தை காட்டும் படமாகவும் உருவாகியுள்ளது.

    மயூரன் படக்குழு

    இயக்குநர் பாலாவிடம் ’நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தா சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார். பி.எப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகிய நான்கு பேர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

    இது உண்மை கதை இல்லை என்றாலும், இயக்குநர் நந்தா சுப்பராயன், தனது வாழ்வில் சந்தித்த சில விடுதி அனுபவங்களை வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். கல்லூரி விடுதி என்று சாதாரணமாக நாம் நினைத்தாலும், நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு பல சர்ச்சையான விஷயங்கள் பல விடுதிகளில் நடந்து வருகிறது. அதில் சில வெளி உலகிற்கு தெரிந்தாலும், தெரியாத சம்பவங்கள் பல உண்டு. அப்படி நடக்கும் சம்பவங்களுக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? போன்ற விடுதி குறித்து அறியாத பல விஷயங்களை இப்படத்தில் பரபரப்பாக இயக்குநர் நந்தா சுப்பராயன் சொல்லியிருக்கிறாராம்.

    மயூரன் படக்குழு

    சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்திருக்கிறார். குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுத, அஸ்வின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். டான் அசோக் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜாய்மதி நடனம் அமைத்திருக்கிறார். மணவை புவன் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார். படம் முழுவதுமாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டியதோடு ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
    ×