என் மலர்
சினிமா செய்திகள்
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பூஜாகுமார் தற்போது விலகி இருக்கிறார்.
சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சில காரணங்களால் பூஜா குமார் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இவர் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். விஜய்காந்துடன் இணைந்து மாநகர காவல் அர்ஜுனுடன் இணைந்து மேட்டுபட்டி படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்செயன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசால் தற்போது நாகார்ஜுனா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ‘வைல்டு டாக்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக சையாமி கெர் நடிக்கிறார். சாலமன் இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, தேசிய பாதுகாப்பு படை வீரராக வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாய்லாந்திலும் கடுமையாகப் பரவி இருப்பதால் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது.

இதுபற்றி கதாநாயகி சையாமி கெர் கூறும்போது, ‘இந்த படத்துக்காக கடந்த ஒரு மாதமாக தற்காப்புக் கலை பயிற்சி பெற்று வந்தேன். அதோடு தாய்லாந்தில் நடக்கும் ஷூட்டிங்கை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, படக்குழு ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டது’ என்றார்.
ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண், சதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சீறு’ படத்தின் விமர்சனம்.
மாயவரத்தில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வரும் ஜீவாவுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது. இதனால், ஆத்திரமடையும் எம்.எல்.ஏ, ஜீவாவை கொல்ல சென்னை வியாசர்பாடியின் பெரிய ரவுடியான வருணை மாயவரத்திற்கு அழைக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட ஜீவா பயப்படாமல், ‘வருண் வரட்டும் பார்க்கலாம்’ என காத்திருக்கிறார். மாயவரத்திற்கு வரும் வருண், பிரசவ வலியில் துடித்த ஜீவாவின் தங்கையை மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றுகிறார். தன்னை கொல்ல வந்த இடத்தில், தன் தங்கையின் உயிரை காப்பாற்றிவிட்டு சென்ற வருணின் மனிதாபிமானத்தை நினைத்து பெருமைப்படுகிறார் ஜீவா. அவரைத் தேடி சென்னைக்கு வரும் ஜீவா, ரவுடிகளால் கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வருணை காப்பாற்றுகிறார். அத்துடன் வருணை கொல்ல வந்தவர்களை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில் வருணை கொல்ல வந்தவர்களை ஜீவா கண்டுபிடித்தாரா?, இந்த கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜீவா, ஆக்ஷன், சென்டிமெண்ட் நடிப்பில் அசத்தி இருக்கிறார். வழக்கமான ஜீவாவை இதில் பார்க்க முடியவில்லை. தங்கை மீது பாசம் காட்டுவது, நட்புக்கு மரியாதை கொடுப்பது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். நாயகியாக வரும் ரியா சுமன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் சதீஷ்.

ரவுடியாக மிரட்டி இருக்கிறார் வருண். படத்திற்கு படம் நடிப்பில் முன்னேற்றம் காண்பித்து வருகிறார். ரவுடிக்கு உண்டான தோற்றம், உடலமைப்பு என மல்லி கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். மற்றொரு வில்லனாக ஒயிட் காலர் கிரிமினலாக வரும் நவ்தீப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.
அண்ணன்-தங்கை பாசம், மற்றும் நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. ஆண்கள் மட்டும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பெண்களும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசனையுடன் காட்சிகளை அமைத்திருக்கிறார். குறிப்பாக, கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். கிராமத்து அழகையும், நகரத்து அழகையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறது பிரசன்னா குமாரின் கேமரா.
மொத்தத்தில் ‘சீறு’ தாறுமாறு.
ஹாலிவுட்டில் 60-களில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபல நடிகர் கிரிக் டக்ளஸ் 103 வயதில் மரணமடைந்துள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில் 1950 மற்றும் 60-களில் முன்னணி நடிகராக இருந்தவர் கிரிக் டக்ளஸ். அவர் நடிப்பில் 1974-ல் வெளிவந்த அவுட் ஆப் த பாஸ்ட், சாம்பியன் (1949), த பேட் அண்ட் த பியூட்டிபுல் (1952), லஸ்ட் ஆப் லைப் பாத்ஸ் ஆப் குளோரி, த வைக்கிங், செவன் டேஸ் இன் மே, சேட்டர்ன் 3, டாப் கய்ஸ் உள்பட பல படங்கள் வெற்றி பெற்றன.
ஸ்கேல்வாக் என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கிரிக் டக்ளஸ் நடிப்பில் 2008-ம் ஆண்டு எம்பயர் ஸ்டேட் பில்டிங் மர்டர்ஸ் என்ற டி.வி தொடர் வெளியானது. அமெரிக்க திரைப்பட இன்ஸ்ட்டியூட் வெளியிட்ட அமெரிக்க சிறந்த நடிகர்கள் பட்டியலில் 17-வது இடத்தில் இருந்தார்.

50 வருடங்களாக சினிமா துறையில் ஆற்றிய சாதனைக்கான இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள பிரேவரி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கிரிக் டக்ளஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 103. கிரிக் டக்ளஸ் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சினிமாவை விட்டு விலக இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
‘96 படத்தில் விஜய் சேதுபதியை விட திரிஷா நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதன் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் என்னை நடிக்க தேர்வு செய்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் 10 வருடங்களாக சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன்.

அதன் பிறகு சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று விடுவேன். எனக்கு குடும்பம் இருப்பதால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். நடிப்பதை விட்டாலும் ஏதாவது ஒருவகையில் சினிமாவில் எனது தொடர்பு இருக்கும். பொதுவாகவே நடிகைகளுக்கு சினிமா ஆயுள் குறைவுதான். சினிமாவை விட்டு அவர்கள் விலகியதும் ரசிகர்களும் மறந்து விடுவார்கள்.
சினிமாவில் இருந்து விலகினாலும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ளும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது ஜானு படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் எந்தமாதிரியான வரவேற்பு இருக்குமோ என்ற பதற்றம் இருக்கும். பணத்துக்காக நான் நடிக்கவில்லை. கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
திரையிசை பாடகர் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்.
திரையிசை பாடகர் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் (வயது 62). காக்கநாடு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கடந்த 4ந்தேதி இரவு காணாமல் போனார். இதுபற்றி கேரள போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கொச்சி நகரின் வல்லார்படம் பகுதியில் ஆற்றங்கரையோரம் ஜஸ்டினின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி முலவுகாடு காவல் நிலைய அதிகாரி சுனு கூறும்போது, ஜஸ்டினுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், அவர் உயிரிழந்தது பற்றிய உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறியுள்ளார். அவரது உடல் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
நேற்று முதல் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. சினிமா தயாரிப்பாளர், பைனான்சியர், அவரது நண்பர், நடிகர் வீடு என மொத்தம் 38 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு ரூ.300 கோடிவரை வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நான் சிரித்தால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குஷ்பு, அவரை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சுந்தர். சி தயாரித்து இருக்கும் படம் நான் சிரித்தால். ஐஸ்வர்யா மேனன், கே. எஸ். ரவிக்குமார், சாரா, படவா கோபி, கதிர், "எரும சாணி" விஜய் போன்ற பலர் நடித்து இருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சுந்தர்.சி ஆதியை வைத்து தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது.
இதற்கு முன் மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய படங்கள் இவரை வைத்து தயாரித்து உள்ளார். "கெக்க பெக்க" என்ற குறும்படத்தையே இவர்கள் சற்று மெருகேற்றி தற்போது திரைப்படமாக எடுத்து உள்ளனர். இப்படத்தை ராணா இயக்கி உள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு பேசியதாவது ‘இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்.’ என்று கூறினார்.
மஞ்சித் திவாகர் இயக்கத்தில் அக்ஷதா ஸ்ரீதர், ஆர்.கே.சுரேஷ், நேகா சாக்சேனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வன்முறை’ படத்தின் விமர்சனம்.
நாயகி அக்ஷதா தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். நாயகியை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விடுகிறார். இதனால் கருவுற்ற அக்ஷதா, கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என கூறி அக்ஷதாவை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
கருக்கலைப்பு செய்வதற்காக சென்னை வரும் அக்ஷதாவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி கூட்டிச்செல்லும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றார். அப்போது மயக்கமடையும் அக்ஷதாவை, இறந்துவிட்டதாக கருதி அங்கேயே விட்டு சென்றுவிடுகின்றனர்.

போலீஸ் அதிகாரியான ஆர்.கே.சுரேஷ் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். பின்னர் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார். இறுதியில் ஆர்.கே.சுரேஷ் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆர்.கே.சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில் வந்தாலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.

நாயகி அக்ஷதா ஸ்ரீதர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் டாக்டராக வரும் நேகா சாக்சேனாவும், தாயாக வரும் சர்மிளாவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆட்டோ டிரைவராக வரும் வினோத் கிருஷ்ணன் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள் வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் எடுத்துள்ளார் இயக்குனர் மஞ்சித் திவாகர்.

அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். சன்னி விஸ்வநாத்தின் பின்னணி இசை வலுசேர்க்கிறது. ஐயப்பனின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘வன்முறை’ சுவாரஸ்யம் குறைவு.
தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராசி கண்ணா, முத்த காட்சியை கலைக் கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா, ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும், விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.

அது குறித்து பதிலளித்துள்ள ராசி கண்ணா, "அந்தக் காட்சிகள் கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு அவை தேவையானவை. ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை எடுக்கவில்லை. படத்தைப் பார்க்காமல் அவை பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது," என அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலிருந்து ரூ.17.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய், பிகில் படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது. நடிகர் விஜயின் வருமானம் குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 77 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்குமார் 5 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன், சகுனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கார்த்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.






