என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் பண்ணையில் ஆண் பிணம் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கானா மாநிலம் கேசம்பட்டு அருகே உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்றை நாகார்ஜுனா சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினார். அந்த பண்ணை வீடு மற்றும் நிலம் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் நாகார்ஜுனாவின் மனைவி நடிகை அமலா அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பிறகு அங்கு இருக்கும் சிலரை வைத்து, அந்த நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கினார். பண்ணையாட்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷெட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் சென்று பார்த்த போது, அந்த ஷெட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.

    நாகார்ஜுனா

    அந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த ஆண் பிணம் பிரேதப் பரிசோதனைக்காக, சைபராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நபர் இறந்து ஆறு மாதத்துக்கு மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரிக்கப்படுமா என்று இனி தான் தெரியவரும். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வீராபுரம் 220 படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இப்படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    மகேஷ், மேக்னா

    இந்த படத்திற்கு இரட்டையர்களான ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற அறிமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். மேலும் கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் படம் தயாராகி இருக்கிறது. 
    சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இதுவரை 2 சீசன்கள் முடிவுற்று, தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்‌ஷன் மற்றும் முகின் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர்.

    தற்போது அடுத்த போட்டியின் தொகுப்பாளர் யாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது. சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் பெயர்கள் தொகுப்பாளர்களாக அடிபட்டது. இதில் சிம்பு தான் கண்டிப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

    கமல்ஹாசன்

    இந்தச் செய்தி குறித்து நிகழ்ச்சி குழுவினர் கூறியதாவது:- “அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என்று தெரிவித்தனர். இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தமிழில் நடத்த விஜய் தொலைக்காட்சி 5 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுள்ளது. 3 ஆண்டுகளும் கமல்தான் தொகுத்து வழங்கினார். தற்போது 4-ம் ஆண்டுக்கும் கமல்தான் தொகுப்பாளர் என அந்நிறுவனம் உறுதி செய்திருப்பது நினைவு கூறத்தக்கது.
    காமெடி நடிகர் சதீஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
    தமிழ் திரையுலகில் காமெடியனாக வலம் வருபவர் சதீஷ். இவர் விஜய்யுடன் கத்தி, பைரவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன. குறிப்பாக திருமணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. 

    சதீஷின் நிச்சயதார்த்த புகைப்படம்

    சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திரையுலகை சேர்ந்த பிரபலம் ஒருவரின் மகளை அவர் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது காதல் திருமணம் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த அதிதிராவ் 13 ஆண்டுகளுக்கு பின் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
    ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ப்ரஜாபதி’. மம்மூட்டி ஹீரோவாக நடித்த இந்த படத்தில், ஹீரோயினாக அதிதி ராவ் அறிமுகமானார்.  2006-ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீசானது. அதன்பிறகு, ‘காற்று வெளியிடை’, ‘பத்மாவத்’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சம்மோஹனம்’ என ஏராளமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். 

    இந்த நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார் அதிதி ராவ். ஜெயசூர்யா ஜோடியாக அவர் நடிக்கிறார். ‘சூபியும் சுஜாதயும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, நரணிபுழா ஷாநவாஸ் இயக்குகிறார். மியூசிக்கல் ரொமான்டிக் படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கிறது. 

    ஜெயசூர்யா, அதிதிராவ்

    தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘சைக்கோ’ படத்தில் நடித்துள்ளார் அதிதி ராவ். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர நானி ஜோடியாக ‘வி’ என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் சேதுபதி ஜோடியாக ‘துக்ளக் தர்பார்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார். 
    கே.வி.ஆனந்த இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் விமர்சனம்.
    நாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார். இவை அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து மோகன்லாலை காப்பாற்றுவதற்காக அவர் செய்கிறார். இதனால் மோகன்லால் சூர்யாவை பாராட்டி மிலிட்டரி இண்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார்.  

    ஒரு கட்டத்தில் மோகன்லாலை பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் அரசியல் சூழல் காரணமாக மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். ஆர்யாவிற்கும் சூர்யா தான் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கிறார். ஆர்யாவையும் கொல்ல சதி வேலை நடக்கிறது. இறுதியில் மோகன்லாலை கொன்றது யார்? ஆர்யாவை கொல்ல துடிப்பது யார்? என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.

    காப்பான் விமர்சனம்

    பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, விவசாயி என கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. பாதுகாப்பு அதிகாரிக்கான தோற்றம், கம்பீர நடை, துறுதுறு பார்வை என நடிப்பில் மிளிர்கிறார். படத்தின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வாவ் சொல்ல வைக்கிறார் சூர்யா, குறிப்பாக ரெயில் ஸ்டண்ட் காட்சி வேற லெவல்.

    எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன் லால், இதில் பிரதமராக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது. 

    காப்பான் விமர்சனம்

    பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

    ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

    காப்பான் விமர்சனம்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனியின் படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகிறது. 

    மொத்தத்தில் ‘காப்பான்’ கமர்ஷியல் விவசாயி
    தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, படம் தயாரிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை என தெரிவித்துள்ளார்.
    ரஜினியுடன் 'தர்பார்', விஜய்யுடன் 'பிகில்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', 'நம்ம வீட்டுப் பிள்ளை', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவசாயி' என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக 'மண்டேலா' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சத்யம்' இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். 

    இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் நடிகர்களிலிருந்து இன்னொரு தயாரிப்பாளர் என்று பலரும் அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். 

    யோகி பாபு

    இந்தச் செய்தி தொடர்பாக யோகி பாபுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்கணும் என்று ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்றே தெரியவில்லை" எனக் கூறினார்.
    பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மணிரத்னம் தாய்லாந்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிவருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன. 

    மணிரத்னம்

    ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். 100 நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் படத்தின் முக்கியமான பாகங்களை தொடர்ந்து படமாக்க தயாராகி வருகிறார்கள். பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்க உள்ளார்கள். 
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நயன்தாரா புறக்கணித்து இருக்கிறார்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய், கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். ஆனால், படத்தின் நாயகி நயன்தாரா இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை.

    விஜய் - நயன்தாரா

    பொதுவாக தான் நடிக்கும் படங்களின் விழாக்கள், புரமோஷன்களில் நடிகை நயன்தாரா கலந்துக் கொள்வதில்லை. ஆனால், விஜய் படம் என்பதால் இந்த விழாவில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிலும் நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை. இது நயன்தாரா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
    துருவா, இந்துஜா, ஆதித்யா, ஷாரா, ஸ்ரீனி நடிப்பில் ஏகே இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் விமர்சனம்.
    சின்ன சின்ன திருட்டுகளை செய்து வரும் துருவா, பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னுடைய மாமா ஷாராவுடன் இணைந்து நாயகி இந்துஜாவை கடத்துகிறார். ஆனால், தவறான பெண்ணை கடத்தியது பின்னர்தான் தெரிகிறது. அதேசமயம் இந்துஜாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதும் தெரியவருகிறது.

    அதாவது, போலீஸ் அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் தந்தையை போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஆதித்யா கொலை செய்து விடுகிறான். பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் அடங்கிய பை, இந்துஜாவிடம் இருப்பதாக அறிந்து அவருக்கு மிரட்டல் விடுக்கிறான். 

    இந்துஜாவை துருவா கடத்தும்போது விட்டு வந்த காரில் போதை மருந்துகள் உள்ள பை இருக்கிறது. இந்த கார், காசிமேடு தாதாவாக இருக்கும் ஸ்ரீனியிடம் சிக்குகிறது. இந்த காரை எடுத்துவந்தால் பணம் தருவதாக துருவாவிடம் கூறுகிறார் இந்துஜா. 

    சூப்பர் டூப்பர் விமர்சனம்

    இறுதியில் காசிமேடு தாதா ஸ்ரீனியிடம் இருந்து அந்த காரை எடுத்தாரா துருவா? ஆதித்யாவிற்கு போதை மருந்து கிடைத்ததா? தந்தையை கொலை செய்த ஆதித்யாவை இந்துஜா பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துருவா துறுதுறு இளைஞனாக வலம் வருகிறார். ஆக்‌ஷன், காதல் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி இந்துஜா, அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக ஜில் ஜில் ராணி பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார். 

    துருவாவின் மாமாவாகவும் போலீசாகவும் வரும் ஷாரா, ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். போதை மருந்து கடத்தல் தலைவனாக வரும் ஆதித்யா, வில்லனத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பல இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காசிமேடு தாதாவாக வரும் ஸ்ரீனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாஸ் என்ட்ரியுடன் களமிறங்கும் இவர், நடனம், காமெடி என நடிப்பில் அசத்தி இருக்கிறார். 

    சூப்பர் டூப்பர் விமர்சனம்

    ஆக்‌ஷன், திரில்லர், காமெடி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.கே. அதை காமிக்ஸ் புத்தகம் ஸ்டைலில் வடிவில் கொடுத்திருப்பது சிறப்பு. ட்விஸ்ட்களில் வரும் பிளாஸ் பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாதது போல் தோன்றுகிறது. 

    படத்திற்கு பெரிய பலம் தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ட்ரோன் ஷாட்கள், டோலி ஜூம்கள் காட்சிகள் சிறப்பு. திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘சூப்பர் டூப்பர்’ வேகம்.
    ஆந்திர மாநில சிறுமியை பணியில் அமர்த்தி சித்ரவதை செய்ததாக நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஆந்திர மாநில சிறுமி ஒருவர் தி.நகர் பகுதியில் உள்ள நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்த போது சித்ரவதை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையே சிறுமி மீது பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பானுப்ரியாவின் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஐ.பேட், கேமரா, விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவை திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுமியையும், அவரது தாய் பிரபாவதியையும் பாண்டிபஜார் போலீசார் கைது செய்திருந்தனர்.

    பானுப்ரியா

    பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக தாய் பிரபாவதி ஆந்திரமாநிலம் சோமால் கோட்டை போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக ஏற்கனவே அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான தகவலை ஆந்திர போலீசார் சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

    பானுப்ரியாவின் வீடு பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்ததால் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக இப்போது பாண்டிபஜார் போலீசார் வழக்கு போட்டுள்ளனர்.

    சிறுமியை பணியில் அமர்த்தியது, தாக்கி காயம் ஏற்படுத்தியது, மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை என்று நயன்தாராவை புகழ்ந்து கூறியிருக்கிறார்.
    தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது. அதன்பிறகு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து இப்போதுவரை நீடித்து வருகிறது.

    இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், கோவில்களுக்கு சென்று வருவதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை நெருக்கமானவர்கள் மறுத்தனர்.

    நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வந்த சில படங்கள் தோல்வி அடைந்ததால் திருமணத்துக்கு தயாராவதாக கூறப்படுகிறது. தான் நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார்.

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த கொண்டாட்டம் குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை. இது ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாள்” என்று பதிவிட்டுள்ளார். நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

    வருகிற டிசம்பர் மாதம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
    ×