என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித்குமார்-வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தில் பிரபல வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

    பாவெல் நவகீதன்

    இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அஜித் நடிக்கும் சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வலிமை படத்தில், வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார். மெட்ராஸ், வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ள பாவெல் நவகீதன், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வி1 படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மலையாள நடிகை மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க எந்தவித தயக்கமும் இல்லை என நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
    மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    மலையாள முன்னணி நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

    திலீப், மஞ்சுவாரியர்

    இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு திலீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நடிகை கடத்தல் வழக்கில் முக்கியமான விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தற்போது இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சுவாரியர் மீது எனக்கு கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை.

    பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன். மலையாளத்தில் எனக்கு எதிராக உருவாக்கப்பட்ட மலையாள திரையுலக பெண்கள் கூட்டமைப்பினர் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்களும் எனது சகாக்கள்தான். மலையாள பட உலகில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.” இவ்வாறு திலீப் கூறினார்.
    பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பட அதிபரை நடிகை சஞ்சனா தாக்கியதாக கூறப்படுகிறது.
    தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா கல்ராணி. தற்போது மேலும் 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசிக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

    சஞ்சனா கல்ராணி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு சென்று இருந்தார். அதே நிகழ்ச்சிக்கு இந்தி பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்பவரும் வந்து இருந்தார். நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சஞ்சனாவுக்கும் தயாரிப்பாளர் வந்தனா ஜெயினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சஞ்சனா கல்ராணி

    ஒரு கட்டத்தில் மோதல் தீவிரமாகி சஞ்சனா கல்ராணி கோபத்தில் பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோப்பான் பார்க் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் செய்தார். சஞ்சனா கல்ராணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சஞ்சனா கல்ராணி தரப்பில் கூறும்போது, தயாரிப்பாளருடன் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால் அவர்கள் அடித்துக் கொள்ளவில்லை என்றனர்.
    முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறார்.
    முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழைப்போலவே தெலுங்கு, இந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். குறிப்பாக, ரஜினியின் பேட்ட படம் தெலுங்கில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. 

    ரஜினிகாந்த்

    அதனால் இந்த முறை தர்பார் தெலுங்கு பதிப்பை வெளியிடும் தில்ராஜூ, மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் தர்பாரை வெளியிட்டு வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். அதனால் வருகிற 3-ந்தேதி படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை பெரிய அளவில் ஐதராபாத்தில் நடத்துகிறார். இதில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.
    பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரிஷிகாந்த், மேஹாலி நடிப்பில் உருவாகி இருக்கும் 370 படத்தின் முன்னோட்டம்.
    பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், 'கின்னஸ்' புகழ் இயக்குனர் பாபு கணேஷ் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘370’. இதில் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேஹாலி நடிக்கிறார். மற்றுமோரு வித்தியாசமான வேடத்தில் திருநங்கை நமிதா நடித்துள்ளார். 

    இன்று பரபரப்பாக உலகம் முழுவதும்  பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் ‘370’.  இதனை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் 48 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் நாயகன் ரிஷிகாந்த், இப்படத்தில் கமாண்டோவாக நடிக்கிறார்.  
    இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.
    தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அமிதாப் பச்சனால் அன்றைய தினம் பங்கேற்க இயலவில்லை. 

    அமிதாப் பச்சன் விருது பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

    இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்தார்.

    இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.
    மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், அதனை தனது தாயார் மேனகாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.
    மகாநடி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த நிலைக்கு நான் எப்படி சென்றேன் என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதைய என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருந்தாலும், முயற்சிக்கிறேன்.

    இது ஒரு கனவு மட்டுமல்ல; என்னை தொடர்ந்து கொண்டே வந்த ஒரு குறிக்கோளாகவும் நினைக்கிறேன். என்னுடைய மறக்க முடியாத இந்த பயணத்தில் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றி. தேசிய விருதை என்னுடைய அம்மா மேனகாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    கீர்த்தி சுரேஷ்

    எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து செயல்படுவது என்னுடைய மாமா, நடிகர் கோவிந்து தான். மகாநடியில் நடிக்கலாமா... வேண்டாமா என்ற இரு எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால், அதில் கட்டாயம் நடித்து தான் ஆக வேண்டும் என, என்னை தள்ளியவர் அவர் தான். அவருடைய பார்வை வித்தியாசமானது. வேறு யாரும் சிந்திக்க முடியாதது. சாவித்திரி ஆசீர்வாதத்தால் தான், அவருடைய கேரக்டரில் என்னால் நடிக்க முடிந்தது. சாவித்திரிக்கு எப்போதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
    நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 64 படத்தின் கதை தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 64. இதுவரை 2 கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக, தற்போது படக்குழு, கர்நாடாகாவின் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறது. நடிகர் விஜய்யும், அவருக்கு எதிராக வில்லனாக படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

    விஜய்

    விஜய், ஷிமோகாவில் இருக்க, விரைவில் நடிகர் விஜய் சேதுபதி அங்கு செல்கிறார். கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் எதிராக கருத்து மழை பொழியும் கேரக்டரில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. கல்லூரி பேராசிரியர் வேடத்தை நடிகர் விஜய் ஏற்று நடிக்கிறார். வில்லன் விஜய் சேதுபதியுடன், பேராசிரியர் விஜய் சண்டையிடுவது போன்ற காட்சிகள் உள்ளன. அப்படிப்பட்ட காட்சிகளைத்தான், ஷிமோகாவில் படக்குழு படமாக்கவிருக்கிறது.
    பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தன்னை செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்ததாக ரஜினி பட நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான ஆள் இன் ஆள் அழகு ராஜா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார்.

    நிர்வாண வீடியோ, பாத்ரூம் செல்பி என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் நடித்து வருகிறார். பல்வேறு கவர்ச்சியான வேடங்களில் இவர் நடித்ததால் பாலியல் நகைச்சுவை படங்களில் இவரை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்ததாக சமீபத்தில் கூறியுள்ளார் ராதிகா.

    ராதிகா ஆப்தே

    அதில் அவர், ‘ஒரு துறையில் கால் வைத்தால் அதேதான் வழியென்பது இல்லை ஆனால் அந்த பாதைக்கே என்னை அழைத்தார்கள். ஆனால், அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டு தற்போது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
    பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
    நடிகர் தனுஷ் நடிக்கும் ‘சுருளி’ படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைபட்டியில் நடந்து வருகிறது. இதற்காக தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் அங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்.

    நடிகர் தனுஷ்

    அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவில் சென்று, சாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே தனுஷ் வந்ததை அடுத்து கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பின்னர் அவர் ரோப்கார் வழியே அடிவாரம் சென்று பழனி கோம்பைபட்டிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
    ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தில் அரசியல் இல்லை என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்த் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் உருவாகி இருக்கும் புதிய படம், ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:- “தர்பார்’ மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். படத்தில் அரசியல் இல்லை. அரசியலை மனதில் வைத்து இந்த படத்தை நான் இயக்கவில்லை. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளிவந்த போது எம்.ஜி.ஆர். அரசியலில் இருந்தார். ஆனால் அந்த படத்தில் அரசியல் பற்றி பேசவில்லை. 

    அதுபோலதான் ‘தர்பார்’ படத்தில் அரசியல் பற்றி ரஜினிகாந்த் பேசவில்லை. படத்தில் அவர் தாடியுடன் நடித்து இருக்கிறார். அவருடைய தாடிக்கு காரணம் சொல்லப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த் ஒரு ஆச்சரியமான மனிதர். மனதால் அவர் ஒரு இளைஞர். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவார். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவருடைய கேரவனுக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து இருப்பார்கள்.

    ரஜினிகாந்த்

    எல்லோருடனும் ‘போட்டோ’ எடுத்துக் கொள்வார். பாதுகாப்பு பற்றி அவர் கவலைப்பட மாட்டார். அவரை வைத்து ‘சந்திரமுகி-2’ படத்தை எடுக்க ஆசைப்பட்டேன். அதற்காக ஒரு கதையை தயார் செய்து அவரிடம் சொன்னேன். ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதில் சில தடைகள் இருந்ததால், அந்த திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது.

    ‘தர்பார்’ படத்தில் நயன்தாரா ‘ஆர்கிடெக்’காக நடித்து இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் கதையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்தது. பொங்கல் விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.” இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, தன்னை போல் அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ள அவருக்கு இப்போது மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என்னை போல் பெரிய அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. எல்லா மொழிகளிலும் நடித்து இந்தியாவிலேயே என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற அளவுக்கு பிரபலமாகி இருக்கிறேன். 

    இந்த பெயரும் புகழும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து இருக்கிறேன். அந்த படங்கள் மூலம் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டேன். ஏற்கனவே இந்தி படங்களில் நடித்து இருக்கிறேன். இப்போது மீண்டும் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. நவாஜூதின் சித்திக் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். 

    தமன்னா

    இந்த படத்தில் நடிப்பதை சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். ஏற்கனவே நடித்த படங்களில் இருந்து இந்த படத்தின் கதாபாத்திரம் வேறுபட்டு இருக்கும். ரசிகர்கள் என்னை புதிதாக நடிக்க வந்த கதாநாயகி மாதிரி பார்க்க வேண்டும். அப்போதுதான் நானும் ஏற்கனவே நடித்ததையெல்லாம் மறந்து புதிதாக அறிமுகமான மாதிரி நடிக்க முடியும். புதிதாகவும் காட்சி அளிக்க முடியும்.” இவ்வாறு தமன்னா கூறினார்.
    ×