என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஜெயராம், 2 மாதத்தில் 12 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.
தமிழ், மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் ஜெயராம். பப்லியான தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாகி வைத்திருக்கிறார்.
ஜெயராம் தற்போது அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை 12 கிலோ குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார் ஜெயராம். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக தபு நடிக்கிறார்.

தனது உடல் எடையை குறைத்தது பற்றி ஜெயராம் கூறுபோது, ‘அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி தற்போது சொல்ல முடியாது’ என்றார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாறி மாறி சண்டைப் போட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படமும் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் வெளியாக உள்ளது.
அஜித், விஜய் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் மோதலில் ஈடுபடுவது அனைவரும் அறிந்ததே. படத்தின் வெற்றி, வசூல் என தொடங்கி தற்போது யூடியூப் லைக்ஸ் வரை சண்டை அதிகரித்துகொண்டே வருகிறது. பல சமயங்களில் இவர்களின் சண்டை அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் நிலைக்கு சென்றிருக்கிறது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரவிருப்பதால், அவரது ரசிகர்கள் #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரண்டாக்கினார்கள். இதற்கு எதிர்மறையாக விஜய் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_பாடைகட்டு ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து வந்தனர். இது விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்தது. மேலும் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் பதிலடிக்கு அஜித் ரசிகர்கள் #LiveAndLetLiveThalaAJITH என்று டிரெண்டாக்கி வருகிறார்கள். தற்போது இந்த சண்டை ஏங்கு போய் முடியும் என்று தெரியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.
கதாநாயகர்களுடன் நெருங்கி பழகாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்று பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி அளித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம், ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியாக நடிப்பது மட்டும் அல்லாமல் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் பிரபலமானவர்.
ஹரியானாவை பூர்வீக மாக கொண்ட மல்லிகா ஷெராவத், மாடலிங் துறையில் இருந்து திரைத் துறைக்கு வந்தவர். 2002-ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். படங்கள் மட்டும் அல்லாமல் தற்போது இணைய தொடர்களிலும் களம் இறங்கியிருக்கிறார். மல்லிகா ஷெராவத் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் பல அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். கதாநாயகர்களுடன் நெருங்கி பழக விரும்பாத ஒரே காரணத்திற்காக தான் பல பட வாய்ப்புகளை இழந்திருப்பதாக கூறியுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி அனுசரித்து செல்லாததால் பல படங்களிலிருந்து தான் தூக்கி எறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னை இயக்குனர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ படுக்கைக்கு வா என நேரடியாக அழைக்க வில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி தான் இணங்கவில்லை என்றும், தான் தைரியமான பெண் என்பதால் பிரச்சனை வரும் என்பதால் தன்னை நேரடியாக யாரும் அணுகிய தில்லை என்றும் அவர் கூறினார்.
மீடு போன்ற இயக்கங்கள் தேவை என்று கூறியுள்ள மல்லிகா ஷெராவத், பெண்களை போன்று ஆண்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழல் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். மீடூவால் பெண்களின் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டு பெண்களுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
நடிகை பிந்து மாதவியிடம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்று கழுகு-2 பட இயக்குனர் சத்யசிவா கூறியுள்ளார்.
2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ். இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது, ‘கழுகு படம் போலவே இந்தப் படத்தின் கதையும் முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதைதான்.
கழுகுக்கு சமமான விஷயம் இந்தப் படத்திலும் இருக்கிறது. இரண்டுக்குமே காடு என்பது பொதுவான அம்சமாக இருந்ததால் இந்த படத்திற்கு கழுகு-2 என்கிற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும் என முடிவு செய்தோம். அதேசமயம் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படம் என்று ‘கழுகு-2’வை சொல்லலாம்.

மீண்டும் கிருஷ்ணா, பிந்து மாதவி என எனக்கு நன்கு அறிமுகமான நட்சத்திரங்கள் என்பதால் படப்பிடிப்பில் எந்தவித சங்கடங்களும் ஏற்படவில்லை. கழுகு படத்தில் அறிமுகமான அதே பிந்துமாதவி தான் இப்போதும், எந்தவித மாற்றமும் இத்தனை வருடங்களில் அவரிடம் ஏற்படவில்லை. கழுகு படம் இயக்கும்போது எனக்கு புதியவராக இருந்த கிருஷ்ணா இப்போது கிட்டத்தட்ட உறவினர் போல மாறிவிட்டார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு இன்னொரு புதிய வடிவத்தை கொடுத்திருக்கிறது. என் சொந்த ஊர் மூணார். அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கி உள்ளேன்.
இந்தப்படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. கழுகு படத்தைப் போல இந்த படத்திலும் அழுத்தமான ஒரு காதல் இருக்கிறது. அதே போல மனதை உருக வைக்கும் சென்டிமென்டான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்தில் இருக்கிறது’ என்றார்.
மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் வரும் ஆக-1ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடுகிறது.
100 படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அதர்வா, இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ''100'' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் செய்தி ஏற்கனவே வெளியானது.
இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.
இதற்குமுன் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ’பூமராங்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுப்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்கள் போராடினேன் என்று சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து முதன் முதலில் உலக அழகிப்பட்டம் பெற்றவர் சுஷ்மிதா சென். மிஸ் பெமினா உள்பட நிறைய அழகி பட்டங்களை வென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நடிகை சுஷ்மிதா சென் திரைத்துறையை தாண்டி, சமூக பங்களிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தத்தெடுப்பு குறித்த மாநாட்டில் சுஷ்மிதா சென் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தத்தெடுப்பு நடைமுறைகள் கடினமாக இருப்பதால், அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘ஐதராபாத் தான் எனது தாய் வீடு. நான் இங்கு தான் பிறந்தேன். இந்த நகரத்தில் இருந்து தான் நான் முதன்முதலில் உலகத்துக்கு வந்தேன். எனவே எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இங்கு வந்துவிடுவேன். அது எனது வீட்டுக்கு வருவதை போன்றது.

எனது வாழ்க்கையில் நிறைய ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன. அவை அனைத்தும் நல்லதுக்கே. எதற்காகவும் நான் வருத்தப்பட போவதில்லை. எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நான் அனுபவித்து மகிழ்கிறேன்.
எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுப்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்கள் போராடினேன். ஏனெனில் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதிக்க வில்லை. என்னை போன்ற ஒத்தக்கருத்துள்ளவர்களின் துணையோடு இந்த சட்டத்தை எதிர்த்து போராடி, அதனை மாற்றி எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுத்தேன்.
தத்தெடுப்பு என்பது வயிற்றில் இருந்து வரும் உறவு அல்ல. அது மனதில் இருந்து வருவது. குழந்தை பிறப்பு என்பது தொப்புள்கொடி உறவு. ஆனால் தத்தெடுத்தல் என்பது பொதுநலன் சார்ந்தது. எனவே அரசுக்கு எனது வேண்டுகோள் என்ன வென்றால், இந்தியாவில் தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதை நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் நினைவைப் பற்றி பேசுகிற 'சொல்லித் தந்த வானம்' என்ற நூலை இயக்குனர் கே.பாக்யராஜ் இன்று வெளியிட்டுள்ளார்.
மறைந்த யதார்த்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசுகிற நூல் 'சொல்லித் தந்த வானம்'. இந்த நூலை அருள்செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று எளிமையாக நடைபெற்றது.

அப்போது நூலை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ், சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா, கவிஞர் விவேகா, பின்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐ.ஆர்.8’ படத்தின் முன்னோட்டம்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’. இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு- ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர், தொழில்முறை அல்லாத உறுப்பினர் என இரண்டு வகையான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆயுட்கால உறுப்பினர், தற்காலிக உறுப்பினர் என இரண்டு வகைகள் உண்டு. மொத்தம் 4 வகையான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
தொழில்முறை உறுப்பினர்களுக்கு தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இவர்களில் 61 ஆயுட்கால தொழில்முறை உறுப்பினர்கள் தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இவர்களில் பெரும்பாலானோர் நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள்.
குறிப்பாக விஷால், நாசர் அணி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு தான் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பதிவாளருக்கு மாற்றப்பட்ட உறுப்பினர்கள் சார்பில் புகார்கள் சென்றது. இதன் அடிப்படையில் நடிகர் சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்களை நீக்கியது குறித்து விளக்கம் கேட்டு தென் சென்னை சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த ஜூன் 17-ந்தேதி நாசர், விஷால் அணி சார்பில் பதிவாளரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கம் போதிய திருப்தி அளிக்காததால் சங்கத்துக்கு நடக்க இருந்த தேர்தலை நிறுத்துமாறு ஜூன் 19-ந்தேதி உத்தரவிட்டார். பின்னர் இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்காக பதியப்பட்டு தேர்தலை நடத்தலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை மட்டும் நடத்தப்பட கூடாது என்றும் உத்தரவு வந்தது. இதன்படி ஜூன் 23-ந்தேதி நடந்த தேர்தலுக்கு இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
இதற்கிடையே நடிகர் சங்கத்தில் இருந்து 61 ஆயுட்கால உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றிய விவகாரத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாவது பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதில் அதீரா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் விக்ரம் ஆதித்யா, கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் தானும் இணைந்திருப்பதை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அரசராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், அடுத்ததாக இயக்கும் படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை நமீதாவும் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நமீதா இந்த படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையை திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. நமீதா ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






