என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவிவரும் நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் 'கருப்புராஜா வெள்ளைராஜா'. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. 

    இதனிடையே, இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாகவும், இப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் பரவின.

    ஐசரி கணேஷ்

    இந்நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 'கருப்புராஜா வெள்ளைராஜா' படம் மீண்டும் உருவாகவில்லை. அதுகுறித்து பரவிவரும் செய்திகள் உண்மையில்லை. அது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி" என கூறியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    கேரளாவில் கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தனுஷ் பட நடிகை கூறியுள்ளார்.
    கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தபோது, அதற்கு அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்துள்ளனர். இதை அறியாமல் உண்டபோது அதன் வாயில் வெடி வெடித்தது. வலியால் துடித்த அந்த யானை, பின்னர் சில மணி நேரங்களில் தண்ணீரில் நின்றபடி தனது உயிரை மாய்த்துவிட்டது. யானை நீரில் நின்றபடி இருந்த புகைப்படம் காண்பவர்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது. நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ரெஜிஷா விஜயன் இதுகுறித்து கூறியதாவது: “அவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை. தங்களை நம்பி வந்த மிருகத்துக்கு இப்படி ஒரு தீங்கை செய்திருக்கிறார்கள் என்றால் இது குரூரத்தின் உச்சம். இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் கூட மனிதர்கள் செய்வார்களா என நினைத்தே பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
    அவதார் 2 படப்பிடிப்பை தொடங்க அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்து சென்ற படக்குழு அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன.

    அவதார் 2 பட போஸ்டர்

    இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவதார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் வெளியேறினார்கள். 2 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜான் லேன்ட்ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதார் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து செல்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

    ஜேம்ஸ் கேமரூன் உள்பட 50 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானத்தில் நியூசிலாந்து சென்றுள்ளனர். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் நியூசிலாந்து அரசின் விதிமுறைப்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்பட்டாலும் அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் 17-ந் தேதி திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்று ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல என்று பிரசன்னா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உங்களில் எத்தனை பேருக்கு தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. 

     இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

    இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல என்று கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 

    உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌. அதே அளவு இதற்குமுன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வது போல்‌ நான்கு மாத கணக்கீட்டாலும்‌, மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான்‌ எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌. 

    மின்வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப் பிரச்சினையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌. 

    நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனநோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌. மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.

    பிகு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌". இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 75 நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் நடைப்பயிற்சி செய்துள்ளார்.
    கொரோனா வைரஸ் மனிதர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. பலரும் அவர்களது அன்றாட வாழ்க்கையை மறந்து வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது சில இடங்களில் கட்டுப்பாடுடன் தளர்த்தப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் பையா போன்ற படங்களில் நடித்த வில்லன் நடிகர் மிலிந்த் சோமன், அவரது மனைவியுடன் 75 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக ஐந்து கிலோமீட்டர் நடை பயிற்சி செய்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டார்.

    மனைவியுடன் மிலிந்த் சோமன்

    அவர் கூறும்போது "ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு இது முதல் ஓட்டம். 75 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக ஓடுவதால் இந்த முறை நடந்து தான் சென்றோம். ஏனென்றால் மனித உடலால் இவ்வளவு பெரிய மாற்றத்தை சந்திக்க முடியாது. அருமையான சுற்றுச்சூழல் ரசித்துகொண்டு ஐந்து கிலோமீட்டர் நானும் எனது மனைவியும் நடைப்பயணம் மேற்கொண்டோம். இப்போது நலமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
    கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்திருக்கிறார்.
    தமிழில் யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார். 

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும்போது சக மனிதன் உதவ வேண்டியது கடமை. அதனை என்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறேன். கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதாக அங்கிருந்து ஒருவர் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் அனுப்பிய தகவலை உறுதி செய்து கொண்டு சுமார் 35 பேர் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றார்.
    விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் பாடல் ஒன்று யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஜிவியின் 50வது படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது.

    இப்படத்தில் இடம்பெற்ற உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்ற பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் இந்த பாடலுக்கு உரிய மரியாதையை அளித்த பார்வையாளர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை சமூகவலைதளத்தில் உருவாக்கி அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். 
    மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் 14 வயதில் இனவெறியை சந்தித்ததாக கூறியுள்ளார்.
    அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறி காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த இனவெறி நிகழ்வுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தனக்கு 14 வயதில் நிகழ்ந்த நிறவெறி, இனவெறி குறித்த நிகழ்வு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    “எனக்கு 14 வயதாக இருக்கும் போது எனது நெருங்கிய நண்பர் ஒருவரை அவரது தாயார் டீ குடிக்கவே விடமாட்டார். ஏனெனில் டீ குடித்தால் தோலின் நிறம் கருப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒருநாள் அந்த நண்பர் தனது அம்மாவிடம் டீ கேட்டபோது, அவரது அம்மா என்னை காண்பித்து, நீ டீ குடித்தால் அவளை போல் கருப்பாக மாறிவிடுவாய் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.

    மாளவிகா மோகனன்


    எனது நண்பர் ஒரு அழகான மகாராஷ்டிரா பையன். நான் மாநிறமுள்ள ஒரு மலையாளி. இதுநாள் வரை என்னுடைய நிறத்தை ஒப்பிட்டு யாரும் பேசியது இல்லை என்பதால் எனக்குள் குழப்பம் ஏற்பட்டது. நமது சமுதாயத்தில் இனவெறி, நிறபேதம் என்பது சாதாரணமாகவே இருந்து வருகிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். கருப்பாக இருப்பவர்களை காலா என்று அழைப்பதும், கருப்பு நிறம் கொண்டவர்களை மதராஸி என்று அழைப்பதும் வட இந்தியர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. தென்னிந்தியர்கள் என்றாலே அனைவரும் கருப்புதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

    கருப்பின மக்கள் அனைவரையும் நீக்ரோக்கள் என்றும் அழகற்றவர்கள் என்றும், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அழகானவர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். உலகளாவிய இனவெறி பற்றி நாம் பேசும் போது நம் வீடுகளிலும், நண்பர் வட்டங்களிலும் நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    இனவெறி மற்றும் நிற பேதத்தை ஒழிப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அன்பான நபராக இருப்பதுதான் உங்களை அழகான மனிதராக்கும். உடலின் நிறம் அல்ல. இவ்வாறு மாளவிகா கூறியுள்ளார். 
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மாமியார் பற்றி சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.
    நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்ப விழா ஒன்றில் சமந்தா கலந்து கொள்ளாததால் வீட்டில் சண்டை என்று செய்திகள் வெளியானது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்த சமந்தாவின் மாமியார் அமலா, தன் மருமகள் சமந்தாவுக்கு சமைக்கத் தெரியாது என்றார். சமந்தாவுக்கு சமையலே தெரியாதுன்னு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    சமந்தா


    அப்பொழுது ஒரு ரசிகர், உங்களின் மாமியார் அமலா பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டார். அதற்கு சமந்தாவோ, அவர் எனக்கு தோழி மற்றும் வழிகாட்டி என்று பதில் அளித்தார். 
    ஜோர்டான் சென்று விட்டு திரும்பிய நடிகர் பிருத்விராஜ் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டை வெளியிட்டு இருக்கிறார்.
    நடிகர் பிருத்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.

    அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது. பின்னர், ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பி, அங்கிருந்து கொச்சி வந்து சேர்ந்தார்கள்.

    பிருத்விராஜ் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்


    கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்த பிறகே வீட்டுக்குத் திரும்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
    துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனரான கார்த்திக் நரேன் என் பெயரில் மோசடி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
    துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இப்படம் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

    இதையடுத்து அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

    கார்த்திக் நரேன் பதிவு


    இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தகவல் பகிர்ந்திருக்கும் கார்த்திக் நரேன், எனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, எனது பெயரை தவறாக பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்பி பணம் கேட்டு வருகிறார்கள். உங்களுக்கு 9777017348 என்ற வாட்ஸ் அப் நம்பரில் இதுபோன்ற தகவல் வந்தால் அதை பிளாக் செய்து விடுங்கள். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் நரகத்தில் எரிக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.

    பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
    அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார், நடிகை எமி ஜாக்சன்.

    “இதயம் கணக்கிறது. மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அகமத் ஆர்பெரி, பிரோனா டெய்லர் மற்றும் ஜார்ஜ் பிலாய்ட் ஆகியோரின் கொடூரமான கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். இது மனிதகுலத்திற்கு எதிரான பாவம். கறுப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் போலீசின் மிருகத்தனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாம் அனைவரும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

    எமி ஜாக்சன்


    சமூகவலைதளங்களில் பதிவு செய்வதைவிட உரையாடலை மேற்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்“ என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.
    ×