என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
    அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார், நடிகை எமி ஜாக்சன்.

    “இதயம் கணக்கிறது. மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அகமத் ஆர்பெரி, பிரோனா டெய்லர் மற்றும் ஜார்ஜ் பிலாய்ட் ஆகியோரின் கொடூரமான கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். இது மனிதகுலத்திற்கு எதிரான பாவம். கறுப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் போலீசின் மிருகத்தனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாம் அனைவரும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

    எமி ஜாக்சன்


    சமூகவலைதளங்களில் பதிவு செய்வதைவிட உரையாடலை மேற்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்“ என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.
    அருண்விஜயை வைத்து பேய்ப்படம் இயக்க உள்ள மிஷ்கின், அதன் தலைப்பை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

    மிஷ்கின், அருண்விஜய்

    இதையடுத்து மிஷ்கின் இரண்டு படங்களை உறுதி செய்துள்ளார். அதன்படி அருண்விஜய் மற்றும் சிம்பு படங்களை அவர் இயக்க உள்ளார். மிஷ்கின், அருண்விஜய்யை வைத்து பேய் படம் ஒன்று இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் அருண்விஜய் போலீசாக நடிக்கிறாராம். மேலும் இப்படத்திற்கு 'காவு' என தலைப்பு வைக்க உள்ளதாகவும் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சிம்பு நடிக்கும் படத்தை அடுத்தாண்டு எடுக்க திட்டமிட்டுள்ளதாக மிஷ்கின் கூறியுள்ளார்.
    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் காடன் படத்தின் முன்னோட்டம்.
    ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காடன்’. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.

    மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும்  இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    விஷ்ணு விஷால்

    இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக் குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இப்படத்தின் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள். இப்படத்திற்கு ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார்.
    பிரபல நடிகரின் ரசிகர்கள் டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்ததாக, நடிகை மீரா சோப்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. தனது நிஜப்பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் இந்தியில் நடித்து வருகிறார். மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார்.

    சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரை விட மகேஷ் பாபு தான் மிகவும் பிடிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்ததால், கடுப்பான ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர். அதில் பாலியல் மிரட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் ஜூனியர் என்.டி.ஆரை டேக் செய்து கருத்து பதிவிட்ட மீரா சோப்ரா, உங்களை விட மகேஷ்பாபு தான் பிடிக்கும் என்று கூறியதால் (சில அநாகரிகமான பதிவுகளைக் குறிப்பிட்டு) இப்படியெல்லாம் நான் அழைக்கப்படுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. உங்களது ரசிகர்களால் எனது பெற்றோருக்கும் இப்படிப்பட்ட வாழ்த்துகள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

    இப்படிப்பட்ட ரசிகர்களை பெற்றிருப்பது தான் வெற்றி என்று நினைக்கிறீர்களா? எனது இந்த பதிவிற்கு பதிலளிப்பீர்கள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதுபோன்று அவதூறாக பேசுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று பாடகி சின்மயி மீரா சோப்ராவிடம் டுவிட்டர் வாயிலாக தெரிவித்தார்.
    முதல் படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கு பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் நன்றி தெரிவித்துள்ளார்.
    சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. ஜே.ஜே.பெட்ரிக் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தை தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். 

    இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “எனது 'பொன்மகள்' ஆனதற்கும், இந்த படத்தின் மீதும், என்மீதும் நம்பிக்கை வைத்ததற்கு உங்களுக்கு நன்றி சொன்னால் பத்தாது. 

    இந்த ஸ்கிரிப்டில் உறுதியாக இருந்தது முதல், அதை சூர்யா சாரிடம் எடுத்துச் சென்றது வரை, நீங்கள் என்னை ஊக்குவிக்கவில்லை என்றால் அது நடந்திருக்காது. உங்கள் அலாதியான அன்பும், நம்பிக்கையும் தான் படத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி மேம். எனது முதல் படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றிய உங்களுக்கும் சூர்யா சாருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

    ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
    கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.

    இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர். அந்தவகையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வருகிற ஜூன் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

    ஆனந்தி, கலையரசன்

    இந்நிலையில், ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் 'கருப்புராஜா வெள்ளைராஜா'. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. 

    கருப்புராஜா வெள்ளைராஜா பட போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் விஷாலுக்கு பதில் வேறுஒரு நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சினிமா தியேட்டர்கள் திறந்ததும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை முதன்முதலாக திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
    கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இன்னும் 2 வாரங்களில் ஊரடங்கு நிபந்தனைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்றும், சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைத்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் படம் பார்க்க வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்களின் பயத்தைப்போக்க என்ன செய்யலாம்? என்று தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    விஜய்

    விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை முதன்முதலாக திரையிட்டால் மட்டுமே ரசிகர்களும், பொதுமக்களும் பயம் இல்லாமல் படம் பார்க்க வருவார்கள் என்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள். அதன்படி, விஜய் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை முதன்முதலாக திரையிடுவது என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
    ஊரடங்குக்கு பின் ரோஜா படத்தின் 2-ம் பாகத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் 1992-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்தசாமி, மதுபாலா ஜோடியாக நடித்து இருந்தனர். படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை, புது வெள்ளை மழை, காதல் ரோஜாவே, ருக்குமணி ருக்குமணி, தமிழா தமிழா உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இப்படத்தின்முலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

    இந்த நிலையில் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை மணிரத்னம் தயார் செய்து இருப்பதாகவும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதற்கு இடையில் இதை படமாக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் அரவிந்தசாமி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 

    மணிரத்னம்

    ஆனால் இந்த செய்தியை மணிரத்னம் தரப்பு மறுத்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் அவர்களுடைய கனவுப்படம். அந்தப் படத்துக்கு முன் வேறு எந்த படத்தை அவர் இயக்க திட்டமிடவில்லை. எனக்கூறி அவர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
    நடிகை உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘ஏபிசிடி’ இந்தி படத்தில் நடித்துள்ளார். பியார் துனே கியா கியா, பியர் பைல்ஸ், சில்சிலா பியார் கா, டுவிஸ்ட்வாலா லவ் உள்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டொரோடானில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

    கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நடிகை மோஹனா குமாரி சிங் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பரிசோதனையில் மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    மோஹனா குமாரி சிங்

    இதுகுறித்து மோஹனா குமாரி சிங் கூறியதாவது: “எனது மாமியாருக்கு காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தன. இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டோம். அப்போது எனக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டில் இருந்தபோது எங்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறைவாகவே தெரிந்தன. 

    கால நிலை மாற்றத்தால் உடல் நிலையில் லேசான மாற்றம் இருப்பதாக கருதினோம். இப்போது நான் உள்பட குடும்பத்தினர் 7 பேர் மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்று வருகிறோம். எங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது” இவ்வாறு கூறினார்.
    காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
    சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

    காக்க காக்க 2  போஸ்டர்

    அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, 'கவுதம் மேனன் காக்க காக்க 2 படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன் வந்தால் நானும் சூர்யாவும் நிச்சயம் நடிப்போம் என தெரிவித்துள்ளார். 
    தனது பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, ரசிகர்களின் இல்லம் தேடி வருவதாக கூறி இருக்கிறார்.
    இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இளையராஜா. 

    அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்தக் கொரோனா காலகட்டம் தடுக்கிறது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாக அறிவேன். உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனக்கும் நன்றாக தெரியும். 

    எந்த நிமிடமானாலும் சரி, எந்த ஒரு நிகழ்வானாலும் சரி, என்னுடைய இசை உங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். வெறும் இசை மட்டும் வந்தால் போதுமா? நான் வர வேண்டாமா உங்கள் இல்லத்துக்கு. 

    இசை ஓடிடி மூலமாக உங்கள் இல்லம் தேடி நானே வருகிறேன். இந்த இசை ஓடிடி புதிதாக தொடங்க இருக்கும் செய்தியை உங்களுக்கு இந்த பிறந்தநாளில் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது, என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பது பற்றியும் சொல்ல இருக்கிறேன். 

    மேலும் உலக மாபெரும் இசைக்கலைஞர்கள் தங்கள் அனுபவங்களின் மூலமாக அவர்கள் உணர்ந்ததையும், என்னைப் பற்றிய அபிப்ராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதெல்லாம் இசை ஓடிடி வழியாக உங்கள் வீடு தேடி வருகிறது. அந்த நாளுக்கு காத்திருங்கள். காத்திருந்தாலும் அது வீண்போகாது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    ×