என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மு.ராமசாமி, நாக் விஷால், யோக் ஜேபி நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்தின் விமர்சனம்.
    மு.ராமசாமி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர். அவர் கோமா நிலையில் வெகுகாலமாக இருப்பதால் அவரை கருணைக்கொலை செய்ய குடும்பம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டின் சில உள்கிராமங்களில் வயது முதிர்ந்த முதியோர்களை தலைக்கூத்தல் என்ற பெயரில் கருணைக்கொலை செய்யும் வழக்கம் உண்டு. அந்த வழக்கப்படி மு.ராமசாமியையும் கொல்ல குடும்பம் துணிகிறது. 

    இதை அறியும் மு.ராமசாமி அந்த வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்புகிறார். எங்கே செல்வது என்று தெரியாமல் அலையும் அவருக்கு ஒரு கோவிலில் அனாதை சிறுவனாக இருக்கும் நாக் விஷாலின் நட்பு கிடைக்கிறது. 80 வயதை தாண்டிய பெரியவருக்கும் 8 வயதே ஆன சிறுவனுக்கும் இடையே வயது வித்தியாசம் மறந்து ஆத்மார்த்தமான நட்பு உருவாகிறது. 

    கேடி விமர்சனம்

    இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள். இன்னொரு பக்கம் பெரியவரை கொல்ல அவரது குடும்பம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் பெரியவரும் சிறுவனும் பிரிய நேரிடுகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

    குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்கும் பெரியவராக மு.ராமசாமி. நம் வீட்டு பெரியவர்களை கண்முன் நிறுத்துகிறார். கொல்ல துணியும் குடும்பத்தினரை பார்த்து அஞ்சுவது முதல், சிறுவன் விஷால் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்பது வரை கருப்பு துரையாக வாழ்ந்து இருக்கிறார். பால்ய கால சினேகிதி வள்ளியை அவர் சந்திக்கும் இடம் நெகிழ வைக்கிறது. 

    கேடி விமர்சனம்

    சிறுவன் நாக் விஷாலும் மு.ராமசாமியுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறான். தொடக்கத்தில் மு.ராமசாமியிடம் வில்லத்தனம் காட்டுபவன் போக போக அவருடன் ஒன்றுவது நம்மையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. 

    தலைக்கூத்தல் என்ற துன்பியல் சம்பவத்தை மையக்கருவாக கொண்டாலும் படத்தின் இறுதிக்காட்சி வரை சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழ வைக்கிறார் இந்த கேடி. அன்பின் வலிமையையும் உறவுகளின் அவசியத்தையும் கருப்புதுரை மூலம் உணர்த்தியதற்காகவே மதுமிதாவுக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். வெறுமனே வசனங்கள் மூலம் கடக்க செய்யாமல் காட்சிகளின் வழியே உணர்வுகளை கூட்டி நெகிழ வைத்து அனுப்புகிறார். 

    மனதை உறைய வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழும் ஒரு அருமையான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மதுமிதா. அவருக்கு பாராட்டுகள்.

    கேடி விமர்சனம்

    தலைக்கூத்தல் என்ற நடைமுறையை கையில் எடுத்தாலும் படத்தின் எந்த காட்சியிலும் போரடிக்காமல் சுவாரசியமான திரைக்கதை, வசனத்தால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு வசனம், திரைக்கதையில் துணை நின்ற சபரிவாசன் சண்முகத்திற்கும் பாராட்டுகள். 

    மெய்யேந்திரன் கெம்புராஜின் ஒளிப்பதிவு கதை நடக்கும் கிராமங்களுக்கே நம்மை கூட்டி செல்கிறது. கார்த்திகேயமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையாலும் படத்துக்கு வலு சேர்க்கிறார். 

    மொத்தத்தில் ‘கேடி என்கிற கருப்புதுரை’ கலக்கல்.
    தனுசை வைத்து புதிய படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.
    பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

    இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படமும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படமும் உருவாகி வருகிறது.

    வைபவ் - கார்த்திக் சுப்புராஜ்

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாகவும், நட்பே துணை பட நடிகை அனகா கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் வீரப்பன் இயக்க இருக்கிறார். 

    ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான ‘மேயாதமான்’ படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கு பட உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி, அந்த பழக்கம் இப்போது உதவியாக இருக்கிறது என்று பேட்டியளித்துள்ளார்.
    நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘வாழ்க்கையில் நினைத்தது நடக்காமல் போனாலோ அல்லது செய்த வேலைக்கு எதிர்மறையான பலன்கள் கிடைத்தாலோ நிராசைக்கு ஆளாவது உண்டு. நான் அதை வேறு கோணத்தில் பார்ப்பேன். ஏதாவது நடக்க வேண்டும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. எந்த மாதிரி பிரச்சினை வந்தாலும் அதில் இருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, இந்த மாதிரி ஆகி விட்டதே என்று சோர்ந்து போக கூடாது.

    சாய் பல்லவி

    படிக்கிற காலத்திலேயே எது வந்தாலும் இது நம் நல்லதுக்குத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொண்டேன். அந்த பழக்கம் இப்போது சினிமா துறையில் எனக்கு உதவியாக இருக்கிறது. இங்கேயும் ஏதாவது தவறு நடந்தால் நமக்கு கற்றுக்கொடுக்கத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பேன்.

    சினிமாவில் நடிகையாக இருப்பது குறுகிய காலம்தான். நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று தெரியாது. ஆனால் நடிக்கிற காலத்தில் ஒவ்வொரு புதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்’ என்றார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், உபேந்திரா மூலம் கன்னட மொழியில் அறிமுகமாக இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். அவர் கூறியதாவது:-

    “கதாநாயகியாக 10 வருடங்கள் நடித்து முடித்து விட்டேன். இப்போதும் அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து பிசியாகவே இருக்கிறேன். 10 வருடத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை திரையில் பார்க்கும் ரசிகர்களும் என்னோடு வேலை செய்பவர்களும் புரிந்து இருப்பார்கள்.

    சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் சக்தி அனுபவத்தால் வந்து இருக்கிறது. அதே மாதிரி கதை தேர்விலும் அனுபவம் வந்து இருக்கிறது. 50 படங்களை தாண்டி விட்டேன். 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சிய கனவாக இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இருந்தால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது.

    உபேந்திரா - காஜல் அகர்வால்

    நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாகவே பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். இந்தி படங்களும் உள்ளன. ஆனால் கன்னட மொழியில் இதுவரை நடிக்கவில்லை. தற்போது உபேந்திரா கதாநாயகனாக வரும் கப்சா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். கன்னடத்தில் இது எனக்கு முதல் படம். ஆனாலும் இந்த படத்தை 7 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.”

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    மாடலிங் துறையில் வெற்றி பெற நிறம், ஸ்டைல் முக்கியம் இல்லை என நடிகை ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்.
    விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த 'நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ’பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபட்டவர். 

    ரைசா வில்சன்

    இது குறித்து, அவர் கூறுகையில், ''மாடலிங் துறையில் ஈடுபட, சிவப்பாக இருக்க வேண்டும், ஸ்டைலாக நடந்து கொள்ள வேண்டும் என, பலர் நினைக்கின்றனர். உலகில் பிறந்த ஒவ்வொருவருமே, அழகு தான். மாடலிங் துறையில் வெற்றி பெற, முறையான பயிற்சி இருந்தாலே போதும்; எவரும் அத்துறையில், வெற்றிக் கொடி நாட்டலாம்,'' என்றார்.
    தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ராசி கன்னா, 16 வயதில் டேட்டிங் சென்றதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராசி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் சங்கத்தமிழன் படம் திரைக்கு வந்தது. 

    ராசி கன்னா

    இந்த படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் கவரப்பட்டுள்ளது, இந்த நிலையில் ராசி கன்னா ஒரு பேட்டியில் தான் டேட்டிங் சென்றது குறித்து பேசியுள்ளார். அதில் 'நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட்டிங் சென்றேன். அந்த பையனின் வயதும் 16 தான்' என்று கூறியுள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
    போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
    மதுரை மாநகர காவல்துறை சார்பாக அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ‘வெல்வோம்’ என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.

    நடிகர் சசிகுமார் பேசுகையில், ‘நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து முதல்முறையாக காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோ. காவல்துறை தான் ரியல் ஹீரோ. எந்த பிரச்சினை வந்தாலும் காவல்துறை செயலியை பயன்படுத்துங்கள். சிசிடிவி கேமரா இருப்பது சாட்சி சொல்வதற்கு சமம். நாம் சாட்சி சொல்ல பயப்பட்டாலும் சி.சி.டி.வி. யாருக்கும் பயப்படாது’ என்றார்.

    சமுத்திரகனி

    நடிகர் சமுத்திரகனி பேசியதாவது:- ‘ஏழரை கோடி மக்கள் உள்ள நாட்டில் ஒன்றரை லட்சம் காவலர்கள் மட்டுமே உள்ளனர். எல்லா வற்றுக்குமே காவலர்கள் வர வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும். இளைஞர்கள் எதை எதையோ பதிவிறக்கம் செய்வதை விடுத்து காவல்துறை செயலிகளை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். ஒரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன். ஆனால் நம்முடைய காவல்துறை தினம் தினம் அதனை அனுபவிக்கிறார்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    ஆடை படத்தை தொடர்ந்து அமலாபால் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார். அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    அதோ அந்த பறவை போல பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி வெளியாக உள்ளது. அமலாபால் நடிப்பில் இந்தாண்டு வெளியான ஆடை படம் நல்ல வரவேற்பு பெற்றதால், ரசிகர்களிடையே ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படமும் டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    நடிகை இலியானா தான் தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர்.

    காதல் முறிந்ததை அடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தார். தன் காதலரை விட்டு பிரிந்ததால் இலியானா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து மீண்டது குறித்து அவர் கூறியதாவது:- வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன். 

    இலியானா

    மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
    வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க உள்ளார்.
    விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

    மோகன் ராஜா

    இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ’என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். 
    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் ‘தலைவி’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார். அவரது தோற்றங்களை ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார்.   

    தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன. அந்த வகையில் தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க வைக்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. 

    கங்கனா ரனாவத்

    ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் என்.டி.ஆர். போல் யாராலும் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.
    ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கமல்ஹாசன் திரைப்படத்துறையில் செய்த கலை சேவையை பாராட்டி ஒடிசா மாநிலம் செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அவருக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளார். கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.

    கமல், நவீன் பட்நாயக்

    திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக திகழும் அவருக்கு இந்த பட்டம் அளித்தது தமிழ்நாட்டிற்கும் தமிழ் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்த செஞ்சுரியன் பல்கலைக்கழகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கிறது. 

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×