என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அமலா பால், வேஷ்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் கமெண்ட் அளித்து கூறியுள்ளனர்.
கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைன் என்னும் பிசாசிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இயக்குனர் பிரம்மா கூறியிருக்கிறார்.
தேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார். இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதான கருத்தை இப்படத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது இயக்குனர் பிரம்மா ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளினால் குழந்தைகளுக்கு உடல் மன சமூக ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன. மேனிலை மாணவருக்கு எட்டு மணி நேரம், 6-9 மாணவருக்கு ஆறு மணி நேரம், சனிக்கிழமை பரீட்சைகள் என நர்சரி வாண்டுகள் கூட ஆன்லைனுக்கு விதிவிலக்கல்ல..
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கல்வி நிறுவனம் (NIMHANS) குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்னணு காணொளிகளைப் பார்க்கக் கூடாதென்கிறது. போன் - லாப்டாப்களினால் கிட்டப்பார்வை கோளாறுகள் உருவாகும் என்று கண் சிகிச்சை மையங்களும் அவற்றின் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புதசைகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்றும் அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகமும் எச்சரிக்கின்றன. மேலும் படைப்புத்திறன் குறைதல், பழகும் சிக்கல்கள், தூக்கமின்மை, கவனக்குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு என பட்டியல் நீள்கிறது.
இணையத் தொடர்பு இல்லாத, லாக் டவுனிற்கு கிராமங்களில் தஞ்சம் புகுந்துவிட்ட, நெட் பேக் கட்ட வசதியில்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது மூன்று மாதங்களாய் விடுபட்ட பாடத்தை யார் எடுப்பார்கள்? கேரள தலித் மாணவிக்கு அடுத்து இங்கும் ஆன்லைன் வகுப்புக்கு இணைய வழியின்றி தற்கொலை செய்ய வேண்டுமா? இது இந்திய அரசியலைப்பு article 14ன் படி, பாகுபாடற்ற கல்விக்கான அடிப்படை உரிமையை உலுக்கும் குற்றம் அல்லவா? இது மொபைல் மற்றும் செயலிகளின் வணிகமா அல்லது கல்வி எனும் பெரும் வணிகத்தின் புது பரிணாமமா?
பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த அதே துணிவு தமிழக அரசுக்கு இதிலும் வேண்டும். பள்ளிகளைப் பணித்து ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும். இமெயில் மூலம் வீட்டுப்பாடம், ஆன்லைன் ரேடியோ பாடம், என பல ஆலோசனைகள் இருந்தாலும் குறைந்த பட்சம் மின் திரையை பார்க்கும் நேரத்தை 1 - 2 மணி நேரமாக குறைத்தே ஆக வேண்டும். ஐ.பி.எஸ், விமானி, பொறியாளர், கலைஞர்களாக ஆகக்கூடிய குழந்தைகளின் கண்பார்வையையும் படைப்பாற்றலையும் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைன் என்னும் பிசாசிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணமடைந்தார். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததால் அவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருந்தவர். எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இன்று இயற்கை எய்தியதாக வந்த செய்தி எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ், எனது அறக்கட்டளை குழந்தைகளுடன் மறைந்த முதல்வர் கருணாநிதியை ஒருமுறை சந்தித்த போது எனது சமூக பணிகளை பாராட்டினார் ஜெ.அன்பழகன். அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. அவரது குடும்பத்தாருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். எனது குழந்தைகளும் நானும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.
ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் செந்தில், போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாந்திரா டெர்மினசில் வெளிமாநில தொழிலாளர்களை சந்திக்க சென்ற இந்தி நடிகர் சோனு சூட்டை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு இந்தி நடிகர் சோனுசூட் தனது ஏற்பாட்டில் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக அவரை ஆளும் சிவசேனா கடுமையாக விமர்சித்தது. சோனுசூட்டை பாரதீய ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாகவும், அதனால் அவர் சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திடீர் மகாத்மாவாக மாறியுள்ளார் என்று தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாடியது.
இதை தொடர்ந்து, அன்றைய தினம் இரவு திடீரென நடிகர் சோனுசூட் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அப்போது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவர் செய்து வரும் உதவிக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரை பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு ஷராமிக் சிறப்பு ரெயில் புறப்பட இருந்தது. அந்த ரெயிலில் பயணம் செய்யும் அம்மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சந்திப்பதற்காக நடிகர் சோனுசூட் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடிகர் சோனுசூட்டை ரெயில் நிலையத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் வெளிமாநில தொழிலாளர்களை சந்திக்கவும் அனுமதி மறுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து நடிகர் சோனுசூட் அங்கிருந்து திரும்பி சென்றார். அதன்பின் சோனு அளித்த பேட்டியில், ‘என்னுடைய செயலில் அரசியல் எதுவும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதுள்ள உண்மையான அன்பின் காரணமாகவே நான் இதனைச் செய்து கொண்டிருக்கிறேன். கடைசி புலம் பெயர் தொழிலாளர் தன்னுடைய சொந்த வீட்டிற்குச் சென்று சேரும் வரை நான் எனது பணியை தொடர்வேன்’ என்றார்.
கொரோனா நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். இதுதவிர தூய்மை பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், லாரன்ஸின் அறிவுறுத்தலின் பேரில் தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதன்முலம் 3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டர் வாயிலாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் குறித்த மாஸ் அப்டேட்டை அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் ஜோடியாக ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ம் ஆண்டே தொடங்கிய நிலையில், இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் வாயிலாக கலந்துரையாடிய கவுதம் மேனன், துருவ நட்சத்திரம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் விக்ரம் இப்படத்திற்கான டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறினார். மேலும் லாக்டவுனுக்கு பின் எஞ்சியுள்ள சில காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கவுதம் மேனனின் இந்த அப்டேட் விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
"ஓ மை கடவுளே" எனும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பின் நடிகர் அசோக் செல்வன் பெண் இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதை என கூறப்படுகிறது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க உள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்நிலையில், தற்போது பூஜையுடன் இப்படத்தின் பாடல் வேலைகள் துவங்கி உள்ளது. இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் தெரிவித்துள்ளார். படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிகை சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார்.

தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரேமம் படம் மூலம் தான் சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானதாக கூறப்படும் நிலையில், அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த படத்தில் கங்கனா ரனாவத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்களை பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழில் ‘எதுவும் நடக்கும்‘ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா நாயர். மலையாளத்தில், ரன் பேபி ரன், கல்கி, மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முகநூல் பக்கத்தில் அபர்ணா நாயர் தனது புகைப்படங்களையும் கருத்துகளையும் அடிக்கடி பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஒருவர் அபர்ணா நாயரை ஆபாசமாகவும் மோசமாகவும் சித்தரித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். இது அபர்ணா நாயருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தன்னை கொச்சைப்படுத்திய நபரின் பெயரையும் முகநூல் பக்கத்தையும் குறிப்பிட்டு வலைத்தளத்தில் கண்டித்தார்.

அவர் கூறியதாவது: “என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை.” இவ்வாறு கூறியுள்ளார்.
காட்மேன் வெப் சீரிஸ் சர்ச்சையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஜீ 5 என்ற டிஜிட்டல் தளத்தில், காட்மேன் என்ற இணையதள தொடரின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, பிராமணர்களின் மத ரீதியிலான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காட்மேன் தொடர் தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோ, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில் குமார் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இந்த வழக்கில் டீஸரின் வீடியோ பதிவு ஏற்கனவே காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து டீஸர் நீக்கப்பட்டுள்ளது என்பதால் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் அனிருத் ஸ்டூடியோவை அதிர வைத்திருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை முதன் முதலில் உருவாக்கிய பிறகு தனது இசைக்குழுவுடன் அதை கேட்டு ரசிக்கும் வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளார்.
மேலும், '' ஒரு அதிகாலை 6.45 நேரத்தில் முதல்முறையாக வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை கேட்ட போது, இதுதான் எங்கள் ரியாக்ஷன்'' என அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பால் நடிகர்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது கேரள நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் நடிகர்கள், நடிகைகள் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது கேரளாவை சேர்ந்த நடிகர் எஸ்.ஏ.ஹாசன் தற்போது உயிரிழந்துள்ளார்.
துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ்.ஏ.ஹாசன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ”ஹலோ துபாய்க்காரன்” என்ற மலையாள படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஹாசனுக்கு ஒரு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.






