என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன், ஸ்ரீரஞ்சனி நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆடை படத்தின் விமர்சனம்.
    அமலாபால், சரித்திரன், விவேக் பிரசன்னா, ரம்யா ஆகியோர் ஒரு டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மறைவிடத்தில் கேமரா வைத்து பொதுமக்களிடம் நடித்து ஏமாற்றும் பிராங்க் நிகழ்ச்சி செய்கிறார்கள். தொப்பி தொப்பி எனப்படும் அந்த பிராங்க் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. அமலா பாலின் அம்மா ஸ்ரீ ரஞ்சனி அவரை ஒரு சராசரி பெண் போல இருக்க சொல்கிறார். ஆனால் அமலா பாலோ நவ நாகரீக பெண்ணாக மது, புகை, ஆண் நண்பர்கள், திமிரான நடவடிக்கைகள் என தன் மனம் போல இருக்கிறார். பந்தயம் கட்டி அதில் ஜெயிப்பது அமலா பாலின் குணம்.

    அமலாபால், ரம்யா

    ரம்யாவிடம் தான் நிர்வாணமாக செய்தி வாசித்து காட்டுகிறேன் என்று பந்தயம் கட்டுகிறார். பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டியில் நண்பர் ஒருவர் போதைப்பொருள்களை கலந்துவிட சுயநினைவு இல்லாமல் செல்கிறது. விழித்து பார்த்தால் ஆள் இல்லாத கட்டடத்தில் நிர்வாணமாக கிடக்கிறார். அமலா பாலை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? விளையாட்டுக்கு என நடத்தப்படும் பிராங்க் நிகழ்ச்சிகளால் என்ன மாதிரியான ஆபத்துகள் விளைகின்றன என்பதே படம்.

    தமிழ் சினிமாவில் யாரும் செய்ய துணியாத அளவுக்கு சுமார் ஒரு மணி நேரம் நிர்வாணமாக நடித்து இருக்கிறார் அமலா பால். கதைக்கு உண்மையிலேயே தேவைப்பட்டு இருக்கிறது. தன் மானத்தை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பதற்றத்தை தேர்ந்த நடிப்பால் படம் பார்க்கும் நமக்கும் தொற்றிக்கொள்ள வைக்கிறார் அமலா பால். அவருக்கு பாராட்டுகள். அதேபோல் அந்த நிர்வாண காட்சிகளை துளிகூட விரசமோ ஆபாசமோ இல்லாமல் படம் பிடித்து இருக்கிறார்கள் இயக்குனர் ரத்னகுமாரும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும். அவர்களுக்கும் பாராட்டுகள்.

    அமலாபால்,  விவேக் பிரசன்னா

    அமலா பாலுக்கு நாயகிகள் ஏற்றுக்கொள்ள யோசிக்கும் கதாபாத்திரம். நல்லது, கெட்டது இரண்டும் கலந்த கதாபாத்திரம். சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அமலா பாலின் நடிப்பு நம்மையும் சேர்த்து திகிலாக்குகிறது. அமலாபாலுக்கு நண்பர்களாக ரம்யா, சரித்திரன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீ ரஞ்சனி நம் வீட்டு அம்மாக்களை பிரதிபலிக்கிறார். படத்தில் சவுக்கடி வசனங்கள் பல இடம் பெற்றுள்ளது. 

    வசனத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்தங்களும் சமூக அக்கறையும் உள்ளது. ஆனால் இரண்டுமே வலிந்து திணிக்கப்பட்டு இருப்பது படத்தின் பலவீனம். பிரதீபின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கதையுடன் ஒன்ற வைக்கிறது. ‌ஷபீக் முகமது அலி படத்தொகுப்பில் காட்சிகள் நீளமாக தெரிகின்றன. 20 நிமிடங்கள் வரை குறைத்து இருக்கலாம். 

    அமலாபால்

    இறுதிக்காட்சியில் சொல்லப்படும் கருத்து அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இன்னும் நம்பகத்தன்மையை கூட்டி இருக்கலாம். பிராங்க் நிகழ்ச்சிகளை குறை சொல்வதற்கு பதிலாக பெண்களின் நடத்தையை படம் குறை சொல்கிறதோ என்ற தோற்றம் எழுகிறது. சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம். அமலா பாலின் அர்ப்பணிப்பே ஆடையை தாங்குகிறது.

    மொத்தத்தில் ‘ஆடை’ ஆபாசமில்லா அர்ப்பணிப்பு.
    மாறன் இயக்கத்தில் உருவாகும் ’பச்சை விளக்கு’ படம், காவல் துறையின் பெருமையை சொல்லும் வகையில் உருவாக உள்ளது.
    சிவாஜி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் பச்சை விளக்கு. இதே தலைப்பில் ஒரு படம் உருவாகி உள்ளது. டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், ‘பச்சை விளக்கு’. விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை விளக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், டாக்டர் மாறன்.

    இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஆதிக் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

    பச்சை விளக்கு படக்குழு

    கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
    விஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
    குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாகி முன்னணி நடிகையான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டிவந்தாலும் எந்த படமும் ஒப்புக்கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறார். அதற்கு காரணம் இந்தி மோகம்தான் என பேச்சு எழுந்துள்ளது.

    அதற்கேற்ப பாலிவுட் ஹீரோயின்கள்போல் ஒல்லியான தோற்றத்துக்கு மாறி புதிய இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஸ்ரீதேவி மகளும் நடிகையுமான ஜான்வி கபூருக்கு நெருங்கிய தோழி ஆகியிருக்கிறார் கீர்த்தி. காரணம் கீர்த்தி நடிக்கும் இந்தி படத்தை தயாரிப்பது ஜான்வியின் தந்தை போனிகபூர் தான்.

    இந்நிலையில், இந்த படத்திற்காக தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யா படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார். முக்கியத்துவம் இல்லாதவை என்பதால் நடிக்க மறுத்து விட்டாராம். தமிழிலும் தற்போது கீர்த்தி சுரேசுக்கு ஒரு படம் கூட கைவசம் இல்லை. கீர்த்தியின் தாய் மேனகா, நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததுடன் மேலும் சில தமிழ் படங்களில் நடித்தார். 

    கீர்த்தி சுரேஷ்

    அவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அம்மாவினால் சாதிக்க முடியாததை சாதித்து முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கோலிவுட்டில் நுழைந்த கீர்த்தி சுரேஷ் தற்போது அந்த லட்சியத்தை மாற்றிக் கொண்டு பாலிவுட்டில் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
    நடிகர் அஜித் முதன்முறையாக ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 8-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், கூட்டம் கூட்டமாக தன்னை பார்க்க வந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அஜித் முதன் முறையாக மொபைலில் தானே செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின.

    சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார்.  இதனை அடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ம் தேதி நடத்துவதென ஜூன் 10ம் தேதி நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. 

    பின்னர், தேர்தல் அதிகாரி வருகிற ஜூலை 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். இதன்படி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
    தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு ‘கண்ணே கலைமானே’, ‘தேவி 2’ ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் எப் 2 பன் அண்ட் ப்ரஸ்ட்ரே‌ஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் வெளியாகியுள்ளன.

    இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய 2 படங்களும் பேய் படங்கள். தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஈகிள்ஸ் ஐ புரடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார். இவர் கலையரசன், ஷிவதா, ஜனனி நடிப்பில் அதே கண்கள் படத்தை இயக்கியவர். நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

    அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவை கூட்டணியுடன் தமன்னா களம் இறங்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
    சுபு இயக்கத்தில் ஷின்வா, அன்கிதா நவ்யா, சுமன், நடிப்பில் வெளியாகி இருக்கும் ’உணர்வு’ படத்தின் விமர்சனம்.
    சுபு ஒரு சமூக சேவகராக இருக்கிறான் இவர் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இவருக்கு விளம்பரம் தேடுகிறார் நாயகி நவ்யா. சுப்பு உடனே இருக்கிறார் நாயகன் ஷின்வா. இவர் கொடுக்கும் அறிவுரைகளின்படி செயல்படுகிறார் சுபு. இவருடைய பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறான் அருள் ஷங்கர். இவர் பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறார். 

    உணர்வு

    இவரது அப்பா தான் கட்சியை ஆரம்பித்ததால், அந்த கட்சியின் முதல்வராக இருக்கும் சுமனை மிரட்டி காரியங்களை சாதித்துக் கொள்கிறான் அருள். இம்மாதிரியான சூழலில் சமூக சேவகரான சுபு பிச்சைக்காரர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வேலை தந்து அவர்கள் நிலையை மாற்றுகிறார். 

    உணர்வு

    சுபு மீது மிகுந்த பாசம் கொள்கிறார் ஒரு பிச்சைக்காரர். சுபு என்ன சொன்னாலும் செய்யலாம் என்ற உணர்வு பிச்சைக்காரருக்கு உருவாகிறது. அப்படியாப்பட்ட ஒரு உணர்வை அவர்களிடம் உருவாக்கி, அதனால் இவர் ஒரு காரியத்தை சாதிக்க முயல்கிறார். அது என்ன காரியம்? அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை. 

    மனிதர்களின் உணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல் என்கிற புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் இயக்குநர் சுபு. அதற்கு பாராட்டுகள். ஆனால் திரைக்கதையாக சரியாக கையாள முடியாமல் திணறியிருக்கிறார். நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் என்பதால் அனுபவமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

    உணர்வு

    முதல்வராக வரும் அனுபவ நடிகர் சுமன் முதல்வருக்கு தேவையான குணாதிசையங்களுடன் அசத்தி இருக்கிறார். சமூக சேவகராக இயக்குனர் சுபு நடித்துள்ளார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் திரைக்கதை நீளமாக இருப்பது போன்றூ எண்ணத்தோன்றுகிறது. புதுமையான கதையம்சம் இருந்தாலும் அதில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ’உணர்வு’ உணர முடியவில்லை.
    ஆரம்ப காலகட்டங்களில் படங்கள் நன்றாக போகாததால் திரையுலகை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
    விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-

    “மணிரத்னம் எனது கனவு இயக்குனர். விரைவில் அவரது டைரக்‌ஷனில் சரித்திர படமொன்றில் நடிக்கிறேன். சேதுவில் நடித்தபோது மெலிய வேண்டும் என்றனர். அதற்காக ஒரு சப்பாத்தி, ஒரு அவித்த முட்டை, கேரட் ஜூஸ் மட்டும் சாப்பிட்டேன். படப்பிடிப்பு தளத்துக்கு 8 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    அக்‌ஷரா ஹாசன், விக்ரம்

    கல்லூரி நாட்களில் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி 4 ஆண்டுகள் எனக்கு 23 அறுவை சிகிச்சைகள் நடந்தன. எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்கு பின்னால் என்று பிரிக்கலாம். சேதுவுக்கு முன்பு எனது படங்கள் நன்றாக போகவில்லை. எனவே சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன்.

    ஆனால் அந்த படம் கொடுத்த வெற்றியால் இன்னும் நான் உற்சாகமாக சினிமாவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கடாரம் கொண்டான் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் என்னை பாராட்டி பேசினார். அதை கேட்டு கண்கலங்கி விட்டேன். எனது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் சேர வேண்டும். நல்ல வசூல் பார்க்க வேண்டும் என்று உழைக்கிறேன். இவ்வாறு விக்ரம் கூறினார்.
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டியர் காம்ரேட். கீதா கோவிந்தம் திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

    ஜூலை 26-ந்தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு புரொமோ‌ஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்கு மொழிகளிலும் இந்தப் படத்தின் ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் தமிழ் வெர்‌ஷனில், விஜய் சேதுபதி பாடியுள்ளார்.

    துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, விஜய் சேதுபதி

    மேலும் ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரும் உடன் பாடியிருக்கின்றனர். வா ஒன்னா சேரலாம் வா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் துடிப்பான இசை மற்றும் வரிகளுடன் ஈர்க்கிறது. ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரே இந்தப் பாடலை எழுதியுள்ளனர். தமிழில் விஜய் சேதுபதி பாட, மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டாவும் பாடியுள்ளனர்.  விஜய் சேதுபதி வெளியிட்ட இப்பாடல் வைரலாகி வருகிறது. 
    ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ஆடை படம் இன்று ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆடை. இந்த படத்தில் சுமார் ஒரு மணி நேரம் அமலாபால் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். படத்தில் அமலா பாலுடன் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது முதலே சர்ச்சைகள் தொடங்கின.

    டீசரில் இடம்பெற்ற நிர்வாண காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பற்றி மேடையில் பேசும்போது அமலாபால் எனக்கு 15 கணவர்கள் என்று கூறியதும் சர்ச்சையானது. இப்படி பல சர்ச்சைகளை சந்தித்ததால் படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று ஆடை படம் ரிலீசாக இருந்தது. ஆனால் ஆடை படம் திட்டமிட்டபடி இன்று ரிலீசாக வில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் சென்று சேரவில்லை என்கிறார்கள்.

    அமலா பால்

    எனவே படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டதற்கு ’பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளிப்போகிறது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப் பட்டு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்கள்.
    பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குலசாமி’ என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.
    தற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது. 

    கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தக் குறும்படம் சமீபத்தில் பிரபலமான யூடியூப் இணையதளத்தில் வெளியானது. சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படத்தை பிரபலங்களும், அரசியல்  தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

    இக்குறும்படம் குறித்து நடிகர் நகுல் கூறும்போது, 'குலசாமி என்னும் குறும்படத்தை பார்த்தேன். சமுதாயத்தில் நடக்கிற நிஜமான விஷயத்தை இயக்குனர் பாக்கியராஜ் திறமையாக இயக்கியிருக்கிறார். சாதி என்ற வார்த்தையால் எத்தனை பேர், எப்படி எல்லாம்  பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இக்குறும்படத்தில் பார்க்கலாம்' என்றார்.

    குலசாமி குறும்பட போஸ்டர்

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, 'இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாமி குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ். இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்' என்றார்.

    குலசாமி குறும்படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டுவது, மற்றவர்களிடையே குலசாமி குறும்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.
    களவாணி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படத்திற்கு "சோழ நாட்டான்" என பெயரிடப்பட்டுள்ளது.
    களவாணி 2 படத்தை தொடர்ந்து விமல் நடிக்கும் படத்திற்கு "சோழ நாட்டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை "ரஞ்சித் கண்ணா" இயக்குகிறார், மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் "நட்சத்திர பிரகாஷ்" ஒளிப்பதிவு செய்கிறார்.

    சோழ நாட்டான் படக்குழு

    பாடல்கள் "மணிஅமுதவன்" மற்றும் "சபரீஷ்" எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன்  சார்பாக "பாரிவள்ளல்" தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.
    ×