என் மலர்
சினிமா செய்திகள்
முந்திரிக்காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சீமான், கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டதாக கூறினார்.
ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:- களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் இடம் பெற்றதற்காக மகிழ்கிறேன். தம்பி களஞ்சியம் இமையத்தின் எழுத்தை அப்படியே திரையில் வார்த்தெடுக்கிறார்.
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விழாவில் ஒரு நடிகர் பேசுகிறார். “திஸ் பிலிம்ல சாங்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு” என்று ஆங்கிலத்தில் பேசுகிறார். இவர்களை வைத்து என்னடா பண்றது.

நாக்குல கூட தமிழ் சரியா வரலயே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க. நமக்குள் இருக்கும் சாதி, மத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
கடந்த வாரம் வெளியான ’டியர் காம்ரேட்’ படத்தில் ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா, மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான 'டியர் காமிரேட்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிய இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்ததால் நல்ல ஓப்பனிங் வசூல் கிடைத்தது. இருப்பினும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக இப்படக்குழு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
'டியர் காம்ரேட்' படம் கலவையான விமர்சனங்களை பெற காரணம், இந்த படத்தின் நீளம் தான். சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் இப்படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால், நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் அதிரடியாக இந்த படத்தில் உள்ள 14 நிமிடங்கள் காட்சியை கட் செய்துள்ளனர்.

குறிப்பாக புகழ்பெற்ற கேன்டீன் பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும், கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 170 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ள இந்த படம், தற்போது 14 நிமிடங்கள் கட் செய்து 156 நிமிடங்கள் படமாக இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது.
தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். ’ராஞ்சனா’வில் ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. ’ஷமிதா’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார். இதில் தனுஷ் வாய்பேச முடியாதவராக வந்தார். இரண்டு படங்களுக்குமே இந்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ‘த எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆப் த பகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது இரண்டு கதாநாயகர்கள் கதை. இன்னொரு நாயகனாக பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா அலிகான் வருகிறார். இந்த படத்தை ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. சென்னை அருகே பூந்தமல்லியில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்தினார்கள்.

இதில் தனுஷ் கலந்துகொண்டு பேசும்போது, “எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ரசிகர்களின் அன்பு மட்டும் போதும். அன்பு மட்டுமே நிரந்தரம். யாரையும் பற்றி விமர்சிக்க வேண்டாம்” என்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’அசுரன்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.
#PattasFirstLookpic.twitter.com/kwiFFS2SO4
— Dhanush (@dhanushkraja) July 28, 2019
இந்நிலையில், இப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’கழுகு 2’ படத்தின் முன்னோட்டம்.
கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது.
மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இப்படம் ஆகஸ்ட்-1ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
நடிகர் சாப்பிட்ட 2 வாழைப்பழத்துக்கு ரூ.442 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலால்துறை அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் தமிழில் ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் ஒரு சினிமா படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றிருந்தார். அங்குள்ள ‘மாரியாட்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து சமூக வலைத்தளம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘நான் தங்கியுள்ள ஓட்டலில் 2 வாழைப்பழங்களின் விலை ஜி.எஸ்.டி. வரியோடு சேர்த்து ரூ.442.50 என பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவன் தானா என்பது தெரியவில்லை’ என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.
அவரது இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலானது. பலரும் ராகுல் பேச்சுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அந்த வீடியோவில் ‘ஓட்டல் பில்லில் வாழைப்பழங்களுக்கு ரூ375 என்றும், ஜி.எஸ்.டி. ரூ67.50 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வாழைப்பழங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்தது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதில், ‘பழங்கள் வரியில்லா வகையில் வருகின்றன. எனவே வாழைப்பழத்துக்கு எதற்காக ஜி.எஸ்.டி. வரி விதித்தீர்கள்?’ என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலால் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “வாழைப்பழங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்தது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினரை நாங்கள் விசாரணைக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. எனவே ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். ஓட்டல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.
நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வழங்கிய சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் என்று தனுஷ் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளிப்பதாக கூறினார்.

இதற்கு தனுஷ் பதிலளிக்கும்போது, ‘தாணு என் மீதான அன்பு மிகுதியால் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம். தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும். என் ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை. யார் பகை காட்டினாலும் பொறுமையாக செல்லுங்கள். பதிலுக்கு பகையை காட்டாதீர்கள். விரைவில் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கிறேன்’ இவ்வாறு அவர் கூறினார்.
கென்னடி கிளப் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார், கபடி வீராங்கனைகள் வேலை வாய்ப்பு வாழ்க்கைக்காக போராடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
சுசீந்தரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடித்துள்ள படம் கென்னடி கிளப். மகளிர் கபடியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசிய தாவது:-
‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாக தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச் சாமியாக பாரதிராஜா நடித்திருக்கிறார்.
கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்.
நடிகர் தனுஷ் தனது 36-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை தனுசின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தயாரிப்பாளர் தாணு, சத்யஜோதி தியாக ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனுசின் பிறந்தநாள் தமிழ் திரையுலகுக்கு மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம். என்னை ஈன்றெடுத்த தந்தையே, உங்களுக்கு எப்படியாபட்ட பிள்ளையாக நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு இங்கு கூடியிருக்கும் தனுஷ் ரசிகர்களே சாட்சி.
இந்தியாவிலிருக்கும் அனைத்து இயக்குநர்களும், நடிகர்களும் தனுசுடன் பழக வேண்டும். அவரை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எந்தக் கால கட்டத்திலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கக் கூடிய திறமையைக் கொண்டவர் தனுஷ்.

அவர் 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும், சிறப்பாக நடித்துக்கொண்டே இருப்பார். அவரது வாழ்க்கையில் இன்னும் மிகப் பெரிய சிறப்புகளும், செல்வாக்குகளும், செல்வங்களும் வந்து சேரும். அவருடைய பிறந்த நாளில் நீங்கள் எல்லாம் ரத்ததானம் செய்கிறீர்கள்.
இது வேறு எந்த நடிகருக்கும் வாய்த்ததில்லை. அப்படி யொரு சிறப்பு தனுசுக்கு கிடைத்திருக்கிறது. தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதோடு, இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராக பவனி வரப்போகிறார்.
இவ்வாறு தாணு பேசினார்.
ஜாக்பாட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சூர்யா, ஜோதிகா தான் என்னோட ஜாக்பாட் என்று கூறியிருக்கிறார்.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:-
“என்னோட ஜோ (ஜோதிகா) தான் என்னோட ஜாக்பாட். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள்.

ஜோதிகாவுக்கு இந்தபடம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறு மாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
தனது பிறந்தநாளில் இரத்த தானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன் என்று நடிகர் தனுஷ் விழாவில் பேசியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா, செயலாளர் பி.ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் சென்னையில் உள்ள ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள், கேரளா, கர்நாடக, ஆந்திரா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இரத்ததான முகாமை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி.தியாகராஜன், தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா, எஸ்.வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர்.
இந்த விழாவில் பேசிய கலைப்புலி தாணு, ‘1500 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார்.

பிறகு விழாவில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனுஷ் பேசும்போது, ‘இரத்த தானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியிட கோடி கணக்கில் பணம் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் புகை பிடிக்கும் படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று ரசிகர்கள் விளாசினார்கள்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இடம்பிடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இதில் நடிகைகள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிக்க பெரிய கூட்டம் உள்ளது.

இதை வைத்து அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். பெரிய தொழில் நிறுவனங்கள் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் வெளியிட பெரிய தொகை கொடுக்கின்றன. பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை வெளியிட ரூ.1 கோடியே 86 லட்சம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கிறார். ஹாலிவுட் டி.வி நடிகை கைலி ஜன்னர் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை பதிவிட ரூ.8.7 கோடி வாங்குகிறார்.






