search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுங்கம்பாக்கம் பட போஸ்டர்
    X
    நுங்கம்பாக்கம் பட போஸ்டர்

    ‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை - திருமாவளவன்

    சுவாதி கொலை வழக்கு அடிப்படையில் உருவான ‘நுங்கம்பாக்கம்’ படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
    சென்னை:

    விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவி தேவன் தயாரிப்பில் புது முகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நுங்கம்பாக்கம் திரைப்படத்தைப் பார்த்தார். பிறகு அங்கு இருந்த நிருபர்களிடம் பேசியதாவது:-

    ‘இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிற ஒரு கலை படைப்பாகும். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

    சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த திரைப்படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர அனைத்து அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது.

    ஊர்பெயர்கள், நபர் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தோடு மாறுபடாமல் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் காவல் துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்களும் என்னை வந்து சந்தித்தார்கள்.

    இந்த படம் தயாரிக்கத் தொடங்கிய போதே ராம் குமார் அவர்களின் தந்தை மற்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் ஆகியோர் என்னிடத்தில் வந்து இது குறித்து கலந்துரையாடல் செய்தனர்.

    இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு, வெளிவந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை பின்னியிருக்கிறார் என்றாலும் கூட, மாற்றுக் கருத்துக்களும் வலுவாக இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    குறிப்பாக ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். அந்த கொலையை கண்டித்தோம். சுவாதியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். அப்போது தான் உண்மை வெளிவரும் என்று கூறினோம்.

    இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது. வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    திருமாவளவன்


    ராம்குமாருக்கு எதிரான கருத்து, ராம்குமாருக்கு ஆதரவான கருத்து என இரண்டு தரப்பு கருத்துகளையும் தன்னுடைய திரைப்படத்தில் ஒரு விவாதமாக, நீண்ட உரையாடலாக பதிவு செய்திருக்கிறார். அதனால், எந்த சிக்கலும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இருக்காது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் போக்கு அமைகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன். சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

    அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்று மில்லாமல் செய்து விட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியது தான் என்பது என்னுடைய நிலைப்பாடு. என்னுடைய கருத்து. விடுதலை சிறுத்தைகளின் கருத்து.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    Next Story
    ×