என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் படம் புஷ்பா. ஐந்து மொழிகளிலும் இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

    இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.

    இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. 

    இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 
    கொரோனா லாக்டவுன் நிலையில் வெங்கட்பிரபுவின் சென்னை 28 கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. இதில் சிவா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

    தற்போது கொரோனா லாக்டவுன் நிலையிலும் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

    கொரோனாவை தடுக்கும் வழிமுறைகள் பற்றி பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு சின்ன விடியோவை இயக்கி வெளியிட்டுள்ளார். தனது வீட்டில் இருந்தபடியே சென்னை 28 படத்தின் நடித்தவர்களை அவர்கள் வீட்டில் இருந்தபடியே நடிக்கவைத்து அந்த வீடியோவை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு.


    கையை சோப்பு போட்டு கழுவவேண்டும், சானிடைசர் பயன்படுத்தவேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கருத்துக்களை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன் என்று சிபிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
    நடிகர் சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வால்டர்' நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிபிராஜுடன் சமுத்திரக்கனி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

    இதனையடுத்து சிபிராஜ் கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் ஜான் மகேந்திரன் இணைந்து திரைக்கதை அமைக்க, சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார்.
    தீரன் சின்னமலை
    இந்நிலையில் நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ''இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.
    சூப்பர் ஹிட்டான இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
    விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் 2015ல் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை. ஆர்யா அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.  டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ட்விட்டரில் கூறியுள்ளது.

    அது மட்டுமின்றி தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சினிமா துறை முடங்கியுள்ளது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு பிரீ புரடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறியுள்ளனர்.
    விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படம், கடந்த வாரம் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

    ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

    படம் எப்போது திரைக்கு வரும்? என்று ரசிகர்கள் கேள்வி விடுத்துள்ளனர். ‘‘முதலில் உயிர் பிழைப்போம்.. அப்புறம் கொண்டாடலாம்’’ என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார். ‘‘விரைவில் படம் திரைக்கு வரும். அதுவரை பொறுத்திருங்கள்’’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

    அவரிடம், ‘‘படம் வரட்டும்.. அதை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடலாம்’’ என்று ரசிகர்கள் உத்தரவாதம் அளித்து இருக்கிறார்கள்.
    இரண்டு பேரை வைத்து படம் எடுப்பது சுமையாக இல்லை என்று இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.
    ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமானவர் டைரக்டர், ராஜமவுலி. இவர் இயக்கிய ‘பாகுபலி,’ ‘பாகுபலி 2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்ததுடன், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

    அந்த 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி, ‘ஆர் ஆர் ஆர்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
    இயக்குனர் ராஜமவுலி
    ‘‘இரண்டு பேரும் எதிர் எதிர் நட்சத்திர குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், அதையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அதனால் இரண்டு பேரையும் இணைந்து நடிக்க வைப்பது சுமையாக இல்லை’’ என்கிறார், டைரக்டர் ராஜமவுலி.
    கொரோனா பாதிப்பு மற்றும் அதை பற்றி வரும் தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது என்று தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
    அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் இரண்டு புலிகளுக்கும், மூன்று சிங்கங்களுக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதையடுத்து நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா பரவுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவியதால் பலர் தங்கள் வீடுகளில் இருந்து நாய், பூனைகளை வெளியே விரட்டுவதாக தகவல் பரவியது. இதனை விலங்குகள் ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். பிராணிகள் மூலம் கொரோனா பரவாது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்  கூறியிருப்பதாவது:-

    ‘மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் இது மோசமான காலம் ஆகும். வீடுகளில் வளர்க்கும் பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று பயந்து, அவற்றை மக்கள் கைவிடுவதாக வெளியாகும் தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது. பிராணிகள் மூலம் வைரஸ் பரவாது என்பதை நிரூபிக்கும் தகவல்கள் வெளியான பிறகும் இவை நடக்கின்றன. மனித நேயத்தை இழக்க வேண்டாம். விலங்குகளையும் அன்பாக பார்த்துக்கொள்வோம்’

    இவ்வாறு வெங்கடேஷ் கூறியுள்ளார்.
    கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து 18 மணிநேரம் விக்ரம் சண்டைக்காட்சியில் நடித்ததாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு இந்தியா திரும்பியது. கொரோனா முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்க உள்ளனர். 

    இந்நிலையில், கோப்ரா படத்தின் நாயகன் விக்ரம் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சிறப்பு வீடியோ ஒன்றை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், கோப்ரா படத்திற்காக, விக்ரம் 18 மணிநேரம் தொடர்ந்து சண்டை காட்சியில் நடித்ததாகவும், இதற்கு பின்னரும் வேறு ஒரு சீன் எடுக்க வேண்டும் என சொன்னதற்கு முகம் சுளிக்காமல் விக்ரம் சம்மதம் தெரிவித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
    யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்க உள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

    ஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.
    தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கிறது. இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார். 

    அதில் கூறியிருப்பதாவது: 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. மே மாதம் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (தபால் அல்லது கூரியரில் அனுப்பும் உறுப்பினர்கள் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்)

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், மூடி முத்திரையிட்ட பெட்டியில் 19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும். 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தயாரிப்பாளர் சங்கம் லோகோ

    25.05.2020 அன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் தகுதிப்பெற்ற உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்.

    தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம்: தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சம், மற்ற நிர்வாகிகள் பதவிக்கு, ரூ. 50,000 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 10,000. இந்த தேர்தலில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் என்.ராமசாமி என்கிற முரளி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் டி.சிவா, தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
    கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம் தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின. இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். 

    சஞ்சய், விஜய்

    ‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை. சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
    இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடும் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கோப்ரா படக்குழு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
    நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும்  கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 

    இந்நிலையில் விக்ரம் தனது 54-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கோப்ரா படக்குழு "தங்களுக்கு ஏன் விக்ரமை பிடிக்கும்"  என்பதை கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    ×