என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். படத்தின் கதை மற்றும் விஜய் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

    விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அவரது இளமையான தோற்றம் கசிந்த பிறகு மாணவராக நடிக்கிறார் என்று பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது.

    விஜய்

    கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் பேசப்பட்டது. இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. கதை மற்றும் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். தற்போது படத்துக்கு தலைப்பு தேர்வு நடந்து வருகிறது. டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் சென்னை திரும்பியதும் ஜனவரி 1-ந்தேதி தலைப்பையும் படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த படத்துக்கு ‘சம்பவம்’ அல்லது ‘டாக்டர்’ என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகின்றன. மாணவி அனிதா பற்றிய கதை என்றால் டாக்டர் தலைப்பு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு வித்தியாசமான முறையில் மேற்கொண்டுள்ளது.
    நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். 

    சிவகார்த்திகேயன்

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஹீரோ படக்குழு வித்தியாசமான முறையில் புரமோஷன் வேலைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதற்காக பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ கேம் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய்க்கு அருங்காட்சியகம் ஒன்றில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி பேவாட்ச்சின் மாயாபுரி அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மெழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்தில் அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், பாரக் ஓபாமா, சார்லின் சாப்ளின், கர்நாடக இசை பாடகி எம்எஸ் சுப்புலெட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளன. 

    விஜய் மெழுகு சிலை

    இதேபோல் மோகன்லால், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற பல்வேறு திரையுலக பிரபலங்களின் மெழுகு சிலைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ் நடிகர் ஒருவருக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதனை குமரி நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திறந்து வைத்தனர். விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலையை காண ஏராளமானோர் வருவதாக கூறப்படுகிறது.
    கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற ரஜினிகாந்த், தனது வாழ்க்கையை மாற்றியது அவர்தான் என கூறியுள்ளார்.
    கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி ரஜினிகாந்த் தூர்தர்‌ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்டது ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும், பெருமையுடன் விருதை ஏற்று கொண்டேன். விருதை அறிவித்த அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    மற்றவர்களை போல தான் நானும் வாழ்கிறேன். பாலச்சந்தரை சந்தித்தது திருப்பு முனையாக இருந்தது. அவர்தான் எனது வாழ்க்கையை மாற்றினார். நான் கதாநாயகனாக வருவேன் என நினைத்தது இல்லை. பாலசந்தர் தான் என்னை தமிழ் படிக்குமாறு கூறினார். எனக்குள் இருந்த திறமையை வெளிக்காட்டினார். பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களுடன் இருக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளேன். 

    ரஜினிகாந்த்

    சிவாஜி ராவாக உணர்கிறேன். வாழ்க்கையில் அனைத்தும் நடிப்பு தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும். எனது துறையை, நடிப்பை மிகவும் ரசிக்கிறேன். ராகவேந்திரர் மீது நம்பிக்கை உள்ளது. இமயமலை செல்வதால், எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இளம் நடிகர்கள், தங்களது பணியை எந்த பணியாக இருந்தாலும், அதனை ரசித்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. உடனடியாக, அனுபமா அதை மறுத்தார். இந்நிலையில், இந்தி நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின. 

    அனுபமா பரமேஸ்வரன்

    இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா, ''காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம். இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். இது குறித்து, பிறர் கவலைப்பட வேண்டாம்,'' என, கோபமாக தெரிவித்துள்ளார்.  
    செந்தில், நிம்மி நடிப்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் மேகி படத்தின் முன்னோட்டம்.
    சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ்  தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மேகி’.  ரியா, நிம்மி, ஹரிணி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்து உள்ளனர். மேலும் செந்தில், அஜித் பிரகாஷ், திடியன், கலா பிரதீப், மண்ணை சாதிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திகேயன், "மேகி ஒரு காமெடி ஹாரர் படம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் மேகி உருவாகியுள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா கதைப்படி நண்பர்கள் ஐந்து பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அப்போது அவர்களது வாகனம் பழுதாகிவிடுகிறது. காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் ஒரு பெண் இருக்கிறார். 

    மேகி படத்தின் நாயகன்

    அவரிடம் சென்று உதவி கேட்கிறார்கள். ஆனால் அந்த பங்களாவில் இருக்கும் பெண் தான் 'மேகி' பேய். அந்த பேயிடம் ஐந்து பேரும் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுடன் திருடன் ஒருவனும் சேர்ந்து மாட்டிக்கொள்கிறான். அவர்கள் அனைவரும் அந்த பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து திரில்லிங்காக சொல்லிருக்கிறேன்.
    கிரிசையா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிதா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் விமர்சனம்.
    மருத்துவ கல்லூரியில் படிக்கும் துருவ் விக்ரம், எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு குணாதிசியம் கொண்டவர். நாயகி பனிதா அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக சேர்கிறார். அவரைப் பார்த்தவுடன் துருவ் விக்ரம் காதல் வயப்படுகிறார். பனிதா எதுவும் ரியாக்ட் பண்ணாமல் இருக்கிறார். பிறகு இருவரும் வெறித்தனமாக காதலிக்கின்றனர். 

    இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, சாதியை காரணம் காட்டி அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை அறிந்து கோபமடையும் துருவ், பனிதாவை அழைத்துவர அவரது வீட்டிற்கு செல்கிறார். தந்தை ஒருபுறம் காதலன் மறுபுறம் என இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்கும் பனிதாவிடம், முடிவெடுக்க 6 மணிநேரம் அவகாசம் கொடுத்துவிட்டு செல்கிறார் துருவ். இதையடுத்து பனிதா என்ன முடிவெடுத்தார்? தந்தையின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    ஆதித்ய வர்மா

    தெலுங்கில் மெகாஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படத்தில் துருவ், அர்ஜுன் ரெட்டி என்ற கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது, ஆனால், அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு துளிகூட குறை வைக்காமால் தனது அபார நடிப்பின் மூலம் ஆதித்ய வர்மாவாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இது முதல் படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு துருவ்வின் நடிப்பு அபாரம். விக்ரமின் மகனாச்சே இது கூட பண்ணலேனா எப்படி. துருவ்வின் வாய்ஸ் மிகப்பெரிய பிளஸ். 

    ஆதித்ய வர்மா

    நாயகி பனிதா சந்து, அழகு பதுமையுடன் நேர்த்தியாக நடித்துள்ளார். காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு அசத்தல். துருவ்வின் நெருங்கிய நண்பராக வரும் அன்புதாசன் குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய டைமிங் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். துருவுக்கு அவருக்கு இடையிலான நட்பு படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, 

    மேலும் பிரியா ஆனந்த், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் ராஜா, துருவின் பாட்டியாக நடித்துள்ள லீலா சாம்சன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் கிரிசையா அர்ஜுன் ரெட்டி படத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே ஆதித்ய வர்மாவாக உருவாக்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டியை போல் இதிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியிருப்பது மிகப்பெரிய பிளஸ். 

    ஆதித்ய வர்மா

    ஏற்கனவே தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் என இரண்டு மொழிகளிலும் வெற்றிகண்டவர் சந்தீப் வங்கா. அவரின் உதவி இயக்குனரான கிரிசையா அதே கதையை தமிழில் ஆதித்ய வர்மாவாக கொடுத்து குருநாதருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். ரதனின் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றது. 

    மொத்தத்தில் ‘ஆதித்ய வர்மா’ ரசிக்க வைக்கிறான்.
    விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நாயகியாக நடித்துள்ள பனிடா சந்து, தனது காதலன் அப்படி இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ’ஆதித்ய வர்மா’. ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம், தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகம் செய்கிறார். ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசாய்யா ’ஆதித்ய வர்மா’வின் இயக்குநரானார். ’அக்டோபர்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பனிடா சாந்து என்பவர் நாயகியாக நடித்துள்ளார். 

    இன்று வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தின் காதலை போல நிஜத்தில் நடக்குமா என்ற கேள்விக்கு பதில் சொன்ன நாயகி பனிடா சாந்து, "என்னால் பொதுவாகப் பேச முடியாது. ஆனால் இதுபோன்ற ஒரு காதல் என் வாழ்க்கையில் இருக்க நான் விரும்பவில்லை. ஆதித்ய வர்மா மோசமானவன், குறைகள் இருப்பவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற காதல் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறது. 

    துருவ், பனிடா சந்து

    சினிமா என்பது இது போன்ற கதைகளைச் சொல்லத்தான். ஆனால் அதை வெறுமனே காட்டுவதற்கும், போற்றுவதற்கும் மெல்லிய வித்தியாசம் உள்ளது. நாங்கள் போற்றவில்லை என்று நம்புகிறேன். இதுவரை நான் பார்த்ததை வைத்துச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் சரியாகவே எடுத்திருக்கிறோம். நாயகனின் கோபத்தாலும், நடத்தையாலும் வரும் வலி, வேதனையைக் காட்டியிருக்கிறோமே தவிர, இதோ பாருங்கள், கோபமான இளைஞர் பைக் ஓட்டிச் செல்கிறான் என்பது போலக் காட்டவில்லை" என்று கூறியுள்ளார். 
    வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
    அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்தார். இவர்கள் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. படத்துக்கு கதாநாயகி தேர்வு நடக்கிறது. சமீபத்தில் போனிகபூரை நயன்தாரா சந்தித்து பேசினார். இதன்மூலம் வலிமை படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில், மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. வலிமை படத்தில் வில்லனாக நடிக்க வைக்க எஸ்.ஜே.சூர்யாவை பரிசீலிப்பதாக தகவல் பரவி உள்ளது. வலிமை படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது. 

    அஜித்

    படத்துக்காக அவர் இளமை தோற்றத்துக்கு மாறிய புகைப்படமும் ஏற்கனவே வெளியானது. தற்போது கருப்பு கண்ணாடி அணிந்த இன்னொரு தோற்றமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன்மூலம் அவர் வலிமை படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
    கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் சில காட்சிகளில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசி நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

    பிரியா பவானி சங்கர், சுகன்யா

    சில காட்சிகள் என்றாலும் அதற்காக குஜராத்தி மொழியையும் ஓரளவு பேச பயிற்சி எடுத்தே அந்த காட்சிகளில் நடிக்கிறார் கமல். இதற்கிடையே, பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்தார். இவரது வேடத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம். 
    மு.ராமசாமி, நாக் விஷால், யோக் ஜேபி நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்தின் விமர்சனம்.
    மு.ராமசாமி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர். அவர் கோமா நிலையில் வெகுகாலமாக இருப்பதால் அவரை கருணைக்கொலை செய்ய குடும்பம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டின் சில உள்கிராமங்களில் வயது முதிர்ந்த முதியோர்களை தலைக்கூத்தல் என்ற பெயரில் கருணைக்கொலை செய்யும் வழக்கம் உண்டு. அந்த வழக்கப்படி மு.ராமசாமியையும் கொல்ல குடும்பம் துணிகிறது. 

    இதை அறியும் மு.ராமசாமி அந்த வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்புகிறார். எங்கே செல்வது என்று தெரியாமல் அலையும் அவருக்கு ஒரு கோவிலில் அனாதை சிறுவனாக இருக்கும் நாக் விஷாலின் நட்பு கிடைக்கிறது. 80 வயதை தாண்டிய பெரியவருக்கும் 8 வயதே ஆன சிறுவனுக்கும் இடையே வயது வித்தியாசம் மறந்து ஆத்மார்த்தமான நட்பு உருவாகிறது. 

    கேடி விமர்சனம்

    இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள். இன்னொரு பக்கம் பெரியவரை கொல்ல அவரது குடும்பம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் பெரியவரும் சிறுவனும் பிரிய நேரிடுகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

    குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்கும் பெரியவராக மு.ராமசாமி. நம் வீட்டு பெரியவர்களை கண்முன் நிறுத்துகிறார். கொல்ல துணியும் குடும்பத்தினரை பார்த்து அஞ்சுவது முதல், சிறுவன் விஷால் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்பது வரை கருப்பு துரையாக வாழ்ந்து இருக்கிறார். பால்ய கால சினேகிதி வள்ளியை அவர் சந்திக்கும் இடம் நெகிழ வைக்கிறது. 

    கேடி விமர்சனம்

    சிறுவன் நாக் விஷாலும் மு.ராமசாமியுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறான். தொடக்கத்தில் மு.ராமசாமியிடம் வில்லத்தனம் காட்டுபவன் போக போக அவருடன் ஒன்றுவது நம்மையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. 

    தலைக்கூத்தல் என்ற துன்பியல் சம்பவத்தை மையக்கருவாக கொண்டாலும் படத்தின் இறுதிக்காட்சி வரை சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழ வைக்கிறார் இந்த கேடி. அன்பின் வலிமையையும் உறவுகளின் அவசியத்தையும் கருப்புதுரை மூலம் உணர்த்தியதற்காகவே மதுமிதாவுக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். வெறுமனே வசனங்கள் மூலம் கடக்க செய்யாமல் காட்சிகளின் வழியே உணர்வுகளை கூட்டி நெகிழ வைத்து அனுப்புகிறார். 

    மனதை உறைய வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழும் ஒரு அருமையான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மதுமிதா. அவருக்கு பாராட்டுகள்.

    கேடி விமர்சனம்

    தலைக்கூத்தல் என்ற நடைமுறையை கையில் எடுத்தாலும் படத்தின் எந்த காட்சியிலும் போரடிக்காமல் சுவாரசியமான திரைக்கதை, வசனத்தால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு வசனம், திரைக்கதையில் துணை நின்ற சபரிவாசன் சண்முகத்திற்கும் பாராட்டுகள். 

    மெய்யேந்திரன் கெம்புராஜின் ஒளிப்பதிவு கதை நடக்கும் கிராமங்களுக்கே நம்மை கூட்டி செல்கிறது. கார்த்திகேயமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையாலும் படத்துக்கு வலு சேர்க்கிறார். 

    மொத்தத்தில் ‘கேடி என்கிற கருப்புதுரை’ கலக்கல்.
    தனுசை வைத்து புதிய படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.
    பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

    இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படமும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படமும் உருவாகி வருகிறது.

    வைபவ் - கார்த்திக் சுப்புராஜ்

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாகவும், நட்பே துணை பட நடிகை அனகா கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் வீரப்பன் இயக்க இருக்கிறார். 

    ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான ‘மேயாதமான்’ படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×