என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குழந்தை பிறக்கும் தேதி, நேரம் மற்றும் வருடத்தை நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான். 

    சமந்தா, நாக சைதன்யா

    இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, ’வருகின்ற 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார். நடிகை சமந்தா தனது செல்ல நாய் குட்டியின் முதலாவது பிறந்தநாளை சமீபத்தில் கணவருடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் பிரபலங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. 

    ஓலிவா மோரிஸ், ரே ஸ்டீவென்சன், அலிசன்டூட்டி

    இந்நிலையில், படத்தில் நடிக்கும் வில்லன்கள் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரபல ஹாலிவுட் நடிகர்களான ரே ஸ்டீவென்சன்னும், அலிசன்டூட்டியும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் ஓலிவா மோரிஸ், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஆர்.ஆர்.ஆர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குனர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.

    அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. 

    எஸ்.ஜே.சூர்யா

    இந்நிலையில், வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “வலிமை படக்குழுவினர் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர்கள் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார். 

    இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் மற்றும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கோவாவில் நடைபெற்று வரும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. 

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். 

    சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. 

    குத்துவிளக்கு ஏற்றிய ரஜினி

    இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர். 

    விருது வாங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது: “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என கூறினார். 
    இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது.
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. 

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். இதில் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே” விருதும், ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ என்ற விருதும் வழங்கப்பட உள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

    9 நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் சர்வதேசம், இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உட்பட 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. 

    இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    ரஜினி

    இந்நிலையில் தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த தகவல் கசிந்துள்ளது. ’சும்மா கிழி’ என தொடங்கும் அந்த பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அனிருத் இசையில் பேட்ட படத்திற்காக பாடிய ’மரண மாஸ்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தர்பார் பட பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    நெற்றிக்கண் படக்குழுவினர் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளித்துள்ளனர்.
    நடிகை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை அமெரிக்காவில் காதலன் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் குழுவினர் அவரது பிறந்தநாளை  வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளனர். இதற்காக ஆதரவற்ற குழந்தைகள் ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளனர். நெற்றிக்கண் படக்குழுவினரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நெற்றிக்கண் படக்குழு


    நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். பிளைண்ட் எனும் கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இதனை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் தாரா நடிக்க உள்ளார். இதற்காக அவர் விரதமிருந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    இன்று தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் 50-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி, அமிதாப்பச்சன் ஆகியோர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.
    50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடக்கும் தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வில் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக ரஜினிக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப்பை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோல பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்’ திரையிடப்படுகிறது.

    கோவா சர்வதேச திரைப்பட விழா

    9 நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் சர்வதேசம், இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உட்பட 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன.

    இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராம், விக்னேஷ் சிவன், நடிகைகள் நித்யா மேனன், தமன்னா, டாப்சி உள்ளிட்டோர் திரை தொழில்நுட்பம் சார்ந்து பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சமீபத்தில் மறைந்த திரை பிரபலங்களான கிரேசி மோகன், கன்னட நாடக ஆசிரியரும், நடிகருமான கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட உள்ளது.
    பாகுபலி படத்தில் வில்லனாகவும், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவருமான ராணா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகன். 

    சுரேஷ் பாபு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ராணா

    ஐதராபாத்தில் ராமநாயுடு படப்பிடிப்பு தளம், ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் அலுவலகம் உள்பட 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
    நம்பியார் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொண்ட சிவகுமார், அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. அவர் மறைந்த நாளான நேற்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், பி.வாசு, இசையமைப்பாளர் இளையராஜா. நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், டெல்லி கணேஷ், நடிகைகள் காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நம்பியார் நூற்றாண்டு விழா

    நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘1955-ல் பெண்ணரசி என்ற படத்தில் நம்பியார் அண்ணன் நடித்தார். அவர் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர். அந்த காலத்தில் நடித்த அனைவருமே உண்மையிலேயே பலசாலிகள். அந்த வரிசையில் வந்தவர் நம்பியார். அவருடன் நடித்த அனுபவங்கள் இனிமையானவை.

    அவர் நினைத்து இருந்தால் பெரிய கதாநாயகனாக வலம் வந்து இருக்கலாம். அவர் ராமனாகவே வாழ்ந்தார். மனைவியை தவிர வேறு பெண்ணை தவறாக பார்த்ததுகூட கிடையாது. மது, புகை இல்லாமல் கடைசிவரை வாழ்ந்து காட்டியவர்’ என்றார்.
    ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா - மாளவிகா நடிக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் முன்னோட்டம்.
    ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா - மாளவிகா இணைந்து நடிக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்திருக்கிறது.

    இப்படம் குறித்து விவரித்த இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், "எங்களது கனவுப் படமான 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.

    அவினாஷ் ஹரிஹரன் எழுதி இயக்கியிருக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படத்துக்கு மேட்லி புளூஸ் இசையமைக்க, சுதர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீண் ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, எட்வர்ட் கலைமணி கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பாக காவ்யா வேணுகோபால் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
    ஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. திருக்கடல் உதயம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார்.

    'பிரேக்கிங் நியூஸ்' வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான அரங்குகளையும் அமைத்து படப்பிடிப்பு நடத்தி விஷுவல் விருந்தளிக்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

    பிரேக்கிங் நியூஸ் படப்பிடிப்பில் ஜெய்

    ஜெய்க்கு ஜோடியாக பானு நடிக்க, தேவ் ஹில், ராகுல் தேவ், ஜெயப்பிரிகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 
    ×